Thursday, October 30, 2008

ரெய்கி

தென்பாண்டி நாட்டான் http://pramalin.blogspot.com ல் எழுதியது


ரெய்கி என்ற மாய்மாலம் - நிரூபித்த 9 வயது எமிலி ரோசா.


ரெய்கி, நலமளிக்கும் பரிசம் (Therapeutic Touch) என்று சிலர் அவ்வப்போது பேசக் கேட்டிருக்கிறேன். மெய்ப்பொருள் தெரிந்து கொள்ளாமல் சிறுமை படுத்தக் கூடாதென்றாலும், இவற்றை சிகிச்சை முறை என்று கதைப்பவர்கள் மற்ற சமூகப் பிரச்சினைகளிலோ, அறிவியல் துறைகளிலோ அவர்கள் எடுக்கும் பிற்போக்கு நிலைப்பாட்டால் இத்தகைய விடயங்கள் மீது இயல்பாகவே வெறுப்பு ஏற்படுகிறது.

விருப்பு வெறுப்பு நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு இவ்விடயங்களில் உண்மை இல்லை என்பதை 1996லேயே எமிலி ரோசா தன் ஒன்பது வயதில் நிரூபித்திருக்கிறாள் என்று சென்ற மாதம் PBSன் Scientific American Frontiers தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன்.

இந்த சிகிச்சை முறைகளில் பயிற்சி பெற்றவர், நோயாளியின் உடலில் சம சீரற்ற ஆற்றல் புலத்தை (energy field) அவர்களை தொடாமலேயே ஒருசில அங்குலம் தள்ளி தங்கள் கைகளாலேயே உணர்ந்து, சமன்படுத்தி விடுவதாக பாவனை செய்வார்கள். சிலர் பிரபஞ்சத்தில் நிரைந்திருக்கும் நலமளிக்கும் சக்தியைப் பெற்று நோயாளிகளுக்கு அளித்து குணமாக்குவதாக சொல்வார்கள். இந்த சிகிச்சை மூலம் உடல் மனநோய்களையும் குணப்படுத்துவதாக சொல்கிறார்கள். மருத்துவர்கள் உடலுக்கு ஆற்றல் புலம் இருப்பதாக நிரூபணம் இல்லை என்பதால் இவைகளை சிகிச்சையாக ஏற்றுக் கொள்வதில்லை.

எமிலி TT-க்காரர்களின் நிகழ் படத்தைப் பார்த்தபோது அவர்களின் சிகிச்சை முறை பற்றி சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதில் உண்மையைக் கண்டறிந்து தன் நான்காவது வகுப்பு அறிவியல் புறத்திட்டிற்காக அறிக்கையாக சமர்பிக்கலாம் என்று நினைத்திருக்கிறாள்.

ஒரு அட்டையில் தடுப்பு செய்து தன்னையும் எதிரில் இருக்கும் பயிற்சியாளரையும் மறைத்து, அதில் அவர்கள் கைகள் நுழைய இரண்டு துளைகளிட்டு வைத்தாள். பயிற்சியாளர் மேசைமீது தடுப்புக்கு இந்தப் பக்கம் துளைகள் வழியே நீட்டி உள்ளங் கைகளை மேல்நோக்கி வைத்திருப்பார். எமிலி ஒரு நாணயத்தை சுண்டிவிட்டு, தலையா பூவா பார்த்து அதன்படி தன் ஒரு கையை அவர்களுடைய வலது கை மேலோ இடதுகை மேலோ படாத வண்ணம் வைப்பாள். உடலின் ஆற்றல் புலத்தை உணர்வதாகக் கூறும் பயிற்சியாளர் எமிலியின் கை வலதுபுறம் உள்ளதா இடதுபுறம் உள்ளதா என்று சொல்ல வேண்டும்.

எமிலி ஒன்றிலிருந்து 27 வருடங்கள் வரை அனுபவம் உள்ள 21 பயிற்சியாளர்களை வைத்து 128 பரிசோதனைகள் செய்தாள். ஒவ்வொருவரும் பத்து முறை சோதனைக்கு உட்பட்டார்கள். அவர்கள் சரியாக கணித்த சமயங்கள் 50 சதவிதத்திற்கும் குறைவு. அவர்கள் குருட்டாம் போக்கில் சொல்லியிருந்தால் கூட குறைந்தபட்சம் 50 சதவீதம் சரியாக கணித்திருப்பார்கள்.

11 வயதில் எமிலியின் ஆய்வை பிரசித்தி பெற்ற The Journal of the American Medical Association வெளியிட்டது சாதனையாகக் கருதப்படுகிறது.

10 வருடங்களுக்கு முன்பே நிரூபிக்கப்பட்ட வாய்பந்தலில் இன்னமும் சிலபேர் தோரணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நன்றி:

தென்பாண்டிநாட்டான்


--------------------------------------------------*----------------------------------------------

இதில் எனது கருத்து:
மேலும் பல நுணுக்கமான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ரெய்கி என்ற மருத்துவ முறை முற்றிலும் பொய்யானது என்று நிறுவ இந்த ஆய்வு போதாது. பாரம்பரிய மற்றும் மாற்று முறை மருத்துவங்களுக்கு தற்காலத்தில் உள்ள நிலைமை பரிதாபகரமானது. ஜெர்மனியில் தோன்றி இன்று உலகெங்கும் புகழ் பெற்று விளங்கும் homeopathy மருத்துவத்தையும் Placebo, psedomedicine என்று பரிகசித்தவர்கள்தான் இந்த ஆய்வையும் பாராட்டியுள்ளனர். பாரம்பரிய மற்றும் மாற்று முறை மருத்துவங்களை ஆய்வு செய்வதற்கான parameters இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதே இதில் ஒளிந்திருக்கும் உண்மை. நவீன மருத்துவத்தினை ஆய்வு செய்யும் கருவிகளை வைத்து பாரம்பரிய மற்றும் மாற்று முறை மருத்துவங்களை ஆய்வு செய்வது முட்டாள்தனம். இவ்வாறு செய்தால் கிடைக்கப்போவது negative result தான் இதையே தங்களுக்கு சாதகமாகப்பயன்படுத்திக் கொண்டு பாரம்பரிய மற்றும் மாற்று முறை மருத்துவங்கள் அனைத்துமே போலியானவை என பறைசாற்றுவதையே வழக்கமாக்கியுள்ளனர்.

பாரம்பரிய மற்றும் மாற்று முறை மருத்துவங்களை பற்றிய நமது பார்வை மாற வேண்டும்!

No comments:

Post a Comment