Monday, October 18, 2010

நோபலுக்கு தகுதியான இந்திய டாக்டர் தற்கொலை செய்து கொண்டது ஏன்?

புதுடில்லி : சோதனைக் குழாய் குழந்தை மருத்துவத்தை கண்டு பிடித்த, நோபல் பரிசுக்கு தகுதியான இந்திய டாக்டர் பல்வேறு அவமானங்களைச் சந்தித்து இறுதியில் தற்கொலையும் செய்து கொண்ட அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த ராபர்ட் எட்வர்ட்ஸ் , மகப்பேறு நிபுணர் பாட்ரிக் ஸ்டெப்டோ இருவரும் இணைந்து, 1978, ஜூலை 25ம் தேதி, சோதனைக் குழாய் மருத்துவம் (ஐ.வி.எப்.,) மூலம் லெஸ்லி பிரவுன் என்பவருக்கு குழந்தை பிறக்க வைத்தனர். அந்தக் குழந்தையின் பெயர் லூயிஸ் பிரவுன். லூயிஸ் பிரவுன் பிறந்து ஒரு வாரம் கழித்து இதே ஐ.வி.எப்., மூலம் 1978, அக்டோபர் 3ம் தேதி இந்தியாவில் ஒரு குழந்தை பிறந்தது. இந்த சோதனையை நிகழ்த்தியவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டாக்டர் சுபாஷ் முகர்ஜி. முகர்ஜியின் சோதனைக்கும் எட்வர்ட்சின் சோதனைக்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. முகர்ஜி, ஹார்மோன் தூண்டுதல் மூலம் அதிகளவில் கருமுட்டைகளை உருவாக்கி, அதில் ஒன்றை வெளியே எடுத்து, விந்தணுவோடு சேர்த்து மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் (கிரியோ பிரிசர்வேஷன்) உறைய வைத்தார்.


இப்படி 53 நாட்கள் உறைய வைத்து, பின் அறை வெப்பநிலைக்குக் கொண்டு வந்து, பெண்ணின் கருப்பையில் வைத்தார். இந்தப் பரிசோதனை மூலம் 31 வயது பெண்ணுக்குக் குழந்தைப் பேறு கிடைக்க வழிசெய்தார். ஆனால் எட்வர்ட்சின் சோதனை வேறு விதமானது. கருமுட்டையை உறைய வைக்கும் முறையை அவர் மேற்கொள்ளவில்லை. சினைப்பையில் இருந்து கருமுட்டைகளை வெளியே எடுக்கும் அவரது முறையும் மிகக் கடினமானதாக இருந்தது.எட்வர்ட்சுக்கு நோபல் கிடைத்தது. ஆனால் சுபாஷூக்கு, அவமானமும், வேதனையும் தான் கிடைத்தது.

இந்தியாவின் பதிவு செய்யப்பட்ட முதல் ஐ.வி.எப்., குழந்தை பிறப்பு சாதனையை நிகழ்த்திய டாக்டர். டி.சி.ஆனந்த் குமார், சுபாஷின் ஆய்வகக் கையெழுத்துப் பிரதிகள், ஆய்வுக் குறிப்புகள் மற்றும் மேற்கு வங்க அரசுடன் நடத்திய கடிதப் போக்குவரத்துகள் குறித்து ஆய்வு செய்து, 1997ல், "கரன்ட் சயின்ஸ்' இதழில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர்,"உலகிலேயே முதன்முறையாக ஐ.வி.எப்., மூலம் குழந்தை பெறுவது மட்டுமின்றி, கிரியோ பிரிசர்வேஷன் மூலம் கருவை உறைய வைக்கும் முறையையும் சுபாஷ்தான் வெற்றிகரமாக கண்டுபிடித்தார். ஆனால் அதற்கான உரிமையை நாம் இழந்து விட்டோம். அவருடன் பணியாற்றிய இந்திய மருத்துவர்களின் அறியாமை, அதிகார வர்க்கத்தின் பிடிவாதம் மற்றும் பழிவாங்கும் போக்கு ஆகியவை, நம் நாட்டின் ஒப்பற்ற ஒரு டாக்டரை இழப்பதற்குத்தான் வழிவகுத்தன' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுபாஷ் முகர்ஜி தன் ஆய்வில் வெற்றி பெற்ற போது, மேற்குவங்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்திருந்த நேரம். எல்லாத் துறைகளிலும் அரசியல் தலையிட ஆரம்பித்தது. நவீன அறிவியல் மற்றும் குழந்தைப் பேறு தொழில்நுட்பங்கள் பற்றி ஒன்றுமே தெரியாத ஒரு கதிரியக்க டாக்டர், ஒரு மகப்பேறு நிபுணர், ஒரு பொதுடாக்டர் என மூன்று பேர் கொண்ட ஒரு கமிட்டியை அவரது பரிசோதனை குறித்து ஆய்வு செய்ய மேற்கு வங்க அரசு நியமித்தது. கடந்த 1978, டிசம்பரில் ஜப்பானின் கியோட்டோ பல்கலைக் கழகம் நடத்திய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு சுபாஷூக்கு அழைப்பு வந்தும் கூட, மாநில அரசு அனுமதியளிக்கவில்லை. அறிவியல் பத்திரிகைகளில் இதுகுறித்து அவர் எழுதவும் அனுமதியில்லை. 1981, ஜூனில் சம்பந்தமில்லாத கண்மருத்துவத் துறைக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து அவரது நண்பர்களில் ஒருவராகிய சுனித் முகர்ஜி கூறியதாவது: அவரது சோதனை மிகவும் எளிதானது. மிகச் சரியான விளைவுகளைத் தந்தது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஐ.வி.எப்., மருத்துவமனைகளும், இந்திய மருத்துவக் கழகத்தின் ஆராய்ச்சி வழிகாட்டல் நெறிமுறைகளும் இன்று, அவரது முறையின் வெற்றியை ஒப்புக் கொண்டுள்ளன. பங்குராவில் இருந்து கோல்கட்டாவுக்குத் தன் ஆராய்ச்சி பற்றிய பேப்பர் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு வார இறுதிநாளிலும் அலையாய் அலைந்தார். அவருடன் நான், மகப்பேறு நிபுணர் சரோஜ் கந்தி பட்டாச்சார்யா இருவரும் செல்வோம். அவருடன் இருந்தவர்கள் அவரை அழித்து விட விரும் பினர். நாங்கள் பலமுறை அவமானப்படுத்தப் பட்டோம். எவ்விதத்திலும் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இவ்வாறு சுனித் முகர்ஜி தெரிவித்தார்.

தொடர்ந்த அவமானம், புறக்கணிப்பின் காரணமாக மனம் வெறுத்துப் போன சுபாஷ் முகர்ஜி, 1981, ஜூலை 19ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். எட்வர்சுடன் தற்போது தொடர்பில் உள்ளவரும், முகர்ஜியை அறிந்தவரும், ஐ.வி.எப்., நிபுணருமான சுதர்சன் கோஷ் தஸ்திதார், "அவர் போன்றவர்கள் நிறைய சாதிக்க முடியும். அவர் இருந்திருந்தால் நோபலுக்குத் தகுதியானவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்' என்றார்.

செய்தி

மேலும்

1 comment:

  1. This is the real picture of research in India right from decades ago. Had Venkatraman Ramakrishnan, the contemporary Indian born Nobel Laureate, stayed in India, he might not have attained what he has now. Who knows how many Subash Mukherjees lay buried underground, alive and dead. This is the fate of real scientists in India. We never realise our own wealth and also never let anyone preserve that wealth...

    ReplyDelete