Friday, July 25, 2008

சித்த மருத்துவம்

சிதையும் தமிழ் மருத்துவம்

மரு. அருள் அமுதன்
 

முதல் மனிதன் பசிக்கும்போது ஏதோ ஒன்றை சாப்பிட்டிருப்பான். ஒருவேளை அது வாந்தியையோ அல்லது வயிற்றுப் போக்கையோ அல்லது மரணத்தையோ அல்லது உடல் வலுவையோ தந்திருக்கக் கூடும். இதை பார்த்த சக மனிதன் அனுபவபாடம் (Experienced study) கற்றுக் கொண்டிருப்பான். இப்படி அனுபவ பாடத்திட்டமாக பரிணாம வளர்ச்சி அடைந்து வந்ததுதான் தமிழ்நாட்டு உணவு மற்றும் மருத்துவம். எந்த ஒரு வம்ச மனிதனாவது நோயே வராமல் வாழ்ந்திருக்க முடியுமா? முடியவே முடியாது! வேட்டையாடும் போது, ஓடும்போது, சில நஞ்சு உணவுகளை உண்ணும் போது அல்லது சில தாக்குதல்களின் போது ஏற்பட்ட காயத்தை
அல்லது நோயை அவன் ஏதோ ஒரு இலை தழையை கொண்டுதான் குணப்படுத்தியிருப்பான். இதுவும் அனுபவ பாடம்தான்.

தாய்ப்பால் தருவதில் இருந்து, வாய்க்கரிசி போடும் வரை எத்தனை பருவங்கள்... குழந்தை, காளை, பிள்ளைத்தாய்ச்சி, முதுமை என ஒவ்வொரு பருவத்துக்கும் வேறுவேறு மருந்துகள் இல்லாதிருந்தால், அறுவை சிகிச்சை கூட இல்லாமல் ஆதித்தாய் பத்து பதினைந்து பிள்ளைகளை பெற்றுப் பின் விளைவாக நான் இவற்றை எழுதவும், நீங்கள் இவற்றைப் படிக்கவுமாக, இத்தனை நூற்றாண்டுகளாக தமிழ்க்குடி வாழ்ந்திருக்க முடியுமா?

தமிழன்வியாபாரம் முதல் அரசாட்சிவரை அனைத்துத் துறைகளிலும் கொடிகட்டி பறந்தான் என்று மார்தட்டும் இன்றையத் தமிழன், தமிழ் மருத்துவத்தை பற்றி பேச கூச்சப்படுவது ஏன்? தமிழுக்கென்று சொந்த மருத்துவமுறை இல்லை என்று வைத்துக் கொண்டால், கொள்ளை நோய்களுக்கும் (Epidemic diseases), இயற்கை காலநிலைகளின் மாறுபாடுகளால் ஏற்படும் நோய்களுக்கும் தாக்குப்பிடிக்க முடியாமல் தமிழ் இனமே அழிந்திருக்க வேண்டாமா?

தமிழ் மக்களின் அறிவின், விஞ்ஞானத்தின் உச்சகட்ட விளைச்சலே இந்த சித்த மருத்துவம் ஆகும். மக்கள் மறந்த இந்த சித்த மருத்துவத்தை, தமிழ்நாட்டு ஆடுகளும், மாடுகளும் ஏன் நாய்களும் கூட இன்றளவும் பயன் படுத்துகின்றன. நாய்க்கு வாயிற்றுப்புழு (worms) இருந்தால் உணவு உண்ணாது. வயிற்றில் பொருமல் சத்தம் கேட்கும். நாயானது நேராக சென்று ‘அறுகம்புல்லை’ தேடி தின்னும். உடனே வாந்தி எடுக்கும். பின்னர் வயிறு சரியாகி நன்றாக உணவு உண்ணும். பாம்புடன் சண்டையிட்ட பின், கீரியானது ‘கீரிபுரண்டான் பச்சிலை’யில் புரண்டு அதன் விஷத்தன்மையைப் போக்கும். ஆடுகள் குட்டிபோட்ட உடன் ஏற்படும் குருதிப் பெருக்கை நிறுத்த ‘உதிரமடக்கி’ என்ற தரையோடு படரும் மூலிகையைத் உண்ணும்.


திராவிட இனம் என்பது ஒரு தனி இனம் என்றால் அவனுக்கென்று ஒரு வைத்திய முறை இருந்திருக்க வேண்டும். அதுதான் ‘சித்த மருத்துவம்’எனப்படும். சித்தர்கள் எனப்பட்ட தமிழ் யோக அறிஞர்கள் உருவாக்கியதால் இப்பெயர் பெற்றது. உ.வே.சாமிநாதஐயர் போன்ற தமிழ் தாத்தாக்கள் சித்த மருத்துவத்துக்கு தொண்டு செய்யாமல் போனது வருத்தமளிக்கிறது தமிழரின் கட்டிடக்கலை, விவசாயம், மொழி போன்றவற்றை பிறநாட்டார் இனி பயன்படுத்த முடியுமோ இல்லையோ, தமிழ் மருத்துவத்தை கண்டிப்பாக உலகோர் பயன்படுத்த இயலும். நாம் முயன்றால் மருத்துவ உலகுக்கு நம்மால் ஒளியேற்ற இயலும்.

சித்த மருத்துவமானது, மனிதனுக்கு மருத்துவம் (Human medicine), விலங்கு மருத்துவம் (Vetenary medicine) மற்றும் விவசாய தாவர மருத்துவம் (உரங்கள், பூச்சி கொல்லிகள்) என்றுமுப்பெரும் பிரிவை உடையது. இன்றைக்கு இயற்கை விவசாயம் ஓரளவு மீட்டு எடுக்கப்பட்டு விட்டது. குமரிமாவட்டத்தில் இன்றைக்கும் வயதான மாட்டு வைத்தியர், கோழி வைத்தியர், குதிரை வைத்தியர் சிலர் உலா வருகிறார்கள். B.V.Sc படித்த தமிழ்நாட்டு டாக்டர்கள், ‘சித்த மாட்டு மருத்துவத்தை’ வெளிக் கொண்டு வர வேண்டாமா? இதற்கென தனிப் படிப்புகள் அரசால் ஏற்படுத்தப்பட வேண்டாமா? தமிழ்நாட்டு மாடுகளுக்கு இதுபோன்ற மூலிகை மருந்துகள் தானே உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் ?

மனித மருத்துவம் முப்பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது. மூலிகைகள், கனிம உலோகங்கள், உயிர்ப் பொருட்கள் (ஆமை, உடும்பு, முள்ளெலி, பாம்பு) இவற்றை தனியாகவோ அல்லது கூட்டாகவோ, கிடைப்பதைப் பொறுத்து (Availability) அந்தந்தப் பகுதிகளில் சித்த மருத்துவம் வளர்ந்தது. வர்மம், காயகற்பம் என்ற அதிக ஆயுள் போன்ற துறைகளும் சித்த மருத்துவத்தில் வளர்ந்து வந்தன. குமரிமாவட்டம் போன்ற மூலிகை செழிப்புள்ள இடங்களில் மூலிகை மருந்துகள் விசேஷம். குமரி மாவட்டம் மலையாள நாயர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் தமிழ் மருத்துவம், மலையாள மருத்துவமாகி, பின் சமஸ்கிருத மருத்துவமாகி இன்று இந்தியாவின் தேசிய மருத்துவமாகிய ஆயுர்வேத மருத்துவமாகி மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவேதான் மூலிகைகளை பயன்படுத்தும் ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளும், குமரிமாவட்ட சித்த மருத்துவ குறிப்புகளும் ஒன்றாக காட்சியளிக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு பிரதேசத்திலும் வட்டார மருத்துவம் தழைத்தோங்கி இருந்தது.

இலங்கைத்தமிழ் மன்னன் இராவணன், “அரக்கர் நூல்” என்ற சித்த மருத்துவ நூல் தொகுப்பை (Siddha Medicine Encyclopedia) தொகுத்திருக்கிறார். “பரராச சேகரம்”, “செகராச சேகரம்” போன்ற சித்த மருத்துவத் தொகுப்பு நூல்கள் எல்லாம் இலங்கையை ஆண்ட பிற தமிழ் மன்னர்களின் சிறந்த சித்த மருத்துவ பணியாக கருதப்படுகிறது. தற்போது இலங்கையில் அரசினர் சித்த மருத்துவ கல்லூரி (BSMS) ஒன்றும் உள்ளது.

தமிழ் தொண்டர்களாகிய, திருவள்ளுவரும், அகத்தியரும், திருமூலரும், வீரமாமுனிவரும் எழுதி வைத்துள்ள சித்த மருத்துவ நூல்களை எத்தனை தமிழ்ப் பண்பாளர்கள் படித்திருப்பார்கள்? தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னன், ஒரு சித்த மருத்துவமனையை நிறுவி, அதில் சித்த, ஆயுர்வேத வைத்தியர்களை பணிக்கமர்த்தி மக்களுக்கு வைத்தியம் செய்ததோடல்லாமல், அனைத்து மருந்துகளையும் எந்த நோய்க்கு எவ்வளவு தரலாம் போன்ற குறிப்புகளையும் எழுதி வைக்கச் செய்துள்ளார். உள் நோயாளர் பகுதி, குளிக்கும் வசதி, மூலிகைத் தோட்டம் இவற்றுடன் கூடிய ஹைடெக் சித்த மருத்துவமனைகள் எல்லாம் இன்று புகழ்பெற்ற கோவில்களாக ஆரியர்களால் உருமாற்றம் செய்யப்பட்டு, அங்கே சித்த மருத்துவருக்கு பதிலாக பூஜாரிகள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதை எவர் உணரப்போகிறார்?

குமரி மாவட்டம், முஞ்சிறை என்ற சிறிய மலைக்குன்றில், “திருவாங்கூர் சித்தவைத்தியர் சங்கம்” என்ற சங்கத்தை நிறுவி (siddha university), palm manuscript library ஒன்றையும் பாதுகாத்து வந்தனர் நம் முன்னோர். இறந்துபட்ட மாமிசத்தை கழுகுகள் கொத்தி எடுப்பதுபோல், பலரின் ஆக்கிரமிப்புகளுக்கு பிறகு தற்பொழுது, அந்த இடத்தில் ஒரு தனியார் சித்த மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மன்னர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, சிறந்த யுனானி வைத்திய நிபுணர்களை (அரேபிய மருத்துவம்) உடன் அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இச்சமயத்தில், சித்த மருத்துவமும் யுனானி மருத்துவமும் இணைகின்றன. மருந்துகள், சூத்திரங்கள் பரிமாறப்பட்டன. அப்துல்லா சாகிபு என்ற தமிழ் நாட்டைச் சார்ந்த யுனானி அறிஞர் தமிழ்நாட்டு சித்த மருத்துவத்தை உருதுமொழிக்கு மாற்றியது போல், யுனானியின் குறிப்புகளை தமிழ் மொழிக்கு மாற்றினார். இப்போது தமிழ் மருத்துவம் தனித்துவம் இழந்து மறுவீடு புகுந்துள்ளது. எங்கிருந்தோ வந்ததாக கருதப்படும் யுனானிக்கு பட்டப்படிப்பு கல்லூரிகள் (BUMS) இந்தியாவில் பல உள்ளன. இந்திய மருத்துவத் துறையின் கீழ் உள்ள இந்த BUMS, அரேபிய தேசங்களில் இல்லாதது வியப்பளிக்கிறது. இங்கே பல சந்தேகங்கள் எழுகின்றன. யுனானியின் மூலம் அரேபியா? அல்லது தமிழ் மருத்துவம் தான் உருது மொழியில் மாற்றம் செய்யப்பட்டதா?

யுனானி மற்றும் ஆயுர்வேதத்துக்கு மதம் மற்றும் மொழி என்ற முதுகெலும்பு ஆணித்தரமாக இருப்பதால் அவற்றை அசைக்க முடியவில்லை. மொழிப்பற்றற்ற தமிழ் மக்களின், மதம் அற்ற பின்புலத்தை உடைய திராவிட மருத்துவமாம் சித்த மருத்துவம் அழியத் தொடங்கி விட்டது. ஏனெனில் புத்தத் துறவிகள், சமணத் துறவிகள், யோக மார்க்கத்தை பின்பற்றிய சித்தர்கள்தான் இம்மருந்துவத்துக்கு தந்தையாக இருந்தனர். இவர்களின் அஹிம்சா போதனைகளுக்குள், சமஸ்கிருதம் என்ற இந்துமத ஆவி பிடித்துவிட்டதால், சித்த மருத்துவமும் ஆவியின் கட்டுப்பாட்டுக்குள் வந்து ஆவியின் வேதமாக அதாவது ஆயுர்வேதமாக மாறிவிட்டது.

ஆரியர்கள், ஆயுர்வேத மருத்துவத்தை, நான்கு வேதங்களுள் ஒன்று என்கிறார்கள். ஆனால், தமிழ் மேதாவிகள், மொழியின் கலப்பை புரிந்து கொண்டவர்கள், மதத்தின் கலப்பை புரிந்து கொண்டவர்கள், ஏனோ... ஆயுர்வேத மருத்துவத்தின் கலப்பை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். BSMS என்ற பட்டப்படிப்பு சித்த மருத்துவத்துக்குரியது என்றும் தமிழ்நாட்டில் 5 கல்லூரிகள் இதற்கு உள்ளதென்றும் எத்தனைத் தமிழர்களுக்கு தெரியும்? எத்தனை தமிழர்கள் உடல் உபாதைகளுக்கு சித்த மருத்துவரை நாடிச் சென்றிருக்கிறார்கள்? எத்தனை தமிழ்நாட்டு ஆராய்ச்சியாளர்கள், சித்த மருத்துவம், அதன் மொழிக்கலப்படம், சித்தர்களின் வாழ்க்கை, அவர்களின் காலம் போன்றவற்றை பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள்?

இந்தியாவில் எந்த ஒரு மூலிகையைப் பற்றி குறிப்பிட்டாலும் அது ஆயுர்வேத மூலிகை என்று மார்தட்டுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சித்த மருத்துவ மூலிகை என்று சொல்ல கூச்சப்படுகின்றனர். அன்றைய தமிழ் இலக்கியங்கள் முதல் இன்றைய தமிழ்த் துறைகள் வரை எவரும் சித்த மருத்துவத்தைப் பற்றி பேச விரும்பியதில்லை. மாந்திரீகம், போலியான தெய்வ வழிபாடு, சோதிடம், வாஸ்து போன்றவற்றில் வைத்திருக்கும் அபார நம்பிக்கையும், ஈடுபாடும் ஏன் சித்த மருத்துவத்துக்கு மக்கள் தரவில்லை?

50 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த சித்த மருத்துவ புத்தகங்கள் மீண்டும் பதிப்பாகாமல் முடங்கிவிட்டன. உள்ளூர் வைத்தியர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சித்த மருத்துவ குறிப்புகளை எவர் தொகுப்பார்? தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று சித்தமருத்துவ ஓலைச் சுவடிகளை சேகரித்து வெளிக் கொணரப்போகும் தமிழ் தாத்தா எங்கு உள்ளார்?

இயல், இசை, நாடகம் என்பதுடன் சித்த மருத்துவத்தை என்றுதான் இணைக்கப் போகிறார்களோ?

கேரளாவின், கல்கத்தாவின் Central லைப்ரரி தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் போன்ற இடங்களில், சவக்கிடங்கில் பாதுகாக்கப் பட்ட பிணம் போல் சித்த மருத்துவ ஓலைச் சுவடிகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. இவை என்று நமது தமிழ் மருத்துவ கருவூலத்தில் சேருமோ? ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் கனடா நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ள சித்த மருத்துவ பனைஓலைச் சுவடிகள் மீண்டும் இந்திய குடியுரிமையைப் பெறுமா?

ஆரியன் சென்ற இடமெல்லாம் ஆயுர்வேதம். அரேபியன் சென்ற இடமெல்லாம் யுனானி. வெள்ளையன் சென்ற இடமெல்லாம் அலோபதி. ஆனால் தமிழன் சென்ற இடமெல்லாம் வெறுங்கையன். சித்த மருத்துவத்தை கையோடு எடுத்துச் செல்ல தவறிவிட்டனர். ஜெர்மனியில் கண்டுபிடித்த ஹோமியோபதி மருத்துவத்துக்கு இந்தியா முழுதும் கல்லூரிகள் உள்ளன. ஆனால் தமிழன் கண்டுபிடித்த சித்த மருத்துவத்துக்கு தமிழக எல்லையை தாண்ட பாஸ்போர்ட் இல்லை. தமிழ்நாட்டுக்குள்ளேயே ஆயுள் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

சித்த மருத்துவ கல்லூரியை புதிதாக கர்நாடகாவிலோ அல்லது வடநாட்டிலோ, ஏன் பாண்டிச்சேரியில் கூட நம்மால் கட்ட முடியவில்லை. ஆனால் அரசாங்கமோ, ஹிந்தி மொழிக்கு தடைவிதித்த இத்தமிழ் நாட்டில், ஹிந்தியின் அப்பாவான சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக்கப்பட்ட ஆயுர்வேத கல்லூரியை குமரிமாவட்டம் நாகர்கோவிலில் ஆரம்பிக்க ஆணைபிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டுக் கல்லூரியில், சமஸ்கிருதம் வந்துவிட்டதால், இனி பள்ளியிலும் அது படமாக்கப்பட மாட்டாது என என்ன உத்தரவாதம்? இனி ஒரு விதி செய்வோம்!

சித்த மருத்துவம் வெறும் மருத்துவம் மட்டுமல்ல. தமிழரின் வாழ்வியல் முறை கட்டுப்பாடு. எப்போது காலையில் எழ வேண்டும்; எதனால் பல்துலக்க வேண்டும்; எதை சாப்பிட வேண்டும்; எதை சாப்பிடக் கூடாது; எதில் எப்படி எங்கு படுக்க வேண்டும்; எந்த நோய் எப்படி இருக்கும்; அதற்கு எந்த மருந்து தர வேண்டும். இப்படிப் பட்ட சித்த மருந்து தமிழரின் ஒட்டுமொத்த அறிவியல் உலகம். இந்த உலகத்தில் புது வெளிச்சம் ஏற்படுத்த வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நம் உடல் நோய்களுக்கு முடிந்தவரை சித்த மருத்துவம் மேற்கொள்ள வேண்டும். முடிந்தவரை தமிழ் உணவுகளை பயன்படுத்துவோம். வீட்டைச் சுற்றி சித்த மருத்துவ மூலிகைக் காடுகளை அமைப்போம்.

சித்த மருத்துவம் குறித்த ஆராய்ச்சி, தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும், அவரவர் துறையில் செய்ய இயலும். வெளிநாடு வாழ் தமிழர்கள், அங்கு கலை, இலக்கிய, திரைப்பட விழாக்கள் நடத்துவது போல, சித்த மருத்துவ விழிப்புணர்ச்சி மற்றும் கண்காட்சிகள் நடத்தலாம். முடிந்தால் ஒரு சித்த மருத்துவ மனை ஆரம்பிக்கலாம். ஒருவேளை நம் கரங்கள் வலுக்குமானால் அதுவே ஒரு சித்த மருத்துவ கல்லூரியாக மாறக்கூடும். நம் நாட்டில் உள்ள தமிழ் பற்றுமிக்க தொழிலதிபர்கள் ஏன் சிறிய சித்த மருத்துவமனைகளை நிறுவக் கூடாது? தமிழ்நாட்டில், ஹோட்டல் நடத்துபவர்கள் ஏன் மூலிகை உணவுகளை மக்களுக்கு தரக்கூடாது?

விவசாயம் செத்துவிட்ட இக்கால கட்டத்தில் மூலிகைப் பொருட்களின் தேவைகளை நாம் அதிகப்படுத்துவதன் மூலம், இந்தியாவின் முதுகெலும்பாகிய விவசாயிகளுக்கு நம்மால் இயன்ற வாழ்வு அளிக்க இயலும் என்பது உறுதி. விவாதம் ஆக்கப்பட வேண்டிய இந்த சித்த மருத்துவத்தை இங்கு விதையாகத் தூவுகிறேன். தமிழர்களாகிய நாம் இதை உரமிட்டு வளர்ப்போம்!


மேலதிக தகவல்களுக்கு www.siddhadreams.blogspot.com

No comments:

Post a Comment