சிறப்புக் கட்டுரை
உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில் மாபெரும் சாதனையாகக் கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில். மழைபெய்தால் நீர்க்கசிவு ஏற்படாதிருக்கப் பதிக்கப்பட்டிருக்கும் நுண்குழாய்கள், ஒரே கல்லினால் ஆன மிகப் பெரும் நந்தி எனப் பல்வேறு பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய மாமன்னன் ராஜராஜன் போற்றிக் கொண்டாடப்படுகிறான். கூடவே அவனது ஆட்சியும் ’தமிழகத்தின் பொற்கால ஆட்சி’ என்று புகழப்படுகிறது.
தஞ்சைப் பெரியகோவிலின் கலைநுட்பமும், பொறியியல் சாதனையும் மனிதகுல வரலாற்றில் மகத்தான படைப்புகள்தான். அதே போல எகிப்தின் பாரோக்கள் கட்டிய பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும்கூட மனித வரலாற்றின் பெரும் சாதனைகள்தான். எனினும் அவை பொற்காலங்களாகக் கொண்டாடப்படுவதில்லை. கலைத்திறனைப் போற்றுவது என்பது வேறு. அரசாட்சியைக் கொண்டாடுவதென்பது வேறு.
பெரியகோவிலை எழுப்பிய ராஜராஜனின் ஆட்சியில்தான் குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை செழித்திருந்ததாகவும், வேந்தன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலங்களை அளந்து முறைப்படுத்தி ’உலகளந்தான்’ எனும் பெயர் பெற்றதாகவும் கூறி ’தமிழனின் பொற்கால ஆட்சி’ என கலைஞர் முதல் தமிழினவாதிகள் வரை பலராலும் போற்றப்படுகிறது, ராஜராஜனின் ஆட்சி.