Thursday, October 30, 2008

ரசிகன் பதிவுகள்


தண்ணீரை கேட்டாக்கா விஷம் கொடுக்குது கேரளா....


கொடிய ரசாயன கழிவுகளை கொட்டும் குப்பைத் தொட்டியாக மாறிய காவிரி ஆறு * தொட்டாலே விரல் புண்ணாகி அழுகும் ஆபத்து * சென்னை நகர மக்களும் பாதிக்கப்படும் அபாயம் .கொடிய ரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் குப்பைத்தொட்டியாக காவிரி ஆறு மாறி வருகிறது.

கர்நாடக மாநிலம் குடகுமலையில் காவிரி உற்பத்தியாகிறது. தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் வழியாக தமிழக எல்லைக்குள் நுழைகிறது. மேட்டூர் அணையில் சங்கமித்து, ஈரோடு, திருச்சி. தஞ்சை வழியாக தமிழகத்தில் 303 கி.மீ., துாரம் பயணம் செய்து வங்கக் கடலில் கலக்கிறது. தமிழகத்தில்16.5 லட்சம் ஏக்கர் பரப்பு காவிரி தண்ணீரால் பாசனவசதி பெறுகிறது. சென்னை உட்பட பல வடமாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் காவிரி நிறைவேற்றுகிறது.

மேட்டூர் அணை 16 கண் மதகு வழியாக வெளியேறும் நீர், காவிரியில் கலந்து செல்கிறது. ஆற்றங்கரையில் மால்கோ அலுமினிய தொழிற்சாலை, மக்னீசியம் சல்பைட் உரத் தயாரிப்பு சிட்கோ தொழிற்கூடங்கள், கெம்பிளாஸ்ட் ரசாயனத் தொழிற்சாலை, மேட்டூர் அனல்மின் நிலையம் ஆகியவை உள்ளன. தொழிற்கூடங்களில் இருந்து வெளியேற்றும் ரசாயனக் கழிவு முழுவதும் காவிரி ஆற்றில் கலந்து மாசு ஏற்பட்டது. இது தொடர்ந்தது. இப்போது புதிய பிரச்னை ஒன்று ஏற்படுகிறது. வெளிமாநிலங்களில் இயங்கும் ரசாயனத் தொழிற்சாலைகள், கொடிய விஷத்தன்மையுள்ள ரசாயனக் கழிவை காவிரியில் வெளியேற்றி வருகின்றன.

கேரளா மாநிலம், கலமச்சேரி ரசாயனத் தொழிற்சாலையில் இருந்து ரசாயனக் கழிவை ஏற்றி வந்த டேங்கர் லாரி மேட்டூர் அருகே காவிரியில் கொட்டியதை பொதுமக்கள் கண்டுபிடித்தனர். 16 டன் ரசாயன கழிவு டேங்கர் லாரியில் இருந்தது. லாரி டிரைவர் கூத்தப்பன், கிளீனர் செல்வம் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் காவரி டெல்டா விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. கேரளா, கலமச்சேரியில் `கொச்சின் மினரல்ஸ் ரூட்டெய்லி லிமிடெட்' என்ற பெயரில் ரசாயன தொழிற்சாலை செயல்படுகிறது. கடல் மணலில் இருந்து டைட்டானியம் டை ஆக்சைடு தயாராகிறது. இதில் ரசாயனப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. தயாரிப்பின் போது கழிவாக பெர்ரிக் குளோரைடு, பெர்ரஸ் குளோரைடு ஆகியவை கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. பெர்ரிக் குளோரைடு காகித ஆலையில் உபயோகிக்க கொண்டு செல்லப்படுகிறது. பெர்ரஸ் குளோடுரை அபாயகர கழிவுப் பொருளாகிறது. இந்த கழிவில் ஹெக்ஸா வேலண்ட் குரோமியம், காட்மியம், ஈயம், ஆர்க்கானிக், மேங்கனீசு போன்றவை உள்ளன. இந்த கழிவை மிகவும் பாதுகாப்பாக சுத்திகரிக்க வேண்டும். அதற்கு செலவு அதிகம். இதனால், தொழிற்சாலை நிர்வாகம் இந்தக் கழிவை முறை கேடான வழிகளில் அழிக்கிறது. அதாவது, ஆறுகளில் கலந்து விடுவதுதான் முக்கிய விதிமீறல். இந்த கழிவுகள், தொடர்ந்து காவிரியாற்றில் கலந்து விடப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் ஏற்றிவரப்பட்டு, கள்ளத்தனமாக காவரியில் திறந்து விடப்படுகிறது. இந்த ரசாயனக் கழிவு கலந்த நீரை பருகினால், அதில் உள்ள மெர்குரி, நரம்பு மண்டலத்தை செயலிழக்க செய்யும்; காட்மியம் புற்றுநோயை உருவாக்கும்; ஈயம் மூளை வளர்ச்சியை பாதிக்கும். ரசாயனக் கழிவை கையால் தொட்டால் விரல் புண்ணாகி, அந்த பகுதி அழுகி உதிர்ந்து விடும் ஆபத்து உள்ளது.

காவிரியில் 16.2 கோடி லிட்டர் கழிவுநீர் கலப்பு : காவிரி நீர்வடிப்பகுதியில் ஆயிரத்து 100 தொழிற்சாலைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 16.2 கோடி லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதில், 870 லட்சம் லிட்டர் நேரடியாக காவிரியில் வெளியேற்றப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 640 லட்சம் லிட்டர் கழிவு நீரும், திருச்சி மாவட்டத்தில் 57.64 லட்சம் லிட்டர் கழிவு நீரும் காவிரியில் கலக்கிறது என தமிழக அரசு கடந்த 2005ம் ஆண்டு வெளியிட்ட தமிழ்நாடு சுற்றுசுழல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நீர் வாழ் உயிரினங்களே வசிக்காத அபூர்வ காவிரி :மேட்டூர் 16 கண் மதகு முதல் காவிரி ஆற்றில் ரசாயன கழிவு நீர் கலப்பதால் மூன்று கி.மீ., துாரத்திற்கு, ஆற்றில் உள்ள பாறைகளில் ரசாயனம் கலந்து மஞ்சள் நிறமாக உள்ளது. செம்மண் நிறத்தில் தண்ணீர் உள்ளது. இந்த பகுதியில் மீன், தவளை, பூச்சிகள் போன்ற எந்தவித நீர் வாழ் உயிரினங்களும் வசிக்கவில்லை.

இருதய நோயால் மக்கள் பாதிப்பு : மருத்துவமனைகள் அதிகரிப்பு : காவிரியில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரில் இருந்து கிளம்பும் நெடியால் தங்கமாபுரிபட்டணம், பெரியார்நகர், சேலம் கேம்ப் பகுதியில் வசிக்கும் மக்கள் குடல், தோல், இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஈஸ்னோபீலியா என்ற நோய் தாக்கி ஏராளமானோர் அவதிப்படுகின்றனர். ரசாயன கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேட்டூர் சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழுத் தலைவர் ஜெயராமன் வேதனை தெரிவித்தார்.மேட்டூரில்தான் நோயால் பாதிக்கப்படுவோர் அதிகம். இதனால் மேட்டூரை குறி வைத்துதான் மருத்துவமனைகள் துவங்கப்படுகின்றன. மேட்டூரில் இருந்து குஞ்சாண்டியூர் வரை மட்டும் 65 சிறிய மற்றும் பெரிய மருத்துவமனைகளும் 68 மருந்து விற்பனை கடைகளும் உள்ளன.

காவிரி கரையில் புற்று நோய் கிராமம் : காவிரி கரையில் மேட்டூர் அடுத்துள்ளது நாட்டமங்கலம் கிராமம். இக்கிராம மக்கள் காவிரி நீரையே குடிநீராக பயன்படுத்துகின்றனர். கிராமத்தில் வசித்த துரைசாமி (52), சொகுசு (65) சின்னப்பிள்ளை, ரங்கசாமி (55), சம்பு (52), அலமேலு (40), சீனிவாசன் (60), பழனியப்பன் (65), அய்யாவு (50), அர்த்தனாரி (52) உட்பட 20க்கும் மேற்பட்டோர் புற்று நோய் தாக்கி பலியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் 10 ஆண்டுகளுக்குள் உயிரிழந்துள்ளனர். இதற்கு காவிரி ஆற்று நீரே காரணம் என கிராம மக்கள் கூறுகின்றனர்.

நன்றி தினமலர்..


நன்றி: ரசிகன்

வித்யகங்கைகலாப்பிரியாவிடமிருந்து


கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில்

"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!"

எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் என்பதைத் தவிர அவர்களின் மேல் அவ்வளவு பெரிய அபிப்ராயம் ஒன்றும் கிடையாது. ஒருநாள் மாலை நேர வழக்கமான நடைப்பயிற்சியின் பொழுது உங்கள் கையைக் காண்பியுங்கள் உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்று கேட்ட சாமியாரின் மூக்கை உடைப்பதற்காகவாவது கையை நீட்டுவது என்று தீர்மானித்தேன். அந்த ஆளை அப்பொழுது முதன் முதலாக அந்தப் பகுதியில் பார்க்கிறேன். முதல் கேள்வியிலேயே ஆளைக் காலி செய்வதற்காக நான் உபயோகித்த ஆயுதம் தான் என் முதல் கேள்வி. என்னைப் பார்த்து என் வயதை ஊகிப்பதென்பது சாத்தியமேயில்லை என்று எனக்குத் தெரியும்.

மர்மமாகச் சிரித்தவர், "சரி..." என்றபடி மேலும் கீழும் என்னைப் ஒருமுறை பார்த்துவிட்டு, "உங்க வயசு 24 தானே!" உண்மையில் நான் அசந்தே போய்விட்டேன். சாத்தியமேயில்லை என்னைப் பார்த்து வயதைச் சரியாகச் சொன்னவர் இதுவரை யாருமேயில்லை. என் ஆச்சர்யம் அவரது முகத்தில் பிரதிபலித்தது.

தொடர்ந்து என் கைகளை ஊன்றிக்கவனித்தவர்,

"உனக்கு ஒரே ஒரு சகோதரி மட்டும் இருக்காங்க இல்ல, உங்க அம்மா அப்பா இரண்டு பேரும் ஆசிரியர்கள் இல்லையா?"

கிழிஞ்சது அடச்சே நான் காண்பது கனவு மாதிரியிருக்கே ஒருவேளை மாஜிக்கல் ரியலிஸம் பத்தி யோசிச்சு யோசிச்சு இப்ப கனவிலேயே வந்துவிட்டதோ என்று நினைக்கும் பொழுது உணர்வின் வழியில் இல்லை இது கனவில்லை கண்முன்னே இருக்கும் நபர் உண்மை நான் அவருடன் பேசிக்கொண்டிருப்பது உண்மை என்றும் உணர்ந்தேன்.

"கனவில்லை நண்பனே நீ காண்பதும் கனவில்லை நான் சொல்வதும் மாயமில்லை!" தாடியை நீவிவிட்டுக்கொண்டே அந்த நபர் சிரிக்க எனக்கு உள்ளே பகபகவென்று எரிந்தது. இது சாத்தியமாயிருக்க நியாயமில்லை அந்த நபர் இதையும் ஏதோ அதிர்ஷ்டத்தில் சொல்லியதாகத்தான் நான் நினைத்தேன். அவ்வளவு எளிதாய் என் தத்துவ நம்பிக்கைகளின் மீது கட்டப்பட்ட கோட்டையை தகர்த்துவிட முடியவில்லை. ஜோசியம் ஜாதகம் கைரேகை பார்ப்பது எல்லாம் மூடநம்பிக்கை தான் அது உண்மையாகயிருக்க வாய்ப்பேயில்லை என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.

"உன் கைரேகை படி இருபது வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப, உன் இருபத்தொன்னாவது பிறந்தநாளின் பொழுது நீ வாழ்க்கையில் எதையெதையெல்லாம் அடையணும்னு நினைச்சிருந்தாயோ அதெல்லாம் உனக்கு கிடைத்திருக்கும். அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளிலும் உனக்கு இறக்கமேயில்லாமல் ஏற்றம் மட்டுமே இருந்திருக்கும். நீ இன்வெஸ்ட் செய்த இடங்களில் எல்லாம் உனக்கு லாபமே கிடைத்திருக்கும், ஆகமொத்தத்தில் கடைசி பத்துவருடங்களில் நீ அனுபவித்த கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைத்திருக்கும்."

சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார், என்னவோ என் கண்களில் இருந்து அடுத்த உண்மைகளைக் கொண்டுவரப்போகிறவராய். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை, நான் நினைத்தேன் என் நண்பர்கள் தான் என்னுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று. என் நாத்தீக வாதத்தை எதிர்க்கமுடியாமல் என் நண்பர்கள் பர்ஸனல் இன்ஃபர்மேஷன்களைக் கொடுத்து இந்த சாமியார்களைச் செட்டப் செய்திருப்பார்கள் என்று. இதுவரை அந்த சாமியார் சொன்ன விஷயங்கள் முழுவதுமே என்னைப் பற்றி கொஞ்சம் நன்றாய்த் தெரிந்த நபர்கள் கொடுத்திருக்கக்கூடியவை தான். என் சந்தேகம் வழுக்க நான் கேள்வியை கொஞ்சம் கடினமாக்கினேன்.

"சரி இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள், என் வாழ்க்கையிலேயே ஒருதடவை தான் நான் காதலித்திருக்கிறேன். அது எப்ப? என் காதல் என்னாச்சு? யார் அந்த பொண்ணு?"

பதின்மைத்தின் தொடக்கத்தில் நான் செய்த காதலைப் பற்றி தெரிந்தவர்கள் ரொம்பவும் குறைவே, என் குடும்பத்தினர் தவிர்த்து ஒன்றிரண்டு பள்ளி நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். பார்ப்போம் இந்த போலிச் சாமியார் இதற்கு என்ன பதில் சொல்கிறார் என்று நினைத்தேன்.

"தம்பி உன் கண்களைக் கூட என்னால் படிக்கமுடியும் நீ உன் நண்பர்களைச் சந்தேகிக்கிறாய் அப்படியே என் திறமையையும் சரி ஒரு நிமிடம் பொறு!" என் கைகளை ஊன்றிக் கவனித்தவர், ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து கணக்குப் போடத்துவங்கினார்.

ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த நோட்டில் கடைசியாய் இரண்டு புள்ளிகள் வைப்பது மட்டும் எனக்குப் புரிந்தது. சட்டென்று நிமிர்ந்தவர்,

"நீ சொல்ற காதல் நடந்தப்ப உனக்கு 18 வயது நீ பன்னிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தாய், அந்தப் பெண் எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். உன் காதல் நிறைவேறாத ஒன்றாகயிருந்திருக்க வேண்டும், அதைக் காதல் என்று கூட நீதான் சொல்கிறாய் நான் அல்ல. என் கணக்கின் படி பார்த்தால் அவளது பெயர் ஙல் தொடங்க வேண்டும். பெரியதாக இல்லாமல் சுருக்கமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். என்னுடைய ஊகத்தின் படி அவள் பெயர் மீனாவோ இல்லை மீனாக்ஷியோ! சரியா?"

ஏறக்குறைய நான் மயக்கம் போட்டுவிடும் நிலைமைக்கு வந்துவிட்டேன். அவள் பெயர் மீனாதான் பெயர் அளவிற்குத் தெரிந்தவர்கள் என் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் இல்லை. என் குடும்பத்தினரை விசாரித்திருந்தால் நிச்சயம் என்னிடம் சொல்லியிருப்பார்கள் அப்படியென்றால் இந்தச் சாமியார் போலியல்ல என்று உணர்ந்தேன்.

"என் கைரேகையை வைத்து இவ்வளவு விஷயம் சொல்லமுடியுமா?"

"உன்னுடைய ஏழு பிறவிகளையும் சொல்லமுடியும் உன் கைரேகையை வைத்து! அந்த அளவிற்கு இந்த வித்தையை அறிந்தவர்கள் தற்சமயம் மிகமிகக் குறைவு. அதன் காரணமாகவே இருக்கும் சிலரையும் மக்கள் போலியானவர்கள் என்று நம்பும்படியாகிவிடுகிறது."

"சரி இத்தனை திறமையுள்ள நீங்கள் என்னிடம் இதைச் சொல்ல நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னை நாத்தீகனிலிருந்து ஆத்தீகனாக்குவது தான் ஒரே காரணமா?"

"இல்லை யாரையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக்குவது என் வேலையல்ல, முடியக்கூடியதுமல்ல அது. சொல்லப்போனால் எதையும் சந்தேகிக்காமல் ஏற்றுக்கொள்வது சரியான முறையல்ல. அதனால் தான் நாத்தீகனாயிருந்து எல்லாவற்றையும் கேள்விகேட்டு கடைசியில் பதில் கிடைத்து ஆத்தீகனானவர்களுக்கு உலகின் ரகசியங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆத்தீகனாயிருப்பவர்களை விடவும் எளிதில் தெரியும்! நீ கேட்டாயே எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்னால் இல்லை, நமக்கு எல்லாம் மேலிருந்து ஒரு சக்தி இயக்குகிறதே அதனால். இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தி உன்னை பரம்பொருளை நம்பவைப்பது என்பதே கூட எனக்கு ஒவ்வாத ஒரு காரியம் தான். ஆனால் இது இப்படி இப்பொழுது நடந்தே ஆகவேண்டும் நடக்கிறது!"

கண்களை மூடி கடவுளிடம் பேசுவதைப்போல் தலைநிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தச் சாமியார். நான் எனக்கு நடக்கும் எதையும் புரிந்துகொள்ள முடியாதவனாய் அவரையே பார்த்தபடி நான் இருந்தேன்.

"உன் வாழ்க்கையில் எத்தனை முறை எத்தனை பேரைக் கேட்டிருப்பார் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா என்று? இன்று உனக்கு நான் காண்பிக்கிறேன் கண்களை மூடு! உன் மூளையை மட்டும் திறந்து வைத்துக் கொள்!"

சொன்னவர் மெதுவாக என் கண்களை மூடி வரப்போவது அனுபவிக்கத் தயாரானேன். அவருடைய கைகள் என் தலையில் ஆசிர்வாதம் அளிப்பதைப் போல் தொட, எனக்குள் ஒரு உள்ளொளி பரவியது, உடம்பெல்லாம் ஒரு அதிர்வு, யாரோ என்னை ஆட்கொள்வதைப் போன்ற உணர்வு தூரத்தில் ஒரு ஒளி அதுவரை இருண்மையாக இருந்த என் மனதின் வெளிச்சமாய் இறைவன் பரவுவதை உணர முடிந்தது. ஆஹா எவ்வளவு முட்டாள்த்தனமாயிருந்துவிட்டோம்! கடவுளே! சரி இதுவும் கூட நமக்கான ஒரு பயிற்சிதான். என் கைகள் நானாகவே உணராமல் அந்த உள்ளொளியை நோக்கி கரம் குவித்தது. மெதுவாய் அந்த அதிர்வு குறைந்து மனம் நிறைந்ததைப் போலிருந்தது. நான் மெதுவாகக் கண்களைத் திறந்தேன்.

ஷிட் ஐம்பது அறுபது நபர்கள் என்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள், நான்கைந்து காமெராக்கள் என்னைச் சுற்றி படமெடுத்துக் கொண்டிருந்தன. அந்தச் சாமியார் என்னை நெருங்கி வந்து, "சார் நாங்க QTV இருந்து வருகிறோம், Just for laughs gags நிகழ்ச்சிக்காக. உங்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் ஒரு டிடெக்டிவ் நிறுவனம் வைத்து சேகரித்தோம், கடைசியா நீங்க ஃபீல் பண்ணினது ஒரு மைல்ட் ஷாக் அவ்வளவே!" என்று சொல்ல நான் முகம் முழுவதும் வழிவதைத் துடைக்கமுடியாமல் அப்படியே நின்றேன்.

நன்றி சர்வேசன்

நன்றி:
வித்யகங்கைகலாப்பிரியா

ஜெஸிலாவின் கிறுக்கல்

செய்வதையும்செய்து விட்டு இப்படி எழுத என்ன அருகதை இருக்கிறது என்பவர்களுக்கு முதலிலேயே ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். இதைச் சொல்லும் தார்மீக உரிமை கூட எனக்குக் கிடையாது என்பதை உணர்ந்த பிறகே இதனை எழுதுகிறேன். ஆனால், நடந்த உண்மைகளுக்கு சாட்சியாக இருக்க நேர்ந்ததால் அதனை வெளிப்படுத்தவே இதனை இங்கே பதிவாக்குகிறேன்.

அரட்டை அரங்கத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். எனக்கும் அப்படித்தான். தொலைக்காட்சியில் அவரவர் பிரச்சனையைப் பேசுவதும் அதற்கு உதவி பெறுவதுமாக இருக்கும் அரட்டை அரங்கத்தைக் கண்ணீர் மல்கப் பார்த்திருக்கிறேன். பேச்சுத்திறனை வியந்திருக்கிறேன். 'வாய் பார்க்காதே' என்று அதட்டும் அம்மாவும் கூட என்னைப் பார்க்க அனுமதித்ததாலோ என்னவோ அந்த நிகழ்ச்சி பிடித்திருந்தது. ஆனால் சிலர் அதை வெறும் நடிப்பு என்று கிண்டல் செய்தபோது கொஞ்சம் யோசித்தாலும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனுஷ்ய புத்திரனின் 'அரட்டையும் அரட்டலும்' கட்டுரையை வாசித்த போது அந்த நிகழ்ச்சியை பார்க்கும் கண்ணோட்டமே மாறிவிட்டிருந்தது. அதுவும் அவர் அந்தக் கட்டுரையில் எப்படி எல்லோரும் ஒரே மாதிரியான குரலில், பேசும்முறையில், முகபாவத்தில், உடல் அசைவில் பேச முடிகிறது. பல ஒத்திகை பார்த்து பிரச்சனையை கண்ணீருடன் எப்படி சொல்கிறார்கள் என்று எழுப்பிய கேள்வி சிந்திக்கத் தூண்டியது. அதன் பிறகு அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அதுவே ஒலித்துக் கொண்டும் இருந்தது.

துபாயில் அரட்டை அரங்கம் என்று அறிவிப்பைப் பார்த்தேன். ஆனால் கலந்துக் கொள்ள ஆவல் பெரிதாக வரவில்லை. பல நகைச்சுவைப் பட்டிமன்றங்களில் பேச்சுக்காக நகைச்சுவைக்காக எத்தனையோ தலைப்பை எடுத்துப் பேசியிருக்கிறேன். அது வெறும் பேச்சாகத்தான் இருக்குமே தவிர என் மனதின் கருத்தாக வாதமாக அமையாது. என் நோக்கமெல்லாம் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதாகவும் என்னுடைய பொழுதுபோக்காகவும் மட்டுமே அமையும். அதனாலேயே இந்த 'சீரியஸ்' மற்றும் உருக்கமான அரட்டை விளையாட்டுக்குப் போகவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களே உங்களைப் போன்றவர்கள் நிகழ்ச்சிக்குத் தேவை என்று வீட்டில் சொல்லிவிட கலந்து கொள்ள நேர்ந்தது.

எந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டாலும் அதில் அக்கறை செலுத்தாத வீட்டினருக்கும் கூட இம்முறை நான் ஒவ்வொரு சுற்றில் தகுதி பெறும்போதும் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அவர்கள் 'இந்தச் சுற்றில் தேர்வாகிவிட்டாயா?' என்று கேட்கும் போதெல்லாம் ஏதோ புது பொறுப்பு வந்துவிட்டதாக பயம் மேலோங்கியது. கொடுக்கப்பட்ட தலைப்போ 'அமீரக வாழ்வில் யாருடைய பிரிவு அதிக வேதனை தருகிறது
1. குடும்பம்
2. காதலி
3. நண்பர்கள்
4. தாய்மண்
5. என்னத்த பிரிவு? இங்கு நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்'.

தலைப்பு வந்தவுடன் என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் நான் 'நிம்மதியாக இருக்கிறோம்' என்று தான் பேசுவேன் என்று சரியாகச் சொல்லிவிட்டார்கள். நானும் எல்லாச் சுற்றிலும் நிம்மதியைப் பற்றிப் பேசியே தகுதியும் பெற்றேன். இறுதிச் சுற்றின் முடிவுக்கு எதிர்பார்த்திருந்த போது அழைப்பு வந்தது 'தேர்வாகிவிட்டீர்கள் ஆனால் எங்களுக்காக நீங்கள் வேறு தலைப்பில் பேச வேண்டும். உங்கள் பேச்சுத்திறனை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம்' என்று. எனக்குப் பேசக் கொடுத்த தலைப்பு 'தாய்மண் பற்றிய பிரிவு'. விரும்பிப் பேசுவது வேறு, அலங்காரப் பேச்சு வேறு - இதற்கு உடன்பட வேண்டாமென்று தோன்றினாலும் வீட்டில் உள்ளவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக ஒப்புக் கொண்டேன். யதார்த்தமில்லாது சோகம் கொட்டி நடிப்பது எனக்கு கடினமாகப்பட்டது.

ஆனால் 'முடியும்' என்று என் எண்ணத்தையே அதற்கேற்ப மாற்றிக் கொண்டு நாடகத்திற்கு தயாரானேன் அவர்களும் ஒரு சில விவரங்களையும் தந்து 'தயார்படுத்தினார்கள்'. என்னுடன் பேசியவர்களில் ஒரு பெண் அவர்களுக்கு 'brain tumor' இருந்த போது தன் குடும்பத்தினர் எப்படி ஒத்துழைத்தார்கள் என்று பேசி இதைவிட இந்த இடத்தில் இன்னும் உருக்கமாக்குவது எப்படி என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் ஒரு குழந்தையின் மரணத்தை பற்றி ஒத்திகையில் பேசி முடித்தவுடன் தேர்வுக்குழுவினரோ 'அந்த இடத்தில் இன்னும் உருக்கமாக இது போல் பேசுங்கள்' என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியாக ஒவ்வொருவருக்கும் எப்படி பேசுவதென்பது பற்றி குறிப்புகள் வழங்கப்பட்டபோதுதான். அரட்டை அரங்கம் என்பது 'நாடக அரங்கம்'தான் என்று தெள்ளத்தெளிவானது. இதனால்தான் எல்லோர் குரலும் ஒரே விதமாக ஒலிப்பதும் புரிந்தது.

நிகழ்ச்சி அரங்கேறியது சில வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு வேலை தினமாதலால் பார்க்கவுமில்லை அது குறித்து வீட்டாருக்கு நினைவுப்படுத்தவும் மறந்திருந்தேன். ஆனால், நான் பேசி முடிந்ததும் முகத்திற்கு வட்டம் போட்டு 'அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்' என்ற பாடலையும் ஒலிக்கச் செய்தார்களாம். ஒளிபரப்பிய நொடியிலிருந்து ஊரிலிருந்து சுற்றமும் நட்பும் அழைத்துப் பாராட்டு மழை பொழிந்தார்கள். என் வாப்பா என்னிடம் சரியாக பேசக் கூட முடியவில்லை காரணம் என் பேச்சைக் கண்டு கண் கலங்கி தொண்டையும் அடைத்துவிட்டிருந்தது. என் நடிப்புக்கு இவ்வளவு சக்தியா என்று நினைத்துக் கொண்டேன். எனது மாமியார் அழைத்து 'நீங்க பேசுனது சந்தோஷமா இருந்துச்சு ஆனா நீங்க பேசின விசயம் வேதனையா இருந்துச்சு. அங்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னா இங்கு வந்திடுங்க' என்று அப்பாவித்தனமாகச் சொன்னது மனதைச் சங்கடப்படுத்தியது. இதையெல்லாம் விட என் மாமா மகனுக்கு நிச்சயித்த பெண் இவனுக்கு துபாய்க்கு தொலைபேசி 'துபாய் மாப்பிள்ளைன்னு சொன்னதும் கல்யாணமாகி நானும் அங்க வரலாம்னு நினைச்சிருந்தேன். உங்க மச்சி பேசுனதப் பார்த்து அந்த ஆசையே போயிடுச்சு. உங்களுக்கெல்லாம் நம்ம நாட்ட பிரிஞ்ச ஏக்கம் இவ்வளவு இருக்குன்னா அங்க இருக்க வேணாம் வந்திடுங்க' என்று சொன்னார்களாம். அதை அவன் என்னிடம் சொல்லும் போது இந்த வருடத்தின் மிகப் பெரிய நகைச்சுவை என்றுதான் சிரிக்க முடிந்தது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுவதை அப்படியே நம்பி விடும் அளவுக்கு இதைக் கேட்கிறவர்கள் முட்டாள்களா, அல்லது அவர்களை முட்டாளாக்க முடிவு செய்து இப்படி வேஷம் போட்ட நாங்கள் முட்டாள்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதைப் போல் எத்தனை பேர் நான் இப்படிப் பேசியதை உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பி 'உச்சு' கொட்டியிருப்பார்கள், கண்ணீர் வடித்திருப்பார்கள். அதற்கு நானும் காரணமானதை நினைத்து என்னை நானே நொந்துக் கொண்டேன். இந்த மாதம் நடந்த ஜெயா 'மக்கள் அரங்கத்தில்' அதனாலேயே கலந்துக் கொள்ளவில்லை.

அரட்டை அரங்கத்தில் என்னுடன் ஒருவர் 'இலங்கைத் தமிழர்' என்ற முகவுரையோடு ஆரம்பித்துப் பேசினார். ஆனால் அவர் பேச்சு எனக்கு இலங்கைத் தமிழாகத் தெரியவில்லை அதுவும் அவரை முதல் சுற்றில் சாதாரண தமிழில் பேசி பார்த்த நினைவும் இருந்ததால் அவரிடம் நான் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான் 'நீங்கள் இலங்கைத் தமிழராகப் பேசுங்கள் பிரச்சனையில்லை ஆனால் நீங்கள் பேசுவது மொத்த இலங்கைத் தமிழரின் பிரதிபலிப்பாகட்டும் என்றேன். "மற்றவர்களுக்கெல்லாம் தற்காலிக பிரிவுதான் ஆனால் தாய் மண்ணை மீண்டும் எப்போது பார்ப்போம் என்று தெரியாமல் தவிப்பவர்களின் குரலாக உங்களுடையது ஒலிக்கட்டும்" என்றேன். அவரோ 'நிம்மதி' என்ற தலைப்பிற்குப் பேசினார். இலங்கைத் தமிழராக பேசிய அதே நபர் மக்கள் அரங்கில் சாதாரண தமிழில் பேசி என் சந்தேகத்தை தீர்த்து விட்டார். நாடகத்தில் இது கேடுகெட்ட நாடகம் என்று நினைத்துக் கொண்டேன்.

இந்த அரட்டை அரங்கத்தில் / மக்கள் அரங்கில் எத்தனையோ பேர் பேசுகிறார்கள் ஆனால் ஒருவரும் நடப்பது நாடகம்தான் என்று மற்ற அப்பாவிகளுக்குச் சொல்லாமல் இருப்பது ஏன்? நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே உண்மையை வெளியில் சொன்னால் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து அதில் ஏற்படும் பச்சாதாபம் குறையும்தானே? ஒத்திகை பார்த்து அழுதழுது சோகத்தை உள்ளிழுத்துப் பேசுகிறார்கள் சரி, ஆனால் ஒத்திகையில் கேட்டுவிட்ட அதே செய்தியை மீண்டும் நிகழ்ச்சியில் கேட்கும் போது எப்படித்தான் மடை திறந்த வெள்ளமாக டி.ஆருக்கும் சரி விசுவுக்கும் சரி தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறதோ தெரியவில்லை. சத்தியமா 'கிளிசரின்' போடாமல் இவ்வளவு கண்ணீர் வடிப்பதை முதல் முறையா பார்க்கிறேன்.

இந்த நிகழ்ச்சி மக்கள் அரங்கமாக, அரட்டை அரங்கமாக இன்னும் 'சன்', 'ஜெயா'வில் பல வருடங்களாக பல ஊர்களில் நடந்தவையாக ஒளிபரப்பிக் கொண்டிருப்பதற்கு காரணம் நம் மக்கள் இன்னும் முட்டாள்களாக இருப்பதுதான். மக்கள் விழித்துக் கொள்ள என் ஒரு பதிவு மட்டும் போதுமா என்ன?

நன்றி:

ஜெஸிலாவின் கிறுக்கல்கள்

ரெய்கி

தென்பாண்டி நாட்டான் http://pramalin.blogspot.com ல் எழுதியது


ரெய்கி என்ற மாய்மாலம் - நிரூபித்த 9 வயது எமிலி ரோசா.


ரெய்கி, நலமளிக்கும் பரிசம் (Therapeutic Touch) என்று சிலர் அவ்வப்போது பேசக் கேட்டிருக்கிறேன். மெய்ப்பொருள் தெரிந்து கொள்ளாமல் சிறுமை படுத்தக் கூடாதென்றாலும், இவற்றை சிகிச்சை முறை என்று கதைப்பவர்கள் மற்ற சமூகப் பிரச்சினைகளிலோ, அறிவியல் துறைகளிலோ அவர்கள் எடுக்கும் பிற்போக்கு நிலைப்பாட்டால் இத்தகைய விடயங்கள் மீது இயல்பாகவே வெறுப்பு ஏற்படுகிறது.

விருப்பு வெறுப்பு நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு இவ்விடயங்களில் உண்மை இல்லை என்பதை 1996லேயே எமிலி ரோசா தன் ஒன்பது வயதில் நிரூபித்திருக்கிறாள் என்று சென்ற மாதம் PBSன் Scientific American Frontiers தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன்.

இந்த சிகிச்சை முறைகளில் பயிற்சி பெற்றவர், நோயாளியின் உடலில் சம சீரற்ற ஆற்றல் புலத்தை (energy field) அவர்களை தொடாமலேயே ஒருசில அங்குலம் தள்ளி தங்கள் கைகளாலேயே உணர்ந்து, சமன்படுத்தி விடுவதாக பாவனை செய்வார்கள். சிலர் பிரபஞ்சத்தில் நிரைந்திருக்கும் நலமளிக்கும் சக்தியைப் பெற்று நோயாளிகளுக்கு அளித்து குணமாக்குவதாக சொல்வார்கள். இந்த சிகிச்சை மூலம் உடல் மனநோய்களையும் குணப்படுத்துவதாக சொல்கிறார்கள். மருத்துவர்கள் உடலுக்கு ஆற்றல் புலம் இருப்பதாக நிரூபணம் இல்லை என்பதால் இவைகளை சிகிச்சையாக ஏற்றுக் கொள்வதில்லை.

எமிலி TT-க்காரர்களின் நிகழ் படத்தைப் பார்த்தபோது அவர்களின் சிகிச்சை முறை பற்றி சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதில் உண்மையைக் கண்டறிந்து தன் நான்காவது வகுப்பு அறிவியல் புறத்திட்டிற்காக அறிக்கையாக சமர்பிக்கலாம் என்று நினைத்திருக்கிறாள்.

ஒரு அட்டையில் தடுப்பு செய்து தன்னையும் எதிரில் இருக்கும் பயிற்சியாளரையும் மறைத்து, அதில் அவர்கள் கைகள் நுழைய இரண்டு துளைகளிட்டு வைத்தாள். பயிற்சியாளர் மேசைமீது தடுப்புக்கு இந்தப் பக்கம் துளைகள் வழியே நீட்டி உள்ளங் கைகளை மேல்நோக்கி வைத்திருப்பார். எமிலி ஒரு நாணயத்தை சுண்டிவிட்டு, தலையா பூவா பார்த்து அதன்படி தன் ஒரு கையை அவர்களுடைய வலது கை மேலோ இடதுகை மேலோ படாத வண்ணம் வைப்பாள். உடலின் ஆற்றல் புலத்தை உணர்வதாகக் கூறும் பயிற்சியாளர் எமிலியின் கை வலதுபுறம் உள்ளதா இடதுபுறம் உள்ளதா என்று சொல்ல வேண்டும்.

எமிலி ஒன்றிலிருந்து 27 வருடங்கள் வரை அனுபவம் உள்ள 21 பயிற்சியாளர்களை வைத்து 128 பரிசோதனைகள் செய்தாள். ஒவ்வொருவரும் பத்து முறை சோதனைக்கு உட்பட்டார்கள். அவர்கள் சரியாக கணித்த சமயங்கள் 50 சதவிதத்திற்கும் குறைவு. அவர்கள் குருட்டாம் போக்கில் சொல்லியிருந்தால் கூட குறைந்தபட்சம் 50 சதவீதம் சரியாக கணித்திருப்பார்கள்.

11 வயதில் எமிலியின் ஆய்வை பிரசித்தி பெற்ற The Journal of the American Medical Association வெளியிட்டது சாதனையாகக் கருதப்படுகிறது.

10 வருடங்களுக்கு முன்பே நிரூபிக்கப்பட்ட வாய்பந்தலில் இன்னமும் சிலபேர் தோரணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நன்றி:

தென்பாண்டிநாட்டான்


--------------------------------------------------*----------------------------------------------

இதில் எனது கருத்து:
மேலும் பல நுணுக்கமான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ரெய்கி என்ற மருத்துவ முறை முற்றிலும் பொய்யானது என்று நிறுவ இந்த ஆய்வு போதாது. பாரம்பரிய மற்றும் மாற்று முறை மருத்துவங்களுக்கு தற்காலத்தில் உள்ள நிலைமை பரிதாபகரமானது. ஜெர்மனியில் தோன்றி இன்று உலகெங்கும் புகழ் பெற்று விளங்கும் homeopathy மருத்துவத்தையும் Placebo, psedomedicine என்று பரிகசித்தவர்கள்தான் இந்த ஆய்வையும் பாராட்டியுள்ளனர். பாரம்பரிய மற்றும் மாற்று முறை மருத்துவங்களை ஆய்வு செய்வதற்கான parameters இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதே இதில் ஒளிந்திருக்கும் உண்மை. நவீன மருத்துவத்தினை ஆய்வு செய்யும் கருவிகளை வைத்து பாரம்பரிய மற்றும் மாற்று முறை மருத்துவங்களை ஆய்வு செய்வது முட்டாள்தனம். இவ்வாறு செய்தால் கிடைக்கப்போவது negative result தான் இதையே தங்களுக்கு சாதகமாகப்பயன்படுத்திக் கொண்டு பாரம்பரிய மற்றும் மாற்று முறை மருத்துவங்கள் அனைத்துமே போலியானவை என பறைசாற்றுவதையே வழக்கமாக்கியுள்ளனர்.

பாரம்பரிய மற்றும் மாற்று முறை மருத்துவங்களை பற்றிய நமது பார்வை மாற வேண்டும்!

கட்டுரை கீற்று.காமிலிருந்துஇடி அல்லது இடிப்போம்...
ஆதவன் தீட்சண்யா


நாய் பன்னி
ஆடு மாடு எருமை கழுதை
கோழி கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள்
எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று
என்னிடம் புகாரேதும் இல்லை
இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால்.

Uthapuram

நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க் இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக? யார் எழுப்பியது?

ஒருதாய் பிள்ளையாக இருந்தவர்களுக்கிடையே பாகப்பிரிவினை ஏற்பட்டு கட்டப்பட்டதல்ல அந்த சுவர். கடவுளே காண்ட்ராக்ட் எடுத்து கல்லும் சிமெண்ட்டும் கலந்து கட்டிவைத்த தெய்வீகச்சுவருமல்ல அது. தலித்துகள் முகத்தில் விழித்துவிடக்கூடாது, தலித்துகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று தீட்டுப் பார்க்கிற ஆதிக்க சாதியினர் எழுப்பிய சுவர் அது. கட்டப்பட்ட காலம் கி.பி.1990.

ஈயும் பீயும் போல இந்தியர்கள்- தமிழர்கள் ஒற்மையாய் வாழ்வதாக போலி முழக்கங்களை எழுப்பி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருக்கும் தேசிய- இனப்பற்றாளர்கள் இந்த சுவர் குறித்து இதுவரை எந்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் நல்கவில்லை. ஆனால் சுவர் என்னவோ நின்று கொண்டிருக்கிறது கி.பி 2008ம் ஆண்டிலும். அதுவும் கடந்த பத்துநாட்களாக சுவற்றுக்கு மேல் மின்சாரவேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இருநாட்டு எல்லைகளுக்கிடையிலும் கூட இல்லாத இந்த தடுப்பரணின் புகைப்படத்தோடு 2008 ஏப்ரல் 17 அன்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து மின்சார ஒயர் பிடுங்கியெறியப்பட்டுள்ளது. ஒயரைத்தான் புடுங்க முடிந்ததே தவிர வேறு ஒரு மயிரையும் புடுங்கமுடியாது என்ற கொக்கரிப்போடு நிற்கிறது சுவர்.

செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் மனசாட்சியை உலுக்கிவிட்டதாகவும், நாம் நாகரீகச் சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து தொந்தரவு செய்வதாகவும் சில அன்பர்கள் தமது மனநிலையைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், தலித்தல்லாத ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றி விதவிதமாய் எழுப்பிக் கொண்டுள்ள மானசீகச் சுவர்களையும் நூல்வேலிகளையும் கண்டு வெதும்பி பழகிப்போன தலித்துகள் இந்த உத்தப்புரம் சுவர் இருப்பது குறித்து ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ புதிதாக ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் மனதளவில் வைத்திருக்கும் சாதி, தீண்டாமையுணர்வின் வெளிப்படை வடிவம்தான் அந்த சுவர் என்றே புரிந்து கொண்டுள்ளனர். தலித்துகளைப் பொறுத்தவரை தீண்டாமையின் இன்னொரு வடிவம். அவ்வளவே.

ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் ஒரு தென்னாப்பிரிக்காவை வைத்துக்கொண்டு நிறவெறியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கென்ன யோக்கியதை இருக்கிறது என்று அன்று அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இன்றும் எதிர்கொள்ளப்படாமல் இருக்கிறது குறித்து யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா ஒன்றல்ல, அது தீண்டத்தக்க இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்று அவர் வைத்த குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருப்பது குறித்தும் யாருக்கும் கவலையில்லை.

பக்கத்தில் இருக்கிற சேரிக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடுவோம் என்று அச்சமும் அசூயையும் ஆணவமும் கொண்டலைகிற இந்த சமூகத்தில், ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் வேற்று கிரகத்தில் குடியேறும் ஆராய்ச்சிகளைப் பற்றிய பெருமிதத்தில் பூமிக்குத் திரும்ப மறுக்கின்றனர். தலித்துகளுக்காக இயங்குவதாய் சொல்லிக்கொள்ளும் தலித் தலைவர்களோ திசைமாறி சினிமா புரஜக்டர் வழியாக புரட்சியை ஒவ்வொரு ஊரின் தியேட்டரிலும் ஓடவிட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நம்பி கோடம்பாக்கத்திற்கு குடிபோகத் தொடங்கிவிட்டனர். அல்லது அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தடுப்பது எப்படி என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுமே இந்த உத்தாபுரம் சுவர் பிரச்னையை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டக் குழு, 2008 பிப்-9 அன்று இம்மாவட்டத்தின் 47 மையங்களில் 107 கள ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வு நடத்தியது.

1. தீண்டாமை என்றதும் நம் நினைவுக்கு வருகிற - பழகிப் போன வடிவமான இரட்டைக்குவளை முறை பல்வேறு ரூபங்களை மாற்றிக் கொண்டு நிலைத்திருப்பதை இவ்வாய்வுக்குழு கண்டறிந்தது. தலித்துகளுக்கு தனி தம்ளர், புள்ளிவைத்த தம்ளர், சிரட்டை, தலித்துகள் குடித்த தம்ளர்களை அவர்களே கழுவி வைப்பது, ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை வழங்குவதால் தலித்துகளுக்கு ஐம்பது பைசா கூடுதல் விலையில் தேநீர் (ஒரு கப் ஐம்பது பைசாவா? தலித் தொட்டுக் கொடுக்கும் காசில் தீட்டு இருக்காதோ?), தேநீர்க்கடையின் பெஞ்சுகளில் சமமாக அமர்வதற்குத் தடை என்று இந்த கிராமங்களின் தேநீர்க்கடைகளில் தீண்டாமை நிலவுகிறது.

2.கிணறு, குளம் உள்ளிட்ட ஊரின் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதில் தலித்துகளுக்குத் தடை

3.முடிதிருத்தகங்களிலோ சலவைக்கடைகளிலோ தலித்துகளை முடிந்தமட்டிலும் தவிர்க்கவேண்டும் என்பதே அத்தொழில் செய்வோருக்கு ஆதிக்கசாதியினரின் எச்சரிக்கை. எனவே தலித்துகள் முடிதிருத்திக்கொள்ள பக்கத்து நகரங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே அனுமதித்தாலும் தனி இருக்கை. சலவைக்கடைகளில் ஆதிக்க சாதியினரின் துணிகளோடு கலந்துவிடாமல் தனியே ஒதுக்கி வைக்கவேண்டும். (கலந்துவிட்டால் ஏதாச்சும் புதுரகமான துணி பிறந்துவிடும் என்று பயப்படுகிறார்களாக்கும்.)

4. இன்னும் தலித்துகளுக்கு கோவிலில் நுழையத் தடை, சமுதாயக் கூடங்களில் அனுமதி மறுப்பு (சமுதாயம் என்பது இங்கு தலித்தல்லாதவர்கள் மட்டும்தான் போலும்), தூய்மைக்கேடான வேலைகளை செய்யுமாறு பணித்தல், சுயமரியாதைக்கு பங்கம் நேரும் வகையில் ஒருமையில் விளிப்பது, தலித் பெண்களிடம் பாலியல் வக்கிரங்களை வெளிப்படுத்தத் துணிவது, தலித் சுடுகாடுகளை அல்லது அதற்கான பாதைகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ரேஷன் பொருட்கள் விற்பனையிலும் வினியோகத்திலும் பாரபட்சம், குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படைத் தேவைகளில் புறக்கணிப்பு, தெருக்களில் தோளில் துண்டு போட்டுக் கொண்டோ, செருப்பணிந்தோ சைக்கிளிலோ செல்லத் தடை என தீண்டாமையின் வடிவப் பட்டியல் நீள்கிறது. கடைசியாக வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு போன்றவைகூட தலித்துகளுக்கு கிடைத்துவிடாமல் தடுப்பதற்கு பல உள்ளடி வேலைகள் உண்டு.

5. பிற மாணவர்களை பிரம்பால் அடிக்கிற ஆசிரியர்கள், தலித் மாணவர்களை தடியால் அடிப்பதற்கு பதிலாக சிறு கற்களையும் மண்ணாங்கட்டிகளையும் கொண்டே அடித்ததாகவும், அடித்தால் தலித் மாணவன்மீது படும் பிரம்பின் முனைவழியாகத் தீட்டு பாய்ந்து மறுமுனை வழியாக தம்மைத் தாக்கிவிடுவதைத் தவிர்க்கவே இத்தகைய உத்தியை ஆசிரியர்கள் கையாண்டனர் என்று அம்பேத்கர் தன் பள்ளிப்பருவத்தை நினைவுகூர்வார். மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அம்பேத்கர் காலத்து ஆசிரியர்களிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. பிற மாணவர்களை விட்டு தலித் மாணவர்களை அடிக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிரம்பு கொடுக்கும் ஆசிரியர்தான் இங்கு தீண்டாமையைக் கடந்தவர்.

இப்படி, ‘ஒக்காந்து யோசிப்பாங்களோ’ என்று மலைப்பு கொள்ளுமளவுக்கு விதவிதமான வகைகளில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளில் ஒன்றுதான் உத்தப்புரம் சுவர். இங்கு சுவர் மட்டுமே பிரச்னையல்ல. தமது குடியிருப்புக்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டும் என்பது தலித்துகளின் கோரிக்கை. பேருந்து நிறுத்தம் அமைந்தால் நிழற்குடைக்குள்ளிருக்கும் இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்திருப்பதை காண நேரிடுமாம். இந்த அவமானத்தை சந்திக்காமல் இருப்பதற்காக பேருந்து நிறுத்தமே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கசாதிக் கும்பல்.

தலித்துகள் தலைச்சுமையோடு நடந்துபோய் பஸ் பிடிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தப்புரம் பிள்ளைமார் சாதியினர்தான் சம்பளம் தருகிறார்கள் போலும். அவர்களும் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள் கப்சிப்பென்று. இங்குள்ள தலித் பகுதியிலுள்ள சாக்குடைக் குழாய்களுக்கு மேல் கட்டப்படும் சிறுபாலங்கள் ஆதிக்கசாதியினரால் உடைக்கப்பட்டு விடுகின்றன. அவற்றின் மீது தலித்துகள் உட்கார்ந்துவிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாததே காரணம்.

இன்னும் ஆண்டார் கொட்டாரம், தணியாமங்கலம் போன்ற கிராமங்களில் தபால்காரர் தலித்துகளுக்கு வரும் தபால்களை அவர்களது வீடுகளுக்குப் போய் வினியோகிப்பதில்லை என்ற தகவலும் தெரிய வந்தது. கிராமப்புற தபால்காரர், சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு தலித்தின் வருமானத்தை விடவும் குறைவாகவே ஊதியம் பெறுகிறவராயிருந்தாலும் அவருக்குள்ள சாதிக்கொழுப்பின் டிகிரி குறையாமல் இருக்கிறதை உணரமுடியும். சாதியுணர்வால் பீடிக்கப்பட்ட தனிமனிதர்களின் தொகுப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள அரசு நிர்வாகமும் சாதிமயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

மதுரை மாவட்டத்தில் நிலவக்கூடிய இப்படியான தீண்டாமைக் கொடுமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக 2008 பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. மாவட்ட நிர்வாகம் மசிந்துவிடுமா அவ்வளவு சீக்கிரம்? இந்த கிராமங்களில் நிலவக்கூடிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மார்ச்-25 அன்று மதுரையில் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தி, உத்தாபுரம் சுவரை நிர்வாகம் இடிக்கவில்லையானால் நாங்களே இடிப்போம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) தலைவர்கள் அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரைப்பகுதி விடுதலை சிறுத்தை மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டது வரவேற்கக்கூடிய அம்சம்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானதின் தொடர்ச்சியாக அஸ்ஸாமிலிருந்து வெளியாகும் சென்டினல் என்ற பத்திரிகையும் உத்தப்புரம் சுவர் பிரச்னையை வெளியிட்டதாகவும் அச்செய்தி தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரியவருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் சுவர் பற்றிய விளக்கத்தைக் கோரி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தினமலர் நாளிதழ் (2008 மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளது.

சுவர் நீடிக்கக்கூடாது என்ற உணர்வு தலித்துகளிடம் ஒரு கொதிநிலையை எட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் கோயில் திருவிழா வந்துவிட்டது. தலித்துகளின் வீட்டு விசேஷங்களுக்கு தோரணம், வரவேற்பு வளைவு, அலங்காரம் செய்வது, வெடி வெடிப்பது போன்றவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடைகள் கோயில் திருவிழாவுக்கும் பொருந்தும். சாமியாயிருந்தாலும் தலித்துகளின் சாமிகள் கொஞ்சம் அடக்கியேதான் வாசிக்கனும் போல. இதற்காக எந்த சாமியும் இதுவரையிலும் யார் கண்ணையும் குத்தவில்லை என்பது வேறுவிசயம்.

ஆனபோதும் சாதியாணவத்தின் குரூரச் சின்னமாய் நிற்கிற சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பதற்றமடைந்த ஆதிக்கசாதியினர் (பெரும்பாலும் பிள்ளைமார் சாதி) சுவற்றுக்கு மேலே கம்பிகள் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சுவற்றை மின்சார தடுப்பரணாக மாற்றியுள்ளனர். இந்த மின்திருட்டை எப்படி மின்சார வாரியம் அனுமதித்தது என்பதெல்லாம் இனிமேல் வெளியாக வேண்டிய உண்மைகள். (தபால்காரருக்கு சாதியுணர்வு இருக்கும்போது மின் ஊழியருக்கு இருக்கக்கூடாதா என்பதுகூட காரணமாயிருக்கலாம்). திருட்டு வேலை செய்தாவது அவர்கள் காப்பாற்றத் துடிப்பது சுவற்றை அல்ல, சாதியைத்தான் என்பதில் நமக்கொன்றும் குழப்பமில்லை.

மின் கம்பிகளுடன் சுவர் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி இந்து நாளிதழில் 17.04.08 வெளியான நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நன்மாறன் 17.04.08 காலை தமிழக முதல்வரைச் சந்தித்து சுவற்றை அகற்ற அரசு முன்வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அன்றே சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார் (தீக்கதிர் 18.04.08).

18.04.08 அன்று உத்தப்புரத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமாகிய தோழர் பி.சம்பத் மற்றும் மதுரை மாவட்டத் தலைவர்கள் சென்று இருதரப்பையும் சந்தித்துள்ளனர்.

சுவரை உடனடியாக அகற்றுவது, தலித்துகள் புழங்க முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ள எல்லா பொதுப்பாதைகளையும் திறப்பது, தலித் குடியிருப்புக்கு அருகாமையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஆகியவை குறித்து சுவர் எழுப்பியுள்ளவர்கள் பேசும்போது 1990ல் பதினெட்டுப்பட்டி (தமிழ்ச் சினிமாவில் வருகிற அதே பதினெட்டுப்பட்டிகள் தான்) கூட்டம் போட்டு, சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்து தலித்துகளிடம் முத்திரைத்தாளில் கையெழுத்தும் பெற்றுள்ளனர். ஒரு சட்டவிரோதக் காரியத்தை சட்டப்பூர்வமானதுபோல் செய்யத் துணிந்திருக்கின்றனர். இந்த முடிவு காவல்துறைக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது என்கிற ஜம்பம் வேறு. இங்கிருக்கிற காவல்துறையினர் அந்தரலோகத்திலிருந்து அவதாரமெடுத்து வந்தவர்களா என்ன? அவர்களும் காக்கிச்சட்டைக்குள் இருக்கிற ஏதோவொரு சாதிக்காரர்தானே?

இந்த சுவரை இடித்தவுடனே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பிரிந்திருந்த இருதரப்பும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் என்றோ கல்யாணம் கருமாதிகளில் ஒருசேர கலப்பார்கள் என்றோ நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தீண்டாமை ஒரு குற்றம் என்று அரசியல் சட்டம் சொல்கிற ஒரு நாட்டில், தலித்துகளை ஒதுக்கி வைக்க என்னமும் செய்யலாம் என்கிற சாதியகங்காரத்தின் குறியீடாய் இருக்கிற அந்த சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். அது நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாகரீக சமூகத்திற்கான கனவும் விழைவும் களங்கப்படுகிறது.

சகமனிதர்பால் அன்பும் கருணையும் சகோதரத்துவமும் பொழிகிற உன்னதமான பண்பை நோக்கி நகர விரும்புகிறவர்களின் முன்னே மறித்து நிற்பது உத்தப்புரம் சுவர் மட்டுமல்ல என்றாலும் இந்தச் சுவர் இடித்தகற்றப்பட வேண்டும். நியாய சிந்தனையுள்ள ஒரு குடிமக்கள் தமது மனதுக்குள் மறித்து நிற்கும் சுவர்களைத் தகர்த்து வெளியே வந்து இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் ‘உத்தப்புரம் சுவற்றை இடி. அல்லது இடிப்போம்...’

நன்றி: கீற்று.காம்
(புகைப்படம் நன்றி: 'தி ஹிந்து' நாளிதழ்)

- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்

செல்வேந்திரன் இடுகைகள்

விரிப்போட்டார் தெரு

"அது என்னங்க 'விரிப்போட்டார் தெரு'ன்னு ஒரு தெரு. என்ன அர்த்தம்?!" என்றாள் கேண்டி. பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு எப்பாடு பட்டாவது விடை கண்டுபிடித்துச் சொல்வது ஆண்வர்க்கத்தின் புராண காலப் பழக்கம் என்பதால் நானும் விடை தேடிப் புறப்பட்டேன்.


சிலப்பதிகாரத்தில் கோவலனின் தந்தை மாநாய்கன். கண்ணகியின் தந்தை மாசாத்துவான். மாநாய்கன் என்றால் திரைகடல் ஓடி திரவியம் தேடும் வணிகன். மாசாத்துவான் என்றால் தரைவழி வாணிகம் புரிபவன் என்று பொருள். இவர்கள் வாணியச் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றே வரலாற்று ஆய்வுகளின் மூலம் அறியப்படுகிறது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை சாத்தான்குளத்தில் வாணிய செட்டியார் என்றழைக்கப்படும் செட்டிமார்களின் குடும்பங்கள் சுமார் 3000 இருந்துள்ளது. அதன் அடையாளமாகத்தான் இன்றளவும் செக்கடி, செக்கடி புதுத்தெரு, செட்டியார் நடுத்தெரு, அருணாசலம் செட்டியார் காம்பவுண்டு, செட்டியார் மேலத் தெரு, செட்டியார் கீழத்தெரு, ஆறுமுகம் செட்டியார் காம்பவுண்டு போன்ற பலத் தெருக்கள் இருக்கின்றன.

செட்டியார்களின் குலத்தொழில் வணிகம். சாத்தான்குளத்துச் செட்டிமார்களும் கடல் மற்றும் தரை வழி வணிகத்தில் கோலோச்சி இருந்திருக்கின்றனர். தரைவழி வணிகம் புரிபவர்கள் வியாபாரத்திற்காகப் பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒரு ஊரை விட்டு மற்றொரு ஊருக்குச் செல்கையில் பொதிமாடுகளைப் பயன்படுத்தி உள்ளனர். அப்படிப் பயன்படுத்தும் பொதிமாடுகளின் முதுகில் பொருட்களின் சுமை அழுத்தாமல் இருக்க 'விரி' என்ற அழைக்கப்படும் மெல்லிய மெத்தைப் போன்ற விரிப்புகளை பயன்படுத்தி உள்ளனர். அந்த விரியை பெருமளவில் உற்பத்தி செய்பவர்கள் இருந்து வந்த தெருவே விரிப்போட்டார் தெரு என்றழைக்கப்பட்டு வந்துள்ளது. என்று அவளுக்கு விளக்கி முடித்தேன். 'ஏன்யா ஒரு பேச்சுக்கு கேட்டா இப்படியாய்யா சிலப்பதிகாரம், சீவசிந்தாமணின்னு மொக்கய போடுவ' என்றாள் கேண்டி.

Monday, October 20, 2008

கட்டுரை விழிப்பு.நெட் லிருந்து

கம்ப்யூட்டர்களில் இருந்து கண்ணை காப்பது எப்படி?

தற்கால மனிதனின் இயந்திர வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்படும் உறுப்பு கண் தான். கம்ப்யூட்டர் எப்படி நம் வாழ்வோடு இணைந்து விட்டதோ அவ்வாறு நம் கண்ணிற்கு கேடு தரும் விஷயமாகவும் அது அமைந்து விட்டது. ஆனால் இனி கம்ப்யூட்டரை நம்மால் தவிர்க்க முடியாது. எனவே எந்த அளவிற்கு கண்ணை பாதிக்காமல் கம்ப்யூட்டரை நாம் பயன் படுத்தலாம் என தெரிந்து கொள்ள வேண்டும். கண் பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவின் பழமையான மருத்துவமான ஆயுர்வேதத்தில் "சாலக்கிரந்தம்' என்ற பிரிவில் விளக்கப்பட்டுள்ளது.

பக்கவிளைவு இல்லாத ஆயுர்வேத முறையில் கண் சிகிச்சை அளிக்கும் கேரளாவின் ஸ்ரீதரீயம் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய டாக்டர்கள் என்.பி.பி.நம்பூதிரி, நாராயணன் நம்பூதிரி கூறியதாவது: தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் பார்ப்பவர்கள், புகை நிறைந்த ரோட்டில் ஹெல்மெட், கூலிங் கிளாஸ் இல்லாமல் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு கண்நோய் வர 80 சதவீத வாய்ப்புகள் அதிகம். கம்ப்யூட்டரை விட "டிவி'யின் பாதிப்பு அதிகம். இவற்றை தொடர்ச்சியாக பார்ப்பதால் உடனடி களைப்பு அடைவது நமது கண்கள் மட்டுமே. கம்ப்யூட்டர் மானிட்டரின் கதிர்வீச்சால் கண் வறட்சியடைகிறது. சராசரியாக நமது இமைகள் ஒரு நிமிடத்திற்கு 16 முதல் 30 முறை வரை சிமிட்டுகிறது. ஆனால் கம்ப்யூட்டர் மானிட்டரை நாம் உற்றுநோக்கி கொண்டு இருக்கும் போது ஒரு நிமிடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையே கண் சிமிட்டுகிறோம்.

இப்படி இமைகளை அசைக்காமல் பார்ப்பது தவறு. அரைமணி நேரத்திற்கு ஒருமுறை கம்ப்யூட்டரில் இருந்து கண்களை விலக்கி தூரத்தில் எங்காவது பார்க்க வேண்டும். கருவிழியை கண்ணின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று பயிற்சி செய்ய வேண்டும். இமையை அசைக்க வேண்டும். தினமும் நான்கு முறையாவது சுத்தநீரில் கண்ணை கழுவ வேண்டும். வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் சில நிமிடங்கள் கண்ணை மூடியபடி அமர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். இமைப்பகுதிகளை வருடி லேசாக "மசாஜ்' செய்யலாம். கம்ப்யூட்டர்களில் எல்.சி.டி., டி.எப்.டி., மானிட்டர்களை பயன்படுத்தினால் கதிர்வீச்சு அபாயம் குறைவாக இருக்கும். "டிவி'யை தொலைவில் வைத்து பார்க்கவும். கீறல் விழுந்த கண் கண்ணாடிகளை பயன்படுத்த கூடாது. வீடுகளில் விளக்குகளின் வெளிச்சம் குறைவாக இருப்பது நல்லது. சி.எப்.எல்., பல்புகள் நல்லது. சிறுவர்கள் மேஜை விளக்குகளை பயன்படுத்தி படிக்க கூடாது. கீரை வகைகள், காய்கறிகளை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது. இவ்வாறு கூறினர்.

கண்ணிற்கு மை அழகு:

* கண்ணிற்கு மை எழுதும் போது மோதிர விரல் நுனியால் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கைநகம் படாமல் வரைய வேண்டும். குழந்தைகளுக்கு பிறந்த 15 நாளில் இருந்து மை எழுதலாம். ஒன்றரை மாதத்தில் கை, கால் நகங்களை வெட்டி விட வேண்டும். இல்லையேல் நகங்களால் கண்ணை கசக்க வாய்ப்பு உண்டு. குழந்தைகள் கண்ணில் ஊதி தூசியை எடுக்க கூடாது. கையால் தொடாமல் தூயநீரால் கண்ணை கழுவினால் போதும்.
* குழந்தைகள் பிறந்து இரண்டு மாதத்தில் கண்பார்வை பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு நல்ல நிறமுடைய விளையாட்டு பொருட்களை அவர்கள் பார்வையில் படும்படி வைத்து குழந்தை அதனை தொடுகிறதா என பார்க்க வேண்டும்.

Tuesday, October 14, 2008

கன்னிமாரா (Connemara) பொது நூலகம்
கன்னிமாரா பொது நூலகத்தை முதன் முதலில் தொடங்க, 1890-ல் திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் “போபி இராபர்ட் போர்க் கன்னிமாரா பிரபு” (Bobby Robert Bourke Baron Connemara 1827 - 1902) என்பவர். முன்னதாக 1860-ல் சென்னை அருங்காட்சியகத்தின் பகுதி நேரக் கண்காணிப்பாளரான கேப்டன் ஜெஸ்ஸி மிட்செல் அரசை அணுகி, அருங்காட்சியக நூலகம் ஒன்றை அமைக்க வேண்டினார். அந்நூலகம் 1862 முதல் செயலாற்றத் தொடங்கிற்று. பின்னர் அதில் நூல்கள் பெருகப் பெருக அதற்கு ஒரு புதிய கட்டடம் தேவையாயிற்று. அக்கட்டடத்திற்குத்தான் கன்னிமாரா பிரபு அடிக்கல் நாட்டினார். எனவே, கன்னிமாரா நூலகத்தின் நிறுவனர் என்ற பெருமை காப்டன் ஜெஸ்ஸி மிட்செலுக்குத்தான். அவருக்கு பின்வந்த “ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக்” என்பவரால் 1896ல் டிசம்பர் 5 ம் நாள் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்பட்டது.

நூலகத்தின் வளர்ச்சி

1940-ல் தனி நிறுவனம் ஆகியது
1950-ல் தமிழ்நாடு மைய நூலகமானது
1954-ல் இந்திய நூல்களின் வைப்பிடம் Depository under the Delivery of Books (Public Libraries) Act 1954) ஆகியது
1955-ல் ஐக்கிய நாடுகள் அவை நூல்களின் வைப்பிடமா மாறியது 1965ல் யூனெசுகோ தகவல் நிறுவனம் (Unesco Information Centre) ஆயிற்று
1966-ல் நூலக ஆணைக் குழு நூலகங்களுக்கான பயிற்சி நிலையம் ஆயிற்று
1973-ல் புது கட்டடம்
1983-ல் மேலும் மேலும் புதிய பொலிவுடன் வளர்ச்சி அடைந்தது.

இப்போது கன்னிமாரா நூலகம் தனிப்பெரும் நிறுவனமாக மாறிவிட்டது.


சேவைகள்

பதினாறாம் நூற்றாண்டு நூல்கள் முதல் இன்றைக்கு வெளிவந்த நூல்கள் வரை சேமிக்கப்பெறும் இந்த நூலகத்தில் ஏறத்தாழ 5 லட்சத்து 7 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.

வாசகர்களுக்கு - படிக்கிறவர்களுக்கு குறிப்புதவி வசதி அளிக்கப்படுகிறது. காலம் கடந்த நூல்களில் இருந்தும் எதிர்கால எதிர்பார்ப்புகளில் இருந்தும் கருத்தைத் தேடிக் கொடுக்கும் கனிவான பணியும் நடக்கிறது. குறிப்புதவி நூல்களாக ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. இந்த நூலகம் நூல்களை இரவல் தருவதோடு மாதம் 100 ரூபாய் கட்டினால் குறைந்தபட்சம் 2 நூல்களை வீட்டுக்கே கொண்டு வந்தும் தருகிறது. பெரும்பாலான நூல்கள் பாடவாரியாக, ஆசிரியர்வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டு தொலைக்காட்சிகளும் 60 கல்வி ஒளிநாடாக்களும் உள்ளன. கணிப்பொறி மயமாகி வரும் இந்நூலகத்துள் ஒரு லட்சம் நூல்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கல்வி தொடர்பான குறுந்தகடுகள் 140 உள்ளன. நகலெடுக்கும் வசதி உள்ளது.

தமிழ்நாட்டுப் பொது நூலகங்களில் பணியாற்றி வரும் பயிற்சி பெற்ற நூலகர்களுக்கு முதனிலை நூலக இயல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.


பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கான பிரெய்லி மற்றும் பேசும் புத்தகச் சேவையும் உள்ளது. தேசியத் தகவல் மையப் பொதுத் தகவல் முறையகம் மூலம் ஏராளமான தகவல்கள் இங்கே கிடைக்கின்றன. இந்தியச் சுற்றுலா வழிகாட்டி, இந்தியப் பல்கலைக்கழகக் கல்விமுறை வழிகாட்டி, ஊரகத் தொழில் நுட்பங்கள், இந்தியப் பாரம்பரிய அறிவியல், இந்திய மாவட்டங்கள்-மாநிலங்களின் விவரங்கள், இந்தியப் பொருளாதார வங்கியியல் விவரங்கள், இந்தியத் தொழிற்சாலைகளின் அகராதி, வேளாண் புள்ளியியல் விவரங்கள் போன்றவை இந்தப் பிரிவில் கிடைக்கின்றன. அரசுத் தேர்வு முடிவுகளை இதில் காணலாம்.

இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மணிக்கு ரு. 35ம் அரை மணிக்கு ரூ.20ம் கட்டணம். விரைவில் மைக்ரோ பிலிமில் நூல்களை ஏற்றிப் பாதுகாக்க உள்ளனர். அயல்நாடுகளில் இருந்து அதற்கான இயந்திரங்கள் விரைவில் வர உள்ளன.

வேலை நாட்கள்

தேசிய விடுமுறை நாள்கள் மூன்றையும் மாநில அரசின் ஆறு விடுமுறை நாள்களையும் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் காலை 9 முதல் இரவு 7.30 மணி வரை இந்த நூலகம் இயங்குகிறது.

வாசகர்கள்

இந்த நூலகத்திற்கு 68 ஆயிரம் ஆயுள் உறுப்பினர்கள் உள்ளனர்.ஒரு நாளைக்குச் சராசரியாய் ஆயிரத்து இருநூறு பேர் வருகின்றனர். சனி, ஞாயிறுகளில் இந்த எண்ணிக்கை, 2000 வரை போகிறது. கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் என்ற ஒன்று இருக்கிறது. இதற்குத் தலைவர் உள்ளார். செயற்குழு உள்ளது. ஆனால் இதுவரை கூட்டங்கள் ஏதும் கூட்டப்பெறவில்லை.

பராமரிப்பு

பயன்பாட்டினைப் பொறுத்து நூல்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ- மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தூசு தட்டிச் சுத்தம் செய்யப்படுகின்றன. மிகப் பழைய நூல்களின் பக்கங்கள் ஒவ்வொன்றும் ஷிபான்சில்க் என்ற துணி ஒட்டப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.

பொது நூலகத் துறையிலிருந்து நூல்களைப் பெறுவதோடு தனக்கென்று நூல் தேர்வுக் குழு ஒன்றையும் இந்த நூலகம் கொண்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் பாட நூல்கள், வெளிநாட்டு நூல்கள் போன்றவை வாங்கப்படுகின்றன.

கன்னிமாரா பொது நூலகம் இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும். ஆதலால் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள் நாளிதழ்கள் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு பிரதி இங்கு பெறப்படும்.


இந்த இடுகைக்கான தகவல்கள்


கன்னிமாரா பொது நூலக இணையதளம்

விக்கிபீடியா

flickr

hindu

அண்ணாகண்ணன் வெளி

ஆகியோரிடமிருந்து நன்றியுடன் பெறப்பட்டுள்ளது.

Friday, October 10, 2008

கணக்கு


kanakku.blogspot.காம் இல் நண்பர் பத்ரி சேஷாத்ரின் இடுகைகள் மிக பயனுள்ளவையாக இருக்கின்றன. எளிய தமிழில் வகைநுண்கணிதம், பின்னங்கள் போன்றவற்றை விளக்குகிறார்.

ஆங்காங்கே வரலாற்றுத் தகவல்களும் உண்டு!

உதாரணத்திற்கு,

“நாம் நேற்று பார்த்த இருபடிச் சமன்பாடுகளின் தீர்வை முதலில் கொடுத்தவர் பாஸ்கரர்தான். இத்துடன், முப்படிச் சமன்பாடுகளின் தீர்வு, அதற்கு மேற்பட்ட பலபடிச் சமன்பாடுகளைத் தீர்க்கமுடியுமா முடியாதா போன்ற பலவற்றை பாஸ்கரா லீலாவதியில் எழுதியுள்ளார். இவற்றை நாம் பின்னர் பார்க்கப் போகிறோம். இந்த சமஸ்கிரித நூல்களின் ஆங்கில மொழியாக்கம் ஹென்றி தாமஸ் கோல்புரூக் என்பவரால் செய்யப்பட்டு (Algebra, with Arithmetic and Mensuration, from the Sankrit of Brahmagupta and Bhaskara) கிடைக்கிறது.”

முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

ஜுன் மாததிலிருந்து இடுகைகள் இல்லையே? தயவு செய்து தொடருங்கள்!

Tuesday, October 7, 2008

எரியும் நினைவுகள்

எரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்!
1981ம் ஆண்டில் சிறிலங்கா ஆட்சியாளர்களால் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண பொதுசன நூலகம் பற்றிய "எரியும் நினைவுகள்" என்னும் 50நிமிட ஆவணப்படம் திரையிடலுக்கான தயார் நிலையில் உள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

நூலகம் எரியூட்டப்பட்டு 27வது ஆண்டினை எட்டிவிருக்கும் 31-05-2008ல், இப்படத்தினை உலகெங்கும் காண்பிக்கும் வகையிலான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈழத்தமிழர்களின் பெருஞ்சொத்தாகவும், கல்விப்புலமையின் குறியீடாகவும் விளங்கிய இந்நூலகத்தின் கதை ஈழத்தமிழர்களின் அரசியல் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்தது.

1933ல் இருந்து இற்றைவரையான அந்நூலகத்தின் வலிமிகுந்த கதையை சொல்வதற்கு சினிமாமொழியின் பல்வேறு சாத்தியங்களையும் இயக்குநர் சோமீதரன் பயன்படுத்தி உள்ளார்.

சிதைவுற்ற நூலகத்தின் காட்சிகள், கோணங்கள், அங்கு பணியாற்றியோரின் வாக்குமூலங்கள், பத்திரிகை நறுக்குகள், உரைகள், கறுப்பு வெள்ளையிலான காணொளி நேர்காணல்கள், வரைபடங்கள், எடுத்துரைப்புகள், இசைக்கோர்ப்புகள் இப்படி பல்வேறு சாத்தியங்களுடனும் எரியும் நினைவுகள் தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம், பிரெஞ் மற்றும் யேர்மன் மொழிகளில் நூலகத்தின் கதையை எடுத்துரைக்கும் வகையில் இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2006ம் ஆண்டில் இருந்து இவ்வாவணத்தை தயாரிக்கத் தொடங்கிய 'நிகரி" தயாரிப்பு குழுவினரினர், பற்றாக்குறையான வளங்களுடன், பல்வேறு நெருக்கடிகளுக்கும், சிக்கல்களுக்கும் முகம்கொடுத்து தற்போது பணிகளை முடித்துள்ளனர்.

தங்கள் வரலாற்றை பேணிக்காப்பதில், ஆவணப்படுத்துவதில் அதிக அக்கறை இல்லாத ஈழத்தமிழ்ச் சமூகத்தில் இவ்வகையான முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.

எண்பதுகளில் வாழ்ந்த, உணர்ந்த ஒரு தலைமுறையின் எரியும் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கும் காவிச்செல்லும் பணியை இவ்வாவணப்படம் கொண்டுள்ளது.

நன்றி:
யாழ்.காம்

தமிழ் மருத்துவ வானில் புதிய விடிவெள்ளிகள்தினமணி′யில் ′′மாற்றங்கள் தேவை. எங்கு′′ என்ற மடல் பற்றி.

பாளையங்கோட்டை,
10-07-1994.

9.7.94 ′தினமணி′யில் ′′மாற்றங்கள் தேவை. எங்கு′′ என்ற தலைப்பிடப்பட்டு வந்துள்ள கருத்தைக் கவரும் கடிதம் உவகை கொள்ளச் செய்தது. நம் நாட்டு மரபு அறிவியல் - தொழில்நுட்பங்களை நோக்கி இளைய தலைமுறையின் கவனம் திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிப்பதில் வியப்பில்லை.

நாட்டு மருத்துவத்தை இழிவுபடுத்திக் கருத்துப் பரப்புவது தொலைக்காட்சியின் இடைவிடாத பணியாகும். அதில் பங்கு கொள்ளும் அலோபதி மருத்துவர்கள் நோய் தீர்க்கும் பணியாளர்களாக நடுநின்று கருத்துரைப்பதில்லை. தங்கள் தொழிலுக்குப் போட்டியாக விளங்கும் இன்னொரு தொழில்முறையைக் குறைகூறும் வாணிகர்களாகவே செயற்படுகின்றனர். இறக்குமதி - ஏற்றுமதித் தொழிலையே தன் ஆட்சியின் ஒரே பணியாகச் செய்யும் இந்திய அரசின் ஆளுகையிலிருக்கும் தொலைக்காட்சி அலோபதி மருத்துவர்களின் இந்தப் போக்கைத் தன் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது எதிர்பார்க்கத்தக்கதே.

டாக்டர் க.வெங்கடேசன் ′தினமணி′யில் ஒரு மருந்து பற்றி எழுதிய ஒரு கருத்தைக் குத்தலாகத் தாக்கிய ஒரு அலோபதி மருத்துவருக்கு அவரது கூற்று தொழிற் போட்டியினால் எழுந்ததே தவிர நடுநிலையானதல்ல என்று நான் எழுதியதற்கு அவர் இன்று வரை மறுமொழி கூறவில்லை.

தமிழ் மருத்துவத்தின் இன்றைய நிலை என்ன? நாட்டுப் புறங்களில் ஆங்காங்கே வாழும் நாட்டுப்புற மருத்துவர்கள் ஏதோவொரு நோய் தீர்ப்பில் மட்டும் திறன்படைத்துள்ளனர். நோய்க் கணிப்பில் தவறாலோ வேறு காரணங்களாலோ சிக்கல்கள் நேர்ந்தால் அடுத்து என்ன செய்வதென்று அறியமுடியாமல் திகைக்கிறார்கள். இதற்குக் காரணமுள்ளது. ஒரு மாபெரும் மாளிகையாயிருந்த நம் தொழில்நுட்பங்கள் வரலாற்றுக் காரணங்களால் வெடித்துச் சிதறியதில் ஆங்காங்கு சிதறிக் கிடக்கும் துணுக்குகள் போன்றவை தாம் இன்றைய நாட்டு மருத்துவர்கள். அவர்களிடம் இருக்கும் இந்தத் துணுக்குகளைத் திரட்டி அதனை அறிவியல் அடிப்படையில் தொகுத்தும் பகுத்தும் ஆய்ந்தும் தெளிந்தால் ஒட்டுமொத்தமான ஒரு மருத்துவ மண்டலத்தை அலோபதி மண்டலத்துக்கு எதிராக அல்லது இணையாக நிறுத்தலாம்.

சோழர்கள் காலத்தில் குந்தவை பிராட்டியார் போன்றோர் நிறுவிய மருந்துச் சாலைகள், அலோபதியில் இன்று விளங்கும் பொது மருத்துவமனைகளின் தன்மையில் தமிழ் மருத்துவமுறையில் பொது மருத்துவமனைகளாக விளங்கியிருக்கும்.

இதுபோன்ற வேட்கையுடன் மருத்துவக் கல்லூரியில் தேறிச் சொந்தமாக தொழில் தொடங்கியிருந்த மைக்கேல் என்ற இளைஞர் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு கூட்டம் நடத்தினார். அவரது ஆசிரியரான பெண்மணி ஒருவர் தலைமை தாங்கினார். அதில் தமிழ் மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவம் செய்வோர் சிக்கல்களை எதிர் கொள்ளும்போது அந்நோய்களில் தனித்திறமை பெற்ற நாட்டுப்புற மருத்துவர்களை சிறப்பாளர்களாகக் கொண்டு ஆலோசனை பெறுவதன் மூலம் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்று அவர்களது மருத்துவ இரகசியங்களை அறியலாம். அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைக் கட்டணத்தை நோயாளிகளிடமிருந்து பெற்றுத்தருவதன் மூலம் அவர்களது தன்னம்பிக்கையையும் உயர்த்தலாம் என்று நான் கருத்துரைத்தேன். இந்தக் கருத்து அந்தக் கூட்டத்துக்கு முன் திரு. மைக்கேலுடன் உரையாடும்போது எங்களிடையில் உருவானதாகும்.

ஆனால் தலைமை தாங்கிய ஆசிரியர் இந்தக் கருத்தைப் புறக்கணித்தார். வலியுறுத்தியபோதும் கருத்தெதுவும் தெரிவிக்கவில்லை. நேரடியாகவே கேட்டேன். ′′நாட்டுப்புறத்தில் மருத்துவம் புரிபவர்களைப் பண்டாரப்பயல்கள் என்று கருதுகிறீர்களா?′′ என்று அதற்கும் அந்த அம்மையார் மறுமொழி கூறவில்லை. ′′தமிழ் மருத்துவம் பற்றித் திரட்ட வேண்டிய செய்திகளெல்லாம் திரட்டப்பட்டுவிட்டன. அவற்றை அறிவியல் அடிப்படையில் ஆய முனைந்தால் போதும்′′என்று கூறிவிட்டார். மூலிகைகளின் இயற்பியல் வேதியல் குணங்களையும் மருந்துகள் உடலில் செயற்படும் பாங்கினையும் அறிவியல் அடிப்படையில் ஆயவேண்டுமென்பதில் நமக்குக் கருத்து வேற்றுமை இல்லை. ஆனால் தமிழ் மருத்துவக் கல்வித் துறையில் கவனத்துக்கு வராத மருந்துச் செல்வங்கள் எண்ணற்றவை உண்டு என்பதையும் அவற்றைக் கையாளும் மருத்துவர்கள் நம் மதிப்புக்கு உரியவர்கள் என்பதையும் பட்டம் படித்தவர்கள் ஏற்க மறுக்கிறார்களே. தங்களை ஒரு புதிய சாதியினராகப் பார்க்கத் தொடங்கிவிட்டனரே; அதன்மூலம் தமிழ் மருத்துவத்துக்குக் கிடைக்க வேண்டிய பெருமையும் வலிமையும் கைநழுவிப் போகின்றனவே என்பதுதான் நம் கவலை.

மேற்கொண்டு நடந்த கூட்டங்களோ பிற முயற்சிகளோ என் போன்றோருக்கு தெரிவிக்கப்படவில்லை. ஓரிரண்டாண்டுகளுக்குப் பின்னர் கற்ப அவிழ்தம் என்ற காலாண்டிதழ் ஒன்றை மட்டும் தற்செயலாகக் காண நேர்ந்தது. இன்னொரு தமிழ் மருத்துவப் பட்ட மருத்துவரிடம் பேசும்போது அக்குழு சிதைந்துவிட்டதாக அறிந்தேன். (இச்செய்தி உண்மையல்ல என்பதைப் பின்னர் அறிந்தேன்.)

உண்மைநிலை என்னவென்றால் ஒருமுறை செயப்பிரகாஷ் நாராயணன் என்பவர் (இவர் சென்னை தமிழ் மருத்துவக் கல்லூரியில் ரீடராக இருக்கிறார்) கூறியதுபோல இன்னும் முப்பு போன்று பண்டை மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல பொருட்களின் உண்மையான சேர்மானம் கூட இன்றைய தமிழ் மருத்துவக் கல்வித்துறையினருக்குத் தெரியாது. தமிழ் மருத்துவத்தின் பெயரில் பட்டம் பெற்றவர்களில் மிகப் பெரும்பான்மையினர் நாடி பார்க்கும் குழலைத் தோளில் போட்டுக் கொண்டு அலோபதி மருத்துவர் போல் பாவனை செய்கின்றனர்.

அதே நேரத்தில் இங்கு எலும்பு முறிவுக்கு மருத்துவம் செய்யும் பண்டாரவிளைக் குடும்பத்தினர் எவ்விதத் தயக்கமோ தாழ்வுணர்ச்சியோ இன்றி நோவை மட்டுப்படுத்துவதற்கு அலோபதி மாத்திரைகள் எழுதிக் தருகின்றனர். தமிழ் மருத்துவத் தொழில் குடும்பங்களைச் சேர்ந்த மிகச் சிறுபான்மை அலோபதி மருத்துவர்கள் அலோபத் மருந்துகளுக்குத் துணையாகத் தங்கள் குடும்பத் தயாரிப்புகளான நாட்டு மருந்துகளையும் கையாள்கின்றனர்.

தமிழ் மருத்துவத்தின் மூலவர்களாகிய சித்தர்கள் நிட்டையில் அமர்ந்து உட்கார்ந்த இடத்திலேயே தம் அறிவைப் பெற்றனர் என்று தமிழ் மருத்துவக் கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதன்மூலம் மாணவர்கள் ஆய்வு மனப்பான்மையையே மடிய வைத்துவிடுகின்றனர். சித்தர் நூல்களில் இருப்பனவாகக் கல்லூரியில் சொல்லித் தரப்படுபவற்றுக்கு அப்பால் அவர்களது சிந்தனை செல்ல முடியாமல் சிறைப்படுத்திவிடுகின்றனர். ஆனால் சித்தர்கள் நூல்களில் அவர்கள் ஒவ்வொரு மூலிகையையும் உலோகத்தையும் முழுமையாக ஆய்ந்து அவற்றின் இயற்பியல் வேதியியல் பண்புகளை விளக்கியுள்ளனர். இது நிட்டையில் அமர்ந்து எய்த முடியாதது. கடும் உழைப்பின் மூலமே இதனை எய்த முடியும். ஆனால் எவ்வித ஆய்வு உத்திகளை அவர்கள் கையாண்டார்கள் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

சித்தர்கள் அனைவரும் விதிவிலக்கின்றி சோதிட நூற்களை இயற்றியுள்ளனர். சோதிடம் என்பது வானியலின் திரிந்த ஓர் வடிவமே. மனிதனும் உலகில் வாழும் பிற உயிர்கள் அனைத்தும் வான்பொருட்களின் இடைவினைப்பாட்டில் தோன்றியவையே. எனவே மனிதனின் உடல், உள்ளம் ஆகியவற்றின் செயற்பாட்டில் அவ்வான்பொருட்களில் பாதிப்பு இருப்பதில் ஐயமில்லை. அந்தப் பாதிப்புகளைக் கண்டறியும் ஒரு முயற்சியாக அல்லது கண்டறிந்து பெறப்பட்ட முடிவுகளின் ஒரு வடிவமாகச் சோதிடத்தைப் பார்ப்பதில் தவறில்லை. உடல், உள்ளம் தவிர மனைவி, மக்கள், உறவினர், எதிர்காலம் போன்றவற்றுக்கு விரிவாக்கும் போதுதான் சோதிடம் கொச்சைப்பட்டுப் போகிறது.

புகழ்பெற்ற நாட்டு மருத்துவர்கள் அனைவருமே சோதிடத்திலும் வல்லவர்களாக இருந்தனர். நோய்களின் தன்மைகளை அறிந்து கொள்ள அவர்கள் சோதிடத்தின் துணையை நாடினர். புகழ்பெற்ற கணியராக விளங்கிய நெல்லை ஈ.மு.சுப்பிரமணிய பிள்ளை ஒரு மருத்துவரும் கூட.

சோதிடத்துக்கும் தமிழ் மருத்துவத்துக்கும் உள்ள தொடர்பு உறுதிப்படுத்தப்படுமேயானால் நம் பண்டைத் தொழில்நுட்பம் குறித்த ஓர் அரிய உண்மை புலப்படும். அதாவது வான்பொருட்களின் இயக்கத்தைத் துல்லியமாக அவர்கள் கண்டறிந்திருந்தார்கள் என்பதுடன் அவை ஒவ்வொன்றும் மனிதனின் உடல், உள்ளம் ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் கண்டுபிடித்திருந்தார்கள் என்பதே அந்த உண்மை. எனவே சோதிட நூல்களைப் புதிய கண்ணோட்டத்தில் ஆய்வது இன்றியமையாதது.

இலக்கியத் திறனாய்வு, மொழியியல், மானிடவியல், மெய்ப்பாட்டியல்(அழகியல்) ஆகிய துறைகளில் இன்றைய மேலையர் இன்னும் திட்டவட்டமான முடிவுக்கு வரமுடியாமல் திணறுகின்றனர். ஆனால் பண்டைத் தமிழர் அவற்றில் திட்டவட்டமான முடிவுகளை எய்திவிட்டனர் என்பதைத் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்கள் சான்று கூறுகின்றன. இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு எனக்கு ஒரு எண்ணம் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நாட்டுப் புறங்களில் நிலவும் பல்வேறுதுறைத் தொழில்நுட்பங்களை மேலை அறிவியலின் துணை கொண்டு ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் இனம் காணமுடியுமென்றால் மேலையர்கள் சென்றவழியில் செல்லாமலேயே அவர்களைத் தாண்டி (Bye - Pass செய்து) நாம் முன்னே செல்ல முடியும் என்பதே அது. இளைய தலைமுறை அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.

நாகர்கோயில் கார்மல் பள்ளியில் ஆபிரகாம் லிங்கன் என்றொரு அறிவியல் ஆசிரியர் உள்ளார். அவர் தன் சொந்த முயற்சியால் தமிழ் மருத்துவ நூல்களைக் கற்று மருத்துவம் செய்து வருகிறார். தான் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தன் சொந்த முயற்சியால் தீர்வுகள் கண்டு வெற்றிநடை போடுகிறார். தான் செய்யும் மருத்துவங்களின் குறிப்புகளையும் வைத்திருக்கிறார் என்று கருதுகிறேன்.

இன்று தமிழ் மருத்துவ வானில் புதிய விடிவெள்ளிகள் முளைத்திருக்கின்றன. டாக்டர் என்.கே. சண்முகம் போன்றோர் மூலிகைகளில் அடங்கியிருக்கும் பல்வேறு வேதிப் பொருட்களையும் அவை எவ்வாறு நோய்களோடு வினைப்பட்டுக் குணத்தைத் தருகின்றனவென்றும் ஆய்வு செய்து ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்துள்ளனர். இளைய தலைமுறை அதனைப் பற்றிக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை. தொலைக்காட்சியும் அரசின் பொதுத் தொடர்புக் கருவிகளும் இருட்டடித்தாலும் அரசு இயந்திரத்தில் அடங்கியிருக்கும் சிறுபான்மையினரான நாட்டுப்பற்றாளர்களின் துணையுடன் இந்த இருட்டடிப்பை நாம் வெல்லலாம்.


அன்புடன்,
குமரிமைந்தன்.

நன்றி:
இந்த இடுகை குமரிமைந்தன் படைப்புகள் தளத்திலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டுள்ளது!