எதிர்வினைகளும் எதிர்கொள்ளப்படாதவைகளும்
சு.கி. ஜெயகரன்
ஒருவர் வெளிப்படுத்திய கருத்துகளை எதிர் கொள்ளும்போது அவற்றை அறிவு ரீதியாக உள்வாங்கிப் பின் மாற்றுக் கருத்துகளைத் தர்க்க ரீதியாக முன்வைக்க வேண்டும். ஆனால் பொதுவாகத் தமிழ்ப் பத்திரிகைச் சூழலில், மாறுபட்ட கருத்துகளைத் தர்க்க பூர்வமாக எதிர்கொள்ளும் தன்மை குறைவென்பதை நான் லெமூரியா பற்றி எழுதியபோது வந்த எதிர்வினைகளால் உணர்ந்தேன். கருத்துகளை எதிர்கொள்ளாமல், எழுதியவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கும் எதிர்வினைகளைக் கண்டேன்.
காலச்சுவடு இதழில், சில ஆண்டுகளுக்கு முன் 'லெமூரியா - குமரிக் கண்டம் குழப்பம்' என்ற கட்டுரையை, பின்னர் வரவிருந்த 'குமரி நிலநீட்சி' என்று தலைப்பிட்ட என் நூலுக்கு வெள்ளோட்டம் போல் எழுதினேன். அதில் மனுக் குலம் தோன்றியதற்கு முன்னிருந்த கோண்ட்வானாக் கண்டமும், மேனாட்டு மறை'ஞானி'களின் கற்பனையில் உதித்த லெமூரியாவும் சங்க இலக்கியங்கள் சில சுட்டும் குமரி என்ற நிலப் பரப்பும் வெவ்வேறானவை என்பதை விளக்கியிருந்தேன்.
அதற்கான எதிர்வினைகளை, மறைந்த கண்டத்துடன் சம்பந்தப்பட்ட புனைபெயர்களில் எழுதியோர், காலச்சுவடு எதிர்வினைகளைப் பிரசுரிக்கவில்லையென்று குறைகூறி, அவற்றை ஒப்புரவு என்ற பத்திரிகையின் இதழ் ஒன்றில் பதிவு செய்தனர். காலச்சுவடு ஒரு கருத்துப் போரைத் துவங்கியிருப்பதாகவும் அதை எதிர்கொள்ளக் குமரிக் கண்ட ஆதரவாளர் அனைவரும் முன்வர வேண்டும் என்ற அறைகூவலும் எழுதப்பட்ட அந்த எதிர்வினைகளில் கோபமே மேலோங்கியது.
கருத்துப் போர் ஆரம்பிப்பதாகக் கூறி என்மீது வசைமாரி பொழிந்த அந்த எதிர்வினைகளில் ஒன்றுகூட என் நூலிலுள்ள அறிவியல் சார்ந்த வாதங்களை எதிர்கொள்ளவில்லை. 'எப்படி இவர் இப்படிக் கூறலாம்' என்ற தோரணையில் எழுதப்பட்ட எதிர்வினைகளில் கடற்கோள், கண்டப் பெயர்ச்சி, மறைந்த கண்டம், அங்குத் தழைத்த சீரிய நாகரிகம் பற்றி எழுதி, சங்கப் புலவோர், உரைகாரர் கூறியவை கட்டுக் கதைகளாக இருக்க முடியாது என வாதிட்டனர். எப்படி 'இருந்திருக்க முடியும்' என்பதைக் கூறாத அந்த வாதங்கள், குத்துச் சண்டை பயிலுவோர் திருப்பக் குத்தாத மணல்பையின் மீது குத்துவதை எனக்கு நினைவுறுத்தின.
அவற்றில் எனக்கு விடுக்கப்பட்ட ஒரு முக்கியமான கேள்வி, 'நான் கோடிக்கணக்கில் செலவழித்துக் கடலடி ஆய்வுகள் நடத்தினேனா?' என்பது. என் வாதங்கள், அறுபதுகளுக்குப் பின் நடத்தப்பட்ட புவியியல், கடலடி மற்றும் ஆழியியல் ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆம், அவற்றிற்கென ஆய்வு நிறுவனங்கள், பன்னாட்டு அமைப்புகள் பல கோடிகள் செலவழித்துள்ளன. ஆனால் நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். மறைந்த கண்டங்கள் பற்றி எழுத ஆரம்பித்த பன்மொழிப் புலவர் துவங்கி அது பற்றி எழுதிக்கொண்டிருக்கும் பேருந்துத் தொழிலதிபர்வரை எவரேனும் ஒருவராவது கடலடி ஆய்வுகள் நடத்தியவரா அல்லது புவியியலின் அடிப்படைகளைத்தான் புரிந்துகொண்டவர்களா? அவர்கள் அனைவரும் ஸ்காட் எலியட் சொன்னார், ஹெலினா ப்ளவாட்ஸ்கி சொன்னார் என்று அவர்கள் எழுதியவற்றை, மூலங்களை ஆராயாமல், கேள்விகள் எழுப்பாமல், அவர்களின் லெமூரியாக் கோட்பாடு என்ற அரைத்த மாவையே தமிழில் அரைக்கவில்லையா?
தொல்காப்பியருக்கு முற்பட்ட புலவோர் எழுதியவற்றை மேற்கோள் காட்டி 'என்மனார் புலவோர், பாங்குற உணர்ந்தோர்' என்று எழுதும் மரபு, தொல்காப்பியத்தில் உள்ளது. அதே மரபில், நக்கீரர் தம் இறையனார் அகப்பொருளுரையில் குமரி எனும் நிலப்பகுதி பற்றிக் குறிப்பிட்டதை எழுநூறு அல்லது எண்ணூறு ஆண்டுகளுக்குப் பின் வந்த உரைகாரர் பின்பற்றினர். அவர் மிகைப்படுத்தி எழுதிய நிலவியல் விவரங்கள் வேத வாக்குகளாக! அன்று இருந்ததாக நம்பப்பட்டவற்றை, அன்று எழுதப்பட்ட இலக்கியக் குறிப்புகளை, புவியின் மேற்பரப்பைச் செயற்கைக் கோள்களால் கண்காணிக்கும் இன்று மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். மேம்பட்ட அறிவியல் ஆய்வுகளால் கண்டத் தட்டுகளின் அமைப்பு, கடல் மட்ட உயர்வு பற்றி அறிந்துகொண்ட நிலையில், சங்கப் புலவர் மற்றும் உரைகாரர் கூறியதை விடுத்து, இந்த நூற்றாண்டிற்குள் காலடியெடுத்து வைக்க வேண்டும்.
கருத்துகளை உள்வாங்காமல், அவற்றிற்கு எதிர்வினைகளை எழுதுவது ஆகாயத்துடன் சிலம்பம் செய்வது போலாகும். ஓர் எடுத்துக்காட்டு, வெகுஜனமக்கள் வார இதழ் ஒன்றில் அன்றைய அரசியல்வாதி எழுதிய மறுப்புக் கட்டுரை. 'தமிழன் மட்டுமல்ல மனிதயினம் தோன்றியதே குமரிக் கண்டத்தில்தான் என்று பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்போது பெங்களூர்க்காரர் ஒருவர், குமரிக் கண்டம் என்றே ஒன்று இருந்ததில்லை என்கிறார். அதைப் படித்ததும் இலக்கியச் செல்வர் துள்ளிக் குதித்து எழுந்துவிட்டார்' என்ற முற்குறிப்புடன் ஆரம்பித்தது 'தமிழன் தோன்றிய குமரிக் கண்டம்' என்ற கட்டுரை. அதில் 'இலங்கையில் புகழ்பெற்ற நூலாகிய மகாவம்சம், இலங்கைக்கும் தெற்கே 700 காதம் (இவர் கணக்குப்படி அது 4900 மைல்களுக்குச் சமம்!) நிலப்பரப்பு இருந்ததாகக் கூறுகிறது' என்று எழுதியிருந்தார். அந்த எதிர் வாதம் அவர் மகாவம்சத்தையோ என் நூலையோ புரட்டிக்கூடப் பார்க்காமல் எழுதியது என்பது தெளிவு.
அவர் மகாவம்சத்தைப் புரட்டிப் பார்த்திருந்தால் அதில் குமரிக் கண்டம் பற்றிய குறிப்புகள் எதுவுமேயில்லை என்பதைக் கண்டிருப்பார். என் நூலை வாசித்திருந்தால், சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நிலப்பரப்பு எதுவாகயிருக்கும் என்பதை நான் விளக்கியிருப்பதையும் அறிந்திருப்பார். புவியியல் பதங்கள் விரவலாகப் பயன்படுத்தப்பட்ட அவரது கட்டுரையில், நிலவியல் வரைபடங்கள் இரண்டு, அதில் ஒன்றில் 12 கோடி ஆண்டுகட்கு முற்பட்ட குமரிக் கண்டத்தின் படம் இருந்தது. மனித குலம் தோன்றியதே ஒரு லட்சத்திற்கும் குறைவான காலம் என்ற நிலையில், புவியின் வரலாறு, மனித குலத்தின் வரலாறு பற்றிய ஒரு அடிப்படைப் புரிதலுடன் அவை பற்றி எழுத வேண்டும்.
என்னைப் பாராட்டி, என் நூலுக்கு மதிப்புரை எழுதியவர் ஒருவர், நூலைப் படிக்காமல் எழுதியிருக்கிறார் என்றால் வியப்படைய வேண்டாம். தீராநதியில் (ஜூலை 2003) வெளிவந்த 'விஞ்ஞானமும் இலக்கியமும் கலந்த ஆய்வு' எனத் தலைப்பிடப்பட்ட பத்மாவதியின் மதிப்புரையின் ஆரம்பமே 'இலக்கிய ஆதாரங்கள், கண்டங்கள் நகர்வது பற்றிய தகவல்கள், மனித நாகரிகத்தின் வளர்ச்சி, கடல் மட்ட ஆதாரங்களைக் கொண்டு லெமூரியாக் கண்டம் கடலில் மூழ்கிவிட்டதை நிறுவுகிறது இந்தப் புத்தகம்' என்று தொடங்குகிறது. அவர் எழுதிய மதிப்புரைக்கும் என் நூலின் அடிப்படை இயங்குதளத்திற்கும் எந்த விதமான தொடர்புமில்லை. மேலும் கடலுக்கடியில் எரிமலை வெடித்துக் குமுறும்போது உருவாகும் நிலநடுக்கம் பற்றி நான் எழுதியதைப் புரிந்துகொள்ளாமல் அதையே இந்திரனுக்கு நீராட்டு விழா நடத்திய நம் முன்னோரின் பெருமை பேசப் பயன்படுத்தியிருந்தார் அவர். 'பராந்தக சடையன் வெளியிட்ட செப்பேடுகளில் உள்ள, வேள்விக்குடி செப்பேட்டில் உயர்ந்துகொண்டிருந்த மலையைத் தடுத்து நிறுவியவரும், கடல்நீர் முழுவதையும் குடித்த குடமுனியைப் பற்றிக் கூறப்பட்டதால், கண்டப் பெயர்ச்சி, மலைகள் உயர்வது பற்றி நம் முன்னோர்கள் அன்றே தெரிந்து வைத்திருந்தனர்' என்று எழுதினார்.
பாராட்டுகள் பலவகை. அவற்றில் மறைமுகமான பாராட்டு ஒருவகை. ஒருவர் பாடியதைப் போலப் பாடுவது, ஒருவர் எழுதியவற்றை எழுதுவது போன்ற செயல்களால், காப்பியடிப்பவர், தான் யாரைக் காப்பியடிக்கிறாரோ, அவர்மீதுள்ள தன் அபிமானத்தை வெளிப்படுத்துகிறார் என்றே சொல்லலாம். இதைத்தான் imitation is a form of appreciation என்ற ஆங்கிலப் பழமொழி கூறுகிறது. இவ்வகையில் என்னைப் பாராட்டியவர் நாவலர் சடகோபன் என்பவர். 'குமரி நிலநீட்சி'யில் நான் எழுதிய சில முக்கியமான கருதுகோள்களை வரிக்கு வரி எடுத்தெழுதி 'மறைந்த கண்டம்' பற்றிய கட்டுரை ஒன்றை ஒரு நாளிதழில் எழுதியிருந்தார். ஓரிடத்திலாவது அவர் அந்தக் கருத்துகளை எங்கிருந்து எடுத்தார் என்பதைக் குறிப்பிடாமல் எழுதியிருந்தார் அந்தப் பண்பாளர்! இதில் ஒரு ஆபத்து என்னவென்றால், லெமூரியா பற்றிய எனது கருத்துகள், தமிழினப் பெருமை பேசுவோரைத் தாக்கும் ஒரு தடியாகச் சிலரால் பயன்படுத்தப்படக்கூடும், மேற்கூறிய நாவலர் சடகோபன் மாதிரி. ஆனால் எனது நோக்கம் அதுவல்ல. தமிழர்கள் பெருமை கொள்ள எண்ணற்ற கூறுகள் உள்ளபோது, இல்லாத ஒன்றைப் பிடித்துக்கொண்டிருக்கத் தேவையேயில்லை என்பது என் நிலைப்பாடு.
இரு ஆண்டுகளுக்கு முன் கணையாழியில் குமரிக் கண்டம் பற்றிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். புவியியல் அபத்தங்கள் நிரம்பிய அக்கட்டுரை, மறைந்த கண்டத்தில் பாலைவனங்களும் அதில் ஒட்டகங்களும் இருந்திருக்கக்கூடும் எனச் சிலாகித்தது. அக்கட்டுரை கூறிய கருத்துகளை மட்டுமே எதிர்கொண்டு முல்லையும் குறிஞ்சியும் திரிந்து உருவாகும் பாலை நிலமும் பாலைவனமும் ஒன்றல்ல என்றும் இந்தியாவின் தென் பகுதியருகே பாலைவனங்கள் என்றும் இருந்ததற்கான புவியியல் தடயங்கள் ஏதுமில்லையென்றும், ஒட்டகங்கள் பாலைவனத்தில் பரிணமித்த விலங்குகள் அல்ல, அவை வீட்டு விலங்குகளாகப் பழக்கப்படுத்தியபின் பாலைவனங்களில் பயன்படுத்தப்பட்டன என்பதையும் குறிப்பிட்டேன். என் கட்டுரைக்கு மறுபடியும் எதிர்வினையெழுதிய அக்கட்டுரையாளர், என் கருத்துகளைத் தர்க்க ரீதியாக எதிர்கொள்ளாமல், எவ்வாறு தமிழர் தன்னம்பிக்கையின்றித் துவண்டுக் கிடக்கின்றனர் என்றும் பழம்பெருமை பேசுவதில் தவறில்லை என்றும் எனக்கு அறிவுரை அளித்திருந்தார்.
குமரி நிலநீட்சிக்கு எதிர்வினை எழுதியோர் ஏதோ தாம் மட்டும் தமிழினத்தின், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்பாட்டின் காவலர் போன்று எழுதினர். நானும் என் பள்ளிப் பருவத்தில் மறைந்த கண்டம் பற்றியும் 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கும்' முற்பட்ட தமிழினத்தின் பெருமை பற்றியும் பேசக் கற்றுக்கொண்டேன். அதைக் கற்பித்த, தமிழ் இலக்கியத்தை மட்டுமே அறிந்த என் தமிழாசிரியர்களுக்கு நன்றி கூற வேண்டும்! பள்ளியில் கற்றுக்கொண்ட குமரிக் கண்டக் கோட்பாட்டை அன்று பரிபூரணமாக நம்பினேன். பின்னர் புவியியல் பயில ஆரம்பித்தபோதுதான், மறைந்த கண்டக் கோட்பாடு எத்தகைய மிகை என்பதும் எவ்வாறு அலங்கரிக்கப்பட்டது என்பதும் புலப்பட்டது. அதைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு எடுத்துக் கூற வேண்டும் என்ற உந்துதலால் அது பற்றி எழுத முற்பட்டேன். உண்மையைத் தேடும் என் ஆய்வுகள் அரசியல் எல்லைகளையும் சாதி-இன, மத, மொழி வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவை.
என் நூலைப் படித்துணர்ந்து நடுநிலையான மதிப்புரை எழுதியவர்களில் பொ. வேல்சாமி முக்கியமானவர். அவர் லெமூரியா - மறைந்த கண்டங்கள் கோட்பாடுகளை ஆதரித்து எழுதுபவர்களின் உள்நோக்கம் பற்றிய ஒரு முக்கியமான கேள்வியையெழுப்பினார். ஆரிய இனப் பெருமை பேச வெள்ளைக்கார மறை'ஞானி'கள் லெமூரியாக் கோட்பாடு பற்றி எழுதினர் என்றால், இன்றைய தமிழ்ப் பத்திரிக்கைச் சூழலில் ஏன் அது பற்றி எழுதுகிறார்கள்?
அண்மையில் பழந்தமிழகம் பற்றிய நூலொன்றைக் கண்டேன். அதில் மறைந்த கண்டம் பற்றிய 'ஆய்வு'க் கட்டுரைகளில் வேத விளக்கங்களும் புராணக் கதைகளும் பஞ்சாங்க ஆதாரங்களுடன் காவி நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. குமரிக் கண்ட ஆய்வாளர் ஒருவர், ஐந்திறம் நூலைப் பல ஆண்டுகளாக ஆராய்ந்து தமிழ் மொழி பற்றியும் தமிழர் பற்றியும் முக்கியமாக இந்துமதம் பற்றிய தகவல்களையும் கிரகித்துக் கொண்டிருப்பதாக ஓர் எழுத்தாளர் எழுதியதைக் காண நேர்ந்தது. பழந் தமிழகத்தில் (மறைந்த கண்டம் உட்பட) இருந்தவர்கள் அனைவருமே இந்துக்கள் என முன்கூட்டியே எடுத்த முடிவுக்கு இவர்களால் ஆதாரங்கள் தேடப்படுகின்றன.
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் புராணங்களையும் ஆகமங்களையும் துணைக்கு இழுத்து வந்து அறிவியலால் தெளிவு செய்யப்பட்ட கோட்பாடுகளை 'ஆராய்ந்து'கொண்டிருப்பதாகக் கூறும் கேலிக்கூத்தை நாம் பிறந்த மண்ணில் மட்டும்தான் காண முடியும்.
இந்தியாவின் பன்முகத் தன்மையிலும் மதச்சார்பின்மையிலும் ஜனநாயகத்திலும் அக்கறையுடையோர் கவனிக்க வேண்டியவை பற்றி எழுதிய அ. மார்க்ஸ் 'வெறுப்பை விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்' "இந்துத்துவவாதிகளின் பிரதான ஆயுதம் வரலாறு. வரலாற்றின் அடிப்படையில் அவர்கள் எதிரியை அடையாளப்படுத்துகிறார்கள். 'தேசியத்தை' வரையறுக்கின்றனர். தங்களின் நிகழ்கால அரசியலுக்குத் தோதாக ஒரு பழங்காலத்தைக் கட்டமைக்கின்றனர். அதன் மூலம் நிகழ்காலம் மட்டுமல்லாமல் பழங்காலமும் அவர்களின் வசமாகிறது" என்று குறிப்பிடுகிறார். இங்குதான் தமிழினத்தின் பழங்காலத்தை யார் கையிலெடுத்திருக்கிறார்கள் என்பதை உற்று நோக்க வேண்டும். 'பண்டைய இந்தியா' எனும் நூலில் உள்ள அபத்தங்களைச் சுட்டிக்காட்டும் மார்க்ஸ், 'நமது பழம்பெருமையைப் பீற்ற வேண்டும் என்பதற்காக வேத காலத்திலோ, சங்க காலத்திலோ கணிப்பொறிகள் இருந்தன என்று சொல்லிவிட முடியுமா? நாகரிகம் ஒன்றின் காலத்தைச் சொல்லும்போது அது பிற வரலாற்றுச் சம்பவங்கள், பிற துறை முடிவுகள் ஆகியவற்றுடன் பொருந்துகிறதா என்பதை அறிவது முக்கியம். ஏதோ ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு சில தரவுகளை மூடி மறைப்பது, வரலாறு எழுதியலின் அறமன்று' என்று கூறும் அவர், எழுதுபவரின் அறியாமையின் காரணமாகவோ, வேறெந்த நோக்கத்திலோ தவறான தகவல்களைத் தராமலிருப்பது முக்கியமானதொன்று என்றும், ஆதாரமற்ற விவரங்களை உறுதிபடச் சொல்லக் கூடாது என்றும் கூறுகிறார். ஆனால் இதைத்தான் பல மறைந்த கண்ட ஆதரவாளர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.
செவிவழிச் செய்திகள், ஐதீகங்கள், புராணங்கள், இலக்கியக் குறிப்புகள் ஆகிவற்றிற்குத் தம் மனம் போன போக்கில் கொடுத்த விளக்கங்களை ஆதாரமாகக் கொண்டு, தமிழ் நூல்களின் வரலாற்றுக் காலங்களைக் கணித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் ஆய்வுத் துறையில் முத்திரை பதித்தவர் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை. அவர் கண்ட முடிவுகளில், தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் ஆகியோரின் காலங்களை கி.பி.5ஆம் நூற்றாண்டிற்குப் பின்னாகக் குறிப்பிட்டதால் அவர் தூற்றப்பட்டார் என்றும், அவரது நிலைப்பாட்டை எதிர்த்தவர்கள் தக்க ஆதாரங்கள் காட்டி மறுக்காமல், உணர்ச்சிமயமான எதிர்வினைகளை எழுதினர் என்பதையும் முனைவர் அ.க. பெருமாள் (தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியாரின் கணிப்பு - 1983) சுட்டிக்காட்டுகிறார். 'தமிழ் இலக்கியங்களின் காலங்களைக் கணிக்கவந்தவர் எல்லோரும் வையாபுரியாரின் காரணங்களை அறிவுபூர்வமாக மறுக்காது, முத்திரை குத்திப் பழித்துவிட்டு, தமிழ் நூல்களைத் தொன்மையான காலத்திற்குத் தள்ளித் திருப்திப்பட்டுக்கொள்ளும் நிலையைத் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் பரக்கக் காண்கிறோம்' என்கிறார் பெருமாள்.
குமரி நிலநீட்சி பற்றிய என் கணிப்புகளும் இதே போன்ற, ஆனால் நான் எதிர்பார்த்ததைவிடக் குறைவான எதிர்ப்புகளை, எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. காரணம், வையாபுரியாரின் காலக் கணிப்புகள் வந்த காலத்திற்கும் இக்காலத்திற்கும் உள்ள வேறுபாடுகள். இன்று கோட்பாடுகளின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்வியெழுப்பும் அறிவியல் நாட்டம் கொண்ட இளைய தலைமுறையினர் இருப்பது; தகவல் துறையின் முன்னேற்றத்தால் அண்மைக் கால ஆய்வுகள் பற்றிய பரவலான புரிதலிருப்பது; விழிப்புணர்வு கொண்ட பகுத்தறியும் வாசகர்களின் எண்ணிக்கை பெருத்திருப்பது போன்றவை அன்றில்லாதவை. லெமூரியா மறைந்த கண்டம் பற்றிய என் கருத்துகளை ஏற்றுக் கொள்வது கடினமாகயிருப்பது தன்னின உயர்வுவாதம் பேசும் ஒரு சிறு விழுக்காட்டினருக்கே.
தன்னின உயர்வுவாதமே பிரிவினைகளுக்குக் காரணம். இப்படித்தான் ஒரு காலத்தில் சீனர்களும் அவர்களே உலகின் மூத்த குடியினர் என்றும் அவர்கள் வாழும் பகுதியே உலகின் மையம் என்றும் நம்பினர். ஆனால் அது அறிவியல் காட்டும் உண்மையல்ல என்பதைச் சீனச் சிந்தனையின் மறுமலர்ச்சிக் காலத்திலேயே உணர்ந்தனர். ஒருசாரார் அடுத்தவரைவிட உயர்ந்தவர் என்று எண்ணுவதாலேயே சாதி, இன, மதச் சண்டைகள் உருவாகின்றன.
தமிழர்தான் மூத்த குடியென்பதும் தன்னின உயர்வுவாதம்தான். ஒரு லட்சம் ஆண்டுகட்கு முன், ஆதி மனிதர் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி உலகெங்கிலும் வியாபித்தனர்; அவர்களே நம் முன்னோர்கள் என்ற அறிவியலால் தெளிவான உண்மையை, இந்தத் தன்னின உயர்வுவாதிகளால் செரிக்க முடியாது என்பது வேறு விஷயம். தமிழர் நாகரிகம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முற்பட்டது என்று ஓர் 'இலக்கியவாதி' கூறினால் அதை நம்புவதுதான் தமிழ்ப் பற்றின் அடையாளமாகக் கருதப்படும் நிலை நீடிக்க வேண்டுமா, அல்லது மானிடவியல், தொல்லியல் ஆகியவற்றின் அண்மைக் கால ஆய்வுகளின் முடிவு என்ன என்பதை அறிந்து, இந்தத் தேங்கிய நிலையை மாற்ற வேண்டுமா என்பதைப் பகுத்தறிய விழையும் வாசகர்கள்தான் தீர்வு செய்ய வேண்டும்.
நன்றி: காலச்சுவடு.காம்
Dear Dr.Natraj,
ReplyDeletethanks for posting this nice article.
Pls read this too.
Gives new view on all countries,
http://kalaiy.blogspot.com/
இந்த கருத்து தொடர்பான மற்ற கட்டுரைகளின் விபரங்களையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
ReplyDelete