Monday, July 30, 2012

நானும் ரவுடி தான்!


வாழ்ந்திருப்பதற்கான தேவையின் காரணங்களைத் தேடிக்கொண்டிருக்கும்
பொழுதினில் அவசர அவசரமாக விடிந்து விடுகின்றது.

எதிர்பார்ப்புகள் சருகாய் மிதிபடுகின்ற வெளியினில்
வெகுதூரம் சென்றுவிட்டிருக்கிறேன்.

அந்த மயக்கும் பழுப்பு நிற மேகத்தைத் தொட்டுவிட தினமும் முயல்கிறேன்
அதனுள்ளேயே சென்றுவிட எத்தனிக்கிறேன்

எங்கெங்கும் பழுப்பு நிறம்..
திசைகளும் தேவைகளுக்கான தேவைகளும் இல்லை

தேடல்கள் இல்லை, தெய்வமும் தேவையில்லை
அன்பும் இல்லை, அருவருப்பும் இங்கில்லை



கண்களைக் கூசாதவாறு மின்னும் பழுப்பு...
வாழ்வின் ஆழத்தில் குளமாய்த் தேங்கியிருக்கிறது பழுப்பு...

மனதின் சுவர்களில் உள்ளும் புறமும் பழுப்பு நிறமே பூசப்பட்டுள்ளதெனத் தோன்றுகிறது.
நினைவலைகளின் அடுக்குகளிலும் அதுவே தான்...

காலத்தின் தூரிகையில் பழுப்பு மட்டுமே படிந்திருக்கிறதோ?
அதனால்தான் பழையவையனைத்தும் உயிருள்ளதோ அற்றதோ
வேறுபாடின்றி பழுப்பேறிவிடுகின்றனவோ?

முதிர்ச்சியின் நிறம் பழுப்பு, ஞானத்தின் நிறம் பழுப்பு
பழுப்பு நிறமே அனைத்தையும் முந்திப் பிறந்து விட்டதோ?

மெல்ல நடக்கிறேன்...
நெடிதுயர்ந்து இறுகிப் பழுப்பேறிய அம்மரத்தின் வேர்களில் தலைசாய்க்கிறேன்...
பழுப்பு நிற மண் தலையை தொட்டு ஆசிர்வதிக்கிறது...

ஹ்ம்ம்ம்ம்...
சட்டென்று நினைவலைகள் விட்டு விடுதலையாக...
எனது அடையாளத்திற்கான படிமங்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கிப் புணைந்து கொண்டே
படுக்கையினின்றும் நீங்குகிறேன்

குளித்து முடித்து மடிப்பு கலையாமல் உடையணிந்து
தலைவாரும் பொழுது கவனிக்கிறேன்... இன்றுதான்...
என் கண்மணியின் பழுப்பு நிறம்...  அம்மாவின் கண்களில் இருந்தது...
என் மகனின் கண்களில் வெளிப்படுவது...

வாயிற்படிகளில் இறங்கும் போது...
பழுப்புநிறத்தின் வாசனையை அப்பாவின் புத்தகங்களில்
சுவாசித்தது நினைவிலாடுகிறது.

வெளியேறி தெருவில் இறங்கியதும்
பழகிய தெருநாயின் குட்டிகள் காலைச் சுற்றிச் செல்ல கூட்டம் போடுகின்றன.
ஏதோ நினைவுகள் தமக்குள் என்னை இழுக்கப் பார்க்க, தவிர்த்துவிட்டு
அதோ நிற்கும் வண்டியை நோக்கி ஓடுகிறேன்.

இனம் புரியாத பரபரப்பு தொற்றிக் கொள்ள
வேகமாய் நகரும் வண்டியை பற்றி ஏறிக் கொள்கிறேன்.

உள்ளே, தந்தையின் காதில் ஏதோ ரகசியத்தை சொல்லிச் சிரித்துவிட்டு
என்னை பார்த்து முறுவலிக்கிறது அக்குழந்தை...

தொலைவில் எங்கிருந்தோ ஒலிப்பெருக்கியின் குரல்,
“சொன்னா கேளுங்க சார்! நான் இந்த ஏரியாவுல ரவுடியா ஃபார்ம் அயிட்டேன்”.

வண்டி வேகமெடுக்க, பின்னோக்கி நகர்கின்ற மரங்களை எண்ண ஆரம்பிக்கிறேன்!

No comments:

Post a Comment