Wednesday, July 11, 2012

மிஸ் பண்ணிட்ட மச்சி...!

மழைபெய்து ஓய்ந்திருந்த இரவில்
சன்னல்வழி இருட்டினூடே
என் வெற்றுடம்பின் மேல்
வந்து விழுகிறது அது

சில்லென்று ஏதோ பட்டதில்
மெய் சிலிர்த்து கையிலெடுத்துப் பார்க்கிறேன்
ஓர்  ஈசல்!

சற்றே கணத்தில் இரண்டு மூன்று நான்கென
வந்து விழுந்து பெருகுகின்றன அறைக்குள்


இறக்கைகளின் படபடப்பு எந்திரத்துப்பாக்கியின்
இரைச்சல் போல் ஒலிக்க
இங்குமங்கும் எதையோ தேடுகின்றன

என் கையிலிருந்தது இழந்த இறக்கைகளில்
ஒன்று தரையைத் தொட்ட போது
மரணத்தின் மெல்லிசை தொடங்கியிருந்தது.

பழுப்பு உடலில் வெள்ளை கோடுகளுடன் என்
கையிலிருந்தது என்மேல் ஊர்வது பொறுக்காமல்
அருவருத்துத் தட்டிவிடுகிறேன்

உதிர்ந்து விட்ட தமது இறக்கைகள் மேலேயே
தரையெங்கும் திரிந்தவற்றின் மேல்படாமல் நடந்து
படுக்கைக்கு வருகிறேன்

இறகிழந்து இயக்கமும் குறைந்து
இறப்பிற்குத் தயாரான சிலவற்றினை
இழுத்துச் செல்ல எறும்புகள்
தயக்கம் காட்டவில்லை

அறையின் மெல்லிய வெளிச்சத்தினூடே
இறக்கைகளிலிருந்து மரண ஓலமும்
இறகிழந்தபின் மயான அமைதியும்
தொடர்ந்தவாறிருக்கின்றன

முடிவில் அமைதி வெல்ல
மனதின் அமைதி குலைக்குமோர் கேள்வி
"தூங்கும் போது இந்தப் பூச்சி காதுக்குள்ள போய்ட்டா?"

மனதின் கேள்விக்கு அறிவின் பதில்
"கொஞ்ச நேரத்துல சாகப்போற பூச்சி,
காதுக்குள்ள போனாலும் செத்து தான் போகும்!"

படுக்கைமேல் ஊர்ந்தவற்றைத் தட்டிவிட்டு
நானும் மரணிக்கிறேன்
விடியும் வரை!

காலையில் உடலெங்கும் ஒட்டியிருந்த
இறகுகளைத் துடைத்தெடுத்த பொழுதில் ஏனோ தோன்றியது
"ஈசலின் வாழ்வை நாம் தினமும் வாழ்கிறோம்,
சலிக்காமல்" என்று.

அனைத்தையும் கேட்டுவிட்டு நண்பன் அங்கலாய்த்தான்
"ஈசல் ஃப்ரை செம டேஸ்டா இருக்கும், மிஸ் பண்ணிட்ட மச்சி...!"






Note: ஈசல் is the winged (or "alate") caste, also referred to as the reproductive caste of Termites. the process of shedding their wings is an usual course after mating. Please refer Termite Reproductives

No comments:

Post a Comment