Sunday, December 20, 2009

தமிழ்நதி பதிவுகள்


கவிஞர் குட்டி ரேவதியைப் பற்றி சிறிய அறிமுகம் தரும்படி கேட்டிருந்தீர்கள். சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், பூனையைப் போல அலையும் வெளிச்சம்(2000), முலைகள்(2002),தனிமையின் ஆயிரம் இறக்கைகள்(2003) ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளைத் தந்திருக்கிறார். மிகவும் அற்புதமான கவித்துவம் நிறைந்தவர். எழுத்து,பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவரும் இவர், பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. ‘முலைகள்’என்று தனது கவிதைத் தொகுப்பொன்றிற்குப் பெயர் சூட்டிய காரணத்தால் கலாச்சாரக் காவலர்கள் என்று சொல்லப்படுபவர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டவர். இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.



“கவிதை என்பது இலக்கியம் மட்டுமல்ல;அதுவொரு இயக்கமும் கூட”

பகுதி-1

தமிழ்நதி:உங்களைக் கவிதை எழுதத் தூண்டியது வாசிப்பு அனுபவமா அல்லது இயல்பாகவே எழுந்த உள்ளார்ந்த தூண்டுதலா? நீங்கள் எப்படி எழுத்துத்துறையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

குட்டி ரேவதி:வாசிப்பு அனுபவம் என்று சொல்லமுடியாது. நான் சித்தமருத்துவம் படிக்க ஆரம்பித்த பிறகுதான் கவிதையில் ஈடுபாடு வந்தது. ஆனால் புத்தகங்கள் படிக்கிறது உண்டு. நான் பத்தாவது பரீட்சையில் நல்ல புள்ளிகள் பெற்றிருந்தேன். மருத்துவம்,பொறியியல் என்று எது வேண்டுமானாலும் படிக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் எனக்கென்னவோ தமிழ் இலக்கியம் படிக்கவேண்டுமென்பதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. இவ்வளவு புள்ளிகள் எடுத்துவிட்டு எதற்காக தமிழ் இலக்கியம் படிக்கவேண்டுமென்று அப்பா நினைத்தார். அப்புறம் நான் சித்த மருத்துவம் படிக்கலாமென்று தீர்மானித்து அதில் இணைந்துகொண்டேன்.
சித்த மருத்துவத்தில் உள்ள சிறப்பு என்னவென்றால், அந்தப் பாடத்திட்டத்தில் பெரும்பாலும் எல்லாமே செய்யுள் வடிவத்தில் இருக்கும். அழுத்தமான மொழிநடை இருக்கும். அதிலே பிரயோகிக்கப்படுகிற சொல்லகராதி வந்து புழக்கத்தில் இல்லை. ஆனால் நவீனத்துடன் கூடிய ஒரு உக்கிரம் அதில் இருக்கும். சித்த மருத்துவத்தில் ஆர்வத்தோடு படித்து முதல் மதிப்பெண்கள் வாங்கியபோதிலும், தொடர்ந்து அதிலேயே ஆழ்ந்து அதன் தொடர்ச்சியாக ஒரு நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்ற இலட்சியமெல்லாம் எனக்கு இருக்கவில்லை.

அதனையடுத்து படிப்பதிலிருந்து விடுபட்டு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்த நாட்களில் எனக்கு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. எனக்குத் தோன்றியதை எழுதினேன். அதை வாசித்த ஒரு நண்பர் ‘நன்றாக இருக்கிறது… நீங்கள் ஏன் இதைப் பிரசுரத்திற்கு அனுப்பக்கூடாது…?’ என்று கேட்டார். சில சிற்றிதழ்களுக்கு அனுப்பியபோது அவை உடனடியாக வெளிவந்தன. அதன் பிறகு தமிழினி பதிப்பகத்தார்தான் தாமாகவே முன்வந்து என்னுடைய கவிதைகளைத் தொகுப்பாகப் போடலாமென்று சொன்னார்கள். பொதுவாகப் பார்த்தீர்களானால், அவர்கள் கவிதைப் புத்தகங்கள் போடுவதில்லை. அதன்படி 2000ஆம் என்னுடைய முதற்தொகுப்பான ‘பூனையைப் போல் அலையும் வெளிச்சம்’வெளிவந்தது. அதனையடுத்து 2003ஆம் ஆண்டு ‘முலைகள்’என்ற தொகுப்பு வெளிவந்தது. அந்தத் தலைப்புக் குறித்து ஆரம்பத்தில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. பிரச்சனையில்லை என்று உற்சாகமூட்டி, தயக்கத்தைப் போக்கி, அத்தொகுப்பையும் வெளியிட்டது தமிழினி பதிப்பகந்தான்.

தமிழ்நதி:கவிதையில் ஆதர்சம் என்று யாருடைய கவிதைகளை நீங்கள் குறிப்பிட்டுச் சொல்வீர்கள்? இதற்குப் பதிலளிப்பது உங்களுக்குச் சங்கடமாக இருந்தால் வேண்டாம்.

குட்டி ரேவதி:சங்கடம் என்றெல்லாம் இல்லை. நான் ‘பனிக்குடம்’இதழுடைய ஆசிரியராக இருக்கிறேன். அதனால் எல்லாக் கவிதைகளையும் உன்னிப்பாகக் கூர்ந்து கவனித்து வாசிக்க வேண்டியிருக்கிறது. ஒரு நல்ல கவிதையை, அது உருவாகும் பரிணாமத்தை என்னால் பகுத்துணர முடிகிறது. நானும் எழுதுகிறவள் என்ற வகையில் ஒரு நல்ல கவிதையை நிராகரிக்கவோ தரமற்ற கவிதையை முன்னெடுத்துச் செல்லவோ முடியாது. கூடாது. ஈழத் தலத்திலே இருந்து வந்து, தமிழகத்திலே இயங்கி, இன்றைக்கு ஏறக்குறைய எல்லோராலும் மறக்கடிக்கப்பட்டு விட்ட கவிஞர் பிரமிள் மற்றும் தேவதேவன் ஆகியோரை என்னுடைய ஆதர்சம் என்று சொல்லாம்.தமிழில் நவீன கவிதை என்பது பிரமிள் என்ற மொழிவீச்சுள்ள ஆளுமை பொருந்திய கவிஞன் இல்லையென்றால், இப்போதுள்ள தளத்திற்கு வந்திருக்க முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவருடைய விசை இருந்திருக்கிறது. அண்மையில் அவருடைய கவிதை பற்றிய கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்றை வாசிக்கக் கிடைத்தது. கவிதையியல் என்பது குறித்த அவருடைய விமர்சனங்கள் எந்தக் காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக பிரமிக்க வைக்கின்றன. அதற்கு அவர் அரசியல் நிர்ப்பந்தங்கள் நிறைந்த ஒரு நிலத்திலிருந்து வந்தது ஒரு காரணமாக இருக்கலாம். நான் பெரும்பாலான கவிஞர்கள் எல்லோருடைய கவிதைகளையும் படித்திருக்கிறேன். ஆனால், ஆதர்சம் என்று வரும்போது தேவதேவன்,பிரமிள் ஆகியோரைத்தான் குறிப்பிட வேண்டியிருக்கிறது. தேவதேவனுடைய கவிதைகள் அதிநவீனமான பாணியைக் கொண்டிருக்கின்றன என்று சொல்லலாம். தொடர்ந்து கவிதையின் தளத்தில் இயங்கிக்கொண்டிருந்தால் மட்டுந்தான் அத்தகைய ஒரு இயைபாக்கத்தை நீங்கள் பெறலாம்.

அப்புறம் கவிதை எனப்படுவது இலக்கியத்துள் மட்டும் அடங்காதது, அது ஒரு இயக்கம் என்றுதான் நான் சொல்வேன். சிறுகதை,நாவல் என்பதெல்லாம் ஓரளவுக்கு புனைவு கலந்த வடிவங்கள். கவிதைக்கென்றொரு அழகியல்,இலக்கியத்தன்மை,மொழிவளமை,நவீன தன்மை எல்லாம் இருக்கவேண்டுமென்பதால் அதனை இலக்கியம் என்பதனைக் காட்டிலும் இயக்கம் என்றுதான் சொல்லவேண்டும்.

தமிழ்நதி:‘முலைகள்’என்ற உங்கள் கவிதைத் தொகுப்பின் தலைப்பு இவ்வளவு சர்ச்சைக்கு ஆளாக்கப்பட்டதன் அடிப்படையான காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

குட்டி ரேவதி:இப்போது கேரளாவிலிருந்து என்னை நிறைய இலக்கியக்கூட்டங்களுக்கு அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலே என்னை இலக்கியக்கூட்டங்களுக்கு அழைப்பதில்லை. காரணம், என்மீது இருக்கின்ற அந்த அடையாளம்…! ‘முலைகள்’என்ற பெயரில் ஒரு தொகுப்புப் போட்ட காரணத்தினால் என்னை யாரும் அழைப்பதில்லை. அந்தச் சொல் ஆபாசமான,அசிங்கமான,அருவருப்பான ஒரு விடயமாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில், மலிவு இலக்கியத்தில், வெகுஜன இதழ்களில் பெண்களுடைய மார்பகங்கள் வணிகப் பொருளாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நான் அதை ஒரு எதிர்நிலையில் நின்று பார்க்கிறேன். அதாவது, நம்முடைய உடலை நான் ஒரு பெரிய நிலவெளியாகப் பார்க்கிறேன். ஒரு புவியியல் நிலப்பரப்பானது இலையுதிர்காலம்,இளவேனில்,கோடை என எப்படிப் பலவிதமான பருவங்களைக் கடந்து வருகின்றதோ அப்படியான ஒரு நிலவெளியாகத்தான் உடலைப் பார்க்கிறேன். அதையொரு உறுப்பாக,பொருளாகப் பார்க்கவில்லை.
அப்படி நான் அந்தச் சொல்லைப் பிரயோகித்தது ஆண்களுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கவேண்டும். பெண்கள் அவர்களுக்கென வரையறுக்கப்பட்ட எல்லைகளுள் நின்று எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், பாலியல் உரிமைகளைப் பற்றிப் பேசிவிடமுடியாது. அதற்கான அதிகாரம் பெண்களுக்குக் கிடையாது என அவர்கள் நினைக்கிறார்கள். இன்னுமொரு விடயம் என்னவென்றால், சாதீயம் மிகப்பெரியதொரு விடயமாக இருக்கிறது. இப்போது பாலியல் உரிமைகள் குறித்துப் பேசுவதற்கான வெளி திறந்துவிடப்படுகிறதெனில் அடுத்து சாதீயம் பற்றித் தயக்கமின்றிப் பேசப் புறப்பட்டுவிடுவார்கள் என்ற பயம். மூன்றாவதாக, தமிழ்த்தேசியவாதம் என்றொரு விடயம்…. இங்கு பேசப்படுகிற தமிழ்த்தேசியவாதம் என்பது வேறு. ஈழத்தில் அதன் பொருள் வேறு. இங்கே பேசப்படும் தமிழ்த்தேசியவாதத்திலே பெண்களின் கற்பு என்பது முக்கியமான அம்சம். தனக்கு உடமையான ஒரு பெண் இன்னொருவனோடு போய்விடக்கூடாது என்பதில் கவனமாயிருக்கிறார்கள்.
அதன் அடிப்படையிலேதான் கண்ணகியைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். இவர்கள் மணிமேகலை மற்றும் மாதவியைத் தூக்கிப் பிடிப்பார்களா என்றால்… இல்லை! என்னை மிகவும் ஈர்த்த கதாபாத்திரம் என்றால் அது மணிமேகலைதான். தன்னைக் காதலித்த உதயகுமாரன் மீது அவளுக்கும் காதல் இருக்கிறது. அதைக்; குறித்த மனவெளிப் போராட்டங்கள் அவளுக்கு இருந்திருக்கின்றன. ஆனால், அதை அவள் வெளிப்படுத்தாமல் அறநெறியில் போய் இணைந்துகொள்கிறாள். இந்த மாதிரியான கதாபாத்திரங்களை இவர்கள் தூக்கிப்பிடிப்பதில்லை. அதற்கு இன்னொரு காரணம் இங்கு வேரோடியிருக்கும் இந்துத்துவம் என்று சொல்லலாம். பௌத்தத்தைப் பேசும் மணிமேகலையை அவர்கள் கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டிருப்பதற்கு இந்த இந்துத்துவம்தான் காரணம். ஆணாதிக்கத்தினுடைய மூலாதாரம் இந்துத்துவம்தான். ஒரு பெண் பத்தினியாகச் சித்திரிக்கப்பட்டிருந்த சிலப்பதிகாரத்தை தலைமேல் தூக்கிவைத்துக்கொள்வதற்கும் மணிமேகலையை இருட்டடிப்புச் செய்ததற்கும் இதுதான் காரணம். என்னைக் கேட்டால் மணிமேகலையைத்தான் காவல்தெய்வம் என்று நாங்கள் வணங்கவேண்டும் என்று சொல்வேன். பெண்கள் என்றால் தாய்மை,பொறுமை,விட்டுக்கொடுப்பு,கருணை இவற்றின் வடிவமாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். பெண்களிடத்தில் வீரம்,போராடும் குணம்,பகுத்தறிவு இன்னோரன்ன குணாம்சங்கள் இருப்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மணிமேகலை தனது மனவெளியில் காதல் தொடர்பான ஊடாட்டங்கள் இருந்தபோதிலும் அதையெல்லாம் துறந்து பௌத்தத்திலே இணைந்து மக்களுக்குச் சேவை செய்யவேண்டுமென்ற வழியைத் தானே தேர்ந்தெடுக்கிறாள். இவ்வாறு ஒரு பெண் தனக்குரிய பாதையைத் தேர்ந்தெடுப்பது இவர்களுக்கு உவப்பானதல்ல என்ற காரணத்தினால் மணிமேகலை இருட்டடிப்புச் செய்யப்படுகிறாள்.
இவ்வாறான மனோநிலை கொண்ட ஒரு சமுதாயத்திற்கு ‘முலைகள்’என்ற சொல் எவ்வாறான அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அதனால் விளைந்த எதிர்வினைகளால் ஒரு ரெண்டு வருஷம் நான் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன்.

தமிழ்நதி:இதே சொல்லை ஒரு ஆண் எழுதியிருந்தால்…?

குட்டி ரேவதி:எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சங்க இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கிறது. இப்போதும் வெகுஜன இதழ்களில் பெண்களுடைய முலைகள் மிகவும் கவர்ச்சியாக வர்ணிக்கப்படுகின்றன. அதைப் பற்றி யாரும் சர்ச்சை எழுப்பத் தயாராக இல்லை. ஆண் எதைச் செய்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. என்னுடைய மிக நெருங்கிய ஒரு நண்பர் சொன்னார் “உங்களுடைய ‘முலைகள்’ கவிதைத் தொகுப்பு அத்தனையையும் நானே பணம் கொடுத்து வாங்கி எரித்துவிட விரும்புகிறேன்”என்று. இந்த அதிகார விடயத்தில் நட்பு,உறவு ஒன்றும் கிடையாது.

தமிழ்நதி:‘சண்டைக்கோழி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தின் பின்னால் நீங்கள் கூடுதல் கவனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறதே…!

குட்டி ரேவதி:எல்லோருமே அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால், என்னுடைய வாழ்க்கையிலே அதனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டதாகச் சொல்லமுடியாது. ‘முலைகள்’என்ற பெயரில் தொகுப்பு வெளியிடப்பட்ட பிறகு எந்தவொரு இலக்கியக்கூட்டத்திலோ கல்லூரிகளில் நடக்கும் விழாக்களிலோ கலந்துகொள்ள எனக்கு அழைப்பு அனுப்பப்படுவதில்லை. அதற்கான தகுதியை நான் இழந்துவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து என்னை அழைக்கிறார்கள். மாதத்தில் இரண்டு அல்லது மூன்று கூட்டங்களிலாவது நான் கலந்துகொள்கிறேன். அவர்களது பண்பாட்டில் ‘முலைகள்’என்பது வழக்கிலிருக்கும் ஒரு சொல். பாலியல் உரிமைகள்,மனிதவுரிமைகள்,சாதியம் இவை பற்றியெல்லாம் மாணவர்களிடையே பேசுவதற்கு கேரளாவில் படைப்பாளிகள் முன்வராத நிலையில் அதற்கான தேவை அங்கே நிறைய இருக்கிறது. அதனால் என் போன்றவர்களை அழைக்கிறார்கள். ‘சண்டைக்கோழி’படத்திலும் என்னுடைய பெயர் தேவையற்று இழுக்கப்பட்டிருந்தது. இங்கே சினிமா என்பதும் ஆணாதிக்கம் நிறைந்ததென்ற வகையில் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமிழகச் சூழலில் மேற்குறித்த சர்ச்சைகளால் நான் கூடுதல் கவனம் பெறவில்லை என்பதுதான் உண்மை. எனக்கு அதனால் சாதகம் என்று ஒன்றுமேயில்லை. அதனால் நான் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறேன் என்று சொல்வதே பொருந்தும்.

(தொடரும்)

உள் தனிமை

தனிமையில் மட்டுமே
கசியும் உள்தனிமை
பெருங்கடலாய் உருவெடுத்து
அலையெழுப்பும்
வேறு மனித வாசனை வீச
ஒரு துளியாய்த் திரண்டு விழி நிரப்பும்
கோள நீர்ப்பரப்பில்
காட்சியாகும் உள்தனிமை
காலச்சரிவில் உருண்டோடிப்
பழுத்த பாறைகளைப் போல்
பாரமாய் விழும் கண்ணீர்த்துளிகளை
ஏந்த வலுவுண்டா உன் கைகளுக்கு?

கவிஞரின் ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.

No comments:

Post a Comment