Monday, March 2, 2009

கட்டுரை: கீற்று.காமிலிருந்து


சித்தர் நூல் பதிப்புகள்
கு. மகுடீஸ்வரன்

தமிழில் பதிப்பு வரலாறு என்பது தொடக்க நிலையில்தான் உள்ளது. இலக்கணங்கள், இலக்கியங்கள், மருத்துவ நூல்கள் எனப் பல அரிய பொக்கிசங்களைத் தம் பேருழைப்பால் அச்சுக்குக்கொண்டு வந்தோர் வரலாறு வேறுபாடில்லாது வெளிப்பட வேண்டும். பதிப்புப் பணியாற்றியோர், பதிப்புகள் சீர்தூக்கிப் பார்த்துத் தமிழுலகம் போற்ற வேண்டும். அவ்வகையில் சித்தர்கள் படைப்புகளை- பதிப்புகளைப் பதிப்பித்தவர்கள், அவற்றில் ஏற்பட்ட சிக்கல்கள் ஆகியன பற்றிக் காண்போம்.

தமிழ்ப் பதிப்புலகு

தமிழ் நூல் பதிப்பு என்றதும் நினைவுக்கு வருபவர் - வரவழைக்கப்படுபவர் உ.வே.சா. அவர்கள். 'உ.வே.சா. ஒரு தமிழ் வாழ்வு’ என்ற நூலில் எஸ்.டி. காசிராஜன் ''உ.வே.சா. தோன்றவில்லையென்றால் சிந்தாமணி ஏது? சிலப்பதிகாரம் ஏது? மணிமேகலை ஏது? பரிபாடல் ஏது...? என ஏது பாடுவார். ஆனால் உண்மையோ, சிந்தாமணிக்கு உ.வே.சா. மூன்றாவது பதிப்பாளர். சிலப்பதிகாரத்திற்கும் அவ்வாறே. பத்துப்பாட்டில் ஒன்றாகிய கலித்தொகையை ஐயர் வெளியிட்டதற்கு முன்பே (1887இல்) சி.வை. தாமோதரம் பிள்ளை வெளியிட்டார். திருவாரூர் கோவை என்ற சிற்றிலக்கியத்தைக்கூட ஆ.மே.சென்ன கேசவலு என்பவர் முன்பே பதிப்பித்திருந்தார். பின்னர்தான் உ.வே.சா. பதிப்பித்தார். 1891இல் திருமயிலை சண்முகம்பிள்ளை 1894இல் முருகேச செட்டியார் ஆகியோர் மணிமேகலையைப் பதிப்பித்த பின்தான் உ.வே.சா.வின் பதிப்பு வந்தது. ஆனால் எத்தனை பேருக்கு சென்ன கேசவலு, சண்முகம்பிள்ளை போன்றோரைத் தெரியும்?

தனவந்தர்கள், மடாதிபதிகள், இதழாளர்கள் ஆதரவு பெற்றவர்களே பதிப்புத் தாதாக்களாய் இருந்தார்கள். இதனால் மனம் போன போக்கில் பதிப்புகள் வெளிப்பட்டன. சீவகசிந்தாமணியை ஐயர் பதிப்பித்தபோது அப்பதிப்பில் ஏற்பட்ட பிழைகளைச் சுட்டவே ஒரு நூல் 'சீவகசிந்தாமணிப் பிரகடன வழுப்பிரகணம்” என்ற பெயரில் தமிழில் முதன் முதலில் எழுந்தது.

பதிப்புகளில் தவறுகள் நேர்வது, அதுவும் வசதிகளெதுவும் இல்லாத காலத்தில் ஓலைச்சுவடி தேடிப் பதிப்பவரிடையே வருவது தவிர்க்க முடியாததுதான். ஆனால் எத்தனையோ பெரியவர்களின் பதிப்புப் பணி ஒருசிலரால் மறைக் கப்பட்டே வருகிறது. இலக்கியங்கள் பதிப்பு, மருத்துவச் சுவடிப் பதிப்பினை விட எளிமைதான். ஆனால் அதிலும் பிழைகளுடனே பதிப்பித்தலைக் காண்கிறோம். 'திருவிளையாடல் பயகர மாலை’ என்ற நூல் 'திருவிளை யாடல் பயங்கர மாலைஃ என அச்சானது. 'சிவரகசியம்” என்ற நூலைக் 'கும்பகோணப் புராணம்” எனத் தவறுதலாகத் தஞ்சை சரஸ்வதி மகாலே வெளியிட்டுள்ளது (ப22, சுவடிப்பதிப்புத் திறன்). தலைப்புகளுக்கே இந்தக் கதி என்றால் உள்ளிருக்கும் பாடல்களின் நிலை என்னவாகும்? அதிலும் மறைபொருள் உணர்த்தும் சித்தர் இலக்கியங்கள் நிலை எவ்வாறிருக்கும்?

சித்தர் படைப்புகள்

சித்தர்கள் வரலாறு சிக்கலானது. எண்ணிலாத சித்தர்கள் வரலாற்றல் காணப்படுகின்றனர். அகத்தியர் முதலாக அவர்களை எண்ணிக்கூறும் மரபுண்டு. அதிலே புராணகால அகத்தியர் முதல் 19ஆம் நூற்றாண்டு அகத்தியர் வரை 37க்கும் மேற்பட்ட அகத்தியர்கள் வாழ்ந்திருப்பதாகக் கூறுகின்றனர். (அ. சிதம்பரனார், அகத்தியர் வரலாறு ப.42.) சித்தர்களின் பெயரை ஆய்வு செய்தால் அவர்கள் பல நாட்டினர், பல்வேறு சமயவழி வந்தவர்கள் என்பது விளங்கும். அகத்தியர் (அகஸ்டீன்), உரோமரிஷி (ரோம்), தேரையர் (தேரா), கோரக்கர் (கூர்க்) என்ற இப்பெயர்களால் புலனாகும். (சே.பிரேமா, சுவடிப்பதிப்பியல், ப.35.)

பற்பல தேசங்களிலிருந்தும், சமயங்களிலிருந்தும் வெளிப்பட்டாலும் சித்தர்களின் சிந்தனை மக்களை விழிப்படைய வைப்பதில் குவிந்திருந்தது. அவர்கள் படைப்புகளை 15 பகுதிகளாகக் கொள்ளலாம். 1. சித்தர் பாடல்கள், 2. சித்தவைத்திய நூல்கள், 3. மந்திரம், 4. ஜாலம் (Magic) 5. குணம் (Action), 6. இரசவாதம், 7. நாடி, 8. எண்கள், 9. யோகம், 10. அகராதி, 11. சிகிச்சை முறை, 12. உடற்கூறு, 13. சுருக்கம், 14. ஞானம், 15. காமசாத்திரம் (கலவியின்பம்) என்பனவாகும் அவை. தமிழில் கிடைத்துள்ள சுவடிகளில் பெரும்பான்மையும் சித்தர்கள் அருளிய மருத்துவச் சுவடிகளென்பது வெளிப்படை. இதுபற்றி மு.கோ. இராமன் கூறும்போது, ''இன்றைக்குக் கிடைத்துள்ள சுவடிகள் ஏறத்தாழ இருபதினாயிரம். இவற்றை வகைப்படுத்திக் காணுங்கால் அறுபது விழுக்காடு மருத்துவச்சுவடிகள், பத்து விழுக்காடு சோதிடம் பற்றிய சுவடிகள், மற்றவை பிற துறைகளைப் பற்றியவை ஆகும்” என்பார்.

சித்தர் நூல் பதிப்பாளர்கள்

பல்துறை அறிவும், பரம்பரை மருத்துவமும் அறிந்தோரே ஆரம்ப காலத்தில் சித்தர் நூல் பதிப்பில் இறங்கியுள்ளனர். பழம்பெரும் சித்தர் நூல்களின் பதிப்பாளர்களாக யாழ்ப்பாணம் சுண்ணாகம் குமாரசாமிப் புலவர் (1854-1922), அச்சுவேலி தம்பிமுத்துப்பிள்ளைபுலவர்(1857-1921), திரிகோண மலை த. கனகசுந்தரம் பிள்ளை (1852-1901), மகா வித்துவான் திருமயிலை சண்முகம்பிள்ளை, காவேரிப்பாக்கம் ரா. நமச்சிவாய முதலியார் முதலியோர் சித்தர் பாடல்களையும் மருத்துவ நூல்களையும் பதிப்பித்தனர்.

இன்று டாக்டர் வே.இரா.மாதவன், ச.அரங்கராசன், சு.சௌந்திர பாண்டியன், ந.சேது, ரகுநாதன், கோவேந்தன் எனப் பலர் சித்தர் தொடர்பான நூல்களைப் பதிப்பிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். சமீப காலத்தில் குறிப்பிடத் தகுந்த பதிப்புகளாக வே.ரா.மாதவனின் 'வைத்திய சிந்தாமணி (2000), 'கண் மருத்துவம் (1982), மா.சத்தியபாமாவின் மூலிகைக் கற்பகங்கள் (1996), டி.மகாலட்சுமியின் 'சித்தமருத்துவ பணிகள் (1996) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சை சரஸ்வதி மகால், தமிழ்ப்பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் போன்ற நிறுவனங்கள் சித்தர் நுல்களைப் பதிப்பித்து வருகின்றன. இவை தவிர மைய இந்திய ஆய்வு மருத்துவ ஆய்வு மையத்தில் 2400 சுவடிகளும், இந்திய மருத்துவ இயக்குநரகத்தில் 900 சுவடிகளும் மருத்துவம் தொடர்பான தாய் அச்சேறாமல் உள்ளன. வெளிநாடுகளிலும் சித்தர் இலக்கியச் சுவடிகள் பதிப்பிக்கப்படாமல் உள்ளன.

சித்தர் நூல் பதிப்புச் சிக்கல்கள்

இலக்கிய இலக்கணச் சுவடிகளைப் போலல்லாமல் சித்தர் நூல்பதிப்பு சிக்கல்கள் மிகுந்ததாக உள்ளது. பதிப்பாசிரியர் என்ற நிலையில் முதன்மைப் பதிப்பாசிரியர், துணைப் பதிப்பாசிரியர், பொதுப்பதிப்பாசிரியர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், உரையாசிரியர், சரிபார்த்தவர் என வெவ்வேறு நிலைகளில் அண்மைக்காலப் பதிப்புகள் அமைகின்றன. சென்னை பி.இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ் பதிப்புகளில் பதிப்பாசிரியர் என்பதை அச்சகத்தாரே போட்டுக் கொள்வதும், அச்சகத்தாரின் பெயரையே பெரிதாக அமைப்பதையும் காணலாம்.

ஆரம்பக் காலங்களில் சித்தர் படைப்புகளின் அவல நிலை கண்ட திரு.வி.க, அவர் பதிப்பித்த 'பட்டினத்தார் பாடல்கள்” (முதற்பதிப்பு 1923) என்ற நூலின் முகவுரையில், ''இத்தகைய (சித்தர்) நூல்களையும், உரைகளையும் அச்சிட்டு வெளியிடும் அன்பர் பலர் வியாபாரத்திலும் பொருளீட்டுவதிலும் கருத்தைப் பெரிதும் செலுத்துவாரேயன்றி, மொழிமீதும் எழுத்துப் பிழைகள் மீதும் கருத்தைச் செலுத்துகின்றாரில்லை. காலம் சென்ற வித்துவ மணிகள் எழுதிய பல உரைகள் சில குஜிலிக் கடைக்காரர்களிடத்தும் அகப்பட்டுத் தவிக்கின்றன. அதை நினைக்குந் தோறும் கண்ணீர் பெருகுகிறது,” என்பார்.

காலப்போக்கில் தொகுக்கப்படாது மறைந்துபோன சித்தர் பாடல்களும் உண்டு. இது பற்றிச் சித்தர் 'உடல் தத்துவம்” என்ற நூலில் எஸ்.பி. இராமச்சந்திரன் குறிப்பிடும்போது ''விளையாட்டுச் சித்தர்” என்றொரு சித்தர். இவருடைய பாடல்கள் சில யோக ஞான சாத்திரத்தின் ஏழாம் பாகத்தில் உள்ளன. அழகான பாடல்கள். அவருடைய பாடல்கள் மேலும் கிடைக்குமா என்று தேடியபோது, திருச்சிக்கு அண்மையிலுள்ள ஒரு சிற்றூரில் விளையாட்டுச் சித்தரின் பாடல்களை அப்படியே ஒப்பிக்கக்கூடிய ஒருவர் உள்ளார் என்று தெரிய வந்தது,” என்பார்.

சுவடிக்குச் சுவடி மாறுதல் ஏற்பட்டுச் சிறிது காலத்திற்குப் பின் மூலத்தில் என்ன இருந்தது என்பதே தெரியாதபடி மறைந்துவிடுகின்றது. புத்தரின் மொழிகள் சீனநாட்டு மடங்களில் படி எடுப்போர்களால் சிதைக்கப்பட்டு முரணான கருத்துகளை வெளியிடுவனவாக மாறி விட்டதால் மூலநூல்களைப் பார்த்து ஒப்புநோக்கித் திருத்தமான பாடங்களை எழுதிக்கொள்வதற்காகவே சீன நாட்டிலிருந்து பாகியான், யுவான்சுவாங் போன்ற பௌத்த துறவிகள் இந்தியாவிற்கு வந்ததாக வரலாறு கூறும். ஆனால் இங்கு கைக்குக் கிடைக்கக்கூடிய, அதே போன்ற மற்ற ஓலைச்சுவடிகளை வைத்து ஒப்பிட்டுப் பார்க்காமலேயே பதிப்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிலர், பதிப்புப் பணியில் தவறு நேரும்போது, அடுத்த பதிப்பில் சரிசெய்வதுமுண்டு. பதினெண் சித்தர் பாடல்களைத் தொடர்ந்து பதிப்பித்து வரும் த.கோவேந்தன் பூம்புகார் பிரசுரப் பதிப்பில் கூறும்போது, ''இதற்கு முன்னர் சித்தர் நூல்கள் பல வந்துள்ளன. ஆனால் அவை யோகம் - ஞானம் - வாசி- மருத்துவம் அனைத்தும் கலந்த கோவையாக வந்துள்ளன. அவை பெரிதும் தமிழறியாதவர்கள் பதிப்பித்ததனால் பிழையும் முரணும் தொடர்பற்றும் வெளிப்பட்டன. இன்னும் சிலர் அதனைப் பணத்திற்காகச் சித்தர்கள் பெயரால் செய்துவருவது வருத்தத்திற்கு உரியது. நானே தவறாகச் சித்தர் பாடல்கள் என ஒட்டுமொத்தமாக வேறு ஒருவருக்குத் தந்துள்ளேன்,” என்பார்.

சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் பல சுவடிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது. இப்பதிப்புகள் ஒவ்வொன்றிலும் ஆங்கிலத்தில் பதிப்பாசிரியர் அளித்துள்ள முன்னுரைகள் குறிப்பிடத்தக்கனவாகும்.

பதிப்புத் துரோகங்கள்

தமிழ்ப் பதிப்பு உலகில் துரோகங்களுக்குப் பஞ்சமில்லை. ஒருவர் பதிப்பித்த நூலை, அவருக்குத் தெரியாமல் தன் பெயரைப் போட்டுப் பதிப்பித்துக்கொள்ளுதல் என்பது தொடர்கதையாக உள்ளது. பலமுறை பதிப்பாகிய ஒரு நூலை இதுதான் முதற்பதிப்பு என ஏமாற்றுவோரும் உண்டு. இதற்குச் சான்றாக, 'யூகி முனிவர் வாதகாவியம்” முதற்காண்டம் என்ற நூலைப் பதிப்பித்த ந.சேதுரகுநாதன், தன் நூலின் முகவுரையில் கூறிய செய்திகள் சிலவற்றைக் காணலாம்:

1. டாக்டர் இரா.தியாகராசனவர்கள் தாம் பதிப்பித்த பிரமமுனி எண்ணூறு என்ற நூலின் முகப்பில் 'முதன் முதலாக அச்சேறும் ஓலைச்சுவடிஃ என்று குறிப்பிட்டுப் பதிப்பித்துள்ளார். ஆனால் அந்நூல் 'போகர் எழுநூறு’ என்ற பெயரில் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.

2. டாக்டர் இரா.தியாகராசன், யான் பெரும் பொருட்செலவு செய்து அலைந்து வாங்கி வெளியிட்ட சூதமுனி சூத்திரவுரை நூலுக்குச் சுவடி விலையுங்கூடக் கிடைக்க விடாமற் செய்ததுடன், நான் சென்னைக்கு நான்கு முறை அலைந்து நூல்கள் பெற்று உரையெழுதி நானே அச்சுப்பதிவு ஒப்பு நோக்கிப் பதிப்பாசிரியராகவும், உரையாசிரியராகவும் இருந்து வெளியிட்ட 'ஏழு நூற்றொகுதி’ நூல்களின் முகப்புத்தாளை முற்றும் கிழித்தெரிந்துவிட்டு என்னை உரையாசிரியர் என்றும் குறிப்பிடாமல் நீக்கிவிட்டுத் தாம் பதிப்பித்ததுபோல் பதிப்பாசிரியர் என்று தம்மையும் குறிப்பிட்டுக்கொண்டு என்பாலிருந்த நூல்களையெல்லாம் ஏமாற்றி வாங்கிக்கொண்டு அச்சிட்ட ஒரு புத்தகமும்கூட எனக்குத் தராமல் ஏமாற்றிவிட்டார்.

பதிப்புக்குரிய நேர்மை குறைந்து, பழைய பதிப்புகளை மனம் போன போக்கில் பதிப்பித்துவருவதால் அரசு, பழைய அரிய தமிழ்நூல்களை மறுபதிப்புச் செய்யும் திட்டத்தின் கீழ் பதிப்பகங்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பழைய மருத்துவ நூல்களை மறுபதிப்புச் செய்து வரும் தாமரை நூலகம், தன் 'போக முனிவர் வைத்திய காவியம் 1000” (இதன் முதல் பதிப்பு ஆண்டு 1869) என்ற மறுபதிப்பு வெளியீட்டின் முன்பக்கத்திலேயே அரசின் அனுமதிக் கடிதத்தையும் அச்சிட்டுள்ளது. இதில்,

1. தமிழ் எண்களுக்குப் பதில் இந்தோ-அரபி எண்களைப் பயன்படுத்தலாம். எழுத்துச் சீர்திருத்தத்தைப் பயன்படுத்தலாம்.

2. சங்கிலித்தொடர் பாடல்களை எட்டு வரிப் பாடல்களாக, மூலத்திலிருந்து மாறுபடாமல் மாற்றிக்கொள்ளலாம்.

3. நூலின் கடைசியில் கடின சொற்கள், பரிபாசை சொற்களுக்குப் பொருள் விளக்கங்கள் பகுதி ஒன்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்டுள்ள மாறுதல்களைத் தவிர, மூல நூலினின்றும் வேறு எவ்வித மாற்றமும் செய்ய அனுமதி யில்லை என்பதும் பதிப்பாளருக்குத் தெரிவிக்கப்படுகின்றது என்ற குறிப்பு வருகின்றது.

சித்தர் அகராதி

'சித்த வைத்திய மூலிகை அகராதிஃ என்ற பெயரில் சில பதிப்பகங்கள் நூல்களை வெளியிட்டுள்ளன. புத்தகப்பூங்கா வெளியிட்ட 'சித்த வைத்திய மூலிகை அகராதிஃ (இரண்டாம் பதிப்பு 1999)யைப் பதிப்பித்தவர் டி.எம்.சித்தார்த்தன். ஆனால் பதிப்புரை எழுதியவர் தேவகோட்டை பஞ்சநாதன். பதிப்புரையில் 'இந்நூல் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நூல்களையும் ஓலைச் சுவடிகளையும் ஆராய்ந்து நன்கு விளக்கமாக எழுதப்பட்டுள்ளதுஃ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீசெண்பகா பதிப்பகம் பதிப்பித்த 'சித்தர்கள் அருளிய வைத்திய மூலிகை அகராதிஃ என்னும் நூலில் பதிப்பித்தவர் என்பதற்குப் பதில் சரிபார்த்தவர் பி.இராதாகிருட்டிணன் என்று மட்டுமே உள்ளது. மற்ற எந்த விபரங்களும் குறிப்பிடப்படவில்லை.

சிவவாக்கியரும் ஆழ்வாரும்

சிவவாக்கியர் குறித்துச் சில ஆய்வுகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. திருமழிசை ஆழ்வார்தான் சிவவாக்கியர் என்றும், சிவவாக்கியர் பாடல்களும் திருமழிசை ஆழ்வார் பாடல்களும் ஒருசில சொற்கள் மட்டும் மாறி, பிறிதெல்லாம் ஒரு வடிவத்தில் இருப்பதை ஏ.வி.சுப்பிரமணிய அய்யர் ஆதாரத்துடன் எடுத்துக்காட்டுவார். ஆனால் மு.அருணாசலம் தம் 14ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் (ப.349) இதை மறுப்பார்.. வரலாற்றின் ஆரம்ப காலத்திலேயே சித்தர் குறித்தும், அவர்களின் பாடல்கள் குறித்தும் பல குழப்பங்கள் இருந்திருக்கின்றன. இதனால் தான் எல்லோரையும் சித்தர் என்று கூறும் மரபு தொடர்கிறது.

சித்தர்களைக் கடுமையாக விமரிசனம் செய்த பாம்பன் குருபர சுவாமிகளும் சித்தர் பட்டியலில் சேர்ந்துவிட்டார். சேலம் மாவட்டம் ஆட்டயம்பட்டியில் பிறந்த மாணிக்கம் ''மண்ணைப் பொன்னாக்கத் தெரிந்ததால் ''மாணிக்க சித்தர்” ஆகி, ''மாணிக்க சித்தர் அருளிய மாணிக்க மரகதங்கள்” என்ற நூலை வெளியிட்டுள்ளார். இனி தமிழ்நாடு முழுவதும் 'மேஜிக்” செய்பவர்களையும் ஒரு காலத்தில் சித்தர் பட்டியலில் சேர்த்துவிடலாம்.

சித்தர் நூல்களை, சித்தர் பற்றிய அறிவு மிக்கவர்கள், மருத்துவ முறை அறிந்தவர்கள், பதிப்பு நெறியுடன் பதிப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதே மக்களுக்கு உழைத்த சித்தர்களுக்கு மரியாதை செய்வதாகும்.

நன்றி: கீற்று.காம்

No comments:

Post a Comment