Thursday, October 30, 2008

ரசிகன் பதிவுகள்


தண்ணீரை கேட்டாக்கா விஷம் கொடுக்குது கேரளா....


கொடிய ரசாயன கழிவுகளை கொட்டும் குப்பைத் தொட்டியாக மாறிய காவிரி ஆறு * தொட்டாலே விரல் புண்ணாகி அழுகும் ஆபத்து * சென்னை நகர மக்களும் பாதிக்கப்படும் அபாயம் .கொடிய ரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் குப்பைத்தொட்டியாக காவிரி ஆறு மாறி வருகிறது.

கர்நாடக மாநிலம் குடகுமலையில் காவிரி உற்பத்தியாகிறது. தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் வழியாக தமிழக எல்லைக்குள் நுழைகிறது. மேட்டூர் அணையில் சங்கமித்து, ஈரோடு, திருச்சி. தஞ்சை வழியாக தமிழகத்தில் 303 கி.மீ., துாரம் பயணம் செய்து வங்கக் கடலில் கலக்கிறது. தமிழகத்தில்16.5 லட்சம் ஏக்கர் பரப்பு காவிரி தண்ணீரால் பாசனவசதி பெறுகிறது. சென்னை உட்பட பல வடமாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் காவிரி நிறைவேற்றுகிறது.

மேட்டூர் அணை 16 கண் மதகு வழியாக வெளியேறும் நீர், காவிரியில் கலந்து செல்கிறது. ஆற்றங்கரையில் மால்கோ அலுமினிய தொழிற்சாலை, மக்னீசியம் சல்பைட் உரத் தயாரிப்பு சிட்கோ தொழிற்கூடங்கள், கெம்பிளாஸ்ட் ரசாயனத் தொழிற்சாலை, மேட்டூர் அனல்மின் நிலையம் ஆகியவை உள்ளன. தொழிற்கூடங்களில் இருந்து வெளியேற்றும் ரசாயனக் கழிவு முழுவதும் காவிரி ஆற்றில் கலந்து மாசு ஏற்பட்டது. இது தொடர்ந்தது. இப்போது புதிய பிரச்னை ஒன்று ஏற்படுகிறது. வெளிமாநிலங்களில் இயங்கும் ரசாயனத் தொழிற்சாலைகள், கொடிய விஷத்தன்மையுள்ள ரசாயனக் கழிவை காவிரியில் வெளியேற்றி வருகின்றன.

கேரளா மாநிலம், கலமச்சேரி ரசாயனத் தொழிற்சாலையில் இருந்து ரசாயனக் கழிவை ஏற்றி வந்த டேங்கர் லாரி மேட்டூர் அருகே காவிரியில் கொட்டியதை பொதுமக்கள் கண்டுபிடித்தனர். 16 டன் ரசாயன கழிவு டேங்கர் லாரியில் இருந்தது. லாரி டிரைவர் கூத்தப்பன், கிளீனர் செல்வம் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் காவரி டெல்டா விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. கேரளா, கலமச்சேரியில் `கொச்சின் மினரல்ஸ் ரூட்டெய்லி லிமிடெட்' என்ற பெயரில் ரசாயன தொழிற்சாலை செயல்படுகிறது. கடல் மணலில் இருந்து டைட்டானியம் டை ஆக்சைடு தயாராகிறது. இதில் ரசாயனப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. தயாரிப்பின் போது கழிவாக பெர்ரிக் குளோரைடு, பெர்ரஸ் குளோரைடு ஆகியவை கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. பெர்ரிக் குளோரைடு காகித ஆலையில் உபயோகிக்க கொண்டு செல்லப்படுகிறது. பெர்ரஸ் குளோடுரை அபாயகர கழிவுப் பொருளாகிறது. இந்த கழிவில் ஹெக்ஸா வேலண்ட் குரோமியம், காட்மியம், ஈயம், ஆர்க்கானிக், மேங்கனீசு போன்றவை உள்ளன. இந்த கழிவை மிகவும் பாதுகாப்பாக சுத்திகரிக்க வேண்டும். அதற்கு செலவு அதிகம். இதனால், தொழிற்சாலை நிர்வாகம் இந்தக் கழிவை முறை கேடான வழிகளில் அழிக்கிறது. அதாவது, ஆறுகளில் கலந்து விடுவதுதான் முக்கிய விதிமீறல். இந்த கழிவுகள், தொடர்ந்து காவிரியாற்றில் கலந்து விடப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் ஏற்றிவரப்பட்டு, கள்ளத்தனமாக காவரியில் திறந்து விடப்படுகிறது. இந்த ரசாயனக் கழிவு கலந்த நீரை பருகினால், அதில் உள்ள மெர்குரி, நரம்பு மண்டலத்தை செயலிழக்க செய்யும்; காட்மியம் புற்றுநோயை உருவாக்கும்; ஈயம் மூளை வளர்ச்சியை பாதிக்கும். ரசாயனக் கழிவை கையால் தொட்டால் விரல் புண்ணாகி, அந்த பகுதி அழுகி உதிர்ந்து விடும் ஆபத்து உள்ளது.

காவிரியில் 16.2 கோடி லிட்டர் கழிவுநீர் கலப்பு : காவிரி நீர்வடிப்பகுதியில் ஆயிரத்து 100 தொழிற்சாலைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 16.2 கோடி லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதில், 870 லட்சம் லிட்டர் நேரடியாக காவிரியில் வெளியேற்றப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 640 லட்சம் லிட்டர் கழிவு நீரும், திருச்சி மாவட்டத்தில் 57.64 லட்சம் லிட்டர் கழிவு நீரும் காவிரியில் கலக்கிறது என தமிழக அரசு கடந்த 2005ம் ஆண்டு வெளியிட்ட தமிழ்நாடு சுற்றுசுழல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நீர் வாழ் உயிரினங்களே வசிக்காத அபூர்வ காவிரி :மேட்டூர் 16 கண் மதகு முதல் காவிரி ஆற்றில் ரசாயன கழிவு நீர் கலப்பதால் மூன்று கி.மீ., துாரத்திற்கு, ஆற்றில் உள்ள பாறைகளில் ரசாயனம் கலந்து மஞ்சள் நிறமாக உள்ளது. செம்மண் நிறத்தில் தண்ணீர் உள்ளது. இந்த பகுதியில் மீன், தவளை, பூச்சிகள் போன்ற எந்தவித நீர் வாழ் உயிரினங்களும் வசிக்கவில்லை.

இருதய நோயால் மக்கள் பாதிப்பு : மருத்துவமனைகள் அதிகரிப்பு : காவிரியில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரில் இருந்து கிளம்பும் நெடியால் தங்கமாபுரிபட்டணம், பெரியார்நகர், சேலம் கேம்ப் பகுதியில் வசிக்கும் மக்கள் குடல், தோல், இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஈஸ்னோபீலியா என்ற நோய் தாக்கி ஏராளமானோர் அவதிப்படுகின்றனர். ரசாயன கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேட்டூர் சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழுத் தலைவர் ஜெயராமன் வேதனை தெரிவித்தார்.மேட்டூரில்தான் நோயால் பாதிக்கப்படுவோர் அதிகம். இதனால் மேட்டூரை குறி வைத்துதான் மருத்துவமனைகள் துவங்கப்படுகின்றன. மேட்டூரில் இருந்து குஞ்சாண்டியூர் வரை மட்டும் 65 சிறிய மற்றும் பெரிய மருத்துவமனைகளும் 68 மருந்து விற்பனை கடைகளும் உள்ளன.

காவிரி கரையில் புற்று நோய் கிராமம் : காவிரி கரையில் மேட்டூர் அடுத்துள்ளது நாட்டமங்கலம் கிராமம். இக்கிராம மக்கள் காவிரி நீரையே குடிநீராக பயன்படுத்துகின்றனர். கிராமத்தில் வசித்த துரைசாமி (52), சொகுசு (65) சின்னப்பிள்ளை, ரங்கசாமி (55), சம்பு (52), அலமேலு (40), சீனிவாசன் (60), பழனியப்பன் (65), அய்யாவு (50), அர்த்தனாரி (52) உட்பட 20க்கும் மேற்பட்டோர் புற்று நோய் தாக்கி பலியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் 10 ஆண்டுகளுக்குள் உயிரிழந்துள்ளனர். இதற்கு காவிரி ஆற்று நீரே காரணம் என கிராம மக்கள் கூறுகின்றனர்.

நன்றி தினமலர்..


நன்றி: ரசிகன்

1 comment:

 1. In this moralless, capitalized, imperialised industrialization and society, these capitalists. industralist wont care about the ecological system and the future of the world.
  They want profit, money, money, fucking money !!!!!!!!!!!!!!

  People should be educated and also the industrialisation should be controleed by the real people lovers "Communists".

  Or God itself cannot save the Earth.


  Balaji M
  Jalakandapuram

  ReplyDelete