மருத்துவ அகராதி தந்த மேதை
ஆ. இரா. வேங்கடாசலபதி
4,000 பக்கங்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலை ச்சொற்களும் கொண்டு, இன்றளவும் பயன்படத்தக்கச் சிறந்ததொரு கருவி நூலாக விளங்குவது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி. தமிழ் அகராதியியலில் பெருஞ் சாதனையாகத் திகழும் இந்த அகராதி உருவான (1912 - 1936) அதே காலகட்டத்தில் மற்றொரு சிறந்த அகராதியும் உருவாகியிருக்கிறது. பல்கலைக்கழக அகராதி ஒரு பெரும் கல்வி நிறுவனத்தால், பல லட்சம் பணச் செலவில், ச. வையாபுரிப் பிள்ளை என்ற பேரறிஞரின் தலைமையில், மு. ராகவையங்கார், ஜி.யு. போப், அனவரத விநாயகம் பிள்ளை, பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரி முதலான பல அறிஞர்களின் பங்களிப்போடு தயாரான தென்றால், இந்த அகராதி ஒரு தனிமனிதரின் முயற்சியில், அவர் ஒருவரின் பொருட்செலவில் மட்டுமே உருவானது. பெப்ரிசியஸ், வின்சுலோ போன்ற முன்னோடிகள் சென்னைப் பல்கலைக்கழக அகராதிக்குக் கைகாட்டியாக விளங்கினரென்றால் ஒரு சிறப்பகராதி என்ற முறையில் இவ்வகராதிக்கு முன்னோடியே இல்லை. தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை என்ற டி.வி. சாம்பசிவம் பிள்ளை உருவாக்கிய மருத்துவ அகராதியான A Tamil - English Dictionary of Medicine, Chemistry, Botany and Allied Sciences என்ற அரிய சாதனையே இங்குச் சுட்டப்படுகிறது.
ஐந்து பெருந்தொகுதிகளும் 4,000 பக்கங்களும் 80,000 தலைச்சொற்களும் கொண்ட இவ்வகராதி இன்றைக்கும் மலைப்பை ஏற்படுத்துவது. தமிழ்ச் சித்த மருத்துவத் துறையில் இன்றும் நினைவில் கொள்ளப்படுவதோடு நடைமுறைப் பயனும் கொண்டதாக இந்த அகராதி இருக்கிறது. பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் சாம்பசிவம் பிள்ளையின் அகராதியிலிருந்து 'சா. அக.' என்ற குறுக்கத்தோடு எடுத்தாளப்பட்ட ஏராளமான தலைச்சொற்களுக்கான சொற்பிறப்பும், விளக்கமும், ஆங்கில இனச் சொல்லும் அமைந்திருப்பதைப் பரக்கக் காணலாம். சொல்லப் போனால் 'சென்னைப் பல்கலைக்கழக அகராதிக்கு அடுத்தபடியாகப் பயன்படுவது, சாம்பசிவம் பிள்ளை தமிழ் - ஆங்கில அகரமுதலியாகும். மருத்துவத் துறையில் அது நல்கும் அறிவு மதிப்பிடுந் தரமன்று' என்றே பாவாணரின் அகரமுதலி முன்னுரை சுட்டுகின்றது.
இருப்பினும் இந்த அகரமுதலி பற்றியும் இதனை உருவாக்கிய மேதையினையும் தமிழுலகம் போதுமான அளவு அறியவோ, போற்றவோ இல்லை. பெருமுயற்சியால் திருவினையாக்கிய டி.வி. சாம்பசிவம் பிள்ளை தம் வாழ்நாளில் இந்த அகராதியை அச்சு வடிவில் முழுமையாகக் காணவும் கொடுத்துவைக்கவில்லை. பண்டை நூல்களை மட்டுமே 'நுண்பல் சிதலைகள்' தாக்கி அழிக்கும் என்ற நினைப்புக்கு மாறாக, இருபதாம் நூற்றாண்டிலும் கரையான்களும் ஈசல்களும் சிலந்திகளும் தமிழோடு விளையாடி இருக்கின்றன. இந்தத் துன்பியல் நாடகத்தை மீட்டுமொரு முறை உரைக்க இக்கட்டுரை தலைப்படுகிறது.
II
சாம்பசிவம் பிள்ளை அகராதியின் சிறப்புகளை அத்துறை வல்லாரே முழுவதுமாக மதிப்பிட முடியும். உடற்கூறு, நோய்கள், மருந்துகள், மருத்துவ முறைகள், மூலிகைகள், தாவரங்கள், ரசாயனங்கள், ரசவாதம், கானியம், யோகம், மந்திரம், தந்திரம், தத்துவம் முதலான பலவற்றையும் உள்ளடக்கியதாக இந்த அகராதி விளங்குகிறது. இது அடிப்படையில் மருத்துவ அகராதியே ஆயினும் தமிழின் வளத்தையும் செழுமையினையும் காட்டக்கூடிய ஒரு கருவி நூலாகும். அகராதி அமைப்பைக் கொண்டதாயினும், பொருள் விளக்கங்கள் முதலானவை கலைக்களஞ்சியம் எனத்தக்க அளவில் விரிவாக அமைந்துள்ளன (எ-டு: 'அவுரி'; 'காடி'). 'ஔஷத வகுப்பு' போன்ற தலைச்சொற்களுக்கான விளக்கம் ஒரு தனிக் கட்டுரையாகவே சாம்பசிவம் பிள்ளை எழுதியுள்ளார். பல தலைச்சொற்களுக்கு விரிவான அடிக்குறிப்புகளும் எழுதியுள்ளார். மூலிகைகளுக்கான விளக்கங்கள் பதார்த்தகுண சிந்தாமணி என்று சொல்லுமளவுக்கு, Materia Medica போல் மிக விரிவாக அமைந்துள்ளன.
சாம்பசிவம் பிள்ளை வகை தொகையாக ஏராளமான தலைச்சொற்களை வழங்கியுள்ளார். 'அத்தி'க்கு 14 வகை, 'சங்கு'க்கு 23 வகை என ஏராளமான செய்திகள் உள்ளன. 'பேய்' என்ற முன்னொட்டோ டு அமைந்துள்ள பதின் கணக்கான தலைச்சொற்கள் பல செய்திகளை உணர்த்துகின்றன. இதேபோல் தீவிர நாடி, துள்ளு நாடி, வன்னாடி, அபல நாடி, நெருங்கிய நாடி, நிறை நாடி, கதி நாடி, தடங்கு நாடி, இடை விடு நாடி, தளம்பு நாடி, ஒழுங்கு நாடி, சுடர் நாடி, மென்னாடி, நுன்னாடி, கம்பி நாடி, மரண நாடி, விகற்ப நாடி, சன்னி நாடி, பூத்த மங்கை நாடி, ஒடுங்கு நாடி, துடி நாடி, உதர நாடி, இரட்டை நாடி, குதிரையோட்ட நாடி, தெறிக்கு நாடி எனப் பட்டியலிட்டிருப்பது தமிழ் மருத்துவத்தின் நோயறி திறனை வியப்புறக் காட்டுகிறது. இதேபோல் தாவர வகைகளையும் மூலிகை வகைகளையும் இவ்வகராதி அடக்கியுள்ளது.
விரிவாக அமைந்த தமிழ் விளக்கங்களோடு ஆங்கிலத்திலும் விளக்கங்கள் உள்ளன. மிகச் செறிவானதும் துல்லியமானதுமான ஆங்கிலத்தில் இவ்விளக்கங்கள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, 'திகைப்பூண்டு மிதித்தால்' ஏற்படும் மருட்சியைச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி 'bewilderment' என்னும். சாம்பசிவம் பிள்ளையோ 'stupefaction' என்பார். சாம்பசிவனாரின் பொருட்சுட்டலே நுட்பமும் பொருத்தமும் உடையது. 'மயிர் நீப்பின் உயிர்வாழாக்' கவரிமான் என்ற விலங்கினை Tibetian yak என்று இவர் மா. கிருஷ்ணனுக்கு முன்பே இனங் கண்டுள்ளார். தாவர, மூலிகைப் பெயர்களுக்கு அவர் கூடுமானவரை இலத்தீனில் அமைந்த அறிவியல் பெயர்களையும் வழங்கியுள்ளார். தாம் அறியாதவற்றை 'unknown', 'unidentified' என்று அவர் குறித்திருக்கும் அறிவு நேர்மை இன்றைய ஆய்வாளர்களுக்கும் ஒரு பாடமாகும்.
இத்துணை வளமும் செழுமையும் கொண்ட கலைக் களஞ்சியத்தை டி.வி. சாம்பசிவம் பிள்ளை உருவாக்கி, பாதி வெளியிட்டு, அவர் காலமான பின் நிறைவு பெற்றதை இனிக் காண்போம்.
III
மருத்துவ அகராதி என்ற கலைக்களஞ்சியத்தைத் தனியொருவராக உருவாக்கிக் காட்டிய டி.வி. சாம்பசிவம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறியக்கூடவில்லை. இன்று கிடைக்கப்பெறும் குறைந்த அளவு தகவல்களுக்கும் நாம் அவருடைய தம்பி மகனாகிய திரு அ. ராஜபூஷணம் மன்னையார் அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம்.
டி.வி. சாம்பசிவம் பிள்ளையின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்திலுள்ள கம்மந்தங்குடி ஆகும். ஆயினும் இவர் பிறந்தது பெங்களூரில் (1880இல்). இவருடைய தாயார் மனோன்மணி அம்மாள்; தந்தையார் வில்வையா மன்னையார். இவர் படித்ததும் பெங்களூரில். பள்ளி இறுதிக்கு மேல் இவர் படிப்புச் செல்லவில்லை. 1899இல் பெங்களூரில் ஏற்பட்ட பிளேக் கொள்ளை நோயால் வெளியேறித் தஞ்சைக்கே (அம்மாப்பேட்டை) இவருடைய குடும்பம் குடியேறியது. சென்னை நகரக் காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிக்கமர்ந்த சாம்பசிவம் பிள்ளை, 1907இல் துணை ஆய்வாளராக்கப்பட்டார். 1903இல் துரைக்கண்ணு அம்மையாரை மணம் செய்து கொண்டார். துரைக்கண்ணு அம்மையாரின் தாய்மாமன் சென்னை நகரப் போலீஸ் துணை ஆணையாளராக விளங்கிய முதல் இந்தியரும் தமிழ் அறிஞருமான ச. பவானந்தம் பிள்ளை ஆவார். (பாரதியின் 'இந்தியா' பத்திரிகைக்கு எதிரான வழக்கையும் விசாரணையையும் நடத்தியவர் இவர்.) 1914இல் முதல் மனைவி இறந்த பிறகு, 1916இல் அம்மணி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். அவரும் தலைப்பிரசவத்தில் அடுத்த ஆண்டே காலமானார். இதன் பிறகு டி.வி. சாம்பசிவம்பிள்ளை மணம் செய்துகொள்ளவில்லை. நேர் வாரிசும் இல்லை. இது மருத்துவ அகராதியின் பதிப்பு வரலாற்றையும் பாதித்தது. 1935இல் இவர் காவல் துறை ஆய்வாளராகப் பணி ஓய்வு பெற்றார்.
ஒரு பெரும் மருத்துவக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கக்கூடிய திறனையும் ஆற்றலையும் உழைப்பையும் வெளிக்காட்டாத சராசரியான வாழ்க்கையினையே டி.வி. சாம்பசிவம் பிள்ளையின் வரலாறு காட்டுகிறது. தமது பாட்டனார் எழுதிவைத்திருந்த சில பழம் மருத்துவச் சுவடிகளே தமது அகராதிக்கு வித்தாக இருந்ததென, 1931இல் அவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையின் முன்னுரையில் சாம்பசிவம் பிள்ளை குறித்துள்ளார். தமது குடும்பத்தில் எவருக்கும் முறையான வைத்தியப் பயிற்சி இருந்ததாகத் தெரியவில்லை என்று அ. ராஜபூஷணம் மன்னையார் குறிப்பிடுகிறார். இந்நிலையில் தம்முடைய விரிவான மருத்துவப் பயிற்சியைச் சாம்பசிவம் பிள்ளை எங்கு பெற்றார் என்பதே புலப்படவில்லை. பள்ளி இறுதி வகுப்புவரை மட்டுமே படித்தவரின் ஆங்கில மொழி ஆற்றலும் வியப்பைத் தருகிறது.
கிடைக்கின்ற குறைவான வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களிலிருந்து சாம்பசிவம் பிள்ளையின் கருத்தியல் பின்புலமும் தெளிவாக வெளிப்படவில்லை. 1931இல் இவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையில் எழுதிய சுருங்கிய முன்னுரையும் (1931), முதல் தொகுதிக்கு (உயிரெழுத்துகள்) எழுதிய மிக விரிவான முன்னுரையும் - இரண்டுமே ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை - சில போக்குகளை உணர்த்துகின்றன. (மொத்தத் தொகுதிகளும் வெளிவந்த பிறகே முன்னுரை எழுத எண்ணியிருந்ததாகவும் அகராதியைச் சரியாகப் பயன்கொள்ளும் வகையைத் தெளிவுபடுத்த வேண்டியே முதல் தொகுதியிலே முன்னுரை எழுத வேண்டியதானதென்றும் கூறியுள்ளார். அவர் மறைந்த கால் நூற்றாண்டுக்குப் பிறகே நூல் முழுவதும் அச்சாயிற்று என்னும்போது இதை நல்லூழ் என்றே மகிழ வேண்டும்).
நூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட சாம்பசிவம் பிள்ளையின் முன்னுரை தமிழ் மறுமலர்ச்சிச் சிந்தனையின் தாக்கத்தைக் காட்டுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சங்க நூல்களும் அதன்வழிக் கட்டமைக்கப்பட்ட தமிழின் மேன்மை, தனித்தியங்கும் ஆற்றல், வளம் ஆகிய கருத்துகளும் திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்தாக்கமும் அவருடைய கருத்துலகை வடிவமைத்துள்ளமை தெரிகிறது. இதன் ஒரு பகுதியாகவே சித்த மருத்துவத்தைத் தமிழ் மரபின் சிறப்பான ஒரு பகுதியாக அவர் காண்கிறார். நாகரிகத்தின் கொடுமுடியைத் தமிழர்கள் தொட்டதன் ஓர் அடையாளமாகத் தமிழ் மருத்துவத்தை அவர் பார்த்திருக்கிறார். நவீன மேலை மருத்துவத்தோடு ஒப்பிடவும் இது முழுமையுடையதாக அவர் கருதியிருக்கிறார். சித்தர்கள் தம் மருத்துவச் சாதனைகளை நிகழ்த்திய காலத்து ஐரோப்பா அறியாமையிலும் காட்டு மிராண்டித்தனத்திலும் மூழ்கியிருந்ததாக அவர் சொல்கிறார். நவீனக் காலத்திற்கேற்ப சித்த மருத்துவத்தை மீட்டுப் புத்துயிரளிக்காவிட்டால் அது அழிந்தும் மறந்தும் போகும் எனவும் அவர் அஞ்சியிருக்கிறார். அகராதி இந்த அச்சத்தின் வெளிப்பாடாகும்.
இந்தக் கருத்தியல் ஓர்மையே சாம்பசிவம் பிள்ளையின் பெருமுயற்சியின் பின்னணியில் தொழிற்பட்டிருக்கின்றது. தமிழ்ச் சித்த மருத்துவ நூல்களில் ஆளப்பட்டிருக்கும் ஏராளமான கலைச்சொற்களும் குழுக்குறிகளும் அவற்றின் உண்மையான பொருளை அறியத் தடையாக இருப்பதை உணர்ந்த சாம்பசிவம் பிள்ளை இதனைச் சீர்செய்ய முயன்றார். இந்தப் பணியினை அவர் எப்பொழுது தொடங்கினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 1938 கடைசியில் எழுதிய முன்னுரையில் கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட உழைப்பு எனக் குறித்துள்ளதிலிருந்து, 1910களின் தொடக்கத்தில், அவரது 30ஆம் அகவையை ஒட்டி, தம் ஆய்வுகளை அவர் தொடங்கியிருக்கலாம் எனக் கணிக்க முடியும்.
தக்க துணை நூல்கள் இல்லாமல் சாம்பசிவம் பிள்ளை தத்தளித்திருக்கிறார். கடுமையான காவல்துறைப் பணிச் சுமைகளுக்கிடையே அவர் ஆய்வு தொடர்ந்திருக்கிறது. இதில் அவருக்கு யாரேனும் துணை நின்றார்களா என்பதும் தெரியவில்லை. கலந்து பேசுவதற்கேனும் எவரேனும் இருந்தனரா எனவும் தெரியவில்லை. அவரைப் பற்றிய இரங்கலுரைகளோ நினைவுக் குறிப்புகளோ கிடைக்காதிருப்பதிலிருந்து அவர் பலரோடும் கலந்துகொள்ளாதவராக, தனித்தே செயல்படக்கூடியவராக இருந்திருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது.
IV
இவ்வாறு டி.வி. சாம்பசிவம் பிள்ளை அரிதின் முயன்று தொகுத்த அகராதியை முதலில் ஒரு சிறு சஞ்சிகையாக, 40 பக்க அளவில் வெள்ளோட்டம் விட்டிருக்கிறார். இது 1931இல் வெளிவந்திருக்கலாம். 'அ' முதல் 'அக்கினினிர்ம மந்தினி' வரை அமைந்த இந்தச் சஞ்சிகையில் 4 பக்க ஆங்கிலப் பொருளடைவும் உண்டு. இதனையே பல அறிஞர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முதலில் அவர் அனுப்பியிருக்கிறார் எனத் தெரிகிறது. பொருள் ஆதரவு வேண்டி இதனைச் செய்தாரா, கருத்தறிவதற்காக அனுப்பினாரா, விளம்பரத்திற்காக அனுப்பினாரா என்று தெரியவில்லை. இச்சஞ்சிகையைப் படித்து ஆர்க்காடு லட்சுமணசாமி முதலியார், உ.வே. சாமிநாதையர், வையாபுரிப் பிள்ளை, கா.சு. பிள்ளை, அனவரதவிநாயகம் பிள்ளை, டி.எஸ். திருமூர்த்தி முதலானோர் அளித்த கருத்துரைகளை ஆங்கிலத்தில் 'Opinions' என்ற தலைப்பில் அச்சிட்டு அதனையும் 8 பக்க அளவில் இணைத்துள்ளார்.
இதன் பிறகு 1931இல் 'அ' முதல் 'அமுத' வரைத் தலைச்சொற்கள் கொண்ட 200 பக்க சஞ்சிகையை சாம்பசிவம் பிள்ளை வெளியிட்டிருக்கிறார். இவை இரண்டும் The Research Institute of Siddhar's Science, Madras என்ற பெயரில் வெளிவந்துள்ளன. இது சாம்பசிவம் பிள்ளையே ஏற்படுத்திக்கொண்ட பெயரளவிலான நிறுவனம் என்பதில் ஐயமில்லை.
இதன் முன்னுரையில் இது ஒரு மாதிரி (Specimen) என்றே அவர் குறித்திருக்கிறார். மொத்தம் நான்கு தொகுதிகளாக, ஒவ்வொன்றும் 500 பக்க அளவில் அமையும் என்றும் அவர் எழுதியுள்ளார். ஆனால் அவர் காலமான பின்பே முழுமை பெற்ற இந்த அகராதி 4000 பக்கத்தை எட்டிவிட்டது.
கடைசியில் இந்த அகராதியின் முதல் தொகுதி 1938இல்தான் வந்தது. (ஆனால் பலர் தவறாக 1931 என்றே குறிப்பிடுகின்றனர். இதற்கான காரணம் இந்த அகராதியின் பதிப்பு வரலாற்றில் ஏற்பட்ட குழப்பங்களே ஆகும். அவற்றைப் பின்னர் காண்போம்.)
சாம்பசிவம் பிள்ளை இவ்வகராதி வெளியீட்டுக்காகத் தம் பூர்வீகச் சொத்தான இரண்டு வேலி நிலத்தை விற்றதோடு, ஓய்வூதியத்தையும் முன்னரே பெற்று 12,000 ரூபாவுக்கு மேல் செலவு செய்திருக்கிறார். (வ. சுப்பையா பிள்ளை, அ. ராஜபூஷணம் மன்னையார் ஆகியோர் தரும் தகவல் இது.) முதல் இரண்டு தொகுதிகள் அடுத்தடுத்து 1938ஆம் ஆண்டளவில் வெளிவந்ததாகத் தெரிகிறது.
1949இல் சென்னை மாநில அரசு அவருக்கு ஐயாயிரம் ரூபாய் உதவித்தொகை அளித்ததோடு, சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருணாசல நாயக்கர் தெருவில் ஒரு வீட்டையும் கொடுத்திருக்கிறது. இதுவும் அ. ராஜ பூஷணம் மன்னையார் தரும் தகவல். இந்த உதவியளித்தலுக்குப் பின்னே இருந்தவர்கள் யாரெனத் தெரியவில்லை. ஆனால் இந்த அரசு உதவியே அகராதிக்கு ஆபத்தாக அமைந்துவிட்டது.
மூன்றாம் தொகுதி பாதி அச்சான நிலையில், 1953இல் டி.வி. சாம்பசிவம் பிள்ளை காலமானார். வாரிசில்லாத நிலையில், சென்னை தாசில்தார் அவர் இருந்த வீட்டைப் பூட்டிவிட்டதோடு, வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தையும் எடுத்துச்சென்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் வைத்துப் பூட்டிவிட்டார். இது நடந்து ஒரு பத்தாண்டுகளுக்குப் பிறகு இதைக் கேள்விப்பட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனர்களில் ஒருவரும் மறைமலையடிகள் நூல்நிலையத்தைத் தோற்றுவித்தவருமான வ. சுப்பையா பிள்ளை (1966இல்) முயற்சி எடுத்து, சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் தேடியிருக்கிறார். அங்கு ஒரு கள்ளிப்பெட்டி நிறைய மருத்துவ நூல்களும் நிகண்டுகளும் செல்லரிப்புண்ட நிலையில் இருந்திருக்கின்றன. அதன் பக்கத்தில் ஒரு அடுக்கிலே அகராதியின் கையெழுத்துப் படிகளும் அச்சிட்ட படிவங்களும் இருந்திருக்கின்றன. மூன்றாம் பாகத்தின் 2174 பக்க எண்ணோடு முடியும் படிவத்தையும் அவர் கண்ணுற்றிருக்கிறார். (அங்கே இருந்த ஒரு பள்ளியிறுதிச் சான்றி தழிலிருந்து சாம்பசிவம் பிள்ளையின் தம்பி டி.வி. அண்ணாமலைப் பிள்ளையின் முகவரியைப் பெற்று, அவர் வழியாகச் சாம்பசிவம் பிள்ளையின் பணி அடையாள அட்டையிலிருந்த படத்தை வ. சுப்பையா பிள்ளை பெற்றிருக்கிறார். இன்று கிடைக்கப்பெறும் சாம்பசிவம் பிள்ளையின் ஒரே படம் இதுவேயாகும்.)
வ. சுப்பையா பிள்ளையின் இடையீட்டுக்குப் பிறகு, அகராதியின் கையெழுத்துப்படிகளும் அரைகுறையாக இருந்த அச்சுப்படிகளும் சென்னை அண்ணா நகர் சித்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதென அவர் 1972இல் குறித்துள்ளார்.
அங்கு அரசின் மானிய உதவியுடன் மூன்றாம் பகுதியின் பிற்பகுதி அச்சிடப் பெற்று பழைய படிவங்களோடு சேர்த்துக் கட்டப்பட்டு, வெளியிடப்பெற்றிருக்கிறது. இதில் அதன் இயக்குநர் டாக்டர் பு.மு. வேணு கோபால் முன்னின்றதாகத் தெரிகிறது. இவ்வெளியீடு 1972-1977க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். இப்பொழுது பார்க்கக் கிடைக்கும் முதல் மூன்று தொகுதிகளின் முதற்பதிப்புகளும் இச்சமயத்தில் கட்டப்பட்டதாகவே தெரிகின்றது.
இவ்வேளையில் கோவையின் விந்தை மனிதர் ஜி.டி. நாயுடுவை இந்த மருத்துவ அகராதி கவர்ந்திருக்கிறது. அவருடைய முயற்சியில் அடுத்த இரண்டு பாகங்கள் அச்சிடப்படலாயின. ஆனால் அவை வெளிவரும் முன் அவரும் காலமாகிவிட்டார். கடைசியில் 1977இலும் 1978இலுமாக சாம்பசிவம் பிள்ளையின் பேரகராதியின் நான்காம் ஐந்தாம் தொகுதிகள் வெளியாயின. 1931இல் தொடங்கிய மருத்துவ அகராதியின் அச்சுவாகனப் பயணம் 47 ஆண்டுகளுக்குப் பின்னர் முடிவு பெற்றது.
இவ்வாறு கடைசி மூன்று தொகுதிகளும் அச்சிட்டு, கட்டப்பட்டு முற்றுப்பெற்றபோது சில பதிப்புக் குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. நான் பார்த்த பிரதிகளெல்லாம் பழைய படிவங்களோடு புதிதாக அச்சிட்ட படிவங்களும் சேர்த்துக் கட்டடம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. தலைப்புப் பக்கமும் புதிதாக அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளது தெரிகிறது. (சாம்பசிவம் பிள்ளையின் காலத்தில் முழுவதுமாக அச்சிடப்பட்டு, கட்டப்பட்ட பிரதிகளை நான் கண்ணுற இயலவில்லை.) இந்தப் பிரதிகளில், வெள்ளோட்டமாக அச்சிடப்பட்ட சஞ்சிகையின் முகப்பை மாதிரியாகக் கொண்டு, 1931 எனப் பதிப்பு ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது. இது பிழை. 1938இல்தான் முதல் இரு தொகுதிகள் அணியமாயின என்பதை முன்னரே கண்டோ ம். மேலும் நான் பார்வையிட்ட ஓர் இரண்டாம் தொகுதியில் 930 முதல் 1488 பக்கம் வரை சாம்பசிவம் பிள்ளை காலத்து அச்சுப்படிவங்களும் 1489 முதல் 1752 பக்கம் வரை (ஜி.டி. நாயுடு அறக்கட்டளையால்) நான்காம், ஐந்தாம் தொகுதிகள் அச்சிடப்பட்ட அதே அச்சகத்தில் அதே தாளில் அச்சிடப்பட்டுள்ளது தெரிகிறது. இதிலிருந்து, சாம்பசிவம் பிள்ளை மறைந்தபொழுது பல அச்சுப் படிவங்கள் கட்டப்படாமல் இருந்திருக்கும் என எண்ண இடமுண்டு.
தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் அரிய பதிப்புகளெல்லாம் பெரும் அலைக்கழிப்புகளுக்குப் பின்னரே வெளிவந்திருக்கின்றன. தீயூழாக, இந்த முயற்சிகள் பற்றிய போதுமான பதிவுகள்கூட இல்லை. இவ்வளவு அரிய அகராதியைப் பற்றி 'சொல்பொருள்' என்ற 900 பக்க அளவில் அமைந்த சிறப்பான தமிழ் அகராதி வரலாறுகூட இரண்டு இடங்களில் பெயரளவில் மட்டுமே சுட்டுகிறது. 19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு மொழி அகராதி தயாரிக்கப்பட்ட அனுபவத்தை விளக்கும் சிறு நூலை பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு தமிழ்ப் பதிப்பகம் வெளியிடும் (Emile Littre, How I Made My Dictionary, Cre-A, 1992) சூழ்நிலையில் டி.வி. சாம்பசிவம் பிள்ளை போன்ற அறிஞர்கள் போற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா?
பின்குறிப்பு
பல்லாண்டுகளாகக் கிடைக்கப்பெறாமல் இருந்த இந்த அகராதியைத் தமிழக அரசு 1990களில் மறுபதிப்பிட்டுள்ளது. எப்படி நூல் வெளியிடக் கூடாது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும். முதல் பதிப்பின் ஐந்து தொகுதிகளும் ஒரே சீராக ராயல் அளவில் தொடர் பக்க எண்களோடு நேர்த்தியாக அச்சிடப்பட்டவையாகும். புதிய 'பதிப்'போ ஆறு பகுதிகளாக வெவ்வேறு அளவில் அச்சிடப்பட்டுள்ளது. முதல் தொகுதி டெம்மிக்கும் குறைந்த அளவில் 1742 பக்கங்களில் புதிதாகப் பல பிழைகளோடு அச்சுக் கோக்கப்பட்டு ஒரே நூலாகச் செங்கல்போல் அமைந்துள்ளது. இரண்டாம் தொகுதி 'ஆப்செட்' முறையில் பழைய பதிப்பு அப்படியே படம்பிடித்து வெளியிடப்பட்டுள்ளது - நல்லவேளையாக! ஆனால் இது 929ஆம் பக்கத்தில் தொடங்கி 1752ஆம் பக்கத்தில் முடிகிறது! மூன்றாம் தொகுதியும் இதே 'ஆப்செட்' முறையில் 1753ஆம் பக்கம் தொடங்கி 2224ஆம் பக்கத்தில் முடிகிறது.
நான்காம் தொகுதி இரண்டு பாகங்களாகப் புதிதாக அச்சுக் கோத்து அச்சிடப்பட்டுள்ளது. காரணம் விளக்கப்படவில்லை. இதன் முதல் பாகம் 1ஆம் பக்க மெனப் புதிதாக இலக்கமிடப்பட்டு 1020ஆம் பக்கம்வரை உள்ளது. இரண்டாம் பாகம் இதன் தொடர்ச்சியாக 2000 பக்கம்வரை உள்ளது. ஐந்தாம் தொகுதி மட்டும் ராயல் அளவில் புதிதாக அச்சுக்கோத்து, 1 முதல் 1291 பக்கம் வரை எண்ணிடப்பட்டுள்ளது. அச்சுப் பிழைகள், வடிவமைப்பு, நேர்த்தி முதலானவை பற்றிச் சொல்லாமலிருத்தல் நலம். சாம்பசிவம் அகராதி தொடர்ந்து அச்சில் உள்ளது என்பதைத் தவிர இதில் மகிழ்வதற்கு ஏதுமில்லை.
துணைநூல்கள்
1. டி.வி. சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகராதிப் பதிப்புகள்.
2. டி.வி. சாம்பசிவம் பிள்ளை வெளியிட்ட மருத்துவ அகராதியின் மாதிரி சஞ்சிகைகள்.
3. அ. ராஜபூஷணம் மன்னையார், சித்த மருத்துவ மேதை டி.வி. சாம்பசிவம் பிள்ளை, குருவருள் பதிப்பகம், சென்னை, 2002.
4. வ. சுப்பையா, 'படந்தொகுத்தலிற் பட்டறிவு' (2), செந்தமிழ்ச் செல்வி, சூலை 1972.
தம் பெரியப்பா பற்றி விரிவான பல செய்திகளைப் பகிர்ந்துகொண்ட திரு. அ. ராஜபூஷணம் மன்னையார் அவர்களுக்கும் டி.வி. சாம்பசிவம் பிள்ளையின் சாதனையை எனக்கு முதலில் அறிமுகப்படுத்திய மறைந்த புலவர் த. கோவேந்தன் மற்றும் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்களுக்கும் நன்றி உரியது.
எதிர்வினை
சான்றோர் குலப் பண்டிதரும் சாம்பசிவம் பிள்ளையும்:
சில கேள்விகள்
"மருத்துவ அகராதி தந்த மேதை - ஒரு துன்பியல் நாடகம்" என்ற தலைப்பில் சாம்பசிவம் பிள்ளை பற்றிய ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களின் கட்டுரை (காலச்சுவடு, ஜனவரி 2007) வெளி வந்துள்ளது. தஞ்சை வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை என்ற டி.வி. சாம்பசிவம் பிள்ளை என அவர் முழுப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
'மண்ணையார்' (மன்னையார்) என்பது தஞ்சாவூர்ப் பகுதிக் கள்ளர் சமூகத்தவருள் ஒரு பிரிவினரின் குடும்பப் பெயராகும். சாம்பசிவம் பிள்ளை தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்திலுள்ள கம்மந்தங்குடியைச் சேர்ந்த வில்வையா மன்னையாருக்கும் மனோன்மணி அம்மாளுக்கும் பிறந்தவர் என்ற தகவல் கட்டுரையாசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தமிழறிஞரும் சென்னை நகரக் காவல் துறைத் துணை ஆணையாளருமான பவானந்தம் பிள்ளையின் சகோதரி மகள் துரைக்கண்ணு அம்மையாரை 1903இல் மணந்துகொண்டார் எனவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாம்பசிவம் அவர்களுக்கு பிள்ளை பட்டம் அகம்படியர் அல்லது வேளாளர் குலத்தவருடனான மண உறவால் வந்திருக்கலாம். அல்லது, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய சமூகச் சூழலுக்குத்தக புனைந்துகொண்ட பட்டமாக இருக்கலாம்.
சாம்பசிவம் பிள்ளையின் கருத்தியல் பின்புலம் தெளிவாக வெளிப்படவில்லை. இவருடைய குடும்பத்தில் எவருக்கும் முறையான மருத்துவப் பயிற்சி இருந்ததாகவும் தெரியவில்லை. காவல் துறை ஆய்வாளராகப் பணி புரிந்தவர் இவர். இவருடைய பாட்டனார் எழுதிவைத்திருந்த சில பழைய மருத்துவச் சுவடிகளே தமது அகராதிக்கு வித்தாக இருந்தன என 1931இல் அவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையின் முன்னுரையில் சாம்பசிவம் பிள்ளை குறிப்பிட்டுள்ளதாகவும் கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். சாம்பசிவம் பிள்ளையின் காலத்தில் முழுவதுமாக அச்சிடப்பட்டுக் கட்டப்பட்ட பிரதிகளைக் கட்டுரையாசிரியர் கண்ணுற இயலவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழப்பங்களையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது கீழ்வரும் ஐயங்கள் எழுகின்றன:
சற்றேறக்குறைய சாம்பசிவம் பிள்ளையின் சமகாலத்தில் (1859-1919) தஞ்சையில் வாழ்ந்தவரும் 'கர்ணாமிர்த சாகரம்' என்ற பெயரில் இசைநூல் எழுதி வெளியிட்டவருமான ஆபிரகாம் பண்டிதர் என்ற சான்றோர் குலத்தவர் (நாடார்) சிறந்த மருத்துவராகவும் இருந்துள்ளார். பண்டிதர் என்ற பட்டப் பெயர்கூட அவருடைய குலப்பட்டப் பெயர் அல்ல. தமிழ்ப் பண்டிதர் என்பதையும் மருத்துவ நிபுணர் என்பதையும் குறிப்பதற்குச் சூட்டப்பட்ட பட்டமாகும் அது. அவருடைய குடும்பத் தயாரிப்புகளான மருந்துகள் இன்றைக்கும் தஞ்சைப் பகுதியில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
மருத்துவத் துறைப் பிரிவுகளான எலும்பு முறிவுச் சிகிச்சை, வாதக் கோளாறுக்கான சிகிச்சை, வர்மச் சிகிச்சை போன்றவற்றில் சான்றோர் குலத்தவர் தன்னிகர் அற்றவர்களாக - குறிப்பாகத் தென்மாவட்டங்களில் - இருப்பது தமிழகம் அறிந்த செய்தியே. ஆபிரகாம் பண்டிதரின் பூர்விகம் தென்காசிக்கு அருகிலுள்ள சாம்பவர் வடகரை ஆகும். இவருடைய பரம்பரையே சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற பரம்பரையாகும். மேலும் இவர் 1879ஆம் ஆண்டில் சுருளி மலைக்குச் சென்று நேரடியாக மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சுருளிமலையில் கருணாநந்த ரிஷி என்பவரிடம் உப தேசம் பெற்றுப் பல்வேறு சிகிச்சை முறைகளிலும் கைதேர்ந்தவராய் ஆனார். தஞ்சைக்குத் திரும்பி லேடி நேப்பியர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணி புரிந்தார். இவருடைய மனைவி ஞான வடிவு பொன்னம்மாள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார்.
1890ஆம் ஆண்டில் வேலையை ராஜினாமா செய்துவிட்டுத் தஞ்சைப் புறநகரில் ஒரு நிலத்தை வாங்கி மூலிகைத் தோட்டம் வைத்து, அதற்குக் கருணாநந்தபுரம் என்று பெயரிட்டார். தஞ்சையில் தாம் வசித்த வீட்டில் வைத்தியச் சாலை ஒன்றை நிறுவினார். இங்கு தயாரிக்கப்பட்ட கோரோசனை மாத்திரைகள் உலகப் புகழ் பெற்றன. அப்போதைய மதராஸ் மாகாண ஆளுநர் சர் ஆர்தர் லாலி இங்கு வருகை புரிந்து இவரைப் பாராட்டியுள்ளார். 1909ஆம் ஆண்டு ராவ் சாஹிப் பட்டம் கிடைத்தது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ஆபிரகாம் பண்டிதரின் நுண்மாண் நுழைபுலம் சாம்பசிவம் பிள்ளையின் மருத்துவ அகராதித் தொகுப்புப் பணிக்குப் பின்புலமாக இருந்திருக்குமோ என்ற ஐயம் எழுகிறது.
பண்டிதர் 1879ஆம் ஆண்டுக்கு முன்னரே திண்டுக்கல்லில் சடையாண்டி பட்டர் என்பவரிடம் இசை கற்றார். கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயர், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் போன்ற இசை மேதைகளுடன் விவாதிக்குமளவுக்கும் அடிப்படையான கேள்விகளை எழுப்புமளவுக்கும் இசை ஞானம் பெற்றுத் திகழ்ந்தார். இராமநாதபுரம் சேதுபதியைப் புரவலராகக் கொண்ட இசைச் சங்கம் தோற்றுவிக்கப்படக் காரணமாக இருந்தார். 1916ஆம் ஆண்டில் பரோடாவில் இசை குறித்த மாநாடு நடப்பதற்குப் பண்டிதர்தான் உந்துசக்தியாகத் திகழ்ந்தார். அம்மாநாட்டில் பண்டிதர் ஆய்வுக் கட்டுரை வாசித்ததோடு, பண்டிதரின் மகள் மரகதவல்லி அம்மாள் ஸ்வரங்கள் பற்றிய செயல்முறை விளக்கமளித்தார். பண்டிதரின் பேரன் தனபாண்டியன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை இசைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
தமிழிசை தொடர்பான ஆய்வுகளிலும் பிரச்சாரங்களிலும் ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு எவ்வாறு இருட்டடிப்புச் செய்யப்படுகிறதோ, அது போன்றே சித்த மருத்துவக் கலைச்சொல் உருவாக்கத்திலும் ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு திட்டமிட்டு இருட்டடிக்கப்பட்டிருக்கலாம்.
சாம்பசிவம் மன்னையார் பிள்ளை என்ற பட்டம் போட்டுக்கொண்டதே கூட வேளாளருடைய ஆதிக்கம் நிலவிய 19-20ஆம் நூற்றாண்டுச் சமூகச் சூழலின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் எனத் தோன்றுகிறது. தமிழக வேளாளர் சமூகத்தவர் தமிழின அடையாளம் அனைத்தையும் தங்களுக்கும் தங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் மட்டுமே உரியனவாகக் காட்டிக்கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆபிரகாம் பண்டிதர் போன்ற சான்றோர் சமூகத்தவரின் பணியையும் பங்களிப்பையும் அங்கீகரிப்பது இவர்களுக்கு என்றைக்குமே உவப்பானதாக இருந்ததில்லை. இது தீவிரமான ஆய்வுக்குரிய ஒரு விஷயம்.
அ. கணேசன்
(செயலாளர், சான்றோர் குலப் பண்பாட்டுக் கழகம்,
சென்னை - 40)
நன்றி : காலச்சுவடு.காம்
No comments:
Post a Comment