Tuesday, April 21, 2009

நூல் அறிமுகம்Krishna weds Kavitha

உணவே மருந்து

(உணவும் மருந்தும்)

டாக்டர் எல். மஹாதேவன், விலை: ரூ. 125

தெரிசனங்கோப்பு ஸ்ரீ சாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் மருத்துவக் குழு உதவியுடன் டாக்டர் எல். மஹாதேவன் எழுதியுள்ள இந்த நூலில், அன்றாட வாழ்விற்குப் பயன்படும் சாதம், குழம்பு, ரசம், துவையல், பச்சடி, தொக்கு, ஜூஸ், கஞ்சி போன்ற பழமை மாறாத மருத்துவக் குணமுள்ள உணவு வகைகள் 18 தலைப்புகளில் தெளிவான செய்முறைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

“இந்நூலின் நோக்கம், நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துகள், மருந்துகள், பயன்கள் பற்றிப் பேசுவது. உடலில் எந்தக் குறைபாட்டுக்கு அல்லது நோய்க்கு என்ன உண்ண வேண்டும் எனும் அரிய தகவல்கள் அடங்கியது” என்கிறார் முன்னுரையில் நாஞ்சில் நாடன்.


மேலும் விவரங்களுக்கு: http://www.kalachuvadu.com

காலத்தின் கட்டாயம்

- முனைவர் இர.வாசுதேவன், M.A.,M.Phil.,Ph.D.

தமிழர் பண்பாடு அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வகை ஒழுக்கங்களைக் கொண்டது. ஒழுக்கங்களுக்கு முதலாக இருப்பது, இன்பமாகும். மனித வாழ்வு இன்பமுடனிருக்க வேண்டும். உடல் நலமும் உள நலமும் செம்மையாகப் பேணப் பட வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு உருவானது, தமிழ் மருத்துவம்.

தமிழ் மருத்துவம் தொன்மையானது என்பதற்குச் சிந்துவெளி முத்திரைகள், தொல்காப்பியம், சங்க இலக்கியம், ஐம்பெருங் காப்பியம், திருக்குறள் பொன்றவை சான்றாக அமைந்துள்ள. அவற்றில், மருத்துவக் குறிப்புகளும், நோய் பற்றிய செய்திகளும், மருத்துவம் பற்றிய குறிப்புகளும், மூலிகைகளும் காணப்படுகின்றன.

சங்க காலத்தில் தோன்றிய மருத்துவத் தனி நூல் எதுவும் கிடைக்க வில்லை.என்றாலும், சங்க காலப் புலவரால் இயற்றப் பெற்ற ஆற்றுப்படை என்னும் மருத்துவ நூலின் ஒரு பகுதி கிடைத்துள்ளது. சங்க காலத்தில் மருத்துவ நூல்கள் தோன்றின என்பதற்குச் சான்றாகிறது. சங்க காலத்தில் ‘கலைக்கோட்டுத் தண்டார்’ என்னும் முனிவர் இருந்திருக்கிறார். அவர், ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூலை இயற்றியிருக்கின்றார். அந்த சுவடி, ஜெர்மனி நாட்டிற்குச் சென்றிடுக்கிறது. அதன்பின்னால், ஜெர்மனி மருத்துவத் துறையில் முன்னிலைப் பெற்றுள்ளது! என்று, ஜெர்மனி நாட்டுத் தமிழரிஞர் கருத்து தெரிவிக்கிறார். ஆனால், அம்முனிவர் எழுதிய நூலின் ஒரு பகுதி கூட நமக்குக் கிடைக்கவில்லை.

கலைக்கோட்டு முனிவர் நூலைப் பார்த்து, பல நூல்கள் இயற்றினேன்! என்கிறார். போகர்.
அதைப்போல், நாடு கடந்து சென்ற சுவடிகள், 87 நாடுகளின் நூலகங்களில் இருக்கின்றன.
சிலப்பதிகாரத்தில் அரைப்பு முறையால் செய்யும் மருந்துகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அவை,

சந்தான கரணி - முரிந்த உறுப்புகளை ஒட்டுவது.
சல்லிய கரணி - வேல் தைத்த புண்ணை ஆற்றுவது.
சமனிய கரணி - புண்ணின் தழும்பை மாற்றுவது.
மிருத சஞ்சீவினி - இறந்த உடலை உயிர்க்கச் செய்வது.

ஆனால், இம்மருந்துகளைப் பற்றிய குறிப்புகள், எந்த மருத்துவ நூலிலும் காணவில்லை.

தமிழ் மருத்துவ மரபைத் தோற்றுவித்தவர் திருமூலர். திருமூலர் இயற்றிய ‘எண்ணாயிரம்’ என்னும் நூல் கிடைத்தில. வடலூர் வள்ளலார், அந்நூல்லின் அருமை பெருமையை வியந்து போற்றுகிறார். எந்த நூலும் எண்ணாயிரத்துக்கு ஈடில்லை! என்கிறார். தருமையாபுர ஆதினத்தின் சுவடி நூலகத்தில் “எண்ணாயிரம்” நூல் இருந்ததைக் கண்டதாகவும், சில காலங்களுக்குப் பின்னர் அந்நூலைத் தேடிச் சென்ற போது, ஆங்கே அந்நூல் இல்லை! என்றும், தமிழ்த் தாத்தா உ.வே.சா குறிப்பெழுதியுள்ளார்.
எண்ணாயிரம் என்னும் நூல் ஒன்றே தமிழ் மருத்துவத்துக்கு மூல நூலாக இருந்திருக்க வேண்டும். அதன் சிறப்பினாலேயே அது காணாமற் போயிருக்க வேண்டும்.

முல்லை நிலத்துச் சித்தராகிய இடைக்காடர், அரியவகை மருந்துகளைக் கூறியுள்ளார். அச்செய்தி, உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள மேற்கோள் களிலிருந்து கிடைக்கிறது. ஆனால், இடைக்காடர் இயற்றிய தனிநூல் ஒன்றையும் காணோம்.

அதேபோல்,
அகத்தியர் - 81000,
அகத்தியர் - 51000,
அகத்தியர் - 30000,
அகத்தியர் - 21000,
அகத்தியர் - 18000,
அகத்தியர் - 8000,
பரஞ்சோதி - 8000,
கோரக்கர் வெண்பா,
மச்சமுனி கலிப்பா,
சங்கர மாமுனி கிரந்தம்,
மாபுராணம்
போன்ற நூல்கள் தமிழ் மருத்துவத்துக்கு ஆதாரமாக இருந்துள்ளன. அவற்றிலிருந்து ஒரு சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூல்கள் சமஸ்கிருதத்திற்கு மொழிக்கு மாற்றம் செய்யப் பட்டிருக்கின்றன. அவ்வாறே மங்கோலியம், திபெத்தியம், அரபி, தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளுக்கும் சென்றுள்ளன. அவை, தமிழ் நூல்களாகவே வழங்கி வருகின்றன என்பது வருத்தத்துக்கு உரியது.

தமிழ் மருத்துவத்தின் ஒரு பிரிவாகிய வர்ம மருத்துவத்தின் மறு வடிவமாகியிருக்கிறது, சீன மருத்துவம்.

வடக்கிலுள்ள நாலந்தா பல்கலைக் கழகம், ஆயுர்வேத பல்கலைக் கழகம், சமஸ்கிருத கல்லூரிகள் ஆகியவற்றிலுள்ள உள்ள நூல்களில் செம்பாதி தமிழ் நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நூல்களை மொழிமாற்றம் செய்தவர்கள், தமிழ் மொழிப் புலமை யில்லாமல் செய்த பிழைகளை தேரையர் என்னும் சித்தர் கேளி செய்திருக்கிறார். இதிலிருந்து, மொழித்திருட்டு வெளிப்பட்டிருக்கிறது.
இலங்கை இராவனேஸ்வரன் நூலகத்திலிருந்து திருடி வரப்பெற்ற நூலைப் பார்த்து மருத்துவ நூல் இயற்றப்பெற்ற தாக, இரச சாஸ்திரம் என்னும் சமஸ்கிருத நூல் குறிப்பிடுகிறது.

தமிழ் மருத்துவ நூல்கள், செய்யுள் வடிவாக இருந்தாலும் அவை தமிழ் இலக்கிய வடிவங்களாகவே இருப்பது போற்றுதற்குரியது.

உதாரணமாக, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, நொண்டி, சிந்து, கும்மி, பள்ளு, காவியம், காப்பியம், சிந்தாமணி, சூடாமணி, கல்லாடம், திருமந்திரம், சதகம், கரிசல், பிள்ளைத் தமிழ், உலா, பாரதம், நிகண்டு, திருப்புகழ், கோவை, தண்டகம், வாகடம், சூத்திரம், திறவுகோல், சுரிதகம் என்று பலவடிவங்களைக் குறிப்பிடலாம்.

தமிழ் மருத்துவச் சுவடிகளைத் திரட்டும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றுள்,கீழ்க்கண்ட நிறுவனங்கள் தமிழ் மருத்துவச் சுவடிகளைத் திரட்டியுள்ளன.

தமிழ்ப் பல்கலைக் கழகம் - 5000
சரசுவதி மஹால் நூலகம் - 396
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் - 270
சித்த மருத்துவ மேம்பாட்டுக் குழு - 478
உஸ்மான் கமிட்டி - 594
உ.வே சாமிநாதர் நூலகம் - 15
விருத்தாசலம், வீர சைவ மடம் - 15
பாண்டிச் சேரி, பிரஞ்சு- இந்திய கலைக்கூடம் 80
மதுரை, தமிழ்ச் சங்கம் - 24
திருவனந்தபுரம் கீழ்த்திசை சுவடி நூலகம் - 165
சென்னை, கீழ்த்திசை சுவடி நூலகம் - 579

இவையல்லாமல், தமிழகத்திலுள்ள சைவ வைணவ மடாலயங்கள், கோயில்கள், மருத்துவ மனைகள், மருத்துவர்களிடம் நூற்றுக் கணக்கான சுவடிகள் இருக்கின்றன.

இத்தனைச் சுவடிகள் இருந்த போதிலும், தமிழ் மருத்துவம் நிறைவு பெற்ற மருத்துவ முறைகளைக் கொண்டதாகக் கூற முடியவில்லை. காரணம்,

(உ.வே.சா போன்ற) தமிழ்ச் சான்றோர்கள் தமிழ் நூல்களைத் திரட்டியது போல, மருத்துவ நூல்களைத் திரட்ட முன் வந்தது போல, மதுரை காமராஜர் பல்கலைப் பேராசிரியர்களும் மாணவர்களும் ஒன்று திரண்டு, தமிழகத்தின் இல்லங்கள் தோறும் சென்று சுவடிகளைக் கண்டறியும் பணியை மேற்கொண்டனர். அவர்கள், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று சுவடிகள் பற்றிய கணக்கெடுப்பு நிகழ்த்திய போதில், பலரிடம் அரிய சுவடிகள் இருப்பதை அறிவிந்துள்ளார்கள். அவர்கள், சுமார் ஒன்பது இலட்சம் ஓலைச் சுவடிகளைக் கணக்கெடுத்துள்ளார்கள். அச்சுவடிகளில் தமிழ் மருத்துவத்தைத் தலை நிமிரச் செய்யும் அரிய முறைகளைக் கொண்ட நூல்கள் இருக்கக் கூடும். ஆனால், அவற்றைக் கையகப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாதிருப்பது வருத்தத்திற்கு உரியதாக இருக்கிறது.

மூட்டையில் கட்டி மூலையில் வைத்தால் தங்கமே ஆனாலும் என்ன பயன்? ஆகவே,
தமிழ் மருத்துவம் சிறப்படைய வேண்டுமானால், கீழ்க்கண்ட செயல்கள் நடைபெற வேண்டும்.

கி.பி 1927 க்கு முன் சித்த மருத்துவம் என்னும் பெயர் வழங்கப்படவில்லை. மருத்துவம் என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆகவே, சித்த மருத்துவம் என்னும் பெயரை ‘தமிழ் மருத்துவம்’ என்று, வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.

தமிழ் மருத்துவத்தில் மூல மருந்தாகப் பயன் படுத்தப்பட்ட கற்பம், சரக்குகள், பாடாணங்கள், மூலிகைகள் ஆகியவற்றில் பல அடையாளம் காணப் படவில்லை.

மூலிகைகளைப் பாதுகாக்கும் பணியில் தமிழகத்து கோயில்களும் ஈடுபட்டிருக்கின்றன. கோயில்களில், ஸ்தல் விருட்சம் என்று கூறப்படுகின்ற கோயில் தாவரங்கள், அரியவகை மூலிகை இனமாகும். அவை நூற்றுக் கணக்கான ஆண்டுகள் முதிர்ந்த நிலையில் உள்ளன. அவை, பிற தாவர இனங்களின் பண்பிலிருந்து மாறுபட்டவை. (அவ்வாறு உள்ள 124 தாவரங்களை எனது ஆய்வேட்டில் பட்டியலிட்டுள்ளேன்) அவற்றை ஆராய்வது தமிழ் மருத்துவத்துக்கு உகந்ததாக இருக்கும். மூன்றே பொருளால் ஆனது அண்டம், பிண்டம், சீவன், வாதம், நோய், மருந்து என்பதன் உட்பொருள் ஆராயப்படவில்லை. முப்பு என்பதும் குரு மருந்து என்பது என்னவென்று தெரியவில்லை.

சுவடி வடிவத்திலிருந்து நூல்வடிவம் பெற்ற நூல்களில், பல, பொருள் விளங்காமல் செய்யுள் வடிவிலேயே இருக்கின்றன. பல நூல்கள் பிழையாகப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. ஒரே நூல் வெவ்வேறு பெயரில் வெளியாகியுள்ளது. ஒரு நூலின் பகுதிகள் வேறு ஒரு நூலின் பகுதியாக அமைந்துள்ளது. இச்செயல்கள், தமிழ் மருத்துவ வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.

இந்தியாவில் ஆயுர் வேதக் கல்விக்காக மொத்தம் 196 பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் இருக்கின்றன என்பது வியப்பளிக்கிறது.

அயல் நாடுகளிலும் 6 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.

சித்த மருத்துவக் கல்லூரிகளாக இருப்பவை மொத்தம் - 12.
அவற்றில் தனியார் கல்லூரிகள் 10, அரசுக் கல்லூரிகள் 2.

இந்தியாவிலுள்ள ஆயுர்வேதப் பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் திரட்டிய மருத்துவ நூல்கள் அனைத்தையும் ஆராய வேண்டும். ஆங்குள்ள தமிழ் மருத்துவ நூல்களை அடையாளம் காண வேண்டும்.

அண்ணா சித்த மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ள ஆயுர் வேதம் - தமிழ் மொழி பெயர்ப்பு நூலை ஆராய வேண்டும். அதன் மூலம், தமிழ் மருத்துவ நூல்கள் ஆயுர்வேதமாக மாற்றப்பட்டுள்ள உண்மை வெளிவரும்.

தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தமிழ் மருத்துவ நூல்களைத் திரட்டும் பணிக்குழு நியமிக்க வேண்டும். பதிப்பிலுள்ள நூல்களைத் தொகுக்க வேண்டும்.

வட மொழிக்கும் / ஆயுர் வேதத்துக்கும் இருப்பதைப் போல, தமிழ் மருத்துவத்துக்கு ஒரு பல்கலைக் கழகம் நிறுவ வேண்டும்.

தமிழ் மருத்துவ மாநாடுகள், கருத்தரங்குகள் நடைபெற வேண்டும். புதிய புதிய மருத்துவ முறைகளைக் கண்டறிய பரம்பரை மருத்துவர், குடும்ப முறை மருத்துவர் (பாட்டி வைத்தியம்) ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும்.

தமிழ் மருத்துவத்தில் மாட்டு வைத்தியம் சிறப்படைய வில்லை. ஆனால், சிறந்த மாட்டு மருத்துவர்கள் தமிழகத்தில் இருக்கின்றார்கள். அவர்களைக் கண்டறிந்து மருத்துவ முறைகளைத் திரட்ட வேண்டும். சரசுவது மஹாலில் நூற்றுக் கணக்கில் மாட்டுவாகட நூல்கள் இருக்கின்றன. ஆனால், அவை பதிப்பில் வெளிவர முயற்சி செய்ய வேண்டும்.

மலைவாழ் இன மக்களிடம் அரிய மருத்துவ முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. அவர்களிடமிருந்து அம்முறைகளைக் கற்க வேண்டும்.

ஆயிரக்கணக்கில் மருத்துவச் சுவடிகள் இருக்கின்றன. என்றாலும் அவை பதிப்பிக்கப் படாமல் சுவடியாகவே இருக்கின்றன. அவற்றைப் பதிப்பிக்க குழு அமைக்க வேண்டும்.

நிலம் கடந்து / நாடு கடந்து சென்ற சுவடிகளைக் கண்டறிந்து, அவற்றை மீட்டெடுக்க முயல வேண்டும்.

படைப்பாளர்கள் தங்கள் முயற்சியினால் படைக்கப் படுகின்ற நூல்கள், 50 ஆண்டுகள் நிறைவடைந்தால் அந்நூல்கள் பொதுச் சொத்தாகி விடுகின்றன. அதைப் போல, தனியாரிடம் உள்ள ஓலைச் சுவடிகள் அனைத்தும் அரசுச் சொத்து என அறிவிக்க வேண்டும். தங்களிடமிருக்கும் சுவடிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்காமல் இருப்பதும், அழிப்பதும், மறைப்பதும் குற்றமாக அறிவிக்க வேண்டும்.

சிறந்ததும் அரியதுமாகிய மருத்துவச் சுவடிகளையோ மருத்துவ முறைகளையோ அளிப்போர்களுக்கு ஏற்ற சன்மானம் அளிக்க வேண்டும்.

பிற துறைகளில் சிறந்தவர்களைச் சிறப்பு செய்வது போலத், தமிழ் மருத்துவத் துறையில் சிறந்தவர்களுக்கு ஆண்டு தோறும் விருது அளித்து சிறப்பு செய்ய வேண்டும்.

தமிழ் மருத்துவம் பயிலும் மருத்துவர்களுக்குச் சுவடிகளைப் படிக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு தமிழ் மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ் மருத்துவ இலக்கியத் துறை நிறுவ வேண்டும். ஒவ்வொரு கல்லூரியும் சுவடிகளை ஆராய்தல், மருந்துகளை ஆராய்தல், நூல்களைப் பதிப்பித்தல் போன்ற பணிகளைச் செய்ய உத்தரவிட வேண்டும்.

தமிழகத்தின் இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் சுவடிகளைத் திரட்ட குழு அமைக்க வேண்டும். அறிவிப்புகள் வெளியிட வேண்டும். கிராம சுகாதார அதிகாரிகள், கிராம வருவாய்த்துறை அதிகாரிகள் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகியோரைப் பயன் படுத்தி, சுவடிகளைத் திரட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும். திரட்டும் சுவடிகள் நூல்வடிவாகத் திட்டமிடல் வேண்டும். பதிப்பித்த நூல்களில் காணப்படும் மருத்துகளை ஆய்வு செய்து வெளியிட வேண்டும். மேற்கண்ட பணிகளை ஆற்றுகின்ற முனைப்பும் திறமும் நம்மிடம் இருக்கின்றன. வேண்டிய நிதி ஆதாரமும் ஊக்கமும் அளிக்க மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும்.

பொருப்பிலிருப்பவர்கள் உரிய பணிகளைச் செய்ய முன்வருவார்கள் என நம்புகின்றோம்.

“தமிழில் மருத்துவ இலக்கியங்கள்” என்னும் புதிய வடிவங்களை, ஆய்வு செய்த வேளையில், “இந்திய மருத்துவ அறிவியல், கணிதம், வானவியல் போன்ற மரபுகளுக்கெல்லாம் ஆதாரமாகத், ‘தமிழ் மரபு’ விளங்குகின்றது! என்பதை நிறுவ கிடைக்கப்பெறும் ஆவணச் சான்றுகளைத் தங்கள் பார்வைக்குக் கொண்டுவர விழைகின்றேன்.

தமிழ் மருத்துவத்தின் வளர்ச்சி, தமிழ் மருத்துவத்தின் பாதுகாப்பு ஆகியவற்றுக்குரிய சிறப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. தற்போதுள்ள தமிழ் மருத்துவத்தின் துறைப்பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்பது எனது பரிந்துரையாகும்.

தமிழ் மருத்துவம், பண்டைய காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பழந்தமிழ் மருத்துவப் பாடல்கள் ஒரு சில கிடைத்தாலும் அதன் மருத்துவ நூல்கள் கிடைத்தில. சங்க காலத்து ‘கலைக்கோட்டுத் தண்டார்’ என்னும் முனிவர் இயற்றிய ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட நூல் இருந்ததற்கான சான்றும், அந்நூல் ஜெர்மனி நாட்டிற்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு, தமிழ் மருத்துவச் சுவடிகளும் தமிழ் இலக்கியச் சுவடிகளும் சுமார் 87 நாடுகளின் நூலகங்களில் இருப்பதாக, உலக நாடுகளின் நூலக ஆய்வு தெரிவிக்கிறது.

மருத்துவ நூல் உரையாசிரியர்கள் மேற்கோளுக்காக எடுத்தாண்டுள்ள இடைக்காடர் மருத்துவம், அகத்தியர் - 81 000, அகத்தியர் – 51 000, அகத்தியர் 30 000, அகத்தியர் 21 000, அகத்தியர் 18 000, அகத்தியர் 8 000, பரஞ்சோதி 8 000, கோரக்கர் வெண்பா, மச்சமுனி கலிப்பா, சங்கரமுனி கிரந்தம், மாபுராணம் போன்றவை தமிழ் மருத்துவத்துக்கு ஆதாரமாக இருந்துள்ளன. இது, மேற்கோளுக்காகக் எடுத்துக் காட்டப்பட்டுள்ள பாடல்களினால் தெரியவருகிறது.

தமிழ் மருத்துவ மரபைத் தோற்றுவித்தவர் எனக் கருத்தப்பெறும் திருமூலர் இயற்றிய ‘எண்ணாயிரம்’ என்னும் நூலின் அருமையை வடலூர் வள்ளலார் போற்றுகிறார். தருமையாபுர ஆதினத்தின் சுவடி நூலகத்தில் ‘எண்ணாயிரம்’ என்னும் நூல் இருந்ததைக் கண்டதாக, உ.வே.சா. குறிப்பெழுதியுள்ளார்.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூல்கள் சமஸ்கிருதத்திற்கும் மங்கோலியம், திபெத்தியம், அரபி, மலையாளம், தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளுக்குச் சென்றுள்ளன. அவை, இன்றும் தமிழ் நூல்களாகவே வழங்கியும் வருகின்றன.

வடக்கிலுள்ள நாலந்தா பல்கலைக் கழகம், ஆயுர் வேத பல்கலைக் கழகம், சமஸ்கிருத கல்லூரிகள், கேரளாவில் வழங்கி வருகின்ற ஆயுர் வேத கல்லூரி ஆகியவற்றில் வழங்கி வருகின்ற மருத்துவ நூல்களில் செம்பாதி தமிழ் நூல்கள் என்பது குறிப்பிடத் தக்கது. வடமொழியிலுள்ள இரச சாஸ்திரம், இராவணன் நூலகத்திலிருந்து கொண்டு வரப்பெற்ற நூலைப் பார்த்து எழுதியதாகத் தெரிவிக்கிறது.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டளவில் குமரி, திருவனந்தபுரம் பகுதியில் வழங்கி வந்துள்ள ‘சிந்தாமணி மருத்துவம்’ என்னும் ‘இராவணன் மருத்துவ நூல்கள்’ அனைத்தும் திருவிதாங்கூர் மன்னரின் தூண்டுதலினால் திரட்டப் பட்டுள்ளன. அவை, நொய்யாற்றங்கரை என்னும் ஊரில் நிறுவப்பட்டிருந்த ‘தமிழ் மருத்துவ ஆய்வு மையம்’ என்னும் அமைப்பின் மருத்துவர்களும் வர்ம ஆசான்களும் அகத்தியர் பெயரில் மலையாள மொழியில் மொழிமாற்றம் செய்துள்ளனர்.

அந்நூல்களின் உதவியினால் உருவாக்கப் பட்டதே ‘ஆயுர் வேத மருத்துவம்’ ஆகும்.
இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம் வருமாறு:-

1. உடற்கூறு நூல்
2. மலை வாகடம்
3. மாதர் மருத்துவம்
4. இராவணன் – 12000
5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
6. இராவணன் வைத்திய சிந்தாமணி
7. இராவணன் மருந்துகள் - 12000
8. இராவணன் நோய் நிதானம் - 72 000
9. இராவணன் – கியாழங்கள் – 7000
10. இராவணன் வாலை வாகடம் – 40000
11. இராவணன் வர்ம ஆதி நூல்
12. வர்ம திறவுகோல் நூல்கள்
13. யாழ்பாணம் – மூலிகை அகராதி
14. யாழ்பாணன் – பொது அகராதி
15. பெரிய மாட்டு வாகடம்
16. நச்சு மருத்துவம்
17. அகால மரண நூல்
18. உடல் தொழில் நூல்
19. தத்துவ விளக்க நூல்
20. இராவணன் பொது மருத்துவம்
21. இராவணன் சுகாதார மருத்துவம்
22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
24. இராவணன் பொருட்பண்பு நூல்
25. பாண்ட புதையல் முறைகள் – 600
26. இராவணன் வில்லை வாகடம்
27. இராவணன் மெழுகு வாகடம்

என்பன.

மேற்காணும் நூல்களில் பல, சங்கரன் கோயில் அருகிலுள்ள ‘கரிவலம் வந்த நல்லூர்’ என்னும் ஊரில் அமைந்துள்ள ‘பால் வண்ண நாதன்’ திருக்கோயிலில் கருவூலமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராவணன் நூல்களில் ஒன்றான “இராவணன் திராவக தீநீர்” என்னும் நூல், அர்க்க பிரகாசம் என்னும் பெயரில் மலையாளத்தில், சுமார் 180 ஆண்டுகளுக்கு முன் வெளியாகியிருக்கிறது. (அந்நூல் என்னிடம் இருக்கிறது)

“இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து சித்த மருத்துவம்” (திசம்பர் 2000)
ஆசிரியர். Dr. சே.சண்முகராஜா M.D. (Siddha)
சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம்,
கந்தரோடை, சுன்னாகம், இலங்கை.

என்னும் நூல், சித்த மருத்துவத்தின் தாயகமாக இலங்கையில் யாழ்ப்பாணம் விளங்குகிறது என்றும், இராவணன் இயற்றிய நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை என்றும், சிங்கள மொழியில், இராவணன் இயற்றிய நூல்களில் சில வழக்கில் இருந்து வருகிறது! என்றும் குறிப்பிடுகிறது. மேலும், 15 ஆம் நூற்றாண்டளவில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட “வைத்திய சிந்தாமணி பைசாஜ்ஜ சங்கிரகம்” (Vaidya Cintamani Bhaisadya Sangrahava) என்னும் சிங்கள மருத்துவ நூல், இராவணன் வைத்திய சிந்தாமணி என்னும் தமிழ் மருத்துவ நூலைத் தழுவி எழுதப்பட்டதாகும்! என்றும் குறிப்பிடுகிறது.

இந்தியில் “இராவண சம்ஹிதா” என்னும் மருத்துவ நூல் இராவணன் படத்துடன், மனோஷ் பப்ளிகேஷன், புதுதில்லி – 110084 லிருந்து வெளிவந்துள்ளது. அது, சுமார் 830 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது.

தமிழில் வழங்கி வந்துள்ள சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் போன்றவை உ.வே.சா. போன்றவர்களால் சேகரிக்கப் பட்டன. ஆனால், மருத்துவக் கலைநூல், 64 வகை கலை நூல்கள், நிகண்டு, வானியல், கணிதம், வர்ம நூல்களும் சேகரிக்கப் படவில்லை.
விலங்கு, பறவை மருத்துவம், மருத்துவம் சார்ந்த அறிவியல் சுவடி நூல்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில், திருவனந்தபுரம் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் மிகுதியாக இருக்கின்றன.

மைய அரசின் பண்பாட்டுத் துறையின் தேசிய ஓலைச் சுவடிகள் மையமும் தமிழ் நாடு அரசும் இணைந்து நட்த்திய கணக்கெடுப்பில் (பிப்ரவரி, 2006) நெல்லை மாவட்டத்தில் மட்டும் இரண்டு இலட்சம் சுவடிகள் இருப்பதாக்க் கண்டறியப்பட்டுள்ளது. சங்கரன் கோயில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முப்பதாயிரம் சுவடிகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் தமிழ் மருத்துவ முறைகள் ஓலைகளிலும் பிற மொழிகளிலும் மறைந்து கிடக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ் மருத்துவம் சிறப்படையவும், தமிழ்க் களஞ்சியத்தை மீட்டெடுக்கவும் வேண்டும். அதற்குக் கீழ்க்காணும் பணிகளைச் செயலாக்க வேண்டும்.

1. தமிழகத்திலுள்ள தமிழ் மருத்துவச் சுவடிகளைத் திரட்டும் பணியை மேற்கொண்டு, அவற்றை ஆவணப் படுத்திப் பட்டியலிட வேண்டும்.
2. அரிய நூல்களைப் பதிப்பித்து உரையுடன் வெளியிட வேண்டும்.
3. தமிழகத்திலும் இலங்கையிலுமுள்ள இராவணன் நூல்களைத் திரட்டி வெளியிட வேண்டும்.
4. பிற மொழிகளிலும் பிற நாடுகளிலும் உள்ள மருத்துவ நூல்களைப் படியெடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
5. பரம்பரை மருத்துவர்களிடமுள்ள எழுத்து வடிவம் பெறாத மருத்துவ முறைகள், மலைசாதி வகுப்பினரிடமுள்ள மருத்துவ முறைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து திரட்ட வேண்டும்.

மேற்காணும் பணிகள் அனைத்தும் செம்மையாக நடைபெற, தமிழ் மொழிக்கு வலுவூட்ட “ தமிழ் மருத்துவ இலக்கிய ஆவணத்துறை & ஆய்வுத்துறை” நிறுவுதல் காலத்தின் கட்டாயமாகும்.


நன்றி: தமிழ் மருத்துவம்


நூல் விமர்சனம்

தமிழில் மருத்துவ இலக்கியங்கள் - ஓர் ஆய்வு
- ஆர். பார்த்தசாரதி

சென்னைப் பல்கலைக் கழக முனைவர் பட்டத்துக்காகப் புலவர் இர. வாசுதேவன் எழுதிய ஆய்வுரை இந்நூல்.

தொடக்கத்திலேயே ஓருண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். அதாவது தமிழ் மருத்துவம் எனக் கருதப்படும் சித்த மருத்துவம் பற்றிய இலக்கியங்கள் குறித்த ஆய்வு என்பதோடு மட்டுமமையாமல் சித்த மருத்துவத்தின் பல்வேறு கூறுகளை இந்நூல் விளக்குகிறது. பல வகைகளில் இதனை இருபத்து ஓராம் நூற்றாண்டில் எழுந்த சித்தமருத்துவ முதல் நூல் எனக் கருதலாம்.

தமிழில் “சித்தர்” என்னும் சொல் ஏறத்தாழ 15 நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்து வந்துள்ளது. சித்தர் என்ற சொல்லுக்கு இயற்கை இகந்த செயல்பாடு, அற்புதம், மனநிறைவு, திடமனம் எனப் பல பொருள் உண்டு. அதாவது மனிதன் புறத்தே உள்ள பொருள்களை மட்டுமல்லாமல் தன் அகத்தே உள்ள மனத்தையும் அடக்கிக் கட்டுப்படுத்தி, மனித சக்திக்கு அப்பாற் பட்ட செயல்களைச் செய்து முடிப்பவர். தமிழில் “அபிதான சிந்தாமணி” கூறுவது போல முதலில் நவசித்தர்கள் இருந்தார்கள். பின்பு பதினெட்டு சித்தர்கள் ஆனார்கள். காலப் போக்கில் நூற்றுக்கணக்கானோர் சேர்க்கப்பட்டனர். இராமலிங்கர், மகாகவி பாரதியாரும் சித்தர் எனக் கருதப் பெற்றனர்.

தமிழகத்தில் கதிரவனின் ஒளிக்கற்றைகள் புகமுடியாத மலைகளில், குகைகளில், கானகங்களில் சித்தர்கள் வாழ்ந்திருந்ததாக தவமிருந்ததாக நம்பப்படுகிறது. எனவே பொதுவாகச் “சித்தர்கணம்” என்னும் சொல்லாட்சி தமிழில் இடம்பெற்றது. வித்தகச் சித்தர் கணத்துக்கு வாய்த்த அளப்பரிய வலிமை பற்றித் தாயுமானவர் பல பாடல்களில் எடுத்துச் சொல்லியுள்ளார்.

சித்தர் எனப்படுவோர் இந்திய நாடு கண்ட சமணம், பௌத்தம், சைவம் என்னும் சமயங்களில் சிறப்பான இடம் பெற்றுள்ளனர். புத்தர் “சித்தர்” எனப்பட்டார். சமண சமயத்தில் துறவில் மிக உயர்ந்த நிலை அடைந்தவர்களைச் சித்தர், ஆரூகதர்கள், பரமேட்டிகள் என்றனர். சைவத்தில் சிவனைச் சித்தன் எனக் குறிப்பிடுவதும் உண்டு. எனவே “சித்தர் சிந்தனை” இந்தியர், தமிழர்களுக்குப் பொதுவானது எனலாம். இதற்கு நிகராக இஸ்லாமில் சூபி இயக்கமும் கிருத்துவத்தில் மெய்ஞானிகளும் இருந்ததாகக் கூறுவர்.

சித்தர்கள் நம் நாட்டில் குறிப்பாக, தமிழகத்தைப் பொறுத்தவரை மூவகையாகப் பிரித்து பார்க்கப்படுகின்றனர். முதலாவதாக, இறை நம்பிக்கையில் ஊறித் திளைத்து மனநிறைவு பெற்றவர்கள். இரண்டாவதாக சித்தத்தைச் சிவன் பால் செலுத்திய போதிலும் இயற்கையை எதிர்த்துப் போராடி இயற்கையை வசப்படுத்தி மனித சமூகத்தின் நல்வாழ்வுக்காக இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தியவர்கள். மூன்றாவது இயற்கையை எதிர்த்துப் போராடும் போது கடவுள் நம்பிக்கையில் ஈடுபடாது பொருள் முதல்வாதிகளாக இலங்கியவர்கள்.

இம்முப்பிரிவுகளிலும் மருத்துவர்கள் உண்டு. இந்தப் பாகுபாட்டினை மிக விரிவாக ஆராய்ந்து விளக்கமாக எடுத்துக் கூறுவது இந்நூல். மரபு வழிப்பட்ட இறுக்கமான வைணவமும், சைவமும் அதாவது விசிட்டாத்வைதமும் சைவச்சித்தாந்தமும் சித்தர்களை ஏற்றுக் கொண்டதில்லை. வைதிக சமயங்கள் இவர்களைப் புறத்தவர்களாக, மரபு வழுவியவர்களாக ஒதுக்கி வைத்து வந்துள்ளன. இருப்பினும், புத்தசமயம் வைதிக சமயங்களை ஊடுருவியதோடு அவை மக்களிடையே செல்வாக்குக்குப் பெறச் “சித்த சிந்தனை உணர்வு” காரணம் என்னும் உண்மையைப் பல கோணங்களிலிருந்தும், பல நிலைகளிலிருந்தும் ஆராய்ந்து ஆசிரியர் நிலை நாட்டுவது பாராட்டத்தக்கது.

உலகாயதம் எவ்வாறு சாதாரண மக்களுடைய நல்வாழ்வுக்குத் தேவையான வேளாண்மை அரசமைவு, மக்களாட்சி என்னும் ஜனநாயக மரபுகள் வளரத் துணை செய்ததோ அது போலவே சித்த மருத்துவமும் மக்களுடைய நல்வாழ்வுக்காக அரும்பணியாற்றி வந்துள்ளது. பல்லவர், சோழர் காலத்தில் இருந்த ஏராளமான கல்வெட்டுகள் இதனை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்கின்றன என்பதனைக் காட்டுகிறார்.

குறிப்பாக “அகத்தியர், பரிபூரணம்” என்னும் மருத்துவ நூல், சித்த மருத்துவம் மேலோர், கீழோர், செல்வர் - வறியவர் என்னும் சமூக வேற்றுமைகளை, குறிப்பாக நால்வருணப் பாகுபாட்டைப் புறம் தள்ளிப் பாமரமக்களுக்காகச் சித்த மருத்துவம் நடைமுறைப் படுத்தப்பட்டது என்பதையும் செல்வர் பணம் கொடுத்து மருத்துவம் செய்து கொள்ளும் வசதி படைத்தவர்கள், ஆனால் கீழ்த்தட்டு மக்கள் வறிய நிலையில் இருப்பதால் அவர்களுக்குச் சித்த மருத்துவம் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. இந்த நோக்கத்தின் அடிப்படையை உணர்த்தும் பொருட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்கந்தோறும் அரிய செய்திகளும், விவரங்களும் விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன.

மருத்துவத்தின் தேவை சித்த மருத்துவத்தின் சிறப்பு, உடல்நலம் பேண அடிப்படைத் தேவைகள், நோயற்ற வாழ்வு, நோய்வரின் நோய்நாடி, அதுதணிக்கும் வாய் நாடிச் செய்ய வேண்டிய மருத்துவம், உணவே மருத்துவம், மருந்தே உணவு என்னும் கோட்பாடு, தாவரங்களும் உயிரினங்களும் உலோகங்களும் அதாவது பஞ்ச பூதங்கள் எல்லாம் மனித நலன்களுக்காகப் பயன்படுமாற்றல் ஆகிய எல்லாவற்றையும் மிக அருமையாகத் திரட்டித் தந்துள்ளார் ஆசிரியர்.

சித்த மருத்துவம் எப்படித் தமிழ் நாட்டில் வளர்ந்து வந்துள்ளது என்பதையும் முரண்பாடுகள் - அறுசுவை உணவு, நட்பு, பகை என்பனவற்றையும் அதாவது பொருளை முதலாவதாகக் காணும் கோட்பாட்டில் உணவே மருந்து - மருந்தே உணவு என்னும் அடிப்படையில் பல செய்திகளை நூல் எடுத்துச் சொல்லுகிறது. பல்லவர் காலம் தொடங்கி விஜயநகர மன்னர் காலம்வரை அன்று நிலைத்திருந்த அரசுகள் சித்த மருத்துவத்தை ஊக்குவித்துப் பராமரித்து வந்ததைக் கல்வெட்டு சான்றுகளுடன் நிறுவுவதோடு தஞ்சை மராட்டிய வேந்தரான சரபோஜி வைத்திய நூல்கள் திரட்டுவதற்காக எடுத்து கொண்ட முயற்சிகளைச் சிறப்பாக எடுத்துச் சொல்லுகிறார். மரணமிலாப் பெருவாழ்வு திருமூலர் காலம் தொடங்கி இராமலிங்க அடிகளார் காலம் வரை பேசப்பட்டு வந்துள்ளது. சித்த மருத்துவத்தை எவ்வாறு நோக்க வேண்டும் என்பதனைத் தமிழிலுள்ள சித்த மருத்துவ நூல்கள் துணையுடன் ஆசிரியர் சுவைப்பட எடுத்துச் சொல்லியுள்ளார்.

ஐம்பூதங்களை மருந்தாக மாற்றுதல், நாடி வழி வாதம் பித்தம், ஐயம், நோய் தேர்வு செய்தல், வாயுக்கள் தாதுக்கள் இடையே உள்ள தாக்குறவு, நாடி நோய்க்குறிகளை காட்டும் முறைமை, மருத்துவத்தில் சுவை பெறும் நிலைமை, மருந்துத்தேர்வு, உறுப்புகளும் அவற்றுக்கான தனி மருந்துகளும், நிலத்தையொட்டிய பாத்திரங்கள், நோய் நீராடல், உண்கலம், நோய், ஆடை, அகமருந்து, புறமருந்து, அவை செய்யும் முறை என்பன பற்றியெல்லாம் ஆசிரியர் ஆய்ந்து தரும் உண்மைகள்-இன்று வாழும் மக்களுக்கும் தேவைப்படும் செய்திகள் ஆகும். எடுத்துக்காட்டாக இரத்தத்தை உண்டாக்கத் துவர்ப்பு, எலும்பை வளர்க்க உப்பு, தசையை வளர்க்க இனிப்பு, கொழுப்பை உண்டாக்கப் புளிப்பு, நரம்பை வலுவாக்கக் கசப்பு, சுரப்பிகளைச் சீராக்கக் காரம் தேவை என்பன போன்ற செய்திகளை விரிவாகக் கூறியுள்ளார். இத்தகைய பகுப்பாய்வு இன்றைய பல்வேறு பல் மருத்துவ முறைகளிலும் ஏற்கப்பட்டு வருகிறது.

நஞ்சையும் மருந்தாக்குவது சித்த மருத்துவம். மூலிகைகள், அவற்றின் சிறப்பு, மருத்துவப் பயன்கள், மருந்து செய்தல், புடம் போடுதலின் சிறப்பு, அதற்காகப் பயன்படுத்தப்படும் எரிபொருள்கள், எரிபொருள்களால் செய்யப்படும் மருந்துகள், மருந்து வகைகள், அவை பயன்படும் காலம் (வயது) என்பன பற்றியெல்லாம் தெளிவாக ஆசிரியர் எடுத்துக்கூறுகிறார். பல சித்த மருத்துவ நூல்கள் கூறும் செய்திகள் பல இந்த நூலில் சுருக்கமாக எடுத்துக் கூறப்படுகின்றன. இது பாராட்டப் படவேண்டியதாகும். நூலின் சிறப்பான பகுதி சித்தர்கள் மனித சமுதாய நலன் மேம்பட ஆற்றிய தொண்டு பணி பற்றியதாகும். சித்த மருத்துவத்தில் பரிணாம வளர்ச்சி - காலம் தோறும் படிப்படியாக அது வளர்ந்தடைந்த நிலைமையைத் திருமூலர் காலம் முதல் இன்றளவும் அவை பெற்ற மாற்றங்கள் உள்ளிட பல செய்திகளை விரிவாக எடுத்துக் கூறுகிறது. தமிழ் இலக்கியத்தில் சித்தர் நெறி பெறும் பங்கு - சித்துகளின் எண்ணிக்கை எண்ணிலடங்கா, அதாவது, இயற்கை கடந்த செயல் தன்மையாலும், இடத்தாலும் வேறுபடுவதால் கணக்கிட்டுச் சொல்ல முடியாது என்பதனை இலக்கியச் சான்றுகளுடன் நிறுவ முற்படுகிறார்.

மரணமில்லாப் பெருவாழ்வை வலியுறுத்தும் சித்த மருத்துவம் செத்தாரை எழுப்புதல் பற்றியும் கூறுகிறது. அதே போது வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் சித்தர்கள் சாதி, சமயம் கடந்தவர்கள் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தவர்கள். சித்தர்கள் வகுத்த நெறி வேதங்கள் ஆகா. மக்களுக்கான நல்வாழ்வு, இலக்கியம், ஆனால் பல இடங்களில் சங்கேதச் சொற்களைப் பயன்படுத்தும் இலக்கியம் என்பதனைத் தெளிவுபட எடுத்துக் கூறுகிறார். வரலாற்று அடிப்படையில் நோக்குவோமானால், சித்த மருத்துவம் அடித்தட்டு மக்களுடைய தொழிலாக, பணியாக இருந்து வந்துள்ள பான்மையை அறியலாம். அலோபதி முறை மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே பெரும் வாய்ப்புத் தருவதாக வளர்ந்து வந்துள்ளது. ஆனால் உலக மயமாக்கல் என்னும் புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் சித்த மருத்துவ நோக்கமும் தன்மையும் மாறிவிடுவதற்கான வாய்ப்புண்டு. இது தவிர்க்கப்பட வேண்டும்.

கடந்த நூற்றாண்டில் சாம்பசிவம் பிள்ளை என்னும் அறிஞர் தொகுத்த சித்த மருத்துவக் களஞ்சியம் முன்னோடி நூல், முனைவர் வாசுதேவன் படைத்துள்ள இவ்வாய்வு நூல் வரும் தலைமுறையினருக்கு அறிவுக் கருவூலமாகச் சித்த மருத்துவர்க்கும் மாணாக்கர்களுக்கும் வழிகாட்டியாக அமையும். வாசகர்களுக்கு இவ் உண்மை புலனாகும்.

தமிழில் மருத்துவ இலக்கியங்கள்
- ஓர் ஆய்வு

ஆசிரியர் : முனைவர் இர. வாசுதேவன்,
வெளியீடு : பூங்கொடி பதிப்பகம்,
14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர்,
சென்னை - 4, விலை : ரூ. 240.00

நன்றி: கீற்று.காம்

பூவுலகின் நண்பர்களிடமிருந்து

உணவா? விஷமா?

-முடச்சிக்காடு புதியபாரதி
(murasu2006@yahoo.com)

கேரள மாநிலம் காசர்கோடு, இன்னும் அந்த சாபத்தில் இருந்து மீளவில்லை. இன்று வரையிலும் காலோ, கையோ, இதயமோ, மூளையோ, உயிரோ..., ஏதோ ஒன்று இல்லாமல் தான் அங்கு குழந்தைகள் பிறக்கின்றன. சில பெரியவர்கள் திடீரென ரத்தம் கக்கி சாகின்றனர். புற்றுநோய், காசநோய், மாரடைப்பு, மூளை வளர்ச்சியின்மை.. என ஏதேனும் ஒரு நோய்கள் அண்டாத மனிதர்களே அங்கு இல்லை.

கேட்டாலே நெஞ்சை உறைய வைக்கும் இந்த அவலத்தின் மூலம் எது?

7000 ஏக்கரில் விரிந்து கிடந்த முந்திரி தோட்டத்தை திடீரென தாக்கி சிதைத்தன பூச்சிகள். பூச்சிகளின் தொல்லையால் நிலை தடுமாறிய கேரள முந்திரி கார்பரேஷன் எடுத்த முடிவு தான் காசர்கோடு மாவட்டத்தையே விஷக்குழியில் தள்ளியது. ஹெலிகாப்டர் மூலம் எண்டோசல்பான் என்ற விஷத்தை முந்திரி தோட்டத்தில் கொட்டியது அந்நிறுவனம். மிகவும் சக்தி வாய்ந்த அந்த விஷத்தால் பூச்சிகள் அழிந்ததோ இல்லையோ? நீர், நிலம், காற்றில் மிக வேகமாக ஊடுருவிய எண்டோசல்பான் மனிதர்களுக்கு கொள்ளை நோய்களை வாரி வழங்கியதுடன் ஜென்ம சனியாக அந்த மாவட்டத்தையே ஆட்டி படைக்க தொடங்கி விட்டது. 1971ல் தொடங்கி 30 வருடங்களுக்கும் மேலாக நடந்த பாவ செயலை, ஒரு டாக்டர் கண்டு பிடித்து உலகுக்கு சொல்ல, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைப்போல 2003ல் அந்த விஷத்தை தடை செய்தது கேரள உயர்நீதி மன்றம்.

இந்த கொடூரத்தை நினைவில் வைத்துக்கொண்டு, இப்போது தமிழக டெல்டா மாவட்டங்களுக்கு வருவோம்.

தஞ்சை, நாகை திருவாரூர் அடங்கிய டெல்டா பூமியில், பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாதம் வரை சுமார் 5 லட்சம் ஏக்கர் அளவுக்கு உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக உளுந்து பயிரை புரோட்டீனிய புழுக்கள் உண்டு-இல்லை என்றாக்கி வருகின்றன. வெறுத்துப்போன விவசாயிகள் 10 நாளுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 250 முதல் 500 மிலி எண்டோசல்பான் விஷத்தை தெளிக்கிறார்கள். 60 நாள் பயிரான உளுந்துக்கு 30 நாள் வரை, நாளொன்றுக்கு 3 முறை மருந்து தெளிக்கப்படுகிறது.

இந்த கணக்குப்படி பார்த்தால் ஒரே மாதத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 3.75 லட்சம் முதல் 7.5 லட்சம் லிட்டர் எண்டோசல்பான் காற்றில், நீரில், உணவில் கலந்து உயிருக்குள் ஊடுருவுகிறது. இது மட்டுமின்றி அதன் பிறகு பயிரிடப்படும் நெல் பயிருக்கும் இதே எண்டோசல்பானைத்தான் லிட்டர், லிட்டராக கொட்டுகிறார்கள் நம் விவசாயிகள்.

இது காசர்கோட்டைக் காட்டிலும் விபரீதமானது. பெரும்பான்மை உணவுத் தேவையை டெல்டா மாவட்டங்களே நிறைவு செய்கிறது என்பதால், ஒட்டுமொத்த தமிழகமும் இந்த விபரீதத்துக்கு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பது தான் விஷயமே!

நம் விவசாயத்துக்கு 15 ஆயிரம் வருட பாரம்பரியம் உண்டு. இன்று விவசாயத்தில் வெற்றி கண்ட எல்லா மேலை நாடுகளும் நம்மிடம் தொழில்நுட்பத்தை பிச்சை வாங்கியவைகள் தான். வீட்டுக்கு வீடு வளர்க்கப்பட்ட மாடுகளின் சாணம், வயற்காட்டோரம் இருக்கும் மரங்களின் இலை தழைகள்தான் உரங்கள். பருவத்துக்கேற்ற ரகங்கள்.

பயிருக்கு கேடு செய்யும் ஒரு பூச்சியிருந்தால், அதை சாப்பிடும் 5 பூச்சிகள் இயல்பாகவே வளரும் சூழல். உழைப்பு மட்டுமே விவசாயியின் முதலீடு. சாகுபடியில் கிடைக்கும் உற்பத்தி முழுவதும் லாபம். இது தான் நம் பாரம்பரியம். விவசாயிகளின் வியர்வையில் மட்டுமே உப்பை காணும் வயற்காடுகளில் உற்பத்தியாகும் அத்தனை உணவு பயிர்களும் முழு சக்தி தருவனவாக இருந்தன.

கைபிடி மண்ணை அள்ளி ஆராய்ந்தால் நூற்றுக்கணக்கான மண்புழுக்கள், லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள்.., சிலந்தி, தவளை, தட்டான், குளவி, பறவைகள் என வயலே சங்கீத மேடையாக இருக்கும். ஆற்காடு கிச்சடி, திருவண்ணாமலை தூயமல்லி, புதுக்கோட்டை மாப்பிள்ளை சம்பா, தஞ்சை சம்பா மோஷனம், ஒட்டடை சம்பா, சீரக சம்பா என உலகை பொறாமைப்பட வைத்தன நம் உற்பத்தி செய்த உணவு ரகங்கள்.

உள்நாட்டு உணவு தேவையை நிறைவுசெய்து, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்த நம் விவசாய தொழில்நுட்பத்தை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பார்த்த பார்வை தான் இன்றைய அவலத்துக்கு காரணம். அதிகமில்லை. ஐம்பதே ஆண்டுகளில் தமிழகத்தில் செழித்து வளர்ந்திருந்த 65 சதவீத விவசாயிகளின் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதும் கட்டத்துக்கு வந்தாயிற்று.

1949ல் தான் மாபெரும் பேரழிவுக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. 1940களில் அமெரிக்க, ஐரோப்பிய விவசாயிகள் பயன்படுத்தி, பின்னர் அதன் தன்மை உணர்ந்து தடை செய்யப்பட்ட டி.டி.சி, டி.டி.டி, பி.ஹெச்.சி போன்ற பூச்சி மருந்துகள் அந்த காலகட்டத்தில்தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தன. சூழ்ச்சியின் தன்மை அறியாமல் ஐந்துக்கும், பத்துக்கும் ஆசைப்பட்ட சில அதிகாரிகளை, கைக்குள் போட்டுக்கொண்டு இந்திய விவசாயிகள் மத்தியில் கடைவிரிக்கத் தொடங்கின பூச்சி மருந்து நிறுவனங்கள்.

சிறிது, சிறிதாக இந்த பூச்சி மருந்துகளில் மதிமயங்கினர் விவசாயிகள். 1952ல் அமெரிக்க மோட்டார் கம்பெனியான போர்டும், எண்ணை கம்பெனியான ராக்பெல்லரும் இந்திய விவசாய உற்பத்தியை அதிகரிக்க ரசாயன உதவிகளை செய்வதாக கூறி களமிறங்கின. 1959ல் புதிய ஒட்டுரக பயிர்கள் புகுத்தப்பட்டன. அதோடு நம் விவசாயிகளின் நிம்மதி முடிவுக்கு வந்தது.
வயற்காடுகள் யூரியா, பாஸ்பேட் போன்ற உப்பின் ருசிக்கு பலியாகி மலடாக தொடங்கின.

மேலை நாடுகளின் ஒட்டுரக பயிர்கள் நம் நிலத்தின் தட்ப வெப்பங்களுக்கு தாக்கு பிடிக்காமல் வாடி வதங்கின. மேலும் தீமை செய்யும் பூச்சிகளை அந்த பயிர்கள் ஈர்ததன. இன்று ஒட்டு மொத்த மனித குலத்துக்கே சவாலாக மாறிய பிரச்னையின் வித்து அப்போது தான் தூவப்பட்டது. ஒட்டு ரக பயிர்களையும், உரங்களையும் தந்த மேலை நாட்டு நிறுவனங்களே பூச்சி கொல்லிகள் என்ற பெயரில் விஷங்களையும் வழங்கின.

நம் உற்பத்தியை இறக்குமதி செய்த மேலை நாடுகள், உரங்களுக்கும், பூச்சிக் கொல்லிகளுக்கும் நாம் பழக்கப்பட்ட பிறகு, உரம் போட்ட பொருட்கள் எங்களுக்கு வேண்டாம் என்று கை விரித்து விட்டன. நம் பூமி சுயம் அழிந்து, உரங்களின்றி புல் பூண்டுகளைக்கூட பிரசவிக்க தகுதியற்றதாகி விட்ட நிலையில், இருக்கும் பூமியை விற்றுவிட்டு வெளிநாடுகளில் கொத்து வேலைக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி விட்டு தெருவோர டீக்கடைகளில் உக்கார்ந்து ஆடுபுலியாட்டம் ஆடுகின்றனர் விவசாய பெருங்குடி மக்கள். இதுதான் ஒரு அடிமைக்கதையின் சுருக்கமான வரலாறு.

உலக அளவில் இரசாயன உரம் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதன்மை இடம் வகிக்கிறது இந்தியா. உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட எண்டோசல்பான், மாலத்தியான், அல்ட்ரின், எண்ட்ரின், லின்டேன், குளோர்பைரிபாஸ் ( இது போபால் விஷவாயு சம்பவத்துக்கு காரணமான டோ கெமிக்கல் கம்பெனியின் தயாரிப்பு. அமெரிக்காவில் உற்பத்தியாகிறது. அங்கு தடை செய்யப்பட்டு தற்போது இந்திய வயல்களுக்குள் கொட்டப்படுகிறது). உள்பட 90 வகை பூச்சிக்கொல்லிகள், 147 வகை ரசாயான உரங்களை பயன்படுத்தி இந்திய காற்று, நிலம், நீரை விஷமாக்குகிறார்கள் விவசாயிகள். நெல், உளுந்து, பயறு, காய்கறிகள், எண்ணை, பூக்கள் என நிலங்களில் விளையும் எல்லாமே விஷமாகி விட்டது.

டிடிசி, எக்காலக்ஸ், ஆண்ட்ரின், பாலிடால் உள்ளிட்ட 12 விஷங்களுக்கு எதிராக உலக அளவில் நடத்தப்பட்ட 12 அழுக்குகளுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அந்த மருந்துகள் தடை செய்யப்பட்டன. ஆனால் இந்தியா இன்னும் கண்மூடி கிடக்கிறது.

வியட்நாம் நாட்டு போராளிகளை ஒழிக்க அந்த அரசு, காடுகளில் "ஏஜென்ட் ஆரஞ்ச்" என்ற பயங்கர விஷ மருந்தை விமானங்கள் மூலம் தெளித்தது. அந்த ரசாயன விஷம் பட்ட மரங்கள் கருகி அழிந்தன. அந்த ஏஜென்ட் ஆரஞ்ச் விஷமும் நம் விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் வரிசையில் இடம் பிடித்துள்ளதுதான் அதிர்ச்சி.

வேதி பூச்சி மருந்துகளை வயல்களில் கொட்டுவதால் விவசாயிகளின் நண்பர்களான மண்புழு, தவளை, பாம்பு, சிலந்தி, வெட்டுக்கிளி, தட்டான் போன்ற உயிரினங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து விட்டன. இயற்கை எதிரிகளான பூச்சிகள், விஷங்களையே புரோட்டின்களாக மாற்றிக்கொண்டு கொளுத்துப் போய்விட்டன.

விஷங்களை தெளித்தும் பூச்சிகள் அழியாததால் மேலும், மேலும் விஷங்களை கொட்டுக்கிறார்கள் விவசாயிகள். குறிப்பாக காய்கறி பயிர்களுக்கு வாரத்துக்கு 3 முறை கூட மருந்தடிக்கிறார்கள். எண்டோசல்பான் மாதிரியான பூச்சிக்கொல்லியின் வீரியம் முற்றிலும் அழிய 50 வருடங்கள் ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

குறைந்தபட்சம் பூச்சிமருந்தடித்து 23 நட்கள் கழித்து தான் காய்கறிகளை பயன்படுத்த வேண்டும். ஆனால் நாளை பறிக்க வேண்டிய காய்கறிக்குக்கூட இன்று மருந்தடிக்கும் பழக்கம் விவசாயிகளிடம் உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநில காய்கறிகளில் டாக்ஸிக்ஸ் லிங்க் (TOXICS LINK) நிறுவனம் நடத்திய சோதனையில் 80 சதவீதம் விஷத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உண்ணும் உணவில் 10 லட்சத்தில் 1 பங்கு விஷத்தன்மை இருக்கலாம் என்கிறது ஐநா சபை. ஆனால் இந்தியர்களின் உணவில் சராசரியாக 50 சதம் விஷம் இருக்கக்கூடும் என்கின்றன சில ஆய்வுகள்.

நேரடி உணவு பொருட்களான திராட்சை, வெள்ளரி, வெத்தலைகளில் கூட எண்டோசல்பான், மோனோகுரோட்டபாஸ் மருந்துகள் தெளிக்கப்படுகிறது. இதை சாப்பிடும்போது அந்த பொருட்களால் கிடைக்கும் சத்துக்களைக் காட்டிலும் 50 சதம் அதிக பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உற்பத்தியில் பூச்சிக்கொள்ளிகள் பயன்படுத்துவது மட்டுமின்றி இப்பயிர் வகைகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகளும் தங்கள் பங்குக்கு விஷத்தை சேர்க்கிறார்கள் என்பது இன்னொரு அதிர்ச்சி.

பொதுவாக உளுந்து போன்ற பயறு வகைகளை இருப்பு வைக்கும் போது அந்துப்பூச்சி பதம் பார்த்துவிடும். முதலுக்கே மோசம் வரும் என்பதால் அலுமினியம் பாஸ்பேட் என்ற ஹெவி பாய்ஸனை இருப்பு வைக்கும் அறைக்குள் வைக்கிறாகள் வியாபாரிகள். அந்த விஷம் காற்றில் பரவி உளுந்திலேயே தங்கி விடுகிறது. உளுந்து நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உணவுப் பொருளாக மாறிவிட்ட நிலையில் நுகர்வோர் இந்த விபரீதம் குறித்து கவலைப்படுவதில்லை என்பது தான் சோகம்.

மேலும் விஷம் கலந்த தவிடு, புண்ணாக்கு, பயிர்களின் மிச்சங்களை உண்பதால் மாடுகள் தரும் பால், ஆடுகளின் இறைச்சி எல்லாமும் விஷ முலாம் பூசப்பட்ட பொருட்களாக உருமாறி விட்டன.

இது போன்ற விஷங்கள் உடம்பில் நிகழ்த்தும் பாதிப்புகள் சொல்லி மாளாது. மூளை, இதயம், பெண்களின் மார்பகம், கர்ப்பப்பை, விரைப்பை போன்ற இடங்களில் தங்கி புற்றுநோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்களை உருவாக்குகிறது. மேலும் நரம்பு மண்டலத்தின் ஒட்டுமொத்த இயக்கமும் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. பெண்களின் கொழுப்பு திசுக்களில் கலந்து தாய்ப்பால் வழி குழந்தைகளுக்கும் அந்த விஷம் சப்ளை செய்யப்படுகிறது என்று உயிரை கலங்கடிக்கிறார்கள் டாக்டர்கள்.

மல்லி, முல்லை, ரோஜா போன்ற மலர்களில் இயற்கை மணம் மறைந்து இன்று பூச்சி மருந்துகளின் நாற்றமே அடிக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மலர்கள் அதிகம் பயிரிடப்படும் தாமரைப்பாக்கம், வெங்கல், பூரிவாக்கம் போன்ற பகுதிகளில் பூந்தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கைகளே இந்த அவலத்துக்கு சாட்சி. மேலும் அதிகபட்ச விஷம் தெளிக்கப்படும் பூக்களை தலையில் வைப்பதால் கூட சில அபாயகரமான பாதிப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாம்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டு கிராமங்களில் மாடுகள் இல்லாத வீடே இல்லை. இன்றோ அடிமாடுகளாக கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் மாடுகள் ஏற்றுமதியாகி விட்டன. மாடுகள் மூலம் கிடைக்கும் கோமயம், சாணம், பால், தயிர், மோர் தான் விவசாயிகளின் மூலதனம். கோமயத்தில் ஆடாதொடை, ஆடு தின்னா பாலை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, துத்தி போன்ற ஆடு சாப்பிடாத இலைகளில் 5 வகைகளை 15 நாட்கள் ஊறவைத்து அந்த நீருடன் தண்ணீர் கலந்து அடித்து தான் விவசாயிகள் பூச்சிகளை கட்டுப்படுத்தினர். மேலும் மாடு தரும் பொருட்களால் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் மிகச்சிறந்த ஊக்க மருந்து. மாடுகளை இழந்ததே உணவு விஷமானதுக்கு காரணம் என்கிறார்கள் முற்போக்கு விவசாயிகள்.

உணவே மருந்து, மருந்தே உணவு என்றார்கள் நம் மூதாதை சித்தர்கள். ஒரு 50 ஆண்டு இடைவெளியில் உணவே விஷம், விஷமே உணவு என்று நமக்கு நாமே அழிவை தேடிக் கொண்டிருக்கிறோம். இந்த கட்டத்திலேனும் விழித்துக் கொள்ளாவிட்டால் நம்மை எந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.


நன்றி: பூவுலகின் நண்பர்கள்

Monday, April 20, 2009

youthful.vikatan.comலிருந்து

படிச்சாலும் ஜீரோ..!

மன்னர் மன்னன்,

ஸ்ரீ முத்துக்குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை.

ர் உச்சிவெயில் காலத்தில் மெக்காலே என்ற மேற்கத்திய தையல்காரன் தைத்துக் கொடுத்த பருத்திக் குல்லாய், இந்த அடைமழைக் காலத்துக்கு உகந்தது எனச்சொல்லி, அப்பா என்றழைக்கப்படும் அறிவாளிகளாலும், ஆசிரியர் என்றழைக்கப்படும் அதி மேதாவிகளாலும் மாணவர்களுக்கு அணிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அடிமை இந்தியாவின் 40 கோடி மக்களை அரசாண்டவர்கள் வெறும் 15,000 ஆங்கிலேயர்கள். அந்த 15,000 பேருக்கும் சேவகம் செய்ய பியூன் என்ற கடைநிலை ஊழியர்கள் தேவைப்பட்டனர். அவர்களை உருவாக்க கண்டுபிடிக்கப்பட்டதுதான் மெக்காலே கல்விமுறை.

ஒரு பியூனுக்காக அளவெடுத்து வடிவமைத்த சீருடையை நாட்டின் கலெக்டர் முதல் டாக்டர் வரை அனைவருக்கும் அணிவித்தால் என்ன நடக்குமோ அதுதான் இன்று நடக்கிறது. மெக்காலே முறை கல்விமுறை பல அறிவாளிகளுக்குப் பொருந்தாமல் பரதேசிக் கோலத்தையே தந்திருக்கின்றன. உதாரணமாக, ஒரு உலகப்புகழ் பெற்ற இந்தியரின் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் கீழே...

ஆங்கிலம் 200க்கு 89

குஜராத்தி 100க்கு 45.5

கணிதம் 175க்கு 59

பொது அறிவு 150க்கு 54

மொத்தம் 625க்கு 247.5

39.6% மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து மயிரிழையில் தேர்ச்சியடைந்த அந்த மக்கு மாணவனின் பெயர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. மெக்காலே கல்விமுறையின் 'தரத்துக்கு' இதைவிட வேறு சான்றுகள் வேண்டுமா..?

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தேர்வு முடிவுகளால் இந்தியாவெங்கும் சுமார் 2,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். படித்தவர்கள் மிகுந்த மாநிலமான கேரளாவில்தான் அதிக எண்ணிக்கையில் தற்கொலைகள் நடக்கின்றன. படித்தவர்கள் குறைவாக உள்ள பீகாரில் தற்கொலைகள் மிக அரிதாகவே நிகழ்கின்றன. கல்வி கற்றுத்தந்தது என்ன? பந்தையக் குதிரைகளுக்கு ஓடுவதைத் தவிர வாழ்வில் வேறு எதுவுமே தெரியாது. அவைகளால் பாரம் சுமக்கக்கூட முடியாது. அதனால்தான் அவை கால் ஒடிந்துபோனால் மனமும் உடைந்துபோகின்றன. பணம் தேடும் பந்தயக் குதிரைகளாக மாணவர்களை மாற்றும் இந்த கல்விமுறை, வாழ்க்கையின் ஆழத்தை அளந்து சொன்னதில்லை.

உலகின் தேர்ந்த பொறியாளர்கள் அனைவருக்கும் ஈபிள் டவர்தான் கனவுக் கட்டடம். உலகத்தின் மிகப்பெரிய எஃகு கோபுரமான இதை கட்டிய கஸ்தோம் ஈபிள், பொறியியல் தேர்வில் தோல்வியடைந்தவர் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா..? பௌதிகத் துறையின் கலங்கரை விளக்கமான நியூட்டனே இண்டர்மீடியேட் தேர்வில் தோல்வி அடைந்தவர்தான். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், கல்வி என்பது வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் இல்லை, அவற்றை தாண்டி வெளியே இருக்கிறது என்பதுதான் சரியானது!