Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, July 30, 2012

நானும் ரவுடி தான்!


வாழ்ந்திருப்பதற்கான தேவையின் காரணங்களைத் தேடிக்கொண்டிருக்கும்
பொழுதினில் அவசர அவசரமாக விடிந்து விடுகின்றது.

எதிர்பார்ப்புகள் சருகாய் மிதிபடுகின்ற வெளியினில்
வெகுதூரம் சென்றுவிட்டிருக்கிறேன்.

அந்த மயக்கும் பழுப்பு நிற மேகத்தைத் தொட்டுவிட தினமும் முயல்கிறேன்
அதனுள்ளேயே சென்றுவிட எத்தனிக்கிறேன்

எங்கெங்கும் பழுப்பு நிறம்..
திசைகளும் தேவைகளுக்கான தேவைகளும் இல்லை

தேடல்கள் இல்லை, தெய்வமும் தேவையில்லை
அன்பும் இல்லை, அருவருப்பும் இங்கில்லை

Wednesday, July 11, 2012

மிஸ் பண்ணிட்ட மச்சி...!

மழைபெய்து ஓய்ந்திருந்த இரவில்
சன்னல்வழி இருட்டினூடே
என் வெற்றுடம்பின் மேல்
வந்து விழுகிறது அது

சில்லென்று ஏதோ பட்டதில்
மெய் சிலிர்த்து கையிலெடுத்துப் பார்க்கிறேன்
ஓர்  ஈசல்!

சற்றே கணத்தில் இரண்டு மூன்று நான்கென
வந்து விழுந்து பெருகுகின்றன அறைக்குள்

Tuesday, November 15, 2011

ஜன்னலோர இருக்கை




ஜன்னலோர இருக்கை 

“சின்ன பையன், அவன் உட்காரட்டும்”
ஜன்னல்சீட்டுக்கு அடம் பிடித்த தம்பிக்கு
அம்மாவின் பரிந்துரையில் சீட் கிடைத்தது

ஓசியில போறவனுக்கு எதுக்கு சீட்டு?
பள்ளிக்கு செல்லும் போது நடத்துனர் தயவில்
அரசு பேருந்திலும் அமர்ந்ததில்லை.

விமானத்தில், ரயில் பயணங்களில்
எப்போதும் ஒரு நடுத்தர வயதுடையவர்
ஜன்னலில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருப்பார்.

Saturday, September 10, 2011

குலாப் ஜாமூன் சாப்பிடும் போது…

குலாப் ஜாமூன் சாப்பிடும் போது “குலாப்”ன்னா ரோஜா, இந்த ஜாமூன்ங்கிறது இன்னாபா? என்ற கேள்வி தோன்றியது. ரூம் போட்டு யோசித்ததில் ஒன்றும் பிடிபடாமல் பக்கத்து ரூம் சர்தார்ஜியைக் கேட்டேன்.

“ஏ ஜாமூன் க்யா ஹோதா ஹே சார்?” அடுத்த நாள் வாங்கிக் கொண்டு வந்தார்.

ஓஹோ! இதுதான் ஜாமுனா? என்று நினைக்கும்போதே நாவல் பழத்தின் “ஓஹோ!” சொல்லவைக்கும் சுவையும், மருத்துவ குணங்களும் நினைவில் வந்தன.

Thursday, July 28, 2011

இன்னும் கொஞ்ச நாள்ல!

  இன்னும் கொஞ்ச நாள்ல!

இங்க நல்ல மழை, அங்க?”  விசாரிப்புகளுக்கு குறைவில்லை
“ஊருக்கு வரும்போது வாங்கிட்டு வாங்க” வகை அழைப்புகளினூடேயும்
எப்போதாவது கேட்கிறது நிஜ நட்பின் குரல்.

எப்போதும் அழுதுவடியும் மெகாதொடர்கள் மட்டும்
எப்போதாவது நினைவுபடுத்துகின்றன தாய்மொழியை.

ஒவ்வொருமுறை மினரல் வாட்டர் வாங்கும் போதும்
கொல்லைக்கிணற்றில் அடித்த முங்கு நீச்சல்
ஞாபகம் வந்து தொலைக்கிறது.

தோளில் கைபோட்டுத் திரிந்த
தோழனொருவன் தொலைபேசுகிறான்
“சொல்லுங்க! எப்படி இருக்கிங்க!”

சொன்ன ஹாய்க்கு பதிலாக
கல்லூரித் தோழி சேட்டுகிறாள்!
“பிட் பிஸி, கேட்ச் யூ லேடர்”

“ஒரு ஃபோன் பண்ணாலாம்ல”
பால்ய நட்பை அவ்வப்போது
புதுப்பிக்கும் தோழனொருவனிடம்
கோபித்தேன். பதில் வந்தது
“சாரிடா, புது கம்பெனிக்கு மாறிட்டேன், சன்டே பேசறேன்”

பழுதுபார்க்க ஆளின்றி
வெட் கிரைண்டரை “டிஸ்போஸ்”
செய்தபோது வந்த விசும்பலை அடக்கிக் கொண்டு
மனைவியிடம் கோபமாய்க் கேட்கிறேன்
“இப்ப எதுக்கு உம்முன்னு உட்கார்ந்திருக்க?”

“அப்பா “ங” எப்படிப்பா எழுதுறது?”
கேட்ட மகளிடம் முத்தத்தை பதிலாகக் கொடுத்துவிட்டு
கிளம்பும் போது சொல்கிறாள்
“ஆஃபீஸ் ஸே ஜல்தி ஆவோ”

முகத்தில் தெரிக்கும் “குட்மார்னிங்”களை விழுங்கிவிட்டு
குளிரூட்டப்பட்ட அறைக்குள் என் அலுவலை ஆரம்பிக்கிறேன்.
அறைக்கு வெளியே வெய்யிலில் காய்கிறது நட்பின் ஈரம்.

“எப்பங்க ஊருக்கு போகப் போறோம்?”
வீடு திரும்பியதும் கேட்கும் மனைவியிடம் சொல்கிறேன்
கழுத்து “டை” யை தளர்த்திக் கொண்டே
“இன்னும் கொஞ்ச நாள்ல!”





இந்த கவிதை (?)  சொந்த மண்ணிடமும் மக்களிடமும் அந்நியப்பட்டு வெளியூர்களில்/வெளிநாடுகளில் பிழைப்புக்காக வாழ்ந்து மண்வாசனையை மனதில் சுமந்திருக்கும் மக்களுக்காக!


புகைப்படங்கள்: நன்றி! திரு.சுரேஷ் பாபு