Tuesday, October 7, 2008

எரியும் நினைவுகள்

எரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்!




1981ம் ஆண்டில் சிறிலங்கா ஆட்சியாளர்களால் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண பொதுசன நூலகம் பற்றிய "எரியும் நினைவுகள்" என்னும் 50நிமிட ஆவணப்படம் திரையிடலுக்கான தயார் நிலையில் உள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

நூலகம் எரியூட்டப்பட்டு 27வது ஆண்டினை எட்டிவிருக்கும் 31-05-2008ல், இப்படத்தினை உலகெங்கும் காண்பிக்கும் வகையிலான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈழத்தமிழர்களின் பெருஞ்சொத்தாகவும், கல்விப்புலமையின் குறியீடாகவும் விளங்கிய இந்நூலகத்தின் கதை ஈழத்தமிழர்களின் அரசியல் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்தது.

1933ல் இருந்து இற்றைவரையான அந்நூலகத்தின் வலிமிகுந்த கதையை சொல்வதற்கு சினிமாமொழியின் பல்வேறு சாத்தியங்களையும் இயக்குநர் சோமீதரன் பயன்படுத்தி உள்ளார்.

சிதைவுற்ற நூலகத்தின் காட்சிகள், கோணங்கள், அங்கு பணியாற்றியோரின் வாக்குமூலங்கள், பத்திரிகை நறுக்குகள், உரைகள், கறுப்பு வெள்ளையிலான காணொளி நேர்காணல்கள், வரைபடங்கள், எடுத்துரைப்புகள், இசைக்கோர்ப்புகள் இப்படி பல்வேறு சாத்தியங்களுடனும் எரியும் நினைவுகள் தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம், பிரெஞ் மற்றும் யேர்மன் மொழிகளில் நூலகத்தின் கதையை எடுத்துரைக்கும் வகையில் இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2006ம் ஆண்டில் இருந்து இவ்வாவணத்தை தயாரிக்கத் தொடங்கிய 'நிகரி" தயாரிப்பு குழுவினரினர், பற்றாக்குறையான வளங்களுடன், பல்வேறு நெருக்கடிகளுக்கும், சிக்கல்களுக்கும் முகம்கொடுத்து தற்போது பணிகளை முடித்துள்ளனர்.

தங்கள் வரலாற்றை பேணிக்காப்பதில், ஆவணப்படுத்துவதில் அதிக அக்கறை இல்லாத ஈழத்தமிழ்ச் சமூகத்தில் இவ்வகையான முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.

எண்பதுகளில் வாழ்ந்த, உணர்ந்த ஒரு தலைமுறையின் எரியும் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கும் காவிச்செல்லும் பணியை இவ்வாவணப்படம் கொண்டுள்ளது.

நன்றி:
யாழ்.காம்

No comments:

Post a Comment