சென்னைப் பல்கலைக் கழக முனைவர் பட்டத்துக்காகப்
புலவர் இர. வாசுதேவன் எழுதிய ஆய்வுரை இந்நூல்.
தொடக்கத்திலேயே ஓருண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். அதாவது தமிழ் மருத்துவம் எனக் கருதப்படும் சித்த மருத்துவம் பற்றிய இலக்கியங்கள் குறித்த ஆய்வு என்பதோடு மட்டுமமையாமல் சித்த மருத்துவத்தின் பல்வேறு கூறுகளை இந்நூல் விளக்குகிறது. பல வகைகளில் இதனை இருபத்து ஓராம் நூற்றாண்டில் எழுந்த சித்தமருத்துவ முதல் நூல் எனக் கருதலாம்.
தமிழில் “சித்தர்” என்னும் சொல் ஏறத்தாழ 15 நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்து வந்துள்ளது. சித்தர் என்ற சொல்லுக்கு இயற்கை இகந்த செயல்பாடு, அற்புதம், மனநிறைவு, திடமனம் எனப் பல பொருள் உண்டு. அதாவது மனிதன் புறத்தே உள்ள பொருள்களை மட்டுமல்லாமல் தன் அகத்தே உள்ள மனத்தையும் அடக்கிக் கட்டுப்படுத்தி, மனித சக்திக்கு அப்பாற் பட்ட செயல்களைச் செய்து முடிப்பவர். தமிழில் “அபிதான சிந்தாமணி” கூறுவது போல முதலில் நவசித்தர்கள் இருந்தார்கள். பின்பு பதினெட்டு சித்தர்கள் ஆனார்கள். காலப் போக்கில் நூற்றுக்கணக்கானோர் சேர்க்கப்பட்டனர். இராமலிங்கர், மகாகவி பாரதியாரும் சித்தர் எனக் கருதப் பெற்றனர்.
தமிழகத்தில் கதிரவனின் ஒளிக்கற்றைகள் புகமுடியாத மலைகளில், குகைகளில், கானகங்களில் சித்தர்கள் வாழ்ந்திருந்ததாக தவமிருந்ததாக நம்பப்படுகிறது. எனவே பொதுவாகச் “சித்தர்கணம்” என்னும் சொல்லாட்சி தமிழில் இடம்பெற்றது. வித்தகச் சித்தர் கணத்துக்கு வாய்த்த அளப்பரிய வலிமை பற்றித் தாயுமானவர் பல பாடல்களில் எடுத்துச் சொல்லியுள்ளார்.
சித்தர் எனப்படுவோர் இந்திய நாடு கண்ட சமணம், பௌத்தம், சைவம் என்னும் சமயங்களில் சிறப்பான இடம் பெற்றுள்ளனர். புத்தர் “சித்தர்” எனப்பட்டார். சமண சமயத்தில் துறவில் மிக உயர்ந்த நிலை அடைந்தவர்களைச் சித்தர், ஆரூகதர்கள், பரமேட்டிகள் என்றனர். சைவத்தில் சிவனைச் சித்தன் எனக் குறிப்பிடுவதும் உண்டு. எனவே “சித்தர் சிந்தனை” இந்தியர், தமிழர்களுக்குப் பொதுவானது எனலாம். இதற்கு நிகராக இஸ்லாமில் சூபி இயக்கமும் கிருத்துவத்தில் மெய்ஞானிகளும் இருந்ததாகக் கூறுவர்.
சித்தர்கள் நம் நாட்டில் குறிப்பாக, தமிழகத்தைப் பொறுத்தவரை மூவகையாகப் பிரித்து பார்க்கப்படுகின்றனர். முதலாவதாக, இறை நம்பிக்கையில் ஊறித் திளைத்து மனநிறைவு பெற்றவர்கள். இரண்டாவதாக சித்தத்தைச் சிவன் பால் செலுத்திய போதிலும் இயற்கையை எதிர்த்துப் போராடி இயற்கையை வசப்படுத்தி மனித சமூகத்தின் நல்வாழ்வுக்காக இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தியவர்கள். மூன்றாவது இயற்கையை எதிர்த்துப் போராடும் போது கடவுள் நம்பிக்கையில் ஈடுபடாது பொருள் முதல்வாதிகளாக இலங்கியவர்கள்.
இம்முப்பிரிவுகளிலும் மருத்துவர்கள் உண்டு. இந்தப் பாகுபாட்டினை மிக விரிவாக ஆராய்ந்து விளக்கமாக எடுத்துக் கூறுவது இந்நூல். மரபு வழிப்பட்ட இறுக்கமான வைணவமும், சைவமும் அதாவது விசிட்டாத்வைதமும் சைவச்சித்தாந்தமும் சித்தர்களை ஏற்றுக் கொண்டதில்லை. வைதிக சமயங்கள் இவர்களைப் புறத்தவர்களாக, மரபு வழுவியவர்களாக ஒதுக்கி வைத்து வந்துள்ளன. இருப்பினும், புத்தசமயம் வைதிக சமயங்களை ஊடுருவியதோடு அவை மக்களிடையே செல்வாக்குக்குப் பெறச் “சித்த சிந்தனை உணர்வு” காரணம் என்னும் உண்மையைப் பல கோணங்களிலிருந்தும், பல நிலைகளிலிருந்தும் ஆராய்ந்து ஆசிரியர் நிலை நாட்டுவது பாராட்டத்தக்கது.
உலகாயதம் எவ்வாறு சாதாரண மக்களுடைய நல்வாழ்வுக்குத் தேவையான வேளாண்மை அரசமைவு, மக்களாட்சி என்னும் ஜனநாயக மரபுகள் வளரத் துணை செய்ததோ அது போலவே சித்த மருத்துவமும் மக்களுடைய நல்வாழ்வுக்காக அரும்பணியாற்றி வந்துள்ளது. பல்லவர், சோழர் காலத்தில் இருந்த ஏராளமான கல்வெட்டுகள் இதனை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்கின்றன என்பதனைக் காட்டுகிறார்.
குறிப்பாக “அகத்தியர், பரிபூரணம்” என்னும் மருத்துவ நூல், சித்த மருத்துவம் மேலோர், கீழோர், செல்வர் - வறியவர் என்னும் சமூக வேற்றுமைகளை, குறிப்பாக நால்வருணப் பாகுபாட்டைப் புறம் தள்ளிப் பாமரமக்களுக்காகச் சித்த மருத்துவம் நடைமுறைப் படுத்தப்பட்டது என்பதையும் செல்வர் பணம் கொடுத்து மருத்துவம் செய்து கொள்ளும் வசதி படைத்தவர்கள், ஆனால் கீழ்த்தட்டு மக்கள் வறிய நிலையில் இருப்பதால் அவர்களுக்குச் சித்த மருத்துவம் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. இந்த நோக்கத்தின் அடிப்படையை உணர்த்தும் பொருட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்கந்தோறும் அரிய செய்திகளும், விவரங்களும் விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன.
மருத்துவத்தின் தேவை சித்த மருத்துவத்தின் சிறப்பு, உடல்நலம் பேண அடிப்படைத் தேவைகள், நோயற்ற வாழ்வு, நோய்வரின் நோய்நாடி, அதுதணிக்கும் வாய் நாடிச் செய்ய வேண்டிய மருத்துவம், உணவே மருத்துவம், மருந்தே உணவு என்னும் கோட்பாடு, தாவரங்களும் உயிரினங்களும் உலோகங்களும் அதாவது பஞ்ச பூதங்கள் எல்லாம் மனித நலன்களுக்காகப் பயன்படுமாற்றல் ஆகிய எல்லாவற்றையும் மிக அருமையாகத் திரட்டித் தந்துள்ளார் ஆசிரியர்.
சித்த மருத்துவம் எப்படித் தமிழ் நாட்டில் வளர்ந்து வந்துள்ளது என்பதையும் முரண்பாடுகள் - அறுசுவை உணவு, நட்பு, பகை என்பனவற்றையும் அதாவது பொருளை முதலாவதாகக் காணும் கோட்பாட்டில் உணவே மருந்து - மருந்தே உணவு என்னும் அடிப்படையில் பல செய்திகளை நூல் எடுத்துச் சொல்லுகிறது. பல்லவர் காலம் தொடங்கி விஜயநகர மன்னர் காலம்வரை அன்று நிலைத்திருந்த அரசுகள் சித்த மருத்துவத்தை ஊக்குவித்துப் பராமரித்து வந்ததைக் கல்வெட்டு சான்றுகளுடன் நிறுவுவதோடு தஞ்சை மராட்டிய வேந்தரான சரபோஜி வைத்திய நூல்கள் திரட்டுவதற்காக எடுத்து கொண்ட முயற்சிகளைச் சிறப்பாக எடுத்துச் சொல்லுகிறார். மரணமிலாப் பெருவாழ்வு திருமூலர் காலம் தொடங்கி இராமலிங்க அடிகளார் காலம் வரை பேசப்பட்டு வந்துள்ளது. சித்த மருத்துவத்தை எவ்வாறு நோக்க வேண்டும் என்பதனைத் தமிழிலுள்ள சித்த மருத்துவ நூல்கள் துணையுடன் ஆசிரியர் சுவைப்பட எடுத்துச் சொல்லியுள்ளார்.
ஐம்பூதங்களை மருந்தாக மாற்றுதல், நாடி வழி வாதம் பித்தம், ஐயம், நோய் தேர்வு செய்தல், வாயுக்கள் தாதுக்கள் இடையே உள்ள தாக்குறவு, நாடி நோய்க்குறிகளை காட்டும் முறைமை, மருத்துவத்தில் சுவை பெறும் நிலைமை, மருந்துத்தேர்வு, உறுப்புகளும் அவற்றுக்கான தனி மருந்துகளும், நிலத்தையொட்டிய பாத்திரங்கள், நோய் நீராடல், உண்கலம், நோய், ஆடை, அகமருந்து, புறமருந்து, அவை செய்யும் முறை என்பன பற்றியெல்லாம் ஆசிரியர் ஆய்ந்து தரும் உண்மைகள்-இன்று வாழும் மக்களுக்கும் தேவைப்படும் செய்திகள் ஆகும். எடுத்துக்காட்டாக இரத்தத்தை உண்டாக்கத் துவர்ப்பு, எலும்பை வளர்க்க உப்பு, தசையை வளர்க்க இனிப்பு, கொழுப்பை உண்டாக்கப் புளிப்பு, நரம்பை வலுவாக்கக் கசப்பு, சுரப்பிகளைச் சீராக்கக் காரம் தேவை என்பன போன்ற செய்திகளை விரிவாகக் கூறியுள்ளார். இத்தகைய பகுப்பாய்வு இன்றைய பல்வேறு பல் மருத்துவ முறைகளிலும் ஏற்கப்பட்டு வருகிறது.
நஞ்சையும் மருந்தாக்குவது சித்த மருத்துவம். மூலிகைகள், அவற்றின் சிறப்பு, மருத்துவப் பயன்கள், மருந்து செய்தல், புடம் போடுதலின் சிறப்பு, அதற்காகப் பயன்படுத்தப்படும் எரிபொருள்கள், எரிபொருள்களால் செய்யப்படும் மருந்துகள், மருந்து வகைகள், அவை பயன்படும் காலம் (வயது) என்பன பற்றியெல்லாம் தெளிவாக ஆசிரியர் எடுத்துக்கூறுகிறார். பல சித்த மருத்துவ நூல்கள் கூறும் செய்திகள் பல இந்த நூலில் சுருக்கமாக எடுத்துக் கூறப்படுகின்றன. இது பாராட்டப் படவேண்டியதாகும். நூலின் சிறப்பான பகுதி சித்தர்கள் மனித சமுதாய நலன் மேம்பட ஆற்றிய தொண்டு பணி பற்றியதாகும். சித்த மருத்துவத்தில் பரிணாம வளர்ச்சி - காலம் தோறும் படிப்படியாக அது வளர்ந்தடைந்த நிலைமையைத் திருமூலர் காலம் முதல் இன்றளவும் அவை பெற்ற மாற்றங்கள் உள்ளிட பல செய்திகளை விரிவாக எடுத்துக் கூறுகிறது. தமிழ் இலக்கியத்தில் சித்தர் நெறி பெறும் பங்கு - சித்துகளின் எண்ணிக்கை எண்ணிலடங்கா, அதாவது, இயற்கை கடந்த செயல் தன்மையாலும், இடத்தாலும் வேறுபடுவதால் கணக்கிட்டுச் சொல்ல முடியாது என்பதனை இலக்கியச் சான்றுகளுடன் நிறுவ முற்படுகிறார்.
மரணமில்லாப் பெருவாழ்வை வலியுறுத்தும் சித்த மருத்துவம் செத்தாரை எழுப்புதல் பற்றியும் கூறுகிறது. அதே போது வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் சித்தர்கள் சாதி, சமயம் கடந்தவர்கள் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தவர்கள். சித்தர்கள் வகுத்த நெறி வேதங்கள் ஆகா. மக்களுக்கான நல்வாழ்வு, இலக்கியம், ஆனால் பல இடங்களில் சங்கேதச் சொற்களைப் பயன்படுத்தும் இலக்கியம் என்பதனைத் தெளிவுபட எடுத்துக் கூறுகிறார். வரலாற்று அடிப்படையில் நோக்குவோமானால், சித்த மருத்துவம் அடித்தட்டு மக்களுடைய தொழிலாக, பணியாக இருந்து வந்துள்ள பான்மையை அறியலாம். அலோபதி முறை மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே பெரும் வாய்ப்புத் தருவதாக வளர்ந்து வந்துள்ளது. ஆனால் உலக மயமாக்கல் என்னும் புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் சித்த மருத்துவ நோக்கமும் தன்மையும் மாறிவிடுவதற்கான வாய்ப்புண்டு. இது தவிர்க்கப்பட வேண்டும்.
கடந்த நூற்றாண்டில் சாம்பசிவம் பிள்ளை என்னும் அறிஞர் தொகுத்த சித்த மருத்துவக் களஞ்சியம் முன்னோடி நூல், முனைவர் வாசுதேவன் படைத்துள்ள இவ்வாய்வு நூல் வரும் தலைமுறையினருக்கு அறிவுக் கருவூலமாகச் சித்த மருத்துவர்க்கும் மாணாக்கர்களுக்கும் வழிகாட்டியாக அமையும். வாசகர்களுக்கு இவ் உண்மை புலனாகும்.