Thursday, July 28, 2011

இன்னும் கொஞ்ச நாள்ல!

  இன்னும் கொஞ்ச நாள்ல!

இங்க நல்ல மழை, அங்க?”  விசாரிப்புகளுக்கு குறைவில்லை
“ஊருக்கு வரும்போது வாங்கிட்டு வாங்க” வகை அழைப்புகளினூடேயும்
எப்போதாவது கேட்கிறது நிஜ நட்பின் குரல்.

எப்போதும் அழுதுவடியும் மெகாதொடர்கள் மட்டும்
எப்போதாவது நினைவுபடுத்துகின்றன தாய்மொழியை.

ஒவ்வொருமுறை மினரல் வாட்டர் வாங்கும் போதும்
கொல்லைக்கிணற்றில் அடித்த முங்கு நீச்சல்
ஞாபகம் வந்து தொலைக்கிறது.

தோளில் கைபோட்டுத் திரிந்த
தோழனொருவன் தொலைபேசுகிறான்
“சொல்லுங்க! எப்படி இருக்கிங்க!”

சொன்ன ஹாய்க்கு பதிலாக
கல்லூரித் தோழி சேட்டுகிறாள்!
“பிட் பிஸி, கேட்ச் யூ லேடர்”

“ஒரு ஃபோன் பண்ணாலாம்ல”
பால்ய நட்பை அவ்வப்போது
புதுப்பிக்கும் தோழனொருவனிடம்
கோபித்தேன். பதில் வந்தது
“சாரிடா, புது கம்பெனிக்கு மாறிட்டேன், சன்டே பேசறேன்”

பழுதுபார்க்க ஆளின்றி
வெட் கிரைண்டரை “டிஸ்போஸ்”
செய்தபோது வந்த விசும்பலை அடக்கிக் கொண்டு
மனைவியிடம் கோபமாய்க் கேட்கிறேன்
“இப்ப எதுக்கு உம்முன்னு உட்கார்ந்திருக்க?”

“அப்பா “ங” எப்படிப்பா எழுதுறது?”
கேட்ட மகளிடம் முத்தத்தை பதிலாகக் கொடுத்துவிட்டு
கிளம்பும் போது சொல்கிறாள்
“ஆஃபீஸ் ஸே ஜல்தி ஆவோ”

முகத்தில் தெரிக்கும் “குட்மார்னிங்”களை விழுங்கிவிட்டு
குளிரூட்டப்பட்ட அறைக்குள் என் அலுவலை ஆரம்பிக்கிறேன்.
அறைக்கு வெளியே வெய்யிலில் காய்கிறது நட்பின் ஈரம்.

“எப்பங்க ஊருக்கு போகப் போறோம்?”
வீடு திரும்பியதும் கேட்கும் மனைவியிடம் சொல்கிறேன்
கழுத்து “டை” யை தளர்த்திக் கொண்டே
“இன்னும் கொஞ்ச நாள்ல!”





இந்த கவிதை (?)  சொந்த மண்ணிடமும் மக்களிடமும் அந்நியப்பட்டு வெளியூர்களில்/வெளிநாடுகளில் பிழைப்புக்காக வாழ்ந்து மண்வாசனையை மனதில் சுமந்திருக்கும் மக்களுக்காக!


புகைப்படங்கள்: நன்றி! திரு.சுரேஷ் பாபு 













2 comments: