புதுடில்லி : சோதனைக் குழாய் குழந்தை மருத்துவத்தை கண்டு பிடித்த, நோபல் பரிசுக்கு தகுதியான இந்திய டாக்டர் பல்வேறு அவமானங்களைச் சந்தித்து இறுதியில் தற்கொலையும் செய்து கொண்ட அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பிரிட்டனைச் சேர்ந்த ராபர்ட் எட்வர்ட்ஸ் , மகப்பேறு நிபுணர் பாட்ரிக் ஸ்டெப்டோ இருவரும் இணைந்து, 1978, ஜூலை 25ம் தேதி, சோதனைக் குழாய் மருத்துவம் (ஐ.வி.எப்.,) மூலம் லெஸ்லி பிரவுன் என்பவருக்கு குழந்தை பிறக்க வைத்தனர். அந்தக் குழந்தையின் பெயர் லூயிஸ் பிரவுன். லூயிஸ் பிரவுன் பிறந்து ஒரு வாரம் கழித்து இதே ஐ.வி.எப்., மூலம் 1978, அக்டோபர் 3ம் தேதி இந்தியாவில் ஒரு குழந்தை பிறந்தது. இந்த சோதனையை நிகழ்த்தியவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டாக்டர் சுபாஷ் முகர்ஜி. முகர்ஜியின் சோதனைக்கும் எட்வர்ட்சின் சோதனைக்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. முகர்ஜி, ஹார்மோன் தூண்டுதல் மூலம் அதிகளவில் கருமுட்டைகளை உருவாக்கி, அதில் ஒன்றை வெளியே எடுத்து, விந்தணுவோடு சேர்த்து மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் (கிரியோ பிரிசர்வேஷன்) உறைய வைத்தார்.