Tuesday, October 14, 2008

கன்னிமாரா (Connemara) பொது நூலகம்




கன்னிமாரா பொது நூலகத்தை முதன் முதலில் தொடங்க, 1890-ல் திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் “போபி இராபர்ட் போர்க் கன்னிமாரா பிரபு” (Bobby Robert Bourke Baron Connemara 1827 - 1902) என்பவர். முன்னதாக 1860-ல் சென்னை அருங்காட்சியகத்தின் பகுதி நேரக் கண்காணிப்பாளரான கேப்டன் ஜெஸ்ஸி மிட்செல் அரசை அணுகி, அருங்காட்சியக நூலகம் ஒன்றை அமைக்க வேண்டினார். அந்நூலகம் 1862 முதல் செயலாற்றத் தொடங்கிற்று. பின்னர் அதில் நூல்கள் பெருகப் பெருக அதற்கு ஒரு புதிய கட்டடம் தேவையாயிற்று. அக்கட்டடத்திற்குத்தான் கன்னிமாரா பிரபு அடிக்கல் நாட்டினார். எனவே, கன்னிமாரா நூலகத்தின் நிறுவனர் என்ற பெருமை காப்டன் ஜெஸ்ஸி மிட்செலுக்குத்தான். அவருக்கு பின்வந்த “ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக்” என்பவரால் 1896ல் டிசம்பர் 5 ம் நாள் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்பட்டது.

நூலகத்தின் வளர்ச்சி

1940-ல் தனி நிறுவனம் ஆகியது
1950-ல் தமிழ்நாடு மைய நூலகமானது
1954-ல் இந்திய நூல்களின் வைப்பிடம் Depository under the Delivery of Books (Public Libraries) Act 1954) ஆகியது
1955-ல் ஐக்கிய நாடுகள் அவை நூல்களின் வைப்பிடமா மாறியது 1965ல் யூனெசுகோ தகவல் நிறுவனம் (Unesco Information Centre) ஆயிற்று
1966-ல் நூலக ஆணைக் குழு நூலகங்களுக்கான பயிற்சி நிலையம் ஆயிற்று
1973-ல் புது கட்டடம்
1983-ல் மேலும் மேலும் புதிய பொலிவுடன் வளர்ச்சி அடைந்தது.

இப்போது கன்னிமாரா நூலகம் தனிப்பெரும் நிறுவனமாக மாறிவிட்டது.


சேவைகள்

பதினாறாம் நூற்றாண்டு நூல்கள் முதல் இன்றைக்கு வெளிவந்த நூல்கள் வரை சேமிக்கப்பெறும் இந்த நூலகத்தில் ஏறத்தாழ 5 லட்சத்து 7 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.

வாசகர்களுக்கு - படிக்கிறவர்களுக்கு குறிப்புதவி வசதி அளிக்கப்படுகிறது. காலம் கடந்த நூல்களில் இருந்தும் எதிர்கால எதிர்பார்ப்புகளில் இருந்தும் கருத்தைத் தேடிக் கொடுக்கும் கனிவான பணியும் நடக்கிறது. குறிப்புதவி நூல்களாக ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. இந்த நூலகம் நூல்களை இரவல் தருவதோடு மாதம் 100 ரூபாய் கட்டினால் குறைந்தபட்சம் 2 நூல்களை வீட்டுக்கே கொண்டு வந்தும் தருகிறது. பெரும்பாலான நூல்கள் பாடவாரியாக, ஆசிரியர்வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டு தொலைக்காட்சிகளும் 60 கல்வி ஒளிநாடாக்களும் உள்ளன. கணிப்பொறி மயமாகி வரும் இந்நூலகத்துள் ஒரு லட்சம் நூல்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கல்வி தொடர்பான குறுந்தகடுகள் 140 உள்ளன. நகலெடுக்கும் வசதி உள்ளது.

தமிழ்நாட்டுப் பொது நூலகங்களில் பணியாற்றி வரும் பயிற்சி பெற்ற நூலகர்களுக்கு முதனிலை நூலக இயல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.


பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கான பிரெய்லி மற்றும் பேசும் புத்தகச் சேவையும் உள்ளது. தேசியத் தகவல் மையப் பொதுத் தகவல் முறையகம் மூலம் ஏராளமான தகவல்கள் இங்கே கிடைக்கின்றன. இந்தியச் சுற்றுலா வழிகாட்டி, இந்தியப் பல்கலைக்கழகக் கல்விமுறை வழிகாட்டி, ஊரகத் தொழில் நுட்பங்கள், இந்தியப் பாரம்பரிய அறிவியல், இந்திய மாவட்டங்கள்-மாநிலங்களின் விவரங்கள், இந்தியப் பொருளாதார வங்கியியல் விவரங்கள், இந்தியத் தொழிற்சாலைகளின் அகராதி, வேளாண் புள்ளியியல் விவரங்கள் போன்றவை இந்தப் பிரிவில் கிடைக்கின்றன. அரசுத் தேர்வு முடிவுகளை இதில் காணலாம்.

இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மணிக்கு ரு. 35ம் அரை மணிக்கு ரூ.20ம் கட்டணம். விரைவில் மைக்ரோ பிலிமில் நூல்களை ஏற்றிப் பாதுகாக்க உள்ளனர். அயல்நாடுகளில் இருந்து அதற்கான இயந்திரங்கள் விரைவில் வர உள்ளன.

வேலை நாட்கள்

தேசிய விடுமுறை நாள்கள் மூன்றையும் மாநில அரசின் ஆறு விடுமுறை நாள்களையும் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் காலை 9 முதல் இரவு 7.30 மணி வரை இந்த நூலகம் இயங்குகிறது.

வாசகர்கள்

இந்த நூலகத்திற்கு 68 ஆயிரம் ஆயுள் உறுப்பினர்கள் உள்ளனர்.ஒரு நாளைக்குச் சராசரியாய் ஆயிரத்து இருநூறு பேர் வருகின்றனர். சனி, ஞாயிறுகளில் இந்த எண்ணிக்கை, 2000 வரை போகிறது. கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் என்ற ஒன்று இருக்கிறது. இதற்குத் தலைவர் உள்ளார். செயற்குழு உள்ளது. ஆனால் இதுவரை கூட்டங்கள் ஏதும் கூட்டப்பெறவில்லை.

பராமரிப்பு

பயன்பாட்டினைப் பொறுத்து நூல்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ- மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தூசு தட்டிச் சுத்தம் செய்யப்படுகின்றன. மிகப் பழைய நூல்களின் பக்கங்கள் ஒவ்வொன்றும் ஷிபான்சில்க் என்ற துணி ஒட்டப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.

பொது நூலகத் துறையிலிருந்து நூல்களைப் பெறுவதோடு தனக்கென்று நூல் தேர்வுக் குழு ஒன்றையும் இந்த நூலகம் கொண்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் பாட நூல்கள், வெளிநாட்டு நூல்கள் போன்றவை வாங்கப்படுகின்றன.

கன்னிமாரா பொது நூலகம் இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும். ஆதலால் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள் நாளிதழ்கள் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு பிரதி இங்கு பெறப்படும்.


இந்த இடுகைக்கான தகவல்கள்


கன்னிமாரா பொது நூலக இணையதளம்

விக்கிபீடியா

flickr

hindu

அண்ணாகண்ணன் வெளி

ஆகியோரிடமிருந்து நன்றியுடன் பெறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment