Thursday, July 28, 2011

இன்னும் கொஞ்ச நாள்ல!

  இன்னும் கொஞ்ச நாள்ல!

இங்க நல்ல மழை, அங்க?”  விசாரிப்புகளுக்கு குறைவில்லை
“ஊருக்கு வரும்போது வாங்கிட்டு வாங்க” வகை அழைப்புகளினூடேயும்
எப்போதாவது கேட்கிறது நிஜ நட்பின் குரல்.

எப்போதும் அழுதுவடியும் மெகாதொடர்கள் மட்டும்
எப்போதாவது நினைவுபடுத்துகின்றன தாய்மொழியை.

ஒவ்வொருமுறை மினரல் வாட்டர் வாங்கும் போதும்
கொல்லைக்கிணற்றில் அடித்த முங்கு நீச்சல்
ஞாபகம் வந்து தொலைக்கிறது.

தோளில் கைபோட்டுத் திரிந்த
தோழனொருவன் தொலைபேசுகிறான்
“சொல்லுங்க! எப்படி இருக்கிங்க!”

சொன்ன ஹாய்க்கு பதிலாக
கல்லூரித் தோழி சேட்டுகிறாள்!
“பிட் பிஸி, கேட்ச் யூ லேடர்”

“ஒரு ஃபோன் பண்ணாலாம்ல”
பால்ய நட்பை அவ்வப்போது
புதுப்பிக்கும் தோழனொருவனிடம்
கோபித்தேன். பதில் வந்தது
“சாரிடா, புது கம்பெனிக்கு மாறிட்டேன், சன்டே பேசறேன்”

பழுதுபார்க்க ஆளின்றி
வெட் கிரைண்டரை “டிஸ்போஸ்”
செய்தபோது வந்த விசும்பலை அடக்கிக் கொண்டு
மனைவியிடம் கோபமாய்க் கேட்கிறேன்
“இப்ப எதுக்கு உம்முன்னு உட்கார்ந்திருக்க?”

“அப்பா “ங” எப்படிப்பா எழுதுறது?”
கேட்ட மகளிடம் முத்தத்தை பதிலாகக் கொடுத்துவிட்டு
கிளம்பும் போது சொல்கிறாள்
“ஆஃபீஸ் ஸே ஜல்தி ஆவோ”

முகத்தில் தெரிக்கும் “குட்மார்னிங்”களை விழுங்கிவிட்டு
குளிரூட்டப்பட்ட அறைக்குள் என் அலுவலை ஆரம்பிக்கிறேன்.
அறைக்கு வெளியே வெய்யிலில் காய்கிறது நட்பின் ஈரம்.

“எப்பங்க ஊருக்கு போகப் போறோம்?”
வீடு திரும்பியதும் கேட்கும் மனைவியிடம் சொல்கிறேன்
கழுத்து “டை” யை தளர்த்திக் கொண்டே
“இன்னும் கொஞ்ச நாள்ல!”





இந்த கவிதை (?)  சொந்த மண்ணிடமும் மக்களிடமும் அந்நியப்பட்டு வெளியூர்களில்/வெளிநாடுகளில் பிழைப்புக்காக வாழ்ந்து மண்வாசனையை மனதில் சுமந்திருக்கும் மக்களுக்காக!


புகைப்படங்கள்: நன்றி! திரு.சுரேஷ் பாபு 













Sunday, July 10, 2011

மலாக்கா செட்டிகள் மொழிச் சிதைவின் அடையாளம் – சை.பீர்முகம்மது


இன்று வரலாற்று நகரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மலாக்கா 14ஆம் நூற்றாண்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாகத் திகழ்ந்துள்ளது. ஐரோப்பிய – ஆசிய நாட்டு வாணிபர்கள் தங்களின் கப்பல் பயணத்தில் மலாக்கா துறைமுகத்தைக் கடந்தே போக வேண்டிய ஒரு காலகட்டத்தில் தமிழர்களும் இங்கே வாணிகம் செய்ய வந்துள்ளார்கள்.
கலிங்கப்பட்டணத்திலிருந்தும் ஏனைய தமிழகத் துறைமுகங்களிலிருந்தும் பாய்மரக்கப்பல்களில் வாணிபம் செய்ய வந்த இவர்கள் ‘மலாக்கா செட்டி’ (Malacca Chetti) என்றே அழைக்கப்பட்டார்கள். ‘செட்டி’ என்ற இந்த வார்த்தை வியாபாரிகள் என்னும் பொருள் கொண்டு மலாய் மொழியில் வழங்கப்பட்டது. நாட்டுக் கோட்டைச் செட்டியார்களுக்கும் இந்த மலாக்கா செட்டிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
14ஆம் நூற்றாண்டில் சுமத்திராத் தீவின் ஒரு நகரமான பலம்பாங்(Palembang)கிலிருந்து வந்த இந்து இளவரசனான பரமேஸ்வரா (Parameswara) முதலில் தமாஸ்சேக் (Tamasek) என்று அப்போது பெயர்பெற்றிருந்த சிங்கப்பூருக்கு வந்து பின் மலாக்கா மாநிலத்தைக் கைப்பற்றினான். இக்காலகட்டத்தில் தமிழர்கள் இந்தச் சுல்தானின் அரண்மனையில் பிரதம அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத் தளபதிகளாக இருந்துள்ளார்கள்.
சுல்தான் பரமேஸ்வராவின் ஆட்சியின்போதுதான் இந்த மாநிலத்துக்கு மலாக்கா என்னும் பெயரை அவன் அதிகாரபூர்வமாகப் பிரகடனப்படுத்தினான். மலாய் மீன்பிடிக் கிராமமாக இருந்த இந்தக் கடற்கரையை வாணிபத் துறைமுகமாக்கியது அப்போது அங்கிருந்த தமிழர்கள்தாம். அவர்கள் மலாக்கா மாநிலத்தில் இருந்தவர்களைவிடக் கல்வியிலும் வியாபாரத்திலும் சிறப்புற்றிருந்தார்கள். எனவேதான் அவர்களைப் பரமேஸ்வரா தனது அரண்மனையில் முக்கியப் பதவிகளில் அமர்த்தினான்.
1414இல் இந்தோனேசியாவின் ஆச்சே (Acceg) நகரத்துக்குச் சென்ற பரமேஸ்வரா அங்கே பாசாய் (Pasai) பகுதி இளவரசியை மணந்ததன் மூலம் முஸ்லிமாக மாறித் தனது பெயரைச் சுல்தான் ஸ்கந்தர் ஸா (Sultan Skandar Shah) என மாற்றிக்கொண்டான். அப்போதைய மலாயாத் தீபகற்பத்தில் இவனே முதல் முஸ்லிம் சுல்தான்.
பரமேஸ்வரா, சுல்தான் ஸ்கந்தர் ஸா என முஸ்லிமாக மாறினாலும் அரண்மனையிலும் வாணிபத்திலும் வெற்றிகரமாக இருந்த தமிழர்கள் யாரும் மதம் மாறாமல் இந்துக்களாகவே இருந்தார்கள். தங்களுக்கென்று சிறிய கோயில் ஒன்றையும் கஜபதி அம்மான் என்னும் பெயரில் இவர்கள் ஏற்படுத்திக்கொண்டார்கள்.
வர்த்தக நிமித்தம் வந்த இவர்கள் திரும்பவும் தமிழகம் திரும்பாமல் இங்கேயே தங்க வேண்டிய சூழல் உருவாகியது. தமிழகத்திலிருந்து பல்வேறு உணவுப் பொருட்களைப் பருவக்காற்றை ஒட்டிவந்த கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்து வியாபாரம் செய்துள்ளார்கள்.
வர்த்தகர்களாக வந்த இவர்களில் வெகு சிலரைத் தவிர மற்றவர்கள் பெண்களை அழைத்துவரவில்லை. இதன் காரணமாக இங்கே மலாய்ப் பெண்களை மணமுடித்துக்கொண்டார்கள். அப்போது சீனாவிலிருந்தும் மலாக்கா துறைமுகத்துக்குப் பெருமளவில் கப்பல்கள் வரத் தொடங்கின. அப்படி வியாபாரம் நிமித்தம் வந்த சீனர்களோடு உறவு நீடித்ததால் சீனப் பெண்களையும் இந்தத் தமிழ் வாணிபர்கள் மணமுடித்தார்கள்.
அரண்மனையில் அரசியல் செல்வாக்கும் பொருளாதாரத்தில் மேன்மையும் கொண்டிருந்த இவர்களை மணந்துகொள்ள மலாய், சீன இனப் பெண்கள் முன்வந்தது ஆச்சரியமல்ல.
போர்த்துக்கீசியர்கள் (1511 – 1641) மலாக்காவைக் கைப்பற்றியபோதும் மலாக்கா செட்டிகளின் செல்வாக்குக் குறையவில்லை. போர்த்துக்கீசியர்களுக்கு அணுக்கமாக இருந்துவந்துள்ளார்கள். ஏறக்குறைய 130 ஆண்டுகள் மலாக்கா நகரம் போர்த்துக்கீசியர்களின் ஆட்சியில் இருந்தபோது இங்கே மத மாற்றங்கள் நிகழ்ந்தன. வியாபாரத்தைவிட மதமாற்றத்தில்தான் போர்த்துக்கீசியர்கள் அதிகக் கவனமுடையவர்களாக இருந்துள்ளார்கள் என்பது வரலாற்று உண்மை. இந்தியாவில் அவர்கள் வந்த இடங்களிலும் இதுதான் நடந்துள்ளது.
இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பெரும் பகுதித் தமிழர்கள் தங்களின் இந்து மதத்திலிருந்து மாறவே இல்லை. பிற இனப் பெண்களை மணந்தபோதும் அவர்கள் கோயில் வழிபாடு போன்றவற்றை விட்டுக்கொடுக்காமல் இருந்துள்ளார்கள்.
வெகு சிலர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். மலாய், சீன இனப் பெண்களைப் போர்த்துக்கீசியர்கள் மணந்துகொண்டார்கள். இந்தியாவில் உள்ள ஆங்கிலோ – இந்திய இனத்தைப் போல இங்கே ‘போர்த்துக்கீசியர்’ என்ற தனி இனம் ஒன்று உருவாகியது. இன்றும் போர்த்துக்கீசியர்கள் என்ற அடையாளத்துடன் இவர்கள் வாழ்கிறார்கள். போர்த்துக்கீசியர் காலனி என்றே அரசாங்கம் அதிகாரபூர்வமாக இவர்கள் வாழும் இடத்தை அறிவித்துள்ளது. இவர்களுக்கு அரசியல் சட்டப்படி ‘பூமி புத்ரா’ (மண்ணின் மைந்தர்கள்) என்னும் அந்தஸ்தும் தரப்பட்டுள்ளது.
மலேசியாவின் அரசியல் அமைப்புச் சட்டப்படி 1957இல் நாடு சுதந்திரமடைந்தபோது மலாய்க்காரர்களுக்கு அரசியல் சாசனத்தில் தனிச்சலுகைகள் வழங்கப்பட்டன. கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, அரசாங்கக் குத்தகைகள் அனைத்திலும் இந்தச் சிறப்புச் சலுகைகள் ஏற்படுத்தப்பட்டன. பின்தங்கிய சமூகம் என்று அப்போது இதற்குக் காரணம் கூறப்பட்டது.
இந்தச் சிறப்புச் சலுகை பெறும் இனமாகப் போர்த்துக்கீசியச் சமூகமும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
இதில் பெரிய சோகம் என்னவென்றால் 1511இல் வந்து இங்கே மதமாற்றங்கள் செய்தபோதும் இங்குள்ள பெண்களை மணந்தபோதும்தான் இப்போதுள்ள போர்த்துக்கீசிய சமூகம் உருவானது. ஆனால் ‘பரமேஸ்வரா’ என்ற இந்து மன்னனாகவும் பிறகு மலாயாவின் முதல் முஸ்லிம் சுல்தானாகவும் அதிகாரபூர்வமாக மலாய் வரலாற்றில் கூறப்பட்டவனின் அரசாங்கத்தில் 14ஆம் நூற்றாண்டிலேயே முதலமைச்சராகவும் நிதியமைச்சராகவும் இருந்த ‘மலாக்கா செட்டிகளுக்கு’ பூமி புத்திரா அந்தஸ்து வழங்கப்படாதது ஏன்? இதை இங்கே உள்ள இந்திய அரசியல் கட்சிகளும் பேசவில்லை. மலாக்கா செட்டிகளும் இதைப் பற்றிப் பேசவில்லை. அல்லது பேசச் சரியான தலைமைத்துவம் அவர்களிடம் இல்லை.
போர்த்துக்கீசியர்கள் 1511இல் மலாக்காவைக் கைப்பற்றியபோது அவர்கள் ஒரு புதிய வரைபடத்தை உருவாக்கியுள்ளார்கள். அதில் கடற்கரையோரம் அமைந்த ஒரு கிராமத்தை ‘கம்போவ் கிலீவ்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். கலிங்கப்பட்டணத்திலிருந்து வந்த தமிழர்களை ‘கிலீவ்’ என்றே மலாய்க்காரர்கள் அழைத்தார்கள். அக்காலத்தில் கௌரவமான சொல்லாக இருந்த இந்த ‘கிலீவ்’ இன்று தமிழர்களை இழிவுபடுத்தும் சொல்லாக மாறிவிட்டது.
போர்த்துக்கீசியர்களோடு மலாக்கா செட்டிச் சமூகம் புரிந்துணர்வுடன் செயல்பட்டுள்ளது. போர்த்துக்கீசியக் கடற்படைத் தலைமைத் தளபதி அல்பான்சோ டி அல்புகர்க் எழுதியுள்ள குறிப்பில் மலாக்காவை அங்குள்ள மக்களிடம் இணக்கமாக அரசாட்சி நடத்த மலாக்கா செட்டி சமூகம் கணிசமாக உதவியதால் உயர்பதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகக் குறித்துள்ளார். இவ்வாறு கைகோத்துச் செயல்பட்டதால் மலாக்கா செட்டிச் சமூகம் தங்குதடையின்றி வாணிபம் செய்ய முடிந்துள்ளது.
1641இல் டச்சுப் படை மலாக்காவைப் போர்த்துக்கீசியரிடமிருந்து கைப்பற்றியது. 1824 வரை டச்சு அரசாங்கத்தில் ‘மலாக்கா செட்டி’ சமூகம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. டச்சுக்காரர்கள் வாணிபத்தைத் தங்கள் வசம் எடுத்துக்கொண்டார்கள். அதுவரை வாணிபத்தில் முதலிடத்தில் இருந்த இவர்களின் வாழ்க்கை முறை படுமோசமாகி வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தை நாட வேண்டிய சூழலிலிருந்து தொடங்கி இவர்களின் வீழ்ச்சி ஆரம்பித்தது.
‘கம்போவ் கிலீவ்’ என்ற வியாபார இடத்தை டச்சுக்காரர்கள் மலாக்கா செட்டிகளிடமிருந்து பறித்து அதற்கு டச்சுக் கிராமமென்று மறுபெயர் சூட்டினார்கள்.
மலாக்கா செட்டிகள் இந்து மதத்தில் பிடிவாதமாக இருந்த காரணத்தால் டச்சுக் கவர்னர் போர்ட் (ஙிஷீக்ஷீt) 15,879 சதுர அடி கொண்ட நிலத்தைக் கோயில் கட்டுவதற்கு வழங்கியுள்ளார். 1781இல் டச்சு அரசாங்கக் கெசட்டில் இது நிரந்தரப் பட்டாவுடன் கூடிய நிலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான குறிப்பு உள்ளது.
‘ஸ்ரீபொய்யாத விநாயகர் மூர்த்தி’ என்னும் பெயரில் இக்கோயில் கட்டப்பட்டது. எழுத்துபூர்வமான மலாயா வரலாற்றில் இதுவே இப்பிரதேசத்தில் கட்டப்பட்ட முதல் இந்துக் கோயில் – இன்றும் வரலாற்றுச் சின்னமாக உள்ளது. மலாக்கா செட்டிகளின் ஆதி வரலாறு இது.
ஐந்திலிருந்து ஏழு தலைமுறைகளுக்குப் பின்னர் அவர்களின் இப்போதைய நிலை என்ன?
1962ஆம் ஆண்டிலும் 1999ஆம் ஆண்டிலும் இரண்டு முறை அவர்களின் இருப்பிடம் சென்று சில ஆய்வுகள் செய்துள்ளேன். இப்போது இந்தக் கட்டுரைக்காகவும் அங்கே சென்று வந்தேன்.
சீன – மலாய் இனத்தவரோடு கலப்பு மணம் செய்த காரணத்தால் தங்களின் தாய்மொழியான தமிழை அவர்கள் முற்றாக இழந்துவிட்டார்கள். பல்வேறுபட்ட பண்பாட்டு மாற்றங்களுக்குப் பிறகும் அவர்கள் இன்றும் தங்களை இந்து மதத்தவர் எனக் கூறிக்கொள்வதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். தொழில் நிமித்தம் தலைநகர் கோலாலம்பூர், சிங்கப்பூர், பினாங்கு என்று போய்விட்டாலும் இன்றும் சித்திரை மாதம் ஸ்ரீமுத்து மாரியம்மன் திருவிழாவில் கலந்துகொள்வதைக் கடமையாகக் கொண்டுள்ளார்கள்.
மலாக்கா கஜபெராவ் என்னும் இடத்தில் இன்றும் 100 குடும்பத்தினர் ஒரே இடத்தில் வசிக்கிறார்கள். தியாகராஜன் என்பவர் இவர்களுக்குத் தலைவராக உள்ளார் – ‘கஜபெராவ்’ என்று அதிகாரபூர்வ நகராக உள்ள இந்த இடம் முற்காலத்தில் ‘காஞ்சிபுரம்’ என்றே விளங்கியுள்ளது.
தலைவர் தியாகராஜனின் மனைவி சீன வம்சா வழியில் வந்த மலாக்கா செட்டியாவார். வீட்டில் சேலை கட்டுகிறார். பூஜை அறையில் அனைத்து இந்துக் கடவுள்களும் இருக்கிறார்கள். அந்த அறையை எனக்குக் காட்டினார்கள். பெருமிதமும் மகிழ்ச்சியும் பொங்க அவர் தேவாரத்தை ராகத்துடன் பாடினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தேவாரம் பாடத் தெரிந்த இவருக்கு ஏன் தமிழ் தெரியவில்லை. எழுதப்பட்ட ஒரு தாள் அவர் கையில் இருந்தது. எட்டிப் பார்த்தபோதுதான் உண்மை தெரிந்தது. ஆங்கில எழுத்துருவில் எழுதப்பட்டிருந்த தேவாரத்தைத்தான் அவர் பாடியுள்ளார்.
அவர்களுக்கு ஒரே மகள். திருமணம் முடிந்துவிட்டது. திருமண ஆல்பத்தைக் காட்டினார்கள். இந்து ஆகமங்கள் சிறிதும் வழுவாத கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. படத்தில் அனைவரும் வேட்டி, சேலை உடுத்திக் கூட்டமாக இருக்கிறார்கள். மாப்பிள்ளை தாலி கட்டுகிறார். அவர் முகம் அசல் தமிழ் முகமாக இருந்தது.
இவர் ‘மலாக்கா செட்டி’ சமூகத்தவரா என்று தலைவர் தியாகராஜனிடம் கேட்டேன்.
“இல்லை அசல் தமிழர்” என்றார்.
“எப்படி?”
“நாங்கள் எங்கள் மொழியை ஏழு தலைமுறைகளாக இழந்துவிட்டோம். இந்து மதம் மட்டுமே எங்களை அடையாளப்படுத்த எங்கள் மூதாதையர்கள் விட்டுச் சென்ற பெரிய சொத்து. அதை விடாமல் காலங்காலமாகக் காத்துவருகிறோம். எங்களை அடையாளப்படுத்த ஐந்து பெரிய கோயில்களைக் கட்டியுள்ளோம். ஐந்து சிறிய ஆலயங்களும் உள்ளன. பண்பாட்டு மாற்றத்தால் நாங்கள் தமிழ்மொழியை இழந்துவிட்டோம். இனியும் அப்படி இருக்க முடியாது. அதனால் தமிழ் படித்த இளைஞர்களுக்கே எங்கள் பெண்களைத் திருமணம் செய்துவைக்கிறோம். எங்கள் பேரப்பிள்ளைகளாவது தமிழ் தெரிந்தவர்களாக மாறிவிட இதை ஒரு வாய்ப்பாகக் கருதுகிறோம். மிக உறுதியாகத் தியாகராஜன் பேசினார்.
மொழியை இழந்துவிட்ட சோகம் அவரின் குரலில் தெரிந்தது. அவர் மனைவி சீனத்தை இழந்துவிட்டாலும் தன் கணவரின் தாய்மொழிதான் தனது மொழி என்பதில் உறுதியாக இருந்தார். மொழி இழப்பு என்பது எவ்வளவு சோகமானது என்பது நம்மில் பலருக்கு விளங்குவதில்லை. தனது தாய்மொழியை இழந்த இந்த மலாக்கா செட்டிகளை அவர்கள் ஒருமுறை வந்து பார்த்தால் அதன் முக்கியத்துவம் புரியும்.
தியாகராஜன் தன் வீட்டின் எதிர்ப்புறமிருந்த ஒரு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். தமிழ் தெரிந்த இளைஞரை மணந்து மூன்று பிள்ளைகளுடன் குடும்பமாக அமர்ந்து ஒரு ஞாயிற்றுக்கிழமையில் உணவு சாப்பிட்டுக் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் தமிழ் பேசுகிறார்கள். வீட்டில் இந்துக் கடவுள்களும் சீனக் கடவுள்களும் பக்கம் பக்கமாக இருந்தார்கள். அந்தப் படங்களுக்கு வைக்கப்பட்ட வாழைப்பழங்களில் சீன ஊதுவத்திகள் புகைந்துகொண்டிருந்தன – பண்பாட்டு மாற்றம் ஒன்று அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தது. இதில் திடுக்கிடும் மிகப் பெரிய ஒரு செய்தியைத் தலைவர் தியாகராஜன் என்னிடம் கூறியபோது என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
“நாங்கள் முதலியார் சாதியைச் சேர்ந்தவர்கள். எங்கள் மகளை ஒரு முதலியாருக்குத்தான் திருமணம் செய்துகொடுத்துள்ளேன். எந்தக் காரணம் கொண்டும் சாதியை விட்டுக்கொடுக்கக் கூடாது” என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். இப்படி அவர் கூறியபோது சாதி பற்றிய பெருமிதம் அவர் முகத்தில் தாண்டவமாடியது.
“உங்கள் மனைவி சீனச் சமூகத்தவர்போல் இருக்கிறாரே. அவர் என்ன சாதி?”
அவர் அந்தக் கேள்வியை எதிர்பார்த்தவர்போலவே என்னைப் பார்த்துச் சிரித்தார்.
“என் மனைவியின் அப்பா முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். அதனால்தான் என் அப்பா இந்தக் கலியாணத்தை நடத்தினார்.”
அவருக்குத் தமிழ் தெரியவில்லை. மலாய் மொழியிலும் ஆங்கிலத்திலும் என்னிடம் உரையாடினார். ஆனால் சாதி பற்றிச் சொல்லும்போது ‘முதலியார்’ என்று அழுத்தமாகத் தமிழில் கூறினார்.

1824இல் ஆங்கிலேயர்கள் மலாக்காவைக் கைப்பற்றினார்கள். காலனித்துவ ஆட்சியில் அரசாங்கத்தின் சாதாரண வேலைகளில் இவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. 1941 வரையில் ஜப்பானியர் படையெடுப்புக்கு முன்புவரை இவர்களின் வாழ்க்கை சிறிது மாறியது.
1957இல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இவர்கள் இந்திய அரசியல் கட்சிகளாலும் இந்து சங்க அமைப்புகளாலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களே கோயில்கள் கட்டிக்கொண்டு தீபாவளி, பொங்கல், மாரியம்மன் திருவிழா என வாழ்ந்துவருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் என்று தங்கள் பிள்ளைகளுக்குக் கோயில்களில் வகுப்பு நடத்துகிறார்கள். தங்கள் மூதாதையர்கள் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் விட்டுச்சென்ற இந்து மதப் பண்பாட்டை விடாமல் காப்பதில் அவர்கள் யாருடனும் சமரசம் செய்துகொள்ளத் தயாராய் இல்லை. இப்போது தங்கள் தாய்மொழியை மீட்டெடுக்கும் ஆவலோடு தங்கள் பிள்ளைகளைத் தமிழ் தெரிந்த முதலியார்களுக்கே திருமணம் செய்துவைக்கப் பெரும்பாடுபடுகிறார்கள். உணவு வகையில் தமிழ் வகை உணவுகளையே கடைப்பிடிக்கிறார்கள்.
அரசாங்கம் ‘மலாக்கா செட்டி’ என்ற இவர்கள் வாழும் பகுதியைச் சுற்றுலாப் பகுதியாக்கியுள்ளது. இவர்கள் வாழும் பகுதியின் நுழைவாயில்கூட இந்து மதக் கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பற்றி ஒரு குறிப்பையும் இங்கே பளிங்குக்கல்லில் வைத்துள்ளார்கள். இவர்களின் அடையாளங்களைக் காணச் சிறிய மியூசியமும் உள்ளது.
மிக மென்மையானதாகவும் அன்பின் அடையாளமாகவும் இந்தச் சமூகம் உள்ளது. இவர்கள் அமைதியானவர்கள். இந்த அமைதிதான் இவர்களுக்கு எதிரியாகவும் இருக்கிறது.
மலேசிய சுற்றுலாத் துறை தங்களைக் காட்சிப் பொருளாக ஆக்கிய அளவு தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இவர்களின் கவலையாக இருக்கிறது. ஒருவேளை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இந்த மலாக்கா செட்டி சமூகம் இதேபோல் இருந்தால்தான் அத்துறைக்கு இலாபமாக இருக்கக்கூடும்.
நன்றி: காலச்சுவடு

கல்யாண ஒப்பாரியும் மரணக் கோலாகலமும்-ஜெயந்தி சங்கர்

சீனத்தில் 1957இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட 55-57 சிறுபான்மையினங்களில் டுஜியாவும் ஒன்று. சுமார் 12 நூற்றாண்டுகள் பழமையானது டுஜியா இனம். முற்கால பா இனமக்கள் சோங்ச்சிங்கில் குடியமர்ந்த பிறகு இவ்வினத்தில் கலப்புகள் ஏற்பட்டு, காலப்போக்கில் இன்றைய டுஜியா உருவாகியிருக்கிறது. யாங்ட்ஸே ஆற்றுப் பகுதியில் இதுவே ஆகப் பெரிய சிறுபான்மை இனம். சரியாகச் சொல்வதென்றால், யாங்ட்ஸே ஆற்றின் இரண்டாம் கிளையான ச்சிங்ஜியான் ஆற்றுக்கருகில் கடல் மட்டத்திலிருந்து 400-1500 மீட்டர் உயரத்தில் 5.71 மில்லியன் டுஜியர்கள் வாழ்கிறார்கள். மத்திய சீனத்தில் இருப்பதே ஹுபேய் மாநிலம். அதன் மேற்குப் பகுதியில் ஜிங்ஜியாங் பள்ளத்தாக்கில் இருக்கும் சாங்யாங் என்னும் இடத்தில் அதிகமாக வாழும் டுஜியா இனமக்கள் பெண் எடுக்கும்போதோ கொடுக்கும்போதோ ஒரே குலப் பெயர் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள். ஒரே வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாதென்பதில் குறியாக இருப்பார்கள். அப்படி நடந்தால் அது கௌரவக் குறைச்சல் என்றே இன்றைக்கும் நினைக்கிறார்கள். கன்ஃப்யூஷியக் கோட்பாடுகள் இல்லாத காரணத்திற்காகவே பெரும்பான்மை ஹான் சீனர்களுடையதிலிருந்து இவர்களுடைய கலாச்சாரம் வேறுபட்டதென்று கருதுகிறார்கள்.




டுஜியா இனத்தில் மணப்பெண் தனது திருமண நாளை அழுதழுது தான் வரவேற்பாள். மணநாளுக்கு இரண்டு வாரங்கள் முன்னாலேயே அழ ஆரம்பித்துவிடுகிறாள். சிலர் ஒரு மாதம் முன்பேகூட ஆரம்பிப்பார்கள். குறைந்தபட்சம் 3-5 நாட்களாவது அழுவதே வழக்கம். அவள் அழுவதிலிருந்துதான் அவளது அறிவுத்திறனையும் புத்தி சாலித்தனத்தையும் நற்குணத்தையும் டுஜியர்கள் கணிப்பார்கள்.

மணநாளுக்கு முதல்தினம் அழும்போது மணப்பெண்ணோடு சேர்ந்து பத்துப் பெண்கள் கூடி அழ வேண்டும். இதற்காக மணப் பெண்ணின் தாய் தன் மகளுடன் அமர்ந்தழ ஒன்பது மணமாகாத இளம்பெண்களை முறையாகச் சென்று அழைப்பார். இரவு முழுவதும் மணப்பெண்ணைச் சுற்றிப் பாயில் அமர்ந்து அழுதுகொண்டே ஒப்பாரிப் பாடல்களைப் பாடுவார்கள். மேசையைச் சுற்றி அமர்வதுமுண்டு. முதலில் தாய் அழுவாள். பிறகு, தாயின் மதினிமார் அழுவர். அதன்பிறகு அழைக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவராக அழுவார்கள். ஒருவராகவோ இருவராகவோ அழுது பாடுவார்கள். தனியே பாடும்போது பொதுவாகத் தமது எதிர்காலம் குறித்தும் பெற்றோர் மீதிருக்கும் பாசம் குறித்தும் பாடுவார்கள். தமது வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லி அழுவதுண்டு. பெற்று வளர்த்த பெற்றோருக்கு நன்றி பாராட்டும் பாடல் வரிகளும் உண்டு. பெற்றோர், சகோதரி, சகோதரன், வரன் பார்த்துவைத்த தரகர், மூதாதையர் என்று எல்லோரையும் நினைத்துப் பாடுவது போன்ற பாடல்கள் பலவுண்டு. மணமகள் உரக்கப் பாடி ஒப்பாரி வைக்கும்போது மற்றவர்கள் வெறுமனே இருக்காமல் தாழ்ந்த குரலில் விசும்பியவாறே இருப்பதுதான் முறை.

வரன் பார்த்துவைத்த தரகரைத் திட்டியும் மணமகளுக்கு ஊக்கம் சொல்லியும் அழும் பாடல்களும் இருக்கின்றன. மணமகள் பாடும்போது வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக வெளிப்படாமல், சோக உணர்ச்சிகளுடன் பாடப்பட வேண்டும். பாடல்களில் இருக்கும் தெளிவான வீர்யங்கொண்ட சொற்கள் எந்தக் கல்நெஞ்சையும் கரைந்தழவைக்கும். குறைந்தபட்சம், சடாரென்று துளிர்த்து வெளியாகும் கண்ணீரைக் கொணரும். மணமகள் தன் தேர்வானாலும் பெற்றோர் தேர்வானாலும் அவனைத் தனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஒப்பாரியை இனிமையாக ஏற்ற இறக்கங்களுடன் அழகாகப் பாட வேண்டும். அழுகைச் சடங்கு மணமகளுக்கு அதிருஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவருவதாக நம்புகிறார்கள். ஆகவே, இது இன்றைக்கும் தவிர்க்க முடியாத சடங்காக இருந்துவருகிறது.

இருவராகப் பாடுவதைச் ‘சகோதரி அழுகை’ என்பார்கள். பாடிக்கொண்டே அழுவார்கள். ஒருத்தி பாட, அதற்கு எசப்பாட்டாக மற்றவள் ஆறுதல் சொல்வது போலப் பாடி அழுவாள். பிறகு, இவள் அழ மணப் பெண் ஆறுதல் மொழியாலான பாடலைப் பாடி அழுவாள். பத்துப் பாடல்களுடன் பத்துமுறை மணப் பெண் அழவேண்டும். ஒவ்வொரு பாடல் முடிந்ததுமே சமையற்காரரோ வீட்டினரோ ஒரு பாத்திரத்தைப் பெண்கள் முன்னால் கொண்டுபோய் வைப்பர். அழுது முடித்த பிறகு பத்துப் பாத்திரங்கள் சேர்ந்ததும் பாத்திரத்தை வைத்தவரே ஒவ்வொன்றாக எடுத்துச் செல்வார். அத்துடன், ‘புட்’ எனப்படும் ‘பத்துப் பெண்கள் கூடியழும்’ சடங்கு முடியும்.

திருமணத்தின்போது நல்ல பெண் எனத் தன்னை எல்லோரும் சொல்ல வேண்டுமே என்ற ஆசையில் டுஜியப் பெண்கள் 12 வயதிலேயே அழும் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். வசதியிருப்போர் அனுபவசாலிகளை வீட்டிற்கே வரவழைத்துப் பயிற்சியளிப்பதுமுண்டு. இதைக் கற்பிக்க சமூகத்தில் மூதாட்டிகள் இருக்கிறார்கள். தோழியருக்குள்ளும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொடுத்துக்கொள்வார்கள். அண்டை அயலில் பெண்களுக்குத் திருமணம் நடக்கும் காலங்களில், 15-16 வயதிற்குள் கற்றுத் தேர்ந்திருக்கும் இந்தப் பெண்களுக்கு அழைப்பு வர ஆரம்பித்துவிடும். திறமையைப் பொருத்து தொடர்ந்து அழைப்புகள் வரும். சாதாரண காலங்களில் ஒன்றுகூடும் தோழிகளிடையே அழுவதிலுள்ள பல்வேறு நுணுக்க மேம்பாடுகள் குறித்த கலந்தாலோசனைகளும் விவாதங்களும் நடக்கும். சமூக அமைப்புகளில் அழும் போட்டிகள் அவ்வப்போது நடந்தேறும்.

மாநிலமெங்கும் வெவ்வேறு ஊர்களிலும் கிட்டத்தட்ட இதே போன்ற சம்பிரதாயம்தான் இருக்கிறது. பொருத்தமான பாடல்களைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வார்கள். பல்வேறு சின்னச் சின்ன அங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் முக்கிய அர்த்தமும் உண்டு. நன்றாக ஒப்பாரி வைக்கிறாளா, அழுகையில் எந்த அளவிற்கு இனிமையும் தீவிரமும் இருக்கிறது என்பதைப் பொருத்தே மணமகளது அடையாளம், புகழ், நல்லொழுக்கம் போன்றவற்றைக் கணிப்பார்கள். நன்றாக அழாவிட்டால் முறையாக வளர்க்கப்படாத பெண் என்றெண்ணுவார்கள். கொஞ்ச நாளைக்கு ஊருக்குள் பேசிச் சிரிக்க விஷயம் கிடைத்தது போலாகும்.

திருமணம் நிச்சயமாகியிருக்கும் மணப்பெண்மீதுதான் எல்லோருடைய கண்களும் இருக்கும். அவற்றில் பொறாமைக் கண்களாகவும் பல இருக்கலாம். அத்துடன் அமானுஷ்ய சக்திகளும் மணப்பெண்ணின் மகிழ்ச்சியைக் கண்டு சினங்கொள்ளலாம். அதனால் மணப் பெண்ணுக்கு ஏதாவது துரதிருஷ்டம் வந்துவிடாதிருக்கவே இவ்வாறு அழுவதாகச் சொல்கிறவர்களும் உண்டு.

சடங்கின் வேர் வாரிங் காலத்தில் (கி.மு 475-221) இருக்கிறது. ஜாவ் மாநிலத்தின் இளவரசியை யான் மாநிலச் சிற்றரசருக்கு மணமுடித்து ராணியாக்கினர். மகள் கிளம்பிச் செல்லும்போது அவளுடைய தாய் அவள் காலருகில் அமர்ந்து அழுது, எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமே பிறந்த வீட்டுக்கு மறுபடியும் வா என்று கேட்டுக்கொண்டாள்.

முற்காலத்தில் திருமணங்கள் என்னும் பெயரில் நடந்த அபத்தங்களை எதிர்த்த சில பெண்கள் திருமணமுறைக்கு எதிராக உரத்துப் பேசினர். ஒப்பாரிவைத்து அழுதனர். ஏற்பாடு செய்யப் பெற்ற திருமணங்களே அதிகம் நடந்த அக்காலங்களில் பெண்களின் அழுகை கேட்காத திருமணங்களே நடந்ததில்லை. பிடிக்காத திருமணத்தையும் அதனால் ஏற்படப்போகும் மோசமான எதிர்கால வாழ்க்கையையும் குறித்துச் சொல்லி அழுதார்கள். இன்றைக்கோ டுஜியா சமூகத்தில் காதல் திரு மணங்கள் பரவலாக நிறையவே நடக்கின்றன. ஆனாலும் இந்த அழுகைச் சடங்கு நடக்காமல் எந்தத் திருமணமும் நடந்தேறாது.

திருமணச் சடங்கில் வழக்கமான இயற்கைக்கு, பெற்றோருக்கு, ஒருவருக்கொருவருக்கு என்று மூன்று பணிவுகள் நடக்கும். அது முடிந்ததுமே மண மக்கள் இருவரும் ஓடுவார்கள். அலங்கரிக்கப்பட்ட புதுப் படுக்கையின் மீது யார் முதலில் உட்காருகிறார்கள் என்பதே போட்டியாக இருக்கும். நடுவில் வரையப்பட்ட கோட்டுக்கு இடப்புறம் பெண் அமர வேண்டும் என்பதே விதி. சில மணப்பெண்கள் கோட்டின் மீது உட்கார்ந்து எதிர் காலத்தில் குடும்பத்தில் தனது அந்தஸ்து என்னவென்று உணர்த்துவர். மணப்பெண் அதுபோலச் செய்தால் மணமகன் கோட்டுக்கு இடப்புறமாக அவளைத் தள்ளிவிடுவான். பெண்ணும் விடாமல் திரும்பித் தள்ளிவிட்டு அதே இடத்தில் அமர்வாள். மணமகன் அவளது முகச்சீலையைத் தூக்கிவிடும்வரை இப்படியே ஒரு வரையொருவர் தள்ளிக்கொள்வார்கள். இதைக் கூடி நின்று எல்லோரும் கண்டு ரசித்துச் சிரிப்பர். பிறகு, இரண்டு மதுக்கிண்ணங்களை எடுத்து அருந்துவர்.

திருமணம் முடிந்து மூன்றாம் நாளில் புதுப்பெண் பெற்றோர் வீட்டுக்கு வருவாள். அன்றைக்கே புகுந்த வீட்டுக்குத் திரும்ப வேண்டும். பிறந்த வீட்டுக்குப் போகும் வழியிலும் திரும்பும் வழியிலும் பேசவும் பாடவும் ஒருவரையொருவர் நன்றாக விவாதம் செய்யவென்று பெண், மாப்பிள்ளை ஆகிய இரு தரப்பிலும் பக்கத்துக்கு ஒரு வாயாடியைத் தேர்ந்தெடுப்பார்கள். பாடவும் எதிர்த்து வாயாடவும் தெரிந்த ஆளாக அவர்கள் இருக்க வேண்டும்.

இப்படி மறுவீட்டுக்கு வரும் டுஜியா மணமகள் தரையைக் கூட்டுவது கூடாது. அவ்வாறு செய்தால் அதிருஷ்டத்தையெல்லாம் கூட்டி வெளித் தள்ளுவதாகிவிடும். மாப் பிள்ளைக்கு விசேஷமாகப் பரிமாறப்படும் சோற்றை முழுக்கச் சாப்பிட்டுக் கிண்ணத்தைக் காலிசெய்யக் கூடாது. சாப்பிட்டபிறகு மது அருந்தும்போது அதில் இடப்பட்டிருக்கும் இரண்டு சோயாப் பருப்புகளைச் சாப்பிட்டுவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். மாப்பிள்ளை அவற்றைத் தின்றுவிட்டால் மாமனார் மாமியார் வீடு ஏழ்மையில் விழுந்துவிடும். மணப்பெண் வீட்டில் மணமக்கள் கண்டிப்பாக இரவு தங்கக் கூடாது.

தென்மேற்குச் சீனத்தில் ஸிச்சுவான் மாநிலத்தின் பல பகுதிகளில் இந்தத் திருமண ‘அழுகைச் சடங்கு’ நெடுங் காலமாகவே ச்சிங் முடியாட்சி (1644-1911) வரையிலும் வழக்கிலிருந்து வந்திருக்கிறது. முன்புபோல் இன்றைக்கு இப்பகுதியில் பிரபலமாக இல்லாவிட்டாலும் நிறைய இடங்களில், குறிப்பாக டுஜியா மக்களால் பின்பற்றப்படுகிறது.

மேற்கு ஸிச்சுவான் மாநிலத்தில் இந்தச் சடங்கை ‘கூடத்தில் இருத்தல்’ என்னும் பொருளில் ‘ஜோவ் டாங்’ என்றழைப்பார்கள். புதுமணப்பெண் ஒரு மாதம் முன்பே அழ ஆரம்பிப்பாள். தினமும் இரவு நெருங்கும்போது கூடத்திற்குச் சென்று ஒரு மணிநேரம் அழுவாள். பத்து நாட்கள் சென்றதும் அவளுடைய தாய் அவளுடன் சேர்ந்து நாள்தோறும் அழ ஆரம்பிப்பாள். இன்னும் பத்து நாட்கள் சென்றதும் அவளுடைய பாட்டி இருவருடன் சேர்ந்தழ ஆரம்பிப்பாள். அடுத்தடுத்த தினங்களில் சகோதரிகள், அத்தை, சித்தி, பெரியம்மாவும் சேர்ந்துகொள்வார்கள்.

சந்திர ஆண்டின் ஏழாம் மாதத்தின் 12ஆம் நாளில் பொதுவில் கூடி வாழ்க்கைத் துணையைத் தேடும் ‘நூவெர் ஹுயீ’ என்னும் முறையும் நெடுங்காலமாக நிலவிவருகிறது. கிராமங்களில் தரகர்கள் மூலம் நடந்தேறும் திருமணங்கள் நிறைய இன்றைக்குமுண்டு. கல்யாணத் தரகரைக் குறிக்கும் சீனச் சொல் துரதிருஷ்டம் என்னும் சொல்லை ஒத்திருப்பதும் மிக விநோதம்தான். ஒப்பாரித் திருமணத்தில் ‘கல்யாணத் தரகரை ஏசுவது’ என்ற இன்னொரு முக்கியச் சடங்கு கலகம் நிறைந்ததாக அமைவது வழக்கம். இதையெல்லாம் கண்டு தரகர்கள் அஞ்சுவதில்லை. பெரும்பாலும் பெண்களாக இருக்கும் அவர்களுக்கு அதுதான் தொழிலும் பிழைப்பும். அவர்களுடைய சேவை என்றென்றைக்கும் சமூகத்திற்கு வேண்டித்தான் இருந்துவருகிறது. பழங்காலச் சீனப் பெண்கள் எல்லோரும் ‘மூன்று கீழ்ப்படிதல்கள் மற்றும் நான்கு நற்குணங்கள்’ என்னும் மிகத் தீவிரமான நல்லொழுக்க நூல் சொன்னவற்றைப் பின்பற்ற வேண்டிய அழுத்தத்திலேயே வாழ்ந்தனர். மணமுடித்து மூடுபல்லக்கில் ஏறுவதற்கு முன்னால் மனத்திற்குள் அழுத்தித் தேக்கிவைத்திருந்த அனைத்து அதிருப்திகளையும் கொட்ட திருமணமுறையையும் கல்யாண ஏற்பாடு செய்த தரகரையும் கண்டபடி ஏசுவாள். பெண்ணுக்குள் இருக்கும் துணிச்சலை வெளிப்படுத்தும் அத்தருணத்தில் சொற்கள் மிகக் கூர்மையும் கடுமையும் கொண்டிருக்கும். பின்னர், அதுவே சடங்காக உருவாகி நாட்டுப் புறக்கலைகள் மற்றும் ‘யிங்தாய் கல்யாணத் தரகரைத் திட்டுதல்’ போன்ற பல்வேறு இசைநாடகங்களில் பிரதிபலித்தன.

ஒப்பாரி வைத்தழுது திருமண பந்தத்தைத் தொடங்கும் டுஜியா இனத்தவர் மரணத்தைக் கோலாகலமாகக் குதித்தாடிக்கொண்டாடுவர். இறுதியூர்வல நடனம் இச்சிறுபான்மை இனத்திற்கே உரியது. துள்ளலான நாட்டுப்புற நடனங்கள் ஆடிக்கொண்டாடுவது டுஜியா இனத்துக்கே உரியது. மரணத்துக்குப் பின்னான இறந்தவரின் வாழ்க்கை சிறப்பாக அமைய கொண்டாட்ட நடனங்கள் தவிர வழிபாடுகளும் இருக்கும்.

இயற்கை மரணமடைந்தது முதியவர் என்றால் சவப்பெட்டியிலிட்டு நடுக்கூடத்தில் மூன்று நாட்கள்வரை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு இரவும் உற்றார் உறவினர் எல்லோரும் வந்திருந்து கூடி நடனமாடுவர். பாடிக்கொண்டே மாட்டுத்தோலால் செய்யப்பட்ட தாளவாத்தியத்தை ஒருவர் வாசிக்க மற்றவர்கள் எல்லோரும் பெட்டியைச் சுற்றிக் குதூகலத்துடன் ஆடுவார்கள். பளிச்சிடும் வண்ணங்களில் விழாக்காலக் கொண்டாட்ட ஆடைகளை எல்லோரும் அணிவர். ஒரே நேரத்தில் இரண்டு முதல் நான்கு ஆண்கள்வரை கூடியாடுவது வழக்கம். இந்த நடன அசைவில் கால்களும் கைகளும் ஒரே திக்கில் அசையும் இயல்புடையது. ஒவ்வொரு அடியும் பெரியதாகவும் உறுதியுடனும் மெதுவாகவும் அமையும். சிறார்களும் நடனத்தில் பங்கேற்பர். ‘மரண நடனம்’ என்றும் ‘மேளதாளத்துக்கு ஆடும் நடனம்’ என்றும் பொருளில் ‘ஸாயேர்ஹே’ என்னும் இந்த நடனத்தில் பெரும்பாலும் பெண்கள் ஆடுவதில்லை. இரங்கல் சொல்ல வருவோரின் மனநிலையே மாறிவிடும் அளவிற்கு உற்சாகம் கரைபுரண்டோடும். பல்வேறு சொற்கட்டுகளாலான உற்சாகம் ததும்பும் துடிப்புள்ள பாடல்களையே பாடுவார் தாளமடிப்பவர்.

இறந்தவரின் வாழ்க்கை குறித்த செய்திகளும் காதல் போன்ற முக்கிய நிகழ்வுகளும் வரக்கூடும். குடும்பத்தினர், பிள்ளை குட்டிகள் போன்றோரின் புகழ்பாடும் வரிகளும் இருக்கும். ஒவ்வொரு பாட்டின் இறுதி வரி வரும்போது அங்கிருக்கும் எல்லா ஆண்களும் எழுந்து நடனத்தில் சேர்ந்துகொள்வார்கள். பாடுபவரும் நடனமிடுவோரும் தத்தமது திறனையெல்லாம் வெளிக்காட்டி உறவை இழந்த குடும்பத்தின் துயரத்தை மறக்கடிக்க முயல்வார்கள். நடனம் உச்சத்துக்கு உயரும்போது இறந்தவரின் உறவினரும் சேர்ந்துகொள்வர். இறுதி ஊர்வலத்துக்கு முன்பாக நடந்தபடியே தாவோ புரோகிதர்கள் குழுவாகப் பல்வேறு மந்திரங்கள் ஓதுவர். புதைக்கும் பழக்கங்கள் ஹான் சீனர்களைப் போலவேதான் நடக்கும்.

பாய் ஸியோபிங் என்னும் ஆய்வாளர் டுஜியாவின் இறுதிச் சடங்கு நடனத்தில் மூன்றாண்டுகள் ஆய்வுகள் பல செய்துள்ளார். இறுதிச் சடங்குகளையும் இரங்கற் கூட்டங்களையும் கூர்ந்து கவனித்து வந்தவர், இந்த வகைக் கலாச்சாரம் சுருங்கிவருவதாகச் சொல்லும் பாய் ஸியோபிங் பண்பாட்டுக் கூறுகளைப் பற்றி ஆவணங்கள் மூலம் எதிர்காலச் சந்ததியருக்குக் கொடுக்க நினைத்து பிரசுரித்த நூலில் பல்வேறு விவரங்களையும் நிழற்படங்களையும் இணைத்திருக்கிறார்.

இவரது கூற்றுப்படி தனித்துவக் கலையம்சம் நிறைந்த இந்நடன அசைவுகளிலும் பாடல்களிலும் தாளங்களிலும் வரலாற்று, கலாச்சாரப் பின்னணி உண்டு. கூர்ந் தொலிக்கும் குரலில் ஆண்கள் பல உற்சாக விஷயங்களைப் பாடுவர். யாங்ட்ஸே ஆற்றையொட்டிய மூன்று மலைகள் பள்ளத்தாக்கில் இருக்கும் ஸிங்ஷான் வட்டாரத்திற்கே உரிய மூன்று முக்கிய ராகங்கள் உண்டு. மற்ற எந்த இசைவகை மாற்றங் கண்டாலும் இவ்விசை வகைகளும் ‘ஸாயேர்ஹே’ என்னும் இந்நடன வகையும் மட்டும் அன்று போல் இன்றும் அப்படியேதான் இருந்துவருகின்றன. பா-யூ நடன நூல் மற்றும் மாமன்னர் ஜோவ்வை வீழ்த்திய யூ பிரபுவைக் கொண்டாடும் விதத்தில் எழுதப்பட்ட பா-மக்களின் போர் நடன நுட்பங்கள்கொண்ட நூல் ஆகியவை இந்தக் கலாச்சாரம் குறித்த பல்வேறு ஆதாரங்களைக் கொடுத்துள்ளன. கிடைத்த ஆவணங்களிலிருந்து இதன் வேரைக் குறைந்தது டாங் முடியாட்சி என்று வரையறுக்கிறார்கள். மத்திய சீனாவின் கலாச்சார வரலாற்றுக் கலைக்கூடத்தின் ச்சூ வரலாற்று நிபுணர் பேராசிரியர் ஜாங் ஜெங்கிங் இந்நடனம் போர் நடனத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்று சொல்லியுள்ளார்.

இறுதிச் சடங்கின் போது நடக்கும் இந்தக் கொண்டாட்ட நடனம் டுஜியா இனக் கலாசாரத்தின் மிக முக்கியக் கூறாக இருக்கிறது. அவ்வின மக்களின் சிந்தனைப் பின்னணியையும் பண்பாட்டையும் ஓரளவிற்காவது அறியாதவர்களுக்கு இந்தக் கொண்டாட்டத்தைப் புரிந்துகொள்வது மிகக் கடினம். பருவ மாற்றங்களைப் போல் பிறப்பைப் போல் இறப்பும் மிக இயல்பானது என்றே கருதுகிறார்கள். இறந்தவர் இயற்கையோடு இயைந்து மிக மகிழ்ச்சியோடு வாழ்ந்து முடித்திருப்பதால் அவரது மரணம் கொண்டாட்டத்துக்கு உரியதென்று நினைக்கிறார்கள். அவர் சொர்க்கத்துக்குப் போவதாகவும் மரணத்தை வேற்றுலக வாழ்க்கைக்கான தொடக்கம் என்றும் சொல்கிறார்கள். பெண்ணானாலும் ஆணானாலும் இப்படிக் கொண்டாடித்தான் இறந்தவரது வாழ்வை அங்கீகரிக்கிறார்கள்.


நன்றி: காலச்சுவடு