Thursday, September 9, 2010

தொ.பரமசிவம் என்ற மாமனிதன்

மூலம்

நட்சத்திரவாசி வலைப்பூவிலிருந்து


இந்தக் கட்டுரை இரண்டு வருடங்களுக்கு முன்னரே எழுதி இருக்க வேண்டும். எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று நினைத்து தொ.பரமசிவம் அவர்கள் எழுதியுள்ள “தெய்வம் என்பதோர் “ என்ற நூலை எடுத்து ஒவ்வொரு பக்கம் பக்கமாக புரட்டும் போதுதான் ..ஒவ்வொரு வரிகளுக்கும் ஒரு கட்டுரை எழுத வேண்டி இருப்பதாகப்படும்..ஆகவே அவசரப்பட வேண்டாம் என்று நானே முடிவெடுத்துக் கொள்வேன்..இப்படியே இரண்டு ஆண்டுகள் போய்விட்டன..தொ.ப தமிழகத்தில் அல்லாமல் மேற்கில் பிறந்திருப்பாரேயானால் கிளஸ் லெவிஸ்ட்ரஸ்,எமிலி டர்கைம்,மாஎசல் மாஸ் போன்றோருக்கு இணையாக நிச்சயம் பேசப்பட்டிருப்பார்.ஆனாலும் அவரின் தளம் அசாதரணமானது.


அதே மாதிரிதான்..தொ.பரமசிவம் அவர்களை பேராசிரியர் என்பதா ஆய்வாளர் என்று எழுதுவதா? என்ற குழப்பத்திலே நாட்கள் ஓடியதும் உண்டு..பேராசிரியர் அவர் பணி. ஆகவே அவரை பேராசிரியர் என்று அழைக்கலாம்தான். ஆனால் நான் நேரில் பார்த்துள்ள பேராசிரியர்கள் என் கண் முன்னர் வந்து போவார்கள்.அவ்வளவுதான் பேராசிரியர் என்று அவரை அழைத்து இழிவு படுத்த வேண்டாம் என்று முடிவெடுப்பேன்..அப்புறம் முனைவர் என்று எழுதலாம் என்றாலோ ஆய்வாளர் என்று எழுதலாம் என்றாலோ இந்த அடைமொழிகளுடன் தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலோரை நினைத்து தொ.பரமசிவம் அவர்களை கீழ்மைப்படுத்த வேண்டாம் என்று நினைத்துக் கொள்வேன்., எந்த அடைமொழிகளுடன் அவரை அழைத்தாலும், யானையைப் பார்த்து கண் பார்வை இல்லாதவர்கள் சொன்ன கதையாகிப் போகும்.. அவருடைய ஆளுமையின் ஒரு பகுதிக்குத்தான் எந்த அடைமொழியும் பொருந்தும்.முழு ஆளுமைக்கும் பொருந்தக்கூடிய ஒரு சொல் தேவை..

ஏன் இவ்வளவு முன்னுரை? ஒரு சங்கை அளவாக வைத்துக்கொண்டு கடல் நீரை அளக்க முடியுமா?அந்தப் பயம் தான் எனக்குள்ளும்.. என் அறிவு சங்கு என்றால் அய்யாவின் அறிவு கடல்..

தேவநேயப்பாவாணர் அவர்களைப் பற்றிச் சொல்வார்கள்.தனி மனிதனாக இருந்து கொண்டு ஒரு பல்கலைக்கழகம் செய்யவேண்டிய பணிகளை செய்தவர் என்று. அது மாதிரிதான்.. தொ.ப அவர்கள் ஒரு பல்கலைக் கழகத்திற்கு இணையானவர். அவருடைய பண்பாட்டு அசைவுகள் என்ற நூலுக்கு ஆ.இரா.வேங்கடசலபதி எழுதியுள்ளது போல் தொ.ப., அவர்களிடம் இருந்து தெறிக்கும் கருத்துகளும் மேற்கோள்களும், வாழ்ந்து பெற்ற பட்டறிவும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பது நூற்றுக்கு நூறு உண்மை..


2007 டிசம்பர் மாத்த்தில் ஒரு நாள் பாளையங்கோட்டையில் அவருடன் ஒரு இரண்டு மணி நேரம் இருந்தேன்..அந்த மணித்துளிகள் என் வாழ்வில் மறக்க முடியாதவை. இரண்டு மணி நேரத்தில் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் , ஒரு புதிய புத்தகம் போடும் அளவு இருந்த்து..மறுபடியும் சலபதி வார்த்தைகளையே கடன் வாங்கிக் கொள்கிறேன்..”நாம் நனகு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில், புதிய ஒளி பாய்ச்சுவதும், பயனற்ற ஒரு சொல் அல்லது ஒரு பழமொழியிலிருந்து ஒரு சமூகப் புரிதலைச் சொல்வதும் தொ.பவின் கருத்துப் புலப்பாட்டு முறை”

”தெய்வம் என்பதோர்” என்ற இந்தப் புத்தகத்தை புத்தகம் என்பதா? ஆய்வுக்கட்டுரை என்பதா? என்றே தெரியவில்லை..

அடிப்படையில் தொ.ப,.,அவர்கள் ஒரு பெரியாரியச் சிந்தனையாளர்.அவர் சிறு தெய்வஙகள் பற்றியும் தாய்த் தெய்வ வழிபாடு பற்றியும் எழுதுவதும் அதனை பெரியாரிய மார்க்சிய சிந்தனைகளோடு இணைக்கும் அவர் கண்ணோட்டம் தமிழக ஆய்வுலகில் மிகவும் புதியது மட்டுமின்றி மிக முக்கியமானது. தாய்த் தெய்வ வழிபாடு பற்றி மிக அருமையான மூன்று கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன..

”நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாடல் , ஒரளவு வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களிடம் ‘சாமியாடி,குறுதிப்பலி,பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே விரிகிறது.இந்தக் கணிப்புகள் அனைத்துமே தவறானவையே..நாட்டார் தெய்வங்கள் தத்துவ விசாரங்களில் நொறுங்கிப்போகும் அளவுக்கு மெலிதானவையல்ல.. அவற்றின் வேர்கள் வலிமையானவை அவை வட்டாரத்தன்மையும் உயிர்ப்பும் பன்முகத்தன்மை கொண்டவை. இந்தப் பன்முகத்தன்மை எனபது சைவம், வைணவம், ஸ்மார்த்தம், இஸ்லாம்,கிறித்துவம் ஆகிய எந்த நிறுவனச் சமயத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட இயலாததாகும்”-பக்கம் .84

அய்யா தொ.ப., அவர்கள் முன்வைக்கும் கருத்து மிகவும் புதியது மட்டுமின்றி மேலும் விவாதத்தை வேண்டி நிற்பவை.சைவம், வைணவம்,இஸ்லாம், கிறிஸ்துவம் ., அனைத்தும் நிறுவனம் சார்ந்த மதஙகள் என்றும் ‘நிறுவனம் “ என்று வந்துவிட்டாலே ‘மேல்-கீழ்’என்ற வரிசை முறையுடன் தான் தமது அதிகாரத்தை கட்டவிழ்த்துவிடுகின்றன..ஆனால் நாட்டார் தெய்வ வழிபாடுகள் இந்த இலக்கணத்தில் இருந்து மாறுபட்டு நிற்கின்றன..

இந்தக்காரணத்தினால் தான் அதிகார மையமாகத் திகழந்த கோயில்களையும் அதனை மையப்படுத்திய ஏற்றத் தாழ்வுகளையும் எதிர்த்து வந்த தந்தை பெரியார்,, ஆண்டு முழுவதும் மண்மேடாக் கிடந்து ஆண்டில் ஒரு முறை தெய்வமாக உருப்பெரும் நாட்டார் தெய்வங்களை பெரியார் எதிர் கொள்ளவில்லை..

இந்த முடிவுக்கு நம்மை இழுத்துச் செல்லும் வழியில் தான தொ.ப., நமது சிந்தனையின் அனைத்து கதவுகளையும் சாளரங்களையும் திறந்து கொண்டே செல்கிறார்..
நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு பல்வேறு நூல்களில் இருந்து ஆதாரம் திரட்டி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதும் ஆய்வாளர் அல்ல..தொ.ப.., கிணற்றடிகளில், கோயில் பிரவாகத்தில், தெருக்களில்,சாவு வீட்டு முற்றத்தில் , அங்கு கிடைக்கும் ஒப்பாரிகளில், கிராம சொலவடைகளில் கிடைக்கும் ஆதாரங்கள் என பல்வேறு களங்களில் இருந்து கிடைத்த ஆதாரங்களோடு தனது ஆய்வுகளை முன் வைப்பது தான் தொ.ப., வின் அரிய பணியாகும். 

இன்னுமொரு முக்கியமான கட்டுரை..







”இந்து” என்ற சொல் சமய ஆதிக்கச் சொல்லாக மட்டுமின்றி அரசியல் ஆதிக்கச் சொல்லாக வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்ட்த்தில் இந்து என்பவன் யார்? இந்தியச் அரசியல் சட்டப்பிரிவுகள் “இந்து” என்ற சொல்லாடலுக்கு நேரிடையான வரவிலக்கணத்தை தரவில்லை..என்பது தான் இந்து என்ற சொல்லாடலை வைத்துப் பிழைக்கும் இந்துத்வவாதிகளுக்கு வசதியாகப் போய்விட்டது.ஆகவே இந்து என்ற சொல்லாடலுக்கு அரசியல் சட்டம் நேரிடையான விளக்கம் தரவேண்டும்..அந்தச் சொல் பல்வேறு சமயஙகளையும்,நம்பிக்கைகளையும்,வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை நெறிப்படுத்தி சட்டமாக்க வேண்டும்.அதுவரை சமய நல்லிணக்கம் என்பது சமயச் சிந்தனையாளர்களின் கனவாகவே இருக்க முடியும்...”

சமய நல்லிணக்கத்தின் ஆணிவேர் எது என்பது பெரியாரியவாதியான அய்யா தொ.ப., அவர்களுக்கு நன்கு தெரிகிறது என்பதால் தான் .. இந்து என்ற சொல்லாடலுக்கு அரசியல் சட்டம் நேரிடையான விளக்கம் தரவேண்டும் என்கிறார்..கோயிலுக்கு நுழைய முடியாத ஒரு கூட்டம், கருவறைக்குள் நுழைய முடியாத் ஒரு கூட்டம்..கருவறைக்குள் மட்டுமே இருக்கும் ஒரு கூட்டம் ..இதெல்லாம் சேர்ந்தது தான் ” இந்து” என்பது ஒரு பித்தலாட்டமாகவே தான் தெரிகிறது.

தமிழ் சமூகத்தின் மீது காதல் கொண்ட அனைவரும் அய்யாவின் எழுத்துக்களை தேடிப் படியுங்கள். கண்டிப்பாக ஒரு புதிய உலகம் புது தரிசனம் கிடைக்கும்..வாய்ப்பு கிடைத்தால் அய்யாவை நேரில் சந்தித்துப் பேசி ஒவ்வொரு மணித்துளிகளையும் அனுபவியுங்கள்..அவர் நிறைய எழுதவில்லை..ஆகவே அவரைப் பார்க்கச் செல்பவர்கள் ஒலிப்பதிவு கருவியடன் சென்று , பேச்சுப்போக்கில் தெறிக்கும் அனைத்து சங்கதிகளையும் சேமிக்கவும். மிக முக்கியமான சுவையான செய்திகள் உங்கள் தெருவிலே இருந்திருக்கும் ஆனால் உங்களுக்கு தெரிந்திருக்காது..அப்படி உள்ள செய்திகளாகச் சொல்லி புது வெளிச்சம் பாய்ச்சுவது தான் தொ.ப.,வின் உலகம்..

பழைய பெளரானிக மரபில் சொன்னால் ஒரு சபிக்கப்பட்ட நகரம் போல ஞாயிற்றுக் கிழமை மாலைகளில் மதுரை இருக்கிறது” ஒரு கூட்டத்தில் தன்னுடைய உரையை இப்படித் துவங்கினார் தொ.ப..,80 களின் நடுப்பகுதியில் பொதிகை தொலைக்காட்சி தென் தமிழகத்தில் தன் ஒளிபரப்பை தொடங்கிய காலத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலையை பற்றிய தொ.பவின் பதிவு அது.
அழகில் பிரமித்திருப்பீர்கள். அறிவில் பிரமித்திருக்கிறீர்களா? நான் எனது சம காலத்தில் அறிவில் பிரமித்தது அய்யா தொ.பாவிடமே.
டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் வரும். ஒரு பெண் அமெரிக்கப் பெரு நகரமொன்றில் போக்குவரத்து நிறைந்த சாலையில் நிற்க நாலாப்பக்கமும் வாகனம் செல்ல அந்தப் பெண் பேசத் தொடங்குவாள் அதைப்போலவே தொ.பாவை மதுரை வீதிகளில் நிறுத்தீர்களேயானால் காலம் பின்னோக்கிப் போய் மன்னர்களும்,வரலாறுகளும்,மரபுகளும், தொன்மங்களும், நம்பிக்கைகளும் எட்டுத்திக்கும் எழுத்து வரும். தொ.பா அந்த வரலாற்று வீதிகளில் நடக்கத் தொடங்குவார் மன்னன் .செண்பக பாண்டியன் எழுந்து அய்யாவைப் பார்த்து தன் சிரம் தாழ்த்துவார்.

அவருடைய நூல்கள் அவருடைய சாதனைகள் எனில் நான் அவருடைய நேர் பேச்சுக்கு அடிமை. அவர் பேசத் தொடங்கினால் என் ஐம்புலன்களையும் செவியில் கொண்டு வந்து நிறுத்துவேன். ஒரு பெரிய சாக்குப் பையோடுதான் ஐய்யாவைப் பார்க்க போக வேண்டும்.

நீங்களும் நானும் அன்றாடம் செய்து கொண்டிருக்கும் சம்பிராதயங்களை, சடங்குகளை, மரபுகளை, மதிப்பீடுகளை அவரால் மிகக் கூர்மையாக புதிய அர்த்தங்களோடு சொல்ல முடியும். நீங்களும் நானும் கவனிக்கத் தவறியவற்றை, பொருட்படுத்தாதவைகளை, ஒன்றும் இல்லையென்று நினைப்பவற்றை தொ. ப. தன் அறிவால் துலக்கி வைக்கும் பொழுது ஏற்படும் பிரமிப்பு சொல்லி மாளாதது.
அவர் மதுரையில் மாடல் லாட்ஜ் விடுதியில் தங்கியிருந்த காலத்திலும் , பின்பு அண்ணாநகர் வீட்டிலும் அவரது ஞாயிற்றுக் கிழமை மாலை சந்திப்புகள் பிரசித்தி பெற்றவை. வட்டமாக ஆட்கள் உட்கார்ந்திருக்க, தேனீர் வந்து கொண்டேயிருக்க கேள்வி எங்கெங்கிருந்தோ வரும். அவர் பதில் சொல்லிக் கொண்டே போவார்.

அப்படியான ஒரு ஞாயிற்றுக் கிழமை சந்திப்பில் அதிகாரம் இல்லாமல் ஒரு அரசு வெற்றாக ஒரு நிமிடம் கூட இருக்காது என்பது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.நம் ஊரில் ஜமீந்தார்கள் இறந்தால் அவருக்கு அடுத்தபடியாக வாரிசாக வேண்டியவர் முடிசூட்டிக் கொள்ளாமல் ஜமீன் தாரின் பிணத்தை அவரைப் பார்க்க விடமாட்டார்களாம். உடனடியாக அந்த அதிகார பீடத்தில் அதன் வாரிசு அமர்த்தப்பட்டு, பக்கத்து அறையில் மரித்துப் போன ஜமீந்தார் இருக்க அடுத்த அறையில் அவசரமாக முடிசூட்டுதல் நடக்கும். அதன் பின்பே அவரைப் பார்க்க அனுமதி. இப்படி விளக்கிக் கொண்டிருந்தவர் சடாரென இதற்கு ஒரு சர்வதேச உதாரணம் சொன்னார். ஜான்.எப்.கென்னடி சுடப்பட்டு இறந்த பொழுது அவர் உடலைப் பார்க்க உதவி ஜனாதிபதி விமானத்தில் போக அந்த விமானத்திலேயே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்கள். அதன் பிறகே அவர் ஜான்.எப்.கென்னடியின் உடலைப் பார்க்கின்றார். ஏறும் பொழுது உதவி ஜனாதிபதி இறங்கும் பொழுது ஜனாதிபதி இப்படி சொல்லிக் கொண்டே போனார்.
மற்றொரு சந்திப்பில் சொன்னார் “இப்பொழுது கிராமத்தில் யாருக்கும் அக்கானி காய்ச்சத் தெரியாது (பதனீர் காய்ச்சுவது) போன தலைமுறையோடு அந்த அக்கானி காய்ச்சும் நுட்பம் போய் விட்டது. நம் வீட்டு ஊறுகாய் ஜாடிகளை ஒரு மாயக்கரம் உடைக்கிறது.ruchi mango pickles என வாழப் பழகி விட்டோம். இன்றைய பெண்களில் எத்தனை பேருக்கு ஊறுகாய் போடத் தெரியும்.”

ஒருமுறை கமல்ஹாசன் இவரிடம் பேசும் பொழுது Tuesday of moorris என்ற படத்தைப் பற்றிப் பேசினாராம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு விரைவில் இறக்கவிருக்கும் பேராசிரியரின் கருத்துக்களை அவருடைய மாணவர்கள் முறை வைத்து பதிவு செய்கிறார்கள். இது பற்றி வியந்த கமலிடம் சொன்னாராம் தொ.ப “இது ஏற்கனவே நம் மரபில் உள்ளதுதான் வைஷ்ணவப் பெரியவர்கள் தங்கள் மரணம் நெருங்கும் தருவாயில் தங்களுக்குத் தோன்றுகின்ற கருத்துகளை குறித்து வைப்பது வழக்கம்.”

ஒரு முறை வரப்பு பயிர் பற்றி பேச்சு வந்தது. நிலங்களில் வரப்புகளில் விளைபவை. ரஷ்யாவில் பின்னாட்களில் இந்தியாவிலிருந்து வரும் வாழைபழங்களுக்காக நிண்ட வரிசையில் காத்திருப்பார்களாம். அதை இப்படி விளக்கினார். அங்கு கூட்டுபண்ணைகள் எற்படுத்தும் பொழுது வரப்புகள் அற்று போகின்றது.. வரப்புகளில் விளையும் வாழைபழத்தின் சுவையை ஒத்த சில பழங்கள் இல்லாது போகின்றது. அதனால் தான் வாழை பழத்திற்கு அத்தனை பெரிய வரிசை. சமூக மாற்றம் வந்து ஆறுபது ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் ஒர்மையிலும், கலச்சாரத்திலும் தங்கி போன சுவையை சுவையை ரஷ்யர்களால் மறக்க முடியவில்லை என்றார்.

நான் எனது வழக்கமான கேள்வியை முன் கேள்வியை முன் வைத்தேன். ஏன் மலையாளிகள் நம்மிடம் இருந்து தனியே போனார்கள்? ”இந்திய கண்டத்தில் அன்மைகாலம் வரை தாய் வழிசமுகம் நீடித்தது கேரளத்தில் மாத்திரமே. அதற்கான சான்றுகள் அவர்களின் மொழி, சொத்துரிமை, பெயரிடுதல், பாலியல் சுதந்திரம் போன்றவற்றில் சுலபமாக கானலாம்.அவர்கள் தமிழகத்தின் தென் மேற்க்கில் இருந்தார்கள், இருக்கிறார்கள்.

மற்றொரு புறத்தில் தமிழ் சமுக அமைப்பு எறக்குறைய பத்தாம் நூற்றாண்டிலேயே தந்தைவழி சமுகமாக, நிலபிரப்புத்துவ சமூகமாக உருவாகுகிறது. இதில் இனைய முடியாமல் ஒதுங்கி போனவர்களாக மலையாளிகள் இருக்கலாம்.

சில வருடங்களுக்கு முன்னால் இதய நோயால் பாதிக்கப்பட்டு அய்யா தொ ப மதுரை மினாட்சி மிஷின் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். அதிகாலை பார்கக போனேன். ஜ சி யு வில் இருந்தார். வெகுநேரம் காத்திருந்தோம். அவர் உறவினர் யாரிடம் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தார்.”நிறைய பேர் பார்க்க வருகிறார்கள்.. அந்த தொல்லையிலிருந்து தப்பவே ஜ சி யு விற்கு மாறினோம் என்றார். நான் அய்யாவை பார்க்காமலே திரும்பினேன். நிச்சயம் கண்ணாடி கதவுகளுக்கு அப்பால் இருக்கும் அவர் அகம் அறிந்திருக்கும் என் போன்றவர்களின் வருகையை. மாட்டுதாவணி தூசி மிகுந்த சாலையின் திரும்பும் பொழுது நானும் அப்படி உனர்ந்தேன்.

நமது பெரியப்பாக்களை நினைவுபடுத்தும் முகம். வார்த்தைகளை லேசாக உறிஞ்சியபடி பேசுவார். சன்னமான குரல்.கறுப்பு வெள்ளை சினிமாவில் பார்த்த எவரையோ நினைவுபடுத்தும் சட்டென்று அவர் தோற்றம்.
உள்ளுர் திருவிழா, பெரு திருவிழா பற்றி பேச்சு வந்தது. அய்யா சொன்னார். ஒரு மனிதன் பெரு திருவிழாக்களை விட ஊர் திருவிழாக்களிலேயே தன்னை முழுமையாக அடையாளம் காண்கிறான் என்றார். பாளையங்கோட்டை ஒரு கிறிஸ்தவ ஊராக இருந்தாலும் நூற்றுக்கனக்கான அம்மன் கோவில்கள் உண்டு. வருடம் முழுக்க திருவிழாக்கள் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள அம்மன் அனைத்தும் வடக்கு நோக்கியே அமர்ந்திருக்கிறார்கள். காரனம் மிக எளிது. நமக்கு எதிரிகள் வடக்கிலிருந்து மட்டும் தான்.

நுட்பமான அவதானிப்புகள், வரலாறு, சமூகம், சொல்லாடல்கள், பழம் நம்பிக்கைகள், தொன்மங்கள் இவற்றின் தொகுப்பு அய்யா தொ. ப.

பாளையங்கோட்டை யாதவர் தெருவிலிருந்து நீங்கள் அவரை சந்தித்து விட்டு வெளியே வரும்போது வேறு ஒரு மனிதராக ஆகியிருப்பீர்கள்.
திருநெல்வேலி சார்ந்த என் அழகியல் சித்திரங்கள் வண்ணதாசனாலும், வண்ணநிலவனாலும் தீட்டப்பட்டது. தென் தமிழகத்தின் வரலாறு சார்ந்த சித்திரம் அய்யா தொ. பவாலேயே தீட்டப்பட்டது.

மிக நுட்பமான ஒரு அறிஞனை தமிழ்சமூகம் அப்படியெல்லாம் கொண்டாடவில்லை.அவர் மதுரையிலிருக்கும் பொழுது திடீரென நேதாஜி சாலையில் எதிர்படுவார். அப்படியே சாலையோரத்தில் நின்று பேசத் தொடங்குவோம். சாலையின் இருமருங்கிலும் போகும் மந்தைகள் அறியாது இந்த அறிஞனை……

அவதார் படத்தில் 3D கண்ணாடி வழியே புதிது புதிதாக பொருட்கள் புலப்படுகிறதே அதுபோல அவரை வாசிக்கத் தொடங்குவீர்களேயானால் வாழ்க்கை புதிதாய்த் தோன்றக் கிடைக்கும். அதன்பின் உங்களால் ஒரு வசவுச் சொல்லைக் கூட யோசிக்காமல் சொல்லிவிட முடியாது.
இதுபற்றி அய்யா பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார் “இந்த கெட்ட வார்த்தை என்பவற்றைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா எவையெல்லம் விலக்கப்பட்ட உறவுகளோ அல்லது சமூகம் மறுக்கும் உறவுகளோ அவையே கெட்ட வார்த்தைகளாக சமூகத்தில் உருவாக்கப்படுகிறது. தமிழ் சமூகத்தில் அதிகம் புழங்கும் வசவுச் சொல் அம்மாவோடு உறவு கொள்ளுவதைப் பற்றிதான். அடுத்து அக்காவோடு, பின்பு தேவிடியா, தேவிடியா மகன். இப்படி சமூகம் எதை விலக்க நினைக்கிறதோ அதை மறுபடி மறுபடி இந்த கெட்ட வார்த்தைகளின் வழி வலியுறுத்துகிறது. நாம் ஒரு தாய்வழிச் சமூகமாக இருந்தோம் என்பதற்கான சாட்சி இந்த கெட்ட வார்த்தைகள். உடனடி உதாரணம் ஆங்கிலத்தில் mother fucker. ஒரு வேளை ஒரு தொன்மையான சமூகத்தின் மொழியில் இப்படியான கெட்ட வார்த்தைகள் இல்லையெனில் அந்த சமூகம் இந்த நிகழ் உற்பத்தி முறைக்குள் வராததே காரணம் என்றார்.(நான் அறிந்தவரை மலையாளத்தில் இது போன்ற கெட்ட வார்த்தைகள் கிடையாது. அதிகபட்சம் ’தேவிடிச்சி’ மட்டுமே. அதுவொரு தாய்வழிச் சமூகத்தின் தொடர்ச்சி என்பதற்கான முக்கிய சான்று இது.)

பாளையங்கோட்டை யாதவர் கிழக்குத் தெருவில் நான் நுழைவதும், அவர் வீட்டில் அந்த ஆட்டுக்குட்டிகளைத் தாண்டி அவரோடு அமர்ந்திருப்பதும், உரையாடும் கணங்களும் வாழ்வின் நான் வாழ்ந்த கணங்கள். அவர் காலைத் தொட்டு வணங்க முடிந்தது என் வாழ்வின் பேறு. எல்லாவற்றையும் விட்டுவிட்டு திருநெல்வேலி போய் அய்யாவிடம் மாணவராகி விட வேண்டுமென்ற நிறைவேறாத ஆசையெல்லாம் எனக்கு உண்டு. நிறைவேறாத ஆசைகளின் பட்டியல் கன்னித்தீவை விட நீளம். அதற்காக நிறைவேறாத ஆசைகளைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியுமா என்ன?

இன்னும் இந்த வாழ்க்கையை நுட்பமாக பார்ப்பதற்கும், வாழ்வதற்கும் யாதவர் கிழக்குத் தெருவும் அய்யா தொ. ப வும் எனக்காக இருக்கின்றார்கள்..

முனைவர் தொ.பரமசிவம் அவர்களின் நூல்கள்


1. நான் இந்துவல்ல நீங்கள் - யாதுமாகி பதிப்பகம் திருநெல்வேலி 










2. இதுதான் பார்ப்பனீயம்

3. பூனா ஒப்பந்தம் ஒரு சோக வரலாறு

4. சங்கர மடம் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மைகள்

5. தெய்வமென்பதோர்

6. வழித்தடங்கள்


Vazhithadangal (Tamil Katturai)




7. இந்து தேசியம்

8. அறியப்படாத தமிழகம் - நியு செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை



9. தெய்வங்களும் சமூக மரபுகளும்


10. நாள் மலர்கள்


11. பண்பாட்டு அசைவுகள் – காலச்சுவடு நாகர்கோவில்





12. சமயங்களின் அரசியல்- பரிசல் பதிப்பகம் சென்னை

13. சமயம் – தென்திசை பதிப்பகம் சென்னை.




14. அழகர் கோவில் ஆய்வு 

No comments:

Post a Comment