Saturday, September 10, 2011

குலாப் ஜாமூன் சாப்பிடும் போது…

குலாப் ஜாமூன் சாப்பிடும் போது “குலாப்”ன்னா ரோஜா, இந்த ஜாமூன்ங்கிறது இன்னாபா? என்ற கேள்வி தோன்றியது. ரூம் போட்டு யோசித்ததில் ஒன்றும் பிடிபடாமல் பக்கத்து ரூம் சர்தார்ஜியைக் கேட்டேன்.

“ஏ ஜாமூன் க்யா ஹோதா ஹே சார்?” அடுத்த நாள் வாங்கிக் கொண்டு வந்தார்.

ஓஹோ! இதுதான் ஜாமுனா? என்று நினைக்கும்போதே நாவல் பழத்தின் “ஓஹோ!” சொல்லவைக்கும் சுவையும், மருத்துவ குணங்களும் நினைவில் வந்தன.


பள்ளி இடைவெளி நேரத்தில் அருகில் இருந்த தோப்பின் ஒற்றை மரத்தில் நாவல் பழம் பறிக்க கல்லெறிவதில் எப்போதுமே நான் கடைசி தான். போட்டி முடிந்த பின் கிடைக்கும் செங்காய்களுடன் திருப்தி அடைவோம் நானும் என் நண்பனும்.

போட்டியில் எப்போதும் ஜெயிக்கும் பையன் ஒருமுறை பரிதாபப்பட்டு கொடுத்த பழங்களை சட்டைப்பையில் வைத்து பட்ட கறை சட்டையில் இருந்து மறைந்தாலும் நினைவில் இருந்து மறையவில்லை.

தொட்டு சாப்பிட உப்புடன் மிளகாய்ப்பொடியும் கலப்பதில் ஒரு நிபுணத்துவம் வேண்டும். தொட்டு சாப்பிடுவதிலும் ஒரு திறமை வேண்டும். புளிப்பும் இனிப்பும் உப்புடன் சேர்ந்ததும் உண்டாக்கும் சுவையை நாவல் இல்லையில்லை நாவால் சொல்லமுடியாது.

இந்த ஆண்டு, நாவல் பழ சீசன் சீக்கிரமாகவே துவங்கி விட்டது. நாவல் பழம், இந்தியாவின் பாரம்பரிய பழங்களுள் ஒன்று. நாவல் பழத்தின் வரலாறு இந்தியாவிலிருந்தே தொடங்குகிறது. சங்க இலக்கியங்களிலும், சித்த மருத்துவ இலக்கியங்களிலும் நாகை, நம்பு, சம்பு, சாதவம், ஆருகதம், நேரேடு, நவ்வல், நேரேடம், சாட்டுவலம், சாம்பல், சுரபிபத்திரை என பல பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. “நாவலந்தீவு, சம்புத்தீவு” என பழங்காலத்தில் இந்தியாவை குறிப்பிட காரணம் நாவல் மரங்கள் நிறைந்த இடம் என்பதே. இதிலிருந்தே அக்காலத்தில் நாவல் மரம் பெற்றிருந்த முக்கியத்துவம் விளங்கும். சங்க இலக்கியத்திலும், தெய்வ வழிபாட்டிலும், நாவல்மரத்திற்கு தனி இடமுண்டு. நாவல் மரத்தடியில் உள்ள சிவன் என்பதால் தான், திருச்சியில் உள்ள திருவானைக் காவலில் உள்ள சிவனை "ஜம்புகேஸ்வரர்' என அழைப்பர். திருவானைக்காவல் மற்றும் திருநாவலூர் ஆலயங்களில் நாவல் மரம்தான் தலவிருட்சமாகும்.

பெரும்பெயர் ஆதி என்ற மன்னனுடைய நாட்டிலுள்ள மக்கள் மணல் குவிந்து கிடக்கும் மணல் மேட்டில் ஏறி நின்று நாவற்பழத்தை கொய்து உண்டனர் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடலடிகள் தருகின்றன.

“கருங்கனி நாவலி லிருந்து கொய் துண்ணும்
பெரும்பெய ராதி பிணங்களிற் குட நாட்
டெயினர்………………………………” (புறம் 177 11-3)

சமயப் பெரியார் திருஞான சம்பந்தர்கூட இறைவனைப் போற்றிப் பாடும்போது- “வெண்நாவல் அமர்ந்துறை வேதியனை” என்று குறிப்பிடுகிறார்.

சுட்டப்பழம் வேணுமா, சுடாத பழம் வேணுமா என அந்தக்குமரன் அவ்வைப் பாட்டியை அலைகழித்த வரலாறு அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறு இந்தியாவிலே தோன்றி இந்திய மற்றும் தமிழ் கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்த நாவல் பிற்காலத்தில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா என பல கண்டங்களிலும் பரவியது தனிக்கதை.

வெள்ளை நாவல், கருநாவல், கொடிநாவல், குழிநாவல், சம்பு நாவல் என பல வகைகள் இருந்தாலும் எல்லோருக்கும் தெரிந்ததும் எளிதில் கிடைப்பதும் கருநாவல் தான்.

ஒவ்வொரு தாவரத்திலும் பெரும்பாலும் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தும் சித்தமருத்துவம் நாவல் மரத்திலும் இலை, பட்டை, பழம், வேர் என அனைத்தின் மகத்துவத்தையும் அறிந்துள்ளது.

சித்த மருத்துவ தத்துவப்படி துவர்ப்பிலிருந்தே இனிப்பு உருவாகும். மானுட தேகத்தில் கணையத்தின் தன்மை துவர்ப்பு சுவையின் தன்மையைக் கொண்டது. அங்கிருந்துதான் இன்சுலின் சுரக்கிறது. கணையத்தில் துவர்ப்பின் ஆதிக்கம் குறையும்பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது. இன்சுலின் குறைவதால் நீரிழிவு நோய் உண்டாகிறது.

நாவல் பழத்தின் விதையில் உள்ள ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உடலுக்குள் சேமிக்கப்பட்ட ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டை தடுக்கிறது. இதனால் நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுபாட்டில் இருக்கும் என்பது நவீன ஆராய்ச்சிகளால் கிடைத்த முடிவு.

துவர்ப்பு சுவையும் தன்மையும் உடைய நாவல் மரத்தின் இலைக் கொழுந்தின் சாறு மூலம் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்தலாம்.

100 கிராம் பழச்சாற்றில் 80IU வைட்டமின்A, 0.03mg தையமின் (வைட்டமின்B1), 0.01mg ரிபோஃபிளேவின் (வைட்டமின்B2), 18mg வைட்டமின்c, 3µg ஃபோலிக் அமிலம் ஆகியன இருக்கின்றன. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஆகிய தாது உப்புகளும் உள்ளன. புரதச்சத்து 0.7%, மாவுச்சத்து 14% இப்பழத்தில் உள்ளன.

பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு. முற்றிய நாவல் மரத்தின் பட்டை கஷாயத்தால் வாய் கொப்பளித்து வர தொண்டைப் புண், தொண்டைஅழற்சி குணமாகும்.

பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும், மூல நோயால் அவதிப்படுவோர் வாழ்நாள் முழுவதும் அதில் இருந்து விடுபட நாவல் பழம் உதவுகிறது.

இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது.
நாவல் பட்டையை அரைத்து அடிபட்ட காயம், வீக்கம் முதலியவற்றின் மேல் போட, அவை குறையும். நாவல் பட்டைச்சாறு எட்டி நஞ்சுக்கு மாற்று மருந்து, மேலும் கழிச்சலையும் போக்கும்.

நாவல் பழத்தை அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டால் இருமல், தொண்டைக்கட்டுதல் ஏற்படும். மேலும் பழத்தையோ, பழச்சாற்றையோ வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.

நாவல் மரங்களை வளர்த்தால் அதன் பல்வேறு பயன்களையும் அனுபவிக்கலாம். வீட்டில், நிலங்களில், பூங்காக்களில் வைத்து வளர்க்கலாம். நாவல் மரங்களைத் தேடி கரு வண்டுகள் அதிகமாக வரும். பல்வகை பறவைகளும் நாவல் மரத்தில் வந்து குடி கொள்ளும். பழங்கள் பழுக்கும் தருணத்தில் கற்களுடன் சிறுவர்களும் வரலாம்.

சமூக விழிப்புணர்வு - ஆகஸ்ட்07 இதழில் இடம்பெற்ற அசுரன் அவர்களது கவிதையை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

மேகங்களின் தோளில் தட்டி உறவுமுறை
கொண்டாடும் உயரத்தில் நின்றதந்த நாவல்மரம்.

"மக்கா... நவ்வாப்பழம் எனக்கொண்ணு தந்துட்டுப் போலேய்...''
வயதான பாட்டியையும் நாவூறவைக்கும் சுவை

வெளவால், குயில், அணிலென்று வேட்டைத் துப்பாக்கிகளுக்கு
விதவிதமாய் குறிசொல்லும் அந்த நாவல்.

காக்கி நிக்கருக்குள் ஒளித்துவைத்த பழங்கள் நசுங்கிக்
கறையாகி பிரம்படி பெற்றுத்தந்தன தமிழாசிரியரிடம்.

நாவற்பழச்சுவையில் பள்ளி மணியொலியைத் தவறவிட்ட
மணியின் காதுகள் நாவற் பழம் போலவே சிவந்தன
தலைமையாசிரியரின் முறுக்கலில்.

அவ்வையாருக்குச் சுட்ட அந்த பழத்தை
ஊதிஊதித் தின்போம் முருகன்களாய்...

தன் பழம் கிடைக்காத பொழுதுகளில் தொண்டை காற காற
கடித்துத்திரிவோம் செங்காய்களை.

தல்லல்பட்ட பழந்துடைத்தால் சதைகள் வீணாகுமென்று
வாயில் போட்டு உப்புக்கரிக்கும் மண்சுவை துப்ப
துவர்ப்பை விழுங்குவோம் லாவகமாய்.

இனிப்பையும் பழத்தையும் புறந்தள்ளும் சின்னவள்
இலக்கியாவுக்கும் மிகப்பிடித்தம் இந்த நாவற்பழச்சுவை.

நாவலைக் குறிபார்க்கும் கற்கள் திசைமாறித் தாக்கிட்டால் சிந்தும்
செந்நீரும் கண்ணீரும். ஆண்பூவா, பெண்பூவா என விளையாட்டுக்
காட்டும் முறியன்பச்சிலை பழிந்து, எரிந்து புண்ணாற்றும்.

விடுமுறை நாட்களின் உணவுவேளைகளில் ஒவ்வொரு
வீட்டிலிருந்தும் நாவலிருக்கும் திசை நோக்கி கூப்பிடு குரல்கள் எழும்பும்.

"கொமருப்பிள்ளையளுக்கு வீட்டுக்குள்ள இருந்தா என்ன...
வெளையில என்னட்டி வேல...'' குரல்களின் கோபம் முதுகிலும் பதியலாம்....


தில்லியில் வசிப்போர் வாரம் ஒருமுறையேனும் மாலைநேரத்தில் இந்தியா கேட் பூங்காவுக்கு சென்று தான் பாருங்களேன். அங்கே வீசும் மெலிதான தென்றலோடு சில மணிநேரங்களை இயற்கையோடு இயைந்த உணர்வுடன் செலவழிக்கலாம். ராஜபாட்டையின் இருமருங்கிலுமுள்ள மரங்களில் நாவல் பழங்களை உலுக்கி சாப்பிட்டு கறைபடிந்த கரங்களோடு வீட்டிற்கு செல்லுங்கள்,

“அந்தக் கறை, நல்லது!”

அடுத்து வரும் வாரத்தினை புத்துணர்வுடன் எதிர்கொள்ள உதவும் அந்தநாள், இனிய நாளாக அமையும்.

நன்றி: 
இந்த கட்டுரை பல வலைத்தளங்களில், புத்தங்களில், ஆராய்ச்சி கட்டுரைகளில் கண்ட தகவல்களைக்கொண்டு தொகுக்கப்பட்டதே. இதில் என் சொந்த சரக்கு குறைவு.

படங்கள்:

4 comments:

  1. அருமையான விளக்கம்... நாவல் பழத்திற்கு இத்தனை சிறப்பு இருக்கிறது என்பதை இதுவரை அறியேன்... இனி நாவலைக் கண்டதும் சுட(சாப்பிடத்தான்) எனக்கு நானே உத்தரவிட்டுக்கொண்டேன்... தகவலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அண்ணா!

    ReplyDelete
  3. very nice informative article on Naaval sir

    ReplyDelete
  4. @கௌரி, வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete